மனிதப் படுகொலையில் ஹிட்லரை மிஞ்சிய ராஜபக்சே, அகிம்சை போதித்த மண்ணில் கால் வைக்கக் கூடாது என இந்தியாவின் பீகார் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
பீகார் ஒபரா தொகுதியைச் சேர்ந்த சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் சோம பிரகாஷ் சிங்( வயது 38) - முன்னாள் காவல் துறை அதிகாரி, லஞ்ச ஒழிப்புதான் இவரது குறிக்கோள். தமிழர்களின் பிரச்சினையை அறிந்த இவர், இராஜபக்சே வருகையைக் கண்டித்து தனது கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். 'சம தர்மத்தைப் போதித்த நமது பாரத தேசத்தின் அண்டை நாடான இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் ஈழம் அமைவதற்கும் போராடிக் கொண்டு இருந்த தமிழர்களின் மீது இறுதிக் கட்ட போரில் நடந்த பேரிழப்புகள், துன்பங்கள் கணக்கில் அடங்காதவை. தமிழர்களின் உரிமைகளைக் கொடுப்பதற்குப் பதிலாக அவர்களிடம் இவர்கள் பறித்தது 150,000 தமிழர்களின் உயிர்கள். தமிழர்கள் இருந்தால்தானே அவர்கள் உரிமைகள் கேட்பதற்கு என்ற குறிக்கோளோடு செயல்பட்டு கொண்டு இருக்கும் இராஜபக்சே, தனது சொந்த மக்கள் மீது போர் தொடுத்து, நரபலியில் இட்லரை பின்னுக்குத் தள்ளி உள்ளார். இப்படிப்பட்ட ஒரு மனித மிருகம் வருவது நமது நாட்டிற்கே கேடு. உலகிற்கே அகிம்சையைப் போதித்த புத்தர் பிறந்த மண் புத்தகயா, சாம்ராட் அசோகர் தனது ஆயுதத்தைத் தூக்கி எறிந்து உலகம் முழுவதும் அகிம்சையைப் போதிக்க இந்த இடத்திலிருந்துதான் தொடங்கினார். இந்த மண்ணில், நமது சகோதரர்களான தமிழர்களையும் கூடவே மனிதாபிமானத்தையும் கொன்று குவித்த பாவி மகிந்த இராசபக்சே வருவதற்கு நாம் என்றுமே அனுமதிக்கக் கூடாது. மேலும் 7ம் தேதி அன்று மகிந்த அவரின் வருகையைக் கண்டித்து புத்தகயாவில் போராட்டம் நடத்தவுள்ளோம்' இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
|