6 ஆண்டுகள் மற்றும் 9 மாத காலம் மட்டுமே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்த நீதிநாயகம் சந்துரு அவர்கள் மிகக் குறுகிய காலத்தில் அளப்பரிய நீதிநெறி வழுவாத உன்னதமான தீர்ப்புகளை வழங்கி மகத்தான சாதனை புரிந்திருக்கிறார்.
தமிழக மக்கள் சார்பில் அவரைப் பாராட்டும் அதே வேளையில் அவரை முன்மாதிரியாகக் கொண்டு மற்ற நீதிபதிகளும் செயல்படவேண்டும் என வேண்டிக்கொள்கிறோம். இந்திய நாட்டின் நீதித்துறையில் உச்சநீதிமன்ற நீதிநாயகமாக விளங்கிய வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள் வழங் கிய தீர்ப்புகள் இன்றளவும் நீதித்துறை வட்டாரத்தில் போற்றப்படுகின்றன. அதேபோல நீதிநாயகம் சந்துரு அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்புகள் வரலாற்றில் என்றும் நிலையான இடத்தைப் பெறும் என்பதில் ஐயமில்லை. மூத்த வழக்கறிஞராக விளங்கி எண்ணற்ற வழக்குகளை நடத்தி வெற்றி தேடித் தரும் வழக்கறிஞர் என்ற முறையில் அவர் தொடர்ந்து தனது தொழிலில் ஈடுபட்டு வந்திருந்தால் எவ்வளவோ செல்வம் சேர்த்திருக்கலாம். ஆனால், வழக்கறிஞர் தொழிலை புனிதத் தொண்டாகக் கருதி செயல்பட்டார். சமுதாயத்தில் அடித்தட்டில் உள்ள மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் போன்றவர்களின் வழக்குகளை முன்வந்து எடுத்துக் கொண்டு அவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுத்து பல்லாயிரக்கணக் கானவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை தேடிக்கொடுத்த பெருமை அவருக்கு உண்டு. நீதிபதி பதவியை அவர் ஏற்ற அன்றே தான் ஒரு மக்கள் நீதிபதி என்பதை நிலைநாட்டினார். ஆங்கி லேயர் ஆட்சிக்காலத்தின் வழக்கமாக உயர்நீதிமன்ற நீதிபதிக்கு முன்னாள் வெள்ளித்தடி ஏந்திய சேவகர் ஒருவர் எல்லோரையும் விலகி நிற்கும்படி கூவிக்கொண்டே செல்லுவார். அந்த பழக்கம் சுதந்திரம் வந்த பிறகும் நீடிக்கிறது. ஆனால் அந்த வேண்டாத பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து பாதுகாவலர்கள், டவாலி சேவகர்கள் புடைசூழ நீதிமன்றத்திற்கு வரமறுத்தார். எளிமையாக தனியாக நடந்து நீதிமன்றத் திற்குள் நுழைந்து அனைவருக்கும் வணக்கம் செலுத்திவிட்டு அவர் தனது பணியை தொடங்கும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தார். வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு முன்னால் வாதாடும்போது மை லார்டு என்று விளித்துத்தான் வாதாடுவார்கள். அந்தப் பழக்கத்தையும் ஒழிக்கும்படி வேண்டிக் கொண்டவர் நீதிநாயகம் சந்துரு ஆவார்கள். நீதிபதி பதவியேற்றபோதும், அதிலிருந்து ஓய்வு பெறும்போதும் தனது சொத்துக் கணக்குகளை தலைமை நீதிபதியிடம் அளித்த பெருமைக்குரி யவர் நீதிநாயகம் சந்துரு அவர்கள். ஒவ்வொரு புத்தாண்டின் போதும் நீதிபதிகளைப் பார்த்தது வழக்கறிஞர் களும் உயர்நீதிமன்ற அலுவலர்களும் மற்றவர்களும் பூங்கொத்துக்கள், பழங்கள் ஆகியவற்றுடன் சந்தித்து மரியாதை செலுத்தும் பழக்கத்திற்கும் தடை போட்டார் நீதி நாயகம் சந்துரு. அதைப்போல பதவியிலிருந்து ஓய்வு பெறும் காலத்திலும் வழக்கறிஞர்கள் சார்பில் நீதிபதிக்கு வழியனுப்பும் விழா நடத்தப்படுவது வழக்கம். அரசுத் தலைமை வழக்கறிஞர்கள் உள்பட பல வழக்கறிஞர்கள் பாராட்டிப் பேசி மாலை, பொன்னாடை போன்றவற்றைப் போர்த்தி விலையுயர்ந்த பரிசுகளும் அளித்து வழியனுப்புவார்கள். "இந்த நடவடிக் கையை தான் விரும்பவில்லை. எனக்கு இத்தகைய வழியனுப்பும் விழாக்கள் தேவையில்லை' என