இனப்படுகொலை செய்யும் இலங்கையில் காமன்வெல்த் மாநாடா? PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013 14:10
பிரித்தானியாவின் மாட்சிமை தங்கிய மகாராணியின் தலைமையில் இயங்கும் பொதுநலவாய (காமன்வெல்த்) நாடுகளின் அமைப்பு, கடந்த 63 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இவ் அமைப்பு 1949ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட வேளையில் 8 நாடுகளையே அங் கத்துவ நாடுகளாகக் கொண்டிருந்தது.
தற்பொழுது ஆப்பிரிக்காவில் 19 நாடுகளையும், தென் பசிபிக்கில் 11 நாடு களையும், கரிபீயனில் 10 நாடுகளையும், ஆசியாவில் 8 நாடுகளையும், அமெரிக் காவில் 3 நாடுகளையும், ஐரோப்பாவில் 3 நாடுகளையும் மொத்தமாக 54 அங் கத்துவ நாடுகளைக் கொண்டுள்ளது.
முதன் முதலாக பொதுநலவாயத் தின் செயலகம் 1965ம் ஆண்டு பிரித்தானியாவின் இலண்டனில் நிறுவப் பட்டு, இதனது முதலாவது செயலாளர் நாயகமாக திரு ஆனல்ட் சிமித் என்ற கனடிய பிரஜை நியமிக்கப்பட்டார். தற்பொழுது திரு கமலேஸ் சர்மா என்ற இந்தியர் இப்பதவியை வகித்து வருகிறார்.
இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுநலவாய நாடுகளின் மாநாடு இதனது அங்கத்துவ நாடு ஒன்றில் நடைபெறுவது வழக்கமாகியுள்ளது. இதன் அடிப்படையில் அடுத்த மாநாடு இதனது அங்கத்துவ நாடான சிறிலங்காவில், இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
2011ம் ஆண்டு அவுஸ்திரேலியா வில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் எடுக்கப்பட்ட இம்முடிவால், சில நாடுகளும் பல அரச, அரச சார்பற்ற நிறுவனங்களும், ஜனநாயகத்தைப் பேணுவதற்கான அமைப்புகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளன.
பொதுநலவாய பிரகடனம்
பொதுநலவாய பிரகடனத்தை நாம் ஆராயும் வேளையில், இம் மாநாட்டை சிறிலங்காவில் நடத்துவ தற்கு சிறிலங்கா எந்தவித அருகதையும் அற்ற நாடு என்பது தெளிவாகிறது.
பொதுநலவாயத்தின் பிரகடனங் களான, சிங்கப்பூர் 1971ம் ஜனவரி மாதம் 22ம் திகதி "பொதுநலவாய கொள்கை', 1991ம் ஒக்டோபர் மாதம் 20ம் திகதி "கராரி பிரகடனம்' - யாவும் சர்வதேச சமா தானம், உலக பொருளாதாரம், சர்வதேச விதிமுறைகள் போன்றவற்றை மதிக்குமாறு வலியுறுத்துகின்றன.
அவற்றுடன் சம அந்தஸ்து, தனியார் சுதந்திரம், இனவேறுபாடு களுக்கு எதிரான கொள்கை, அரசியல் சுதந்திரம், ஜனநாயகம் போன்ற வற்றையும் வலியுறுத்துகின்றன.
இவை மட்டுமல்லாது சிங்கப்பூர் 1971ம் ஜனவரி மாதம் 22ம் நாள் பொதுநலவாய கொள்கை, சுயநிர்ணய உரிமையையும் வலியுறுத்துகிறது.
இவற்றின் அடிப்படையிலேயே கடந்த காலங்களில் பொதுநலவாய நாடுகளின் அங்கத்துவத்திலிருந்து பிஜி, நைஜீரியா, பாகிஸ்தான், சியாரிலியோன், தென் ஆபிரிக்கா, சிம்பாப்வே போன்ற நாடுகள் தற்காலிகமாக நீக்கப்பட்டது மல்லாது, சிம்பாப்வே பொதுநலவாய நாடுகளின் அங்கத்துவத்திலிருந்து தானாகவே நீங்கியுள்ளது.
சிறிலங்காவின் நிலை
இவற்றின் அடிப்படையில் நாம் சிறிலங்காவின் நிலையை ஒப்பீடு செய்து பார்க்கும் வேளையில், இது வரையில் பொதுநலவாய நாடுகளிலிருந்து நீக்கப்பட்ட நாடுகளின் நிலையை விட பலமடங்கு மோசமான நிலையை சிறிலங்கா கொண்டுள்ளதை அவ தானிக்க முடிகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பிரிவின் வேறுபட்ட அறிக்கைகள், மிக அண்மையில் ஐ.நா. செயலாளர் நாயகத் தின் அறிக்கைகள், கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைச் சபையில் சிறிலங்காவிற்கு எதிராக நிறைவேற்றப் பட்ட தீர்மானம், கடந்த நவம்பர் மாதம் ஐ. நா. மனித உரிமை சபையினால் சிறிலங்கா மீதான காலமுறை பரிசீலனை போன்றவை சிறிலங்காவின் படுமோச மான மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டி நிற்கின்றன.
