"செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே! நெடியானே! வேங்கடவா ! நின் கோயிலின் வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும் படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே''
- என குலசேகர ஆழ்வார் பாடுகிறார். வேங்கடேசப் பெருமானிடம் ஏதேனும் ஒன்றை பெறவேண்டி முயன்றவர்களுக்கெல்லாம் எம்பெருமான் "ஏழை, ஏதலன், கீழ்மகன் என்னாது இரங்கி அருள்புரிவான்'' என்பது அவனுக்கே உரிய பெருமையாகும் என்பர். திருப்பதி மலையில் வீற்றிருக்கும் திருமால் வராக அவதாரம் எடுத்து இரண்யாட்சனைக் கொன்று பூமாதேவியை தன் கொம்புகளால் மீட்டுக் கொண்டுவந்ததாகப் புராணம் கூறுகிறது. கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி வேங்கடேசப் பெருமான் திகைத்துத் திணறிப்போயிருப்பார். அன்றைய தினம் அவரை இலங்கை அதிபர் இராசபக்சேயும் அவரது மனைவி ஷிரானியும் வழிபட்டனர். தம்மால் வதம் செய்யப்பட்ட இரண்யாட்சன் மீண்டும் தம்முன்னால் வந்து நிற்பது அவருக்குச் சொல்லொண்ணாத வியப்பை அளித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. வேங்கடவன் வல்வினைகளைத் தீர்ப்பான் என்பதிலும் "ஏழை, ஏதலன், கீழ்மகன்'' என்று பாராது அருள்புரிவான் என்பதிலும் ஐயமில்லை. ஆனால், மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டு அருள்புரியும்படி தன்னிடம் வேண்டி நிற்கும் இராசபக்சேயின் துணிவு அவரைத் திகைக்க வைத்திருக்கும். திருமாலிடம் மண்டியிட்டதோடு இராசபக்சே நிற்கவில்லை. புத்தர் புத்தறிவு பெற்ற மகாபோதி ஆலயத் திற்கும் சென்றார். புத்தர் ஞானம் பெற்ற போதிமரத்தடியில் அமர்ந்து இராசபக்சே தியானம் மேற்கொண்டார். பொருந்து போதியில் இருந்த மாதவர் திருந்து சேவடி மருந்தும் ஆகுமே - என நீலகேசி உரையில் குறிப்பிடுவதைப் போல, மாதவனாகிய புத்தர் திருமாலைப் போலவே திணறிப் போயிருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. புத்தம் சரணம் கச்சாமி என்பதற்குப் பதில், இரத்தம் சரணம் கச்சாமி என்ற புதிய மந்திரத்தை ஓதி தமிழர் களின் இரத்தத்தைக் குடித்த காட்டேரியான இராசபக்சே தனக்கு முன்னால் வந்து நின்று வணங்கியதோடு மட்டுமல்ல, தான் அமர்ந்து ஞானம் பெற்ற போதி மரத்தடியில் அமர்ந்து அதன் புனிதத்தையும் கெடுத்த காட்சி, அமைதியே வடிவான புத்தரையும் கொதிக்க வைத்திருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. இலங்கையில் தமிழினமே இருக்கக்கூடாது என்று வெறியுடன் செயல்பட்ட இராசபக்சே திருவேங்கடப் பெருமானையும் புத்தபிரானையும் தரிசித்துவிட்டால் தனது பாவங்கள் யாவும் கழுவப்பட்டுவிடும் என்ற புதிய வழியைக் கண்டுபிடித்திருக்கிறார். இவருக்கு வழிகாட்டிகளாக விளங்கிய இட்லர், முசோலினி, மிலோசேவிக் போன்ற பாசிச சர்வாதிகாரிகளுக்கு இந்த யோசனை தோன்றாமல் போயிற்று. கடவுளை ஏமாற்றும் இந்தத் தந்திரம் அவர்களுக்கும் தெரிந்திருந்தால் ஐம்பது இலட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்களைக் கொன்று குவித்த இட்லர் ஜெருசலத்திற்குச் சென்று யூதர்களின் கடவுளான