தலைமை நீதி பதிக்கு கடிதம் எழுதி அந்த விழாவை ஏற்க மறுத்தவர் நீதிநாயகம் சந்துரு ஆவார். அவர் பதவி வகித்த குறுகிய காலத்தில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பளித்து இதுவரை யாரும் புரியாத சாதனையைப் புரிந்தார். அவர் அளித்த தீர்ப்புகளில் 1000க்கும் மேற்பட்டவை சட்ட இதழில் வெளியாகி யுள்ளன. சுடுகாட்டில் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு தனி இடம் ஒதுக்குவது சட்டப்படி தவறானது என்றும், கோவில்களில் பூசாரிகளாக பெண்களும் பணியாற்றலாம் என்றும் விவசாயிகளின் விளைநிலங்களில் எரிவாயுக் குழாய்களை பதிக்கும் பணிகளை எதிர்த்தும், மேடை நாடகங்கள் நடத்துவதற்கு முன்னால் அதன் முழு வடிவத்தையும் காவல் துறை யிடம் காட்டி அனுமதி பெறவேண்டும் என்பதற்கு முற்றுப்புள்ளி வைத்தும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப் பட்டிருந்த பஞ்சமி நிலங்களை வேறு யாருக்கும் ஒதுக்கக்கூடாது என்றும், போக்குவரத்துக் கழகங்களில் மாற்றுத் திறனாளிகளின் குறைகளைத் தீர்க்கும் வகையிலும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்தும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு மே தினத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்றும், விதி முறை களை மீறிய கட்டிடங்களை வரைமுறை செய்வதற்காக தமிழக அரசு கொண்டு வந்த சட்டங்கள் செல்லாது என்றும், திருப்பூர் சாயப்பட்டறைகள் வழக்கில் நொய்யல் விவசாயிகளுக்கு சாயப் பட்டறை உரிமையாளர்கள் நட்டஈடு கொடுக்கும் வகையில் அபராதம் விதித்தும், நொய்யல் ஆற்றை சுத்தம் செய்ய கண்காணிப்புக் குழு ஒன்றை அமைத்தும், விக்கிரக வழி பாட்டை ஏற்க மறுத்த வள்ளலார் அமைத்த ஜோதி வழிபாட்டு ஆலயத்தில் விக்கிரகம் நிறுவப்பட்டு அவர் கருத்துக்கு மாறாக பூசைகள் செய்யப் பட்டது செல்லாது என்றும் பல சிறப்பான தீர்ப்புகளை அளித்த பெருமைக்குரியவர் ஆவார். அவர் நீதிபதியாகப் பதவியேற்ப தற்கு முன்னால் மூத்த வழக்கறிஞராகத் திகழ்ந்தபோது என்னுடைய வழக்குகள் பலவற்றையும் நடத்தி வெற்றி தேடித் தந்தவர் என்ற முறையில் அவருக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக் கிறேன். தமிழீழ விடுதலை ஆதரவாளர் கள் மாநாடுகளை நாங்கள் நடத்த முற் பட்டபோது அதற்கு அரசு தடை விதித்தது. அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமைகளுக்கு எதிரானது இந்தத் தடை என்பதை நீதிமன்றத்தில் வாதாடி எங்கள் மாநாடுகள் தொடர்ந்து நடப்பதற்கு வழிவகை செய்தவர் அவரே. அரசியலுக்கு அப்பாற்பட்டு உலகத் தமிழர் பேரமைப்பு என்ற அமைப்பை நிறுவி அதனுடைய தொடக்க விழா மாநாட்டினை நாங்கள் நடத்த முற்பட்டபோது அதற்கும் அரசு தடைவிதித்தது. அந்த தடையைத் தகர்த்து உலகத் தமிழர் மாநாடுகளை தொடர்ந்து நடத்தவும், உலகத் தமிழர் பேரமைப்பு தொடர்ந்து இயங்கவும் அவருடைய வாதத் திறமை உதவியது என்று சொன்னால் அது மிகையாகாது. இராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நால்வருக்கு அன்றைய ஆளுநரிடம் நாங்கள் அளித்த கருணை மனு ஏற்க மறுக்கப்பட்டது. உடனடியாக உயர்நீதி மன்றத்தில் ஆளுநரின் ஆணை செல் லாது என்ற வழக்கைத் தொடுத்து அரசியல் சட்டப்படி கருணை மனுக் களின் மீது முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநர்களுக்கோ குடியரசுத் தலைவர் களுக்கோ கிடையாது, மாநில அமைச்சரவைகளும் மத்திய அமைச்சர வையும் கூடி என்ன பரிந்துரை செய் கின்றதோ அந்த