2,500 இடங்களில் சிந்துவெளி நாகரிக அடையாளங்கள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 21 மார்ச் 2013 10:42
ஏறத்தாழ 2,500 இடங்களில் சிந்துவெளி நாகரிக அடையாளங்கள் கண்டறியபட்டுள்ளன என்றார் இந்தியத் தொல்லியல் துறை தில்லி வட்டக் கண்காணிப்புத் தொல்லியலாளர் வி.என். பிரபாகர்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை சார்பில்
திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது : "சிந்துவெளி நாகரிகம் கி.மு. 2600 முதல் 1900 வரை உள்பட்டது எனப் பெரும்பாலான தொல்லியல் ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர். இந்த நாகரிகம் மேற்கு உத்தரப்பிரதேசம், குஜராத், பலுசிஸ்தான் என 15 இலட்சம் கிலோ மீட்டர் பரப்பளவில் பரவி இருந்தது. இதன் அடையாளங்கள் 2,500 இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த நாகரிகம் குறித்த ஆய்வு 19ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டாலும் 1920ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் வெளியுலகுக்குத் தெரிய வந்தது. இந்த நாகரிகம் முற்கால ஹரப்பா, பிற்கால ஹரப்பா என இரு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. ஆனால் கி.மு. 2600 முதல் 1900 வரை என 700 ஆண்டுகள்தான் இது முழுமையான நாகரிகமாக இருந்துள்ளது. அதன் பிறகு இந்த நாகரிகத்தில் சரிவு ஏற்பட்டது.
ஹரப்பா பண்பாட்டில் திட்டமிடப்பட்ட மாநகரம், நகரம் போன்றவை இருந்துள்ளன. ஹரப்பா, மொகஞ்சதாரோ, கன்வேரிவாலா, ராக்கிகார்ஹி, சோலிஸ்தான் போன்றவை அப்போதே மாநகரங்களாக இருந்தன.
இந்த நாகரிகத்துடன் எகிப்து, மெசபடோமியா போன்ற நாகரிகங்களுக்கு வணிகம் உள்ளிட்ட தொடர்புகள் இருந்துள்ளன. இந்த நாகரிகத்தின் தொடக்கத்தில் மண் பாண்டம் பயன்பாடு இல்லை. காலப்போக்கில் மண்பாண்டம், செம்பு உள்ளிட்ட பயன்பாடுகள் வந்தன. மேலும், விலங்குகளின் எலும்பிலிருந்து ஆயுதங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த நாகரிகத்தைச் சார்ந்த பெண் சிற்பத்தில் இடது கை முழுவதும் வளையல்கள் உள்ளன. மேலும், கண்டெடுக்கப்பட்ட பெண் சடலத்தில் வளையல்கள் இருந்தன. இந்த அடையாளங்கள் குஜராத்திலிருந்து கிடைத்தன.
பிற்கால ஹரப்பாவில் பயன்படுத்தப்பட்ட வளையல்கள், நீளமான பாசிமணிகள் போன்றவை உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மாண்டி என்ற பகுதியில் 2000ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில், 15 கிலோ எடையுடைய நகைகளைத்தான் தொல்லியல் துறையால் மீட்க முடிந்தது. இதேபோல் ஹரப்பாவில் எழுத்துகள் கிடைத்துள்ளன. இவை என்ன எழுத்துகள் என்பதைக் கண்டறிவதற்கு ஆள்கள் இல்லை. அதனால் அவற்றின் பொருளையும் புரிந்து கொள்ள முடிவதில்லை'' என்றார் பிரபாகர்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.