சிகோவாவை வழிபட்டிருப்பார். இராசபக்சேயின் வழி இட்லருக்குப் புலப்படாமல் போனதால் செஞ்சேனை சுற்றி வளைத்துக்கொண்டபோது தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். அபிசீனியா என்றழைக்கப்பட்ட இன்றைய எத்தியோப்பியா நாட்டின் மீது படையெடுத்து உலகில் முதன் முதலாக நச்சு வாயு குண்டுகளைப் பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த முசோலினி அடிஸ்அப்பா சென்று அங்குள்ள மசூதியிலும் தேவாலயத்திலும் வழிபட்டிருப்பார். இராசபக்சேயின் சுருக்குப்பாதை முசோலினிக்குத் தெரியாததால்தான் மக்களிடம் சிக்கி உயிரிழந்தார். போஸ்னியா நாட்டின் கிழக்குப் பகுதியில் வாழும் 40,000த்திற்கும் மேற்பட்ட முசுலிம்களைத் தனது இராணுவத்தை ஏவித் திட்டமிட்டு இனப்படுகொலை செய்த அந்நாட்டின் அதிபரான சுலோபோர்டன் மிலோசேவிக் இராசபக்சேயின் தந்திரத்தை அறிந்துகொள்ளாததால்தான் சர்வதேச நீதிமன்றத்திற்கு முன் குற்றவாளியாக நிறுத்தப்பட்டு வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது சிறையில் மரணத்தைத் தழுவ நேர்ந்தது. ஈழத் தமிழர்களை திட்டமிட்டு இனப்படுகொலை செய்த இராசபக்சேவுக்கு ஆயுதங்கள் தந்தும் எல்லா வகையிலும் துணை நின்றும் செயல்பட்ட இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இராசபக்சேயின் வழியைப் பின் பற்றி திரிகோணமலைக்குச் செல்லலாம். அதாவது அவர் இந்தியா வந்து கோவில்களில் பாவமன்னிப்பு கேட்டார். இவர் இலங்கை சென்று பாவமன்னிப்பு கேட்கலாம். "குற்றம் இலாதார் குறைகடல் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரை'' எனப்பாடி திருஞானசம்பந்தர் துதித்ததைப் போல மன்மோகன்சிங்கும் கோணேசுவரரை வணங்கி தனது பாவங்களைப் போக்கிக் கொள்ளலாம். உலக நாடுகளை ஏமாற்றிவரும் இராசபக்சே இப்போது கடவுள்களையும் ஏமாற்றுவதற்கு முற்பட்டிருக்கிறார். தனது பாவங்களை உணர்ந்து அதற்காக மன்னிப்புக் கேட்பவர்களை இறைவன் ஏற்றருள்வான் என்ற நம்பிக்கை எல்லா சமயங்களிலும் நிலவுகிறது. ஆனால் இராசபக்சே இந்திய மக்களை ஏமாற்றுவதற்காக பக்தர் வேடம் பூண்டு புனித இடங்களுக்கு யாத்திரை வந்துள்ளார். இந்தியாவிற்குப் புறப்படுவதற்கு முன்னால் பிப்ரவரி 5ஆம் தேதி இலங்கையின் 65ஆவது சுதந்திரதின விழா நிகழ்ச்சியில் பேசும்போது "இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அரசியல் ரீதியில் தன்னாட்சி அதிகாரம் வழங்க முடியாது. நாட்டை இனரீதியாகப் பாகுபடுத்துவது என்பது நடைமுறைக்குச் சாத்தியமில்லாதது.'' என்று கூறிவிட்டுத்தான் இங்கு வந்திருக்கிறார். தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவதாக இந்தியாவிற்கும் உலக நாடுகளுக்கும் பலமுறை அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தகுந்ததாகும். அது மட்டுமல்ல, இராசீவ் - செயவர்த்தனா உடன்பாட்டின்படி ஒன்றாக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாநிலங்களை மீண்டும் பிரித்திருக்கிறார். இலங்கையின் வட-கிழக்குப் பகுதி தமிழர்களின் பூர்வீகத் தாயகம் என இராசீவ்-செயவர்த்தனா உடன்பாடு கூறுகிறது. அதை