புதிய வழியில் மாணவர் போராட்டம் - சி. மகேந்திரன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 01 ஜூலை 2013 12:40
மாநிலத் துணைச் செயலாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
தமிழக மாணவர் போராட்டம் உருவாக்கிய அதிர்வு அலைகள், புயல் போன்ற வேகத்தை உருவாக்கி விட்டது. சாட்சிகளற்று, இனப்படுகொலையை செய்துவிட்டு, நம்மை யார் என்ன செய்ய முடியும் என்ற இறுமாப்பில் இருந்த ராஜபக்சேவையும், இலங்கை சிங்கள இனவெறி ராணுவ அரசையும் முத­ல் திடுக்கிட வைத்தது ஆங்கிலத் தொலைக்காட்சி சேனல் நான்கு தான். அந்த காட்சி ஊடகம் தந்த சாட்சியாக மார்பில் சுமந்த ஐந்து குண்டுகளுடன் பாலச்சந்திரன் எழுந்து நின்றான்.
கபடமறியாக அந்தக் குழந்தையின் அப்பாவி முகம் பீரங்கிகளின் வ­மை கொண்டு நம்மை தாக்கத் தொடங்கியது. பெரியவர்கள் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, "இனி பொறுத்துக் கொள்வதற்கு என்ன இருக்கிறது' என்று தமிழகத்தில் மாணவர் உலகம் சி­ர்த்து எழுந்து விட்டது. உலக மக்களும், மாணவர்களும் வியட்நாம் மீதான அமெரிக்கப் போருக்கு எதிராக, எழுபதுகளில் போராடிப் பெற்ற வெற்றியை நினைவூட்டுவதான முத்திரையை தமிழக இன்றைய மாணவர் போராட்டம் பதித்துவிட்டது.
தமிழ்நாட்டில் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 65 லட்சம். இதில் பெரும்பாலானவர்கள் இன்றைய போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்கள் என்பது மனதுக்குள் ஒருவிதமான அதிர்வை தருகின்றது. இந்த நூற்றாண்டில் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்ற போராட்டம் இதுவாகத்தான் இருக்க முடியும். இத்தகைய உச்சங்களைப் போராட்டம் பெற்றுள்ள போதிலும், இன்றைய மாணவர் போராட்டத்தின் திசை எது என்ற கேள்வி, தீவிரமாக இப்பொழுது எழுப்பப்பட்டு வருகிறது. இந்த அறிவுப்பூர்வமான விவாதம் இன்றைய தேவைதான். இனாலும் இதில் மறைந்துள்ள மறைவிட நுட்பங்களையும் நாம் உணர்ந்து கொள்ளுதல் அவசியமானதாகும்.
சுதந்திரப் போராட்டத்தில் மாணவர்களிடையே தமிழ் மண்ணில் எழுந்திருந்த போராட்டத்தீ மீண்டும் இந்தித் திணிப்பு நிகழ்ந்த போதுதான், கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. 1965 ஆம் ஆண்டு இந்தித் திணிப்பை எதிர்த்து மாபெரும் போராட்டத்தை மாணவர்கள் நடத்தினர். தமிழகம் கொதிநிலையை அடைந்தது. இதற்கு அடுத்த கட்டமாக 1983 ஆம் ஆண்டு வெளிக்கடை சிறைச் சாலையில் குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உள்ளிட்ட 57 பேர் கொல்லப்பட்டனர். அரசியல் உரிமைக்காகப் போராடிய அன்றைய ஈழத்து மாணவர் தலைவர்களின் அந்த கொலை தமிழக மாணவர்களின் மனசாட்சியை தட்டி எழுப்பியது. மாதக்கணக்கில் மாணவர்கள் வீறு கொண்டு போராடினார்கள். இதன் பின்னர் மாணவர் போராட்டங்கள் பெரிதாக எழுச்சி நிறைந்ததாக நடைபெறவில்லை.
