நெடுமாறன் கைது! தலைவர்கள் கண்டனம்! |
|
|
|
வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2002 20:05 |
தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் கடந்த முதல் தேதி பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள், மற்றும் அமைப்புகளின் தலைவர்களும், வெளிநாட்டு அமைச்சர்களும் கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
இலங்கை அமைச்சர் சந்திரசேகரன் :
வைகோ, பழ. நெடுமாறன் ஆகியோர் துணிச்சலாகவும் முன்னிலையில் இருந்தும் செயல்படுபவர்கள் என்பது மலையக மக்கள் முன்னணியின் கணிப்பாகும். இவர்களைக் கைது செய்தது, எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத அரசியல் பார்வை யோடு எடுக்கப்படுகின்ற நடவடிக்கை என்ற விமர்சனத் தைப் பொய்யாக்கும் விதத்தில் அவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். தமிழக அரசு இது குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தி. மு. கழகத் தலைவர் மு.கருணாநிதி
முதலில் வைகோ. இப்போது நெடுமாறன் என பொடாவின் கீழ் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்தக் கைதுகளை எப்படி நியாயம் என்று ஒப்புக்கொள்ள முடியும்? பொடா சட்டம் தமிழகத்தில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். தொடர்ந்து அது தான் நடந்து கொண்டிருக்கிறது.
உண்மை சொல்வார்க் கெல்லாம் எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு!
என்று பாரதி பாடியது தான் நினைவுக்கு வருகிறது.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு
இலங்கைத் தமிழர் பிரச்னையில் அமைதியான வழியில், யாருக்கும் எவ்விதப் பிரச்னையும் ஏற்படுத்தாமல் குரல் கொடுத்து வந்த நெடுமாறனைக் கைது செய்தது தவறு. தமிழகத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், மாணவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றைத் திசை திருப்புவதற்கு வேறு பிரச்னைகளில் கவனம் செலுத்தி பூதாகரம் ஆக்குகிறார் செயலலிதா.
மத்திய இணை அமைச்சர் மு.கண்ணப்பன், ம.தி.மு.க.,
பழ. நெடுமாறனைப் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள தமிழக அரசின் சனநாயக விரோத அடக்கு முறை நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். சர்வாதிகார அடக்குமுறையின் மூலம் தமிழுணர்வையே அழித்து விடலாம் என்று தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டு தமிழக முதல்வர் இத்தகைய அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். வைகோ, பழ. நெடுமாறன் ஆகியோரின் கைது தமிழ்த் தாயின் கரங்களில் பூட்டப்படும் விலங்குகள் போன்றன என்று கருதுகிறேன். காலம் மாறும் விலங்குகள் உடைபடும் காலம் வரும்.
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி மாநிலச் செயலாளர் இரா. நல்லகண்ணு
உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் மீது, தமிழக அரசு பொடா மூலம் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இன்றைக்கு நெடுமாறனும் வைகோவும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்தப் பட்டியல் நாளை மேலும் நீளலாம். தமிழகம் மிகுந்த நெருக்கடியில் உள்ளது. பிரச்னைகள் மக்களை அழுத்தி வருகின்றன. பிரச்னைகளுக்குத் தீர்வு காணாமல் கருத்துகளைப் பேசுவோரைச் சிறையில் தள்ளுவதை ஏற்க முடியாது.
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பாளர் இரா.திருமா வளவன்
வைகோவைத் தொடர்ந்து நெடுமாறன் என அடுத்தடுத்து தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் வேட்டையாடப்படுவது தமிழ் இனத்தின் மீதான பாசிச ஒடுக்குமுறையாகும். உலகத் தமிழர்களை ஒன்றுப்படுத்துவதற்காக முயன்று வரும் நெடுமாறன் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம், தமிழர்கள் ஒன்றுபடுவதைத் தமிழக அரசு விரும்பவில்லையோ என்று கருதத் தோன்றுகிறது.
புதிய தமிழகம் நிறுவனர் மருத்துவர் கிருஷ்ணசாமி
வைகோ, பழ. நெடுமாறன் எனத் தொடரும் பொடா கைதுகள், வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.ஒரு மாநிலத்தில் பொடா சட்டம் தவறாகப்பயன் படுத்தப்படுவதற்கு மத்திய அரசு எக்காரணம் கொண்டும் உடந்தையாகிவிடக் கூடாது.