சிறிலங்காவில் இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பல ஊழல்கள் நடைபெற்றதாகவும், இத் தேர்தலில் தானே வெற்றி பெற்றதாகவும் ஜனாதிபதி வேட்பாளரான சரத் பொன்சேகா, கடந்த நவம்பர் மாதம் 24ம் திகதி பத்திரிகை ஒன்றிற்கு கூறியதை மேற்கோள்காட்டி, சிறிலங்காவின் தற்போதைய ஜனாதிபதி ராஜபக்ச தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டவர் அல்ல என்பதும் தெளிவாகிறது.
இதே வேளை சிறிலங்காவின் பிரதமர் நீதியரசர் மீதான அரசியல் பழிவாங்கல், 15,000க்கு மேற்பட்ட அரசியல் கைதிகள் வருடக்கணக்கில் எந்தவித நீதி விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப் பட்டுள்ளதுடன், பல ஆயிரத்திற்கு மேற்பட்டோர் படு கொலை செய்யப்பட்டும் காணமல் போயும், பெண்கள் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுமுள்ள நிலையில், சிறிலங்காவின் அரசபடைகள் அரச மன்னிப்புடன் மனித உரிமைகளை தொடர்ந்து மீறி வருகின்றன.
பத்திரிகை சுதந்திரம் மறுக்கப் பட்டதுடன் பல ஊடகவியலாளர் படுகொலை செய்யப்பட்டும் காணமல் போயுள்ள நிலையில், சிறிலங்காவில் பொதுநலவாய நாடுகளின் மாநாடா?
ஏற்கனவே சில பொதுநலவாய நாடுகளும், சர்வதேச மனித உரிமை ஆர்வலரும், நோபல் பரிசு பெற்ற உலகின் சில முக்கிய நபர்களும், சிறிலங்காவில் இம் மாநாடு நடத்துவது பற்றி தமது ஆட்சேபங்களைத் தெரிவித்துள்ளனர்.
புலம்பெயர் வாழ் தமிழர்களும் சங்கங்களும்
ஆகையால் இப்பொழுது பந்து, புலம்பெயர் வாழ் தமிழர், தமிழ்ச் சங்கங்களின் கைகளிலேயே உள்ளது. உலகில் எந்த நாட்டை சார்ந்த புலம்பெயர் தமிழராக இருந்தாலும், இவ்விடயத்தில் தமது கடமையிலிருந்தும் ஒரு பொழுதும் தவறப்படாது. இவ் அரிய சந்தர்ப்பத்தை தவற விடுவோமேயானால், நாட்டிலும் புலத்திலும் நாம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவோம்.
முதலாவதாக, பொதுநலவாய நாடுகள் சகலவற்றுக்கும் நாம் மனுக்கள் அனுப்ப வேண்டும். அதேவேளை பொதுநலவாய நாடுகளின் ஜனாதிபதி, பிரதமர், வெளிநாட்டு அமைச்சர்கள் போன்றோரை சந்தித்து சிறிலங்காவின் நிலைமைகளை அவர்கள் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும்.
நாம் அனுப்பும் மனுக்களில், பொதுநலவாய நாடுகளின் அங்கத் துவத்திலிருந்து தற்காலிகமாக நீக்கப் பட்ட பிஜி, நைஜீரியா, பாகிஸ்தான், சியாரிலியோன், தென்ஆபிரிக்கா, சிம் பாப்வே போன்ற நாடுகளைவிட சிறிலங் காவின் நிலை பலமடங்கு மோசமானது என்பதை வலியுறுத்த வேண்டும்.
இவற்றுடன் நின்றுவிடாது குறிப் பிட்ட சில பொதுநலவாய நாடுகளின் வெளிநாட்டு அமைச்சின் முன்பாகவோ, அல்லது உங்கள் நாடுகளில் உள்ள அவர்களது தூதுவராலயங்கள் முன்பா கவோ தற்பொழுதே விழிப்புப் போராட் டங்களை நடத்தி நமது ஆட்சேபத்தை தெரிவிக்க வேண்டும்.
இதேவேளை பிரித்தானியாவின் லண்டனில் உள்ள பொதுநலவாயத்தின் செயலகம், செயலாளர் நாயகம் திரு கமலேஸ் சர்மா ஆகியோருக்கும் எமது மனுக்களை அனுப்ப வேண்டும்.
பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் சிறிலங்காவிற்கு வழமை யாக வக்காலத்து வாங்கும் சீனா, ரஷ்யா, கியூபா போன்ற நாடுகள் இதில் அங்கத் துவம் பெறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பொதுநலவாய அமைப்பில் பாகிஸ்தான் இடம்பெற்ற பொழுதிலும், பாகிஸ்தான் ஏற்கனவே பல தடவை இவ் அமைப்பிலிருந்து தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ள காரணத்தினால், இங்கு பாகிஸ்தான் பல் பிடுங்கப்பட்ட ஓர் நாகப் பாம்பாகவே காணப்படுகிறது.
ஆகையால் இவ்விடயத்தில் காலம் தாழ்த்தாது முந்திக்கொள்வது ஒவ்வொரு புலம்பெயர் வாழ் தமிழரதும் சங்கங்களினதும் கடமையாகும்.
இம் மாநாடு சிறிலங்காவில் நடப்பதற்கு இன்னும் 10 மாதங்களே உள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.