பகிரங்கமாகத் தூக்கி எறிந்துவிட்டு தமிழர் தாயகப் பகுதியில் சிங்களர்களைக் குடியேற்றுவதும், தமிழ் ஊர்ப் பெயர்களைச் சிங்கள மயமாக்குவதும் தமிழர்களின் நிலங்களைப் பறிப்பதும் இந்துக் கோயில்களையும், கிறிஸ்தவ தேவாலயங்களையும் இடித்துவிட்டுப் புத்தர்கோயில்களைக் கட்டுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இவ்வளவும் செய்துவிட்டுத்தான் இந்தியாவிற்குத் துணிந்து வருகிறார். இந்திய அரசுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை மீறிச் செயல்பட அவர் முடிவெடுத்துவிட்டார். இந்தியாவின் பலவீனத்தைப் புரிந்துகொண்டு அவர் மிரட்டுகிறார். இந்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பதுதான் நம்முன் உள்ள கேள்வியாகும்? ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றபோது இந்தியா மற்றும் 23 நாடுகளுடன் சேர்ந்து இலங்கை அரசால் அமைக்கப்பட்ட நல்லிணக்கக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. கடந்த ஓராண்டு காலமாக எதையும் செயற்படுத்த சிங்கள அரசு முன்வரவில்லை. மாறாக தமிழர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னிலும் அதிகமாக முடுக்கிவிடப் பட்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில் வரப்போகும் மார்ச் மாதத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் கூடி இது குறித்து விவாதிக்க இருக்கிறது. 2011ஆம் ஆண்டில் இக்கூட்டம் நடைபெற்ற போது அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்யும் திருத்தத்தை இந்தியா முன்மொழிந்தது. சீனா, இரஷ்யா, கியூபா போன்ற நாடுகளின் ஆதரவுடன் இந்தியாவின் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இப்போது, சீனா, கியூபா, இரஷ்யா போன்ற நாடுகள் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அங்கம் வகிக்கவில்லை. எனவே இனியாவது இலங்கை யின் மனித உரிமை மீறல்களை பகிரங்கமாகக் கண்டிக்க இந்திய அரசு முன்வருமா? என்பதுதான் கேள்வி. நடைபெறப்போகும் மனித உரிமை ஆணையக்கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக பொருளாதாரப் புறக்கணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா வற்புறுத்தப் போகிறது என்ற செய்திகள் வெளியாகி உள்ளன. ஏற்கெனவே தமிழக சட்டமன்றத்தில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி பேசிய ஆளுநர் உரையில் இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என வற்புறுத்தப்பட்டுள்ளது. ஆளுநர் உரையின்மீது பேசிய தமிழக முதலமைச்சரும் தனது உரையில் "இலங்கையில் தமிழர்கள் சிங்களர்களுக்கு இணையாக அனைத்து உரிமைகளுடன் வாழவேண்டும். இந்த நிலை ஏற்படும்வரை இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும். இனப்படுகொலை நிகழ்த்தி போர்க் குற்றம் புரிந்தவர்களை போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க இந்திய அரசு ஐ.