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி
புலிகளுக்கு வெறும் தார்மீக ஆதரவு, அதுவும் ஈழ மக்களுக்கு, என்ற பேச்சே சட்டவிரோதம் என்பதை எந்த நடுநிலையாளரும் ஏற்க மாட்டார்கள். பொடா சட்டத்தில் நெடுமாறனைக் கைது செய்வது சட்டப்பூர்வ நடவடிக்கை என்று அரசு கூறினாலும், தமிழின உணர்வு, மொழி உணர்வுக்கு விரோதமான போக்கை இந்த அரசு கடைப்பிடிக்கிறது என்ற பிரச்சாரம் பரவிக் கொண்டி ருப்பதை அலட்சியப்படுத்தக் கூடாது. பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டுள்ளது மிகுந்த வேதனைக்குரியது.
பெரியார் தி.க. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்
அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான கருத்துரிமைக்கு எதிரானது பொடா சட்டம் என்பதற்கு நெடுமாறன் கைது மற்றொரு உதாரணம். பொடா சட்டத்தை எப்படியெல்லாம் முறைகேடாகப் பயன்படுத்தலாம் என்ற உண்மையும் இதன் மூலம் அம்பலமாகியிருக்கிறது.
தமிழ்த் தேசிய முன்னணி அமைப்பாளர் பெ.மணி யரசன்
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு. பழ. நெடுமாறன் அவர்களை பொடா என்ற ஆள் தூக்கிச் சட்டத்தின் கீழ் சிறை வைத்திருப்பது சனநாயக உரிமைகளுக்கு எதிரானது மட்டுமல்ல, தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரான செயலாகும். திரு. பழ. நெடுமாறன் அவர்களைப் பொடாவில் கைது செய்திருக்கும் தமிழக அரசின் தமிழர் விரோதச் செயலைத் தமிழ்த் தேசிய முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் விநாயமூர்த்தி
பழ.நெடுமாறன் கைதுசெய்யப்பட்டது அறிந்து நான் அதிர்ச்சி அடைந்தேன். உலகத்தமிழர் பேரமைப்பின் மாநாடு கடந்த 21,22 ஆம் திகதிகளில் சென்னையில் மிகக் கோலாகலமாக இடம் பெற்றதை யாவரும் அறிவர். இந்த மாநாட்டில் பழ. நெடுமாறன் பேரமைப்பின் தலைவராக ஏகமனதாகத் தெரிவு செய்யப் பட்டார். மூமூன்று வருட காலமாக பழ.நெடுமாறன் எடுத்த விடாமுயற்சியின் காரணமாகத்தான் இந்தப் பேரமைப்பு உதயமானது.
இப்படியான ஒரு மாநாட்டைக் கூட்டியதற் காகவும் இலங்கைத் தமிழர் களின் நலனைப் பற்றிப் பேசியதற்காகவும்தான் இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஒரு குற்றமும் செய்யாத இவரைப் பொடா சட்டத்தின் கீழ்க் கைதுசெய்தமை ஒரு தவறான செயலாகும். விசேடமாக இலங்கைத் தமிழர்சார்பிலும், புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழும் தமிழர் சார்பிலும் குரல் கொடுத்து வந்தவர் இவராவார்.
இவரது கைதை, இலங்கைத் தமிழரை அவமதிக்கும் ஒரு செயலாகவே கருதுகின்றோம்.
இவருடைய கைதினை, அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற வகையிலும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற கோதாவிலும் பழ. நெடுமாறன் தலைவராக உள்ள உலகத் தமிழர் பேரமைப்பின் செயற்குழு அங்கத்தவர் என்ற கோதாவிலும் வன்மையாகக் கண்டித்து ஆட்சேபிப்பதுடன் இவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என இந்திய அரசாங்கத் தினையும், தமிழக அரசையும் கேட்டுக்கொள்கின்றேன் -
மேலும் உலகத் தமிழர் பேரமைப்பு, தமிழ்ச் சான்றோர் பேரவை, தலைநகர்த் தமிழ்ச்சங்கம், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு, திராவிட ஆன்மீக இயக்கம், மக்கள் உரிமைக் கழகம், தையல் கலைஞர் தமிழ்ப் பேரவை, மறுமலர்ச்சி தமிழ்ச்சங்கம், மூவேந்தர் பகுத்தறிவுப் பாசறை, தமிழர் முன்னணி, தமிழ்த் தன்னுரிமை இயக்கம், உலகத் தமிழ் நூலக அறக்கட்டளை, உலகத் தமிழின முன்னேற்றக் கழகம், சாலையார் பண் பாட்டு இயக்கம், தமிழ் உரிமை மீட்பு இயக்கம், தேசியவாத காங்கிரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நெடுமாறன் கைது நடவடிக்கையைக் கடும் கண்டனம் செய்து ள்ளன. |