தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு, தமிழரின் கல்வி போன்ற இன்னோரன்ன துறைகளில் பணியாற்றி வந்த ஏராளமான தமிழர்களை இனங் காண முடியும். ஆயினும் குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் கடந்த 45 ஆண்டுகளாக ஆற்றிவரும் அரிய தமிழ்ப் பணிக்கு ஈடு இணையில்லை
என்றே கூறிவிடலாம். ஈழத்தமிழர்களின் 100 வருட வரலாற்றை ஆவணப்படுத்தி, அதனை நிரந்தரமாக பேணி பாதுகாத்து, வருங்காலத் தலைமுறையினருக்கு வழங்கும் பணியில் கண்டி உலகத் தமிழர் ஆவணக்காப்பகம் நீண்டகாலமாக ஈடுபட்டு வருகிறது. இப்படிச் செய்யப் பட்ட ஒரு வரலாற்றுத் தொகுதியை (200) யுனெஸ்கோ முன்வந்து வாங்கி சுவிசர்லாந்தில் பாதுகாப்பாகவும், ஆய்வாளர்களின் பயன்பாட்டுக்காகவும் வைத்துள்ளது. இலங்கை வாழ் தமிழர்கள் என்றில்லாது, உலகளாவிய தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகளை நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் பழமைவாய்ந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்பன வற்றிலிருந்து இனங்கண்டு அவற்றைத் தரம் பிரித்து சேகரித்து ஒரு தமிழர் ஆவணக் களஞ்சியத்தையே உருவாக்கி யுள்ள பெருமை கனகரத்தினத்தைச் சேரும். சமகாலப் பத்திரிகைகள் மட்டு மன்றி கடந்தகாலப் பத்திரிகைகளையும் பழைய பத்திரிகைக் கடைகளிலிருந்து வாங்கித் தூசி தட்டி அவை கொண்டி ருக்கும் வரலாற்றுத் தகவல்களையும் சேகரித்துள்ளார். புகழ்பூத்த ஈழத்துப் பெரியார்கள், தமிழகப் பெரியார்கள், சமயமும் சமயத் தலங்களும், இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள், தமிழக - இலங்கைத் தொல்லியல் ஆய்வுகள், சிங்கள மக்கள் மொழி, பண்பாடு, சிங்களவர் - தமிழர் தொடர்புகள், தமிழர் கலைகள், தமிழர் கலையும் பண்பாடும், உலகளாவிய தமிழர் (சிங்கப்பூர், தாய்லாந்து, மொறிசியஸ், இந்தோனேசியா, மலேசியா, பர்மா, வியட்நாம், தென்னாப்பிரிக்கா, கம்போடியா ஆகிய நாடுகளில் தமிழரும் தமிழ்ப் பண்பாடும்) ஆகிய பொதுத் தலைப்பு மற்றும் தனித்தலைப்புகளில் ஏறத்தாழ 7000 கட்டுரைகளை அவர் சேகரித்து வைத்துள்ளார். ஒவ்வொரு தலைப்பையொட்டி 10 முதல் 300 கட்டுரைகள் வரை அவருடைய ஆவணக் காப்பகத்தில் உண்டு. கண்டியில் உலகத் தமிழர் ஆவணக் காப்பகம் என்ற பெயரில் இயங்கும் இவரது நிறுவனம் 1899 தொடக்கம் தொடர்ச்சியான தமிழர் வரலாற்றைத் திரட்டிப் பாதுகாத்து வருவதுடன் நோர்வே அரசின் உதவியுடன் அவற்றை 200 மைக்ரோ பிலிம்களில் பதிவு செய்துள்ளதுடன், இவற்றின் 200 பிரதிகள் யுனெஸ்கோ நிறுவனத்தினூடாக சுவிற்சர்லாந்திலுள்ள சுவடிகள் அமைப்பொன்றிடம் பாதுகாப்பு நோக்கங்களுக்காக வைப்புச் செய்யப் பட்டுள்ளன. மைக்ரோ பிலிம்களாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களுக்கப்பால் இன்னும் 150 பிலிம்கள் பதிவு செய்யக் கூடிய ஆவணங்களை கனகரத்தினம் முறையாக வகைப்படுத்தி சேகரித்து வைத்துள்ளார். தமது சக்திக்குட்பட்ட வரை