நா. பேரவையில் வலியுறுத்த வேண்டும்'' என அழுத்தம் திருத்தமாகப் பேசியுள்ளார். தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சியினரும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஏழரைக்கோடி தமிழ் மக்களின் ஒருமனதான விருப்பத்தையே முதலமைச்சர் ஜெயலலிதாவும் அனைத்துக் கட்சியினரும் தெரிவித் துள்ளனர். இதை ஏற்றுச் செயல்படுவதற்கு இந்திய அரசு முன்வரவேண்டும். பொருளாதாரப் புறக்கணிப்பு நடவடிக்கை என்பது ஐ.நா. பட்டயத்திற்கு உட்பட்டதேயாகும். ஐ.நா.வின் தீர்மானங்களை மீறிய நாட்டிற்கு எதிராகப் பொருளாதாரப் புறக்கணிப்பு, இராசதந்திர உறவுகளைத் துண்டித்துக்கொள்வது, இரயில், கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, அஞ்சல், தந்தி, வானொலி ஆகிய துறைகளில் உறவுகளை அறுத்துக்கொள்வது போன்றவற்றை மேற்கொள்வதற்கு ஐ.நா. பட்டயத்தின் 41வது விதி இடமளிக்கிறது. அமெரிக்கா மட்டுமல்ல, கனடா போன்ற நாடுகளும் இலங்கை அரசுக்கு எதிரான நடவடிக்கை களை மேற்கொண்டுள்ளன. இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயக மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவந்து அவரைப் பதவி நீக்கம் செய் துள்ள இராசபக்சேயின் செயலை காமன்வெல்த் பிரதமர்கள் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும். இல்லை யேல் தான் அதிலிருந்து வெளிநடப்பு செய்யப் போவ தாக கனடா பிரதமர் ஸ்டீபன் கார்டர் எச்சரித்துள்ளார். மனித உரிமைகளை அப்பட்ட மாக மீறிவரும் இலங்கையில் காமன் வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என காமன்வெல்த் பிரதமர்களுக்கு உலக மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 1961ஆம் ஆண்டில் காமன் வெல்த் மாநாடு இலண்டனில் நடைபெற்றபோது தென்னாப்பிரிக்க வெள்ளை அரசு நிறவெறிக் கொள்கையைக் கைவிட வேண்டும் அல்லது காமன்வெல்த்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்தை அன்றைய பிரதமர் ஜவ ஹர்லால் நேரு கொண்டுவந்து நிறைவேற்றினார். நேரு வின் பாதையில் நடைபோடுவதாகத் தம்பட்டம் அடிக்கும் மன்மோகன் அரசு நேருவைப் பின்பற்றிச் செயல்படுமா? இனவெறிப்போக்கை இலங்கை கைவிடாவிட்டால் காமன்வெல்த் அமைப்பிலிருந்து அதை வெளியேற்றும் தீர்மானத்தை மன்மோகன் கொண்டுவருவாரா? கடந்தகாலத் தவறுக்குப் பரிகாரம் தேடுவாரா? சீக்கியர்களின் 10ஆம் குருவான குரு கோவிந்தசிங் சீக்கிய மதத்தைக் கட்டிக்காக்க கால்சா அமைப்பை உருவாக்கும்போது "தரும தேவதை தாகத்தால் தவிக்கிறாள். கருமம் வென்று களபலி வேண்டும்'' என்கிறார். உடனே கூடியிருந்தோரில் இருந்து ஐவர் களபலியாக முன்வந்தனர். அவர்களில் ஒருவர் தமிழர் என்ற குறிப்பினை சுத்தானந்த பாரதியார் தனது "பாரத சக்தி' மகா காவியத்தில் தந்துள்ளார். குருதி கக்குங் கொடுநகை வாளுடன் இரு நொடியில் எழுந்தினும் யாரென்றே குரு வினாவிடக் கொள்கென் றொருவனும் தருமன் என்ற தமிழனு நின்றனர் சீக்கிய மதத்தைக் கட்டிக்காக்கத் தன்னை களப்பலியாக்கிக் கொள்ள முன்வந்த தமிழனின் பரம்பரைக்குத் தீங்கு செய்தல் தகுமா? சீக்கிய தருமத்திற்கு அது உகந்ததா? என்பதை மன்மோகன்சிங் எண்ணிப் பார்க்கட்டும் அல்லது காலமெல்லாம் பழியைச் சுமக்கத் தயாராகட்டும். நன்றி : தினமணி "20-2-2013 |