பரிந்துரையை ஏற்றுத்தான் ஆளுநர்களும் குடியரசுத் தலைவர்களும் செயல்படவேண்டும் என்ற மகத்தான தீர்ப்பினை பெற்றுத் தந்து அந்த நால்வரின் உயிரைக் காப்பாற்றிய பெருமை அவருக்கு மட்டுமே சாரும். இந்தியா விடுதலைபெற்ற நாளிலிருந்து 1999ஆம் ஆண்டுவரை ஆளுநர்களும், குடியரசுத் தலைவர்களும் மட்டுமே கருணை மனுக்கள் மீது முடிவுசெய்யும் அதிகாரம் பெற்றிருந் ததற்கு சட்டரீதியான முற்றுப்புள்ளி வைத்து, இன்று இந்தியா முழுவதிலும் அந்தத் தீர்ப்பின் அடிப்படையிலேயே எண்ணற்றவர்களின் உயிர்கள் தூக்கு மேடைகளிலிருந்து மீட்கப்பட்டிருக் கின்றன என்று சொன்னால் அதற்கான பெருமை முழுவதும் நீதி நாயகம் சந்துரு அவர்களையே சாரும். கொடிய பொடா சட்டத்தில் நானும் தோழர்களும் கைது செய்யப் பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட போது 18 மாதங்களுக்குப் பிறகும் எங்களுக்கு பிணை கிடைக்காத நிலையில் மூத்த வழக்கறிஞர் சந்துரு அவர்கள் எங்களுக் காக உயர்நீதிமன்றத்தில் வாதாடி பிணையில் நாங்கள் விடுதலை பெற உதவினார். எல்லாவற்றிற்கும் மேலாக பொடாச் சட்ட மறு ஆய்வுக் குழு எங்கள் வழக்கை எடுத்துக்கொண்டு விசாரித்தபோது அந்த வழக்கிலும் வாதாடி எங்கள் மீது பொடாச் சட்டம் தொடுக்கப்பட்டதே செல்லாது என்ற தீர்ப்பினை பெற்றுக்கொடுத்து எங்களின் நிரந்தர விடுதலைக்கு வழிவகுத்தார். 30க்கும் மேற்பட்ட வழக்குகளில் எங்களுக்கு வெற்றி தேடித் தந்தவர் மட்டு மல்ல, அவர் பெற்றுத் தந்த தீர்ப்புகளின் அடிப்படையில் பேச்சுரிமை, எழுத்துரிமை ஆகியவை மற்றவர்களுக்கும் கிடைத்தன. நீதிமுறையை சற்றும் வழுவாது வழங்கி குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன் மக்களுக்குத் தலைவன் என்று தனியே கருதி மதிக்கப்படுவான் என்ற வள்ளுவப்பேராசான் கூற்றுக்கு எடுத்துக்காட்டாக சனநாயக யுகத்தில் நீதிநாயகம் சந்துரு விளங்குகிறார். முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும். கடந்த 8ஆம் தேதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற நீதிநாயகம் சந்துரு தன்னைச் சந்தித்து வாழ்த்திய நூற்றுக் கணக்கான வழக்கறிஞர்களுக்கும், நண்பர்களுக்கும், அலுவலக ஊழியர் களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். நீதிமன்ற வளாகத்தில் உள்ள பத்திரிகையாளர் அறைக்கும் சென்று அவர்களிடமும் விடைபெற்றார். பிறகு அரசு தனக்களித்த காரை ஒப்படைத்து விட்டு கடற்கரை தொடர்வண்டி நிலையத்திலிருந்து மின்சார இரயில் மூலம் புறப்பட்டு தனது இல்லத்திற்குக் குடிமகனாக திரும்பிச் சென்ற அவரது எளிமையைக் கண்டு அனைவருமே வியந்து போற்றினார்கள். நீதிநாயகம் சந்துரு அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவரை எதிர் நோக்கி எண்ணற்ற பணிகள் காத்தி ருக்கின்றன. வாரிசுகளை வளர்த்தெடுக் கும் அரசியல் கட்சிகளால் நாட்டின் சனநாயகத்திற்குப் பெரும் ஊறு நேர்ந்திருக்கிறது. அரசு நிர்வாகத்தில் ஊழலும் இலஞ்சமும் பரவிக்கிடக் கின்றன. மக்கள், குறிப்பாக ஏழை எளிய மக்கள் எல்லா வகையிலும் கவனிப் பாரற்றுத் தவிக்கிறார்கள். அரசியல் சட்டம் வழங்கியிருக்கிற சனநாயக உரிமைகள் ஆட்சியாளர்களால் துச்சமாக மதிக்கப்பட்டு மிதிக்கப்படுகின்றன. இவற்றிலிருந்தெல்லாம் மீளுவதற்கு மக்களுக்கு வழிகாட்டவும் அறிவுரைகள் கூறவும் அவர் முன்வருவார் என்ற பெருநம்பிக்கையுடன் அவருக்கு வாழ்த்துதலையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம். - பழ. நெடுமாறன் |