இலங்கைத் தமிழர் வரலாற்றை பத்திரிகைகள், சஞ்சிகையில் வரும் தகவல் பதிவுகளைத் திரட்டிப் பாது காத்து எதிர்காலத் தலைமுறையினரிடம் கையளிப்பதை நோக்கமாகக் கொண்டு இயங்குபவர் இரா. கனகரத்தினம். தம்மிடமுள்ள ஆவணங்களில் 80 சதவீதமானவற்றை மைக்ரோ பிலிமாக தயாரித்துள்ள கனகரத்தினம் அவற்றை இவ்வடிவில் 200 ஆண்டு களுக்குப் பாதுகாக்க முடியும் என்கிறார். உண்மையில் ஒரு நிறுவனம் செய்யவேண்டிய பணியைத் தனி மனிதனாக நின்று கனகரத்தினம் அவர் கள் செய்து வருகிறார் என்பது குறிப் பிடத்தக்கது. இவரைத் தவிர "வீரகேசரி'' பத்திரிகை நிறுவனமும் யாழ்ப்பாணக் கல்லூரியும் தம்மிடமுள்ள சேகரிப்பு களை இவ்வாறு மைக்ரோ பிலிம் வடிவில் கொண்டுவர முயற்சித்ததாக ஒரு தகவல் உண்டு. 1974ஆம் ஆண்டில் யாழ்ப் பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழா ராய்ச்சி மாநாட்டில் கனகரத்தினத்தின் கோப்புகளின் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. வண.பிதா. தனிநாயக அடிகள் இக்கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார். 1994ஆம் ஆண்டில் "உலகத் தமிழர் ஆவணக் காப்பகம் ஓர் அறிமுகம்', என கண்டி மற்றும் கனடா, நோர்வே நாடுகளிலும் கண்காட்சிகளை இவர் நடத்தியுள்ளார். இலங்கை, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளில் குடியேறிய தமிழர்கள் தமது மொழி மற்றும் இனத்துவ அடையாளங் களை இழந்து வருகின்றார்கள். குறிப்பாக மொரிசியஸ், பிஜித் தீவுகள், இந்தோ னேசியா, தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகளில் இத்தகைய நிலைமை காணப்படுகிறது. இப்பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து, அவர் களுடைய தனித்தவம் பற்றி அறிவுறுத்தி, அவர் தம் பிரச்சினைகளை உலகறியச் செய்யும் நோக்குடன் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் ஒன்றை ஏற்படுத் தக் கடுமையாக உழைத்தவர் கனகரத் தினம். இந்தியத் தமிழறிஞர் (சாலை இளந்திரையன்) இவ்வமைப்புக்கு முதலாவது தலைவராக விளங்கினார். அவரது இம்முயற்சி காரணமாகவே மொரிசியஸ், மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் வாழும் தமிழர்கள் அவரைத் தமது நாடுகளுக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். தமிழர்கள் தமது வரலாற்றை மறந்தவர்களாகவோ, வரலாற்றை இழந்தவர்களாகவோ மாறி விடக்கூடாது. தமிழர்கள் தமது வரலாறு சார்ந்த ஆதாரங்களை முறையாகத் தொகுத்து வைக்காமையால் பல்வேறு புனைகதை கள் உண்மை வரலாறு என்ற போர்வை யில் முன் வைக்கப்படுகின்றன. சர்வதேச மட்டத்தில் கூட தமிழினம் பண்பாட்டுப் பின்னணியற்றதோர் இனமாக மாறி வருகின்றது என்று சிந்தித்த கனகரத் தினம், தமிழினத்தின் இந்த வரலாற்றுத் தேவையை உணர்ந்து உலகத் தமிழர் ஆவணக் காப்பகம் ஒன்றின் அவசியத்தை வலியுறுத்தி வந்துள்ளார். "ஆவண ஞானி'' என்று அவருக்கு கனடா தமிழர்களால் வழங்கப்பட்டுள்ள பட்டம் பொருத்தமானதே! - பேராசிரியர் சொ. சந்திரசேகரன் |