இதற்கு கல்வி நிலையங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்தான் காரணம். கல்வி நிலையங்களின் நடைமுறையும், மாணவர்களின் மனநிலையும் வெகுவாக மாற்றப்பட்டிருந்தன. உலக மயத்தின் பண்ட உற்பத்திக்கான பண்டமாக மாணவர்கள் உருவாக்கப்பட்டார்கள். அவனிடம் மண் நோக்கிய எந்த வேரும் வளராமல் பார்த்துக் கொண்டன கல்வி நிலைய சூழல்கள். சுயநிதிக்கல்லூரிகள் பிரமாண்டமாக வளர்ந்தன. மாணவர்களிடம் ஆங்காங்கே தோன்றிய போராட்ட உணர்வுகளால் நெடிய கல்வி வளாகத்தின் மதில் சுவர்களைத் தாண்டி வெளியே எதுமே செய்ய முடியவில்லை இவர்களால். அந்த சிறையை உடைத்து வெளியே வருவதற்கு அவர்களுக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டன. முள்ளிவாய்க்கால் தாக்குதலை தடுக்க மாணவர்களிடம் சில கடுமையான முயற்சிகள் நடைபெற்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அதில் தமிழக மாணவர்கள் முழுமையையும் நம்மால் பங்கு பெற வைக்க இயலவில்லை. பாலச்சந்திரனின் குரூர மரணம் மாணவர்களை முழுமையாக விழிக்க வைத்துவிட்டது. இந்த விழிப்பில் வரலாற்றுப் பாதையை அவர்கள் கொஞ்சம் திருப்பி அமைத்து விட்டார்கள்.
ஒரு செய்தியாளரின் எழுத்து நம்மை வேதனை கொள்ள வைத்தது. ஊடகங்களில் முகம் காட்டி, தங்களை ம­வாகப் பிரச்சாரம் செய்து கொள்வதற்குத்தான் மாணவர்கள் இந்தப் போராட்டத்தை நடத்தியதாக எழுதினார் இவர். தரம் தாழ்ந்து தங்களைத் தாங்களே பிரச்சாரம் செய்து கொள்ளும் ம­ந்தவற்றின் பட்டியல் எத்தனையோ தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கின்றன. அவை எதுவுமே கண்ணில் படாத இந்தப் பத்திரிக்கையாளருக்கு, மாணவர்கள் கண்ணில் பட்டதுதான் ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. மாணவர்கள் தங்களைக் காட்டிக் கொள்வதற்குத்தான் போராட்டம் என்றால், தமிழகத்தில் என்ன என்னமோ நிகழ்ந்திருக்கும். போராட்டத்தில் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டிருக்கலாம். கடைகள் உடைக்கப்பட்டிருக்கலாம். கும்பல் கலாச்சாரம் கற்றுத் தந்துள்ள அனைத்தும், ஊடக மோகத்திற்காக தலைகாட்டியிருக்கலாம். எதுவுமே நிகழவில்லை.
மாணவர்கள் முத­ல் காலவரையற்ற உண்ணா விரதத்தை, தொடக்கியிருந்தார்கள். வேறுவகையில் சொல்வதென்றால், அது சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டமாகும். லயோலா கல்லூரி மாணவர்கள்தான் முத­ல் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ள மாணவர்களாலும் இதே அடிப்படையில் சில நூறு இடங்களில் போராட்டம் நடந்து கொண்டேயிருந்தது. சக மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என்று சமூகத்தை சார்ந்தவர்கள் அனைவரும் போராட்டத்தை உற்றுப் பார்த்தார்கள். பல நாட்கள் பட்டினி கிடந்து வாடி, மயக்கமுற்ற அந்த முகங்கள், ஒவ்வொருவரின் சட்டையைப் பிடித்தும் சில கேள்விகளை கேட்கத் தொடங்கியது. ஈழத் தமிழர் விடுதலைக்கான போராட்டம் மக்கள் போராட்டமாக இதனால் மாற்றம் அடைந்தது.
மாணவர் போராட்டத்தை விமர்சனம் செய்பவர்கள் ஒன்றை யோசித்துப் பார்க்க வேண்டும். சாலை மறியல், கதவடைப்பு என்று முந்தைய மாணவர்கள் போராட்டத்தைப் போ­ல்லாமல் சாகும் வரையிலான போராட்டம் என்று தங்கள் போராட்டத்தை மாணவர்கள் ஏன் தொடங்கினார்கள்? இந்தப் போராட்டத்தில் ஏன் கலவரம் இல்லை? கண்ணீர் புகை குண்டுகள் வீசப்படவில்லை? துப்பாக்கிச் சூடுகள் ஏன் நடக்கவில்லை? சுதந்திரப் போராட்டக் காலத்தின் காந்தி அடிகளைப் பின்பற்றி போராட்டம் நடை பெற்றுள்ளது. தன்னை வருத்தி பிறரை விழிக்க வைத்தல் போராட்டத்தின் அடிப்படைத் தத்துவமாகத் தெரிகிறது. திடீர் என்று கிளர்ந்து எழும் போராட்டங்களில் இயல்பாகவே தோன்றி விடும் குழப்பங்களையும், அராஜகங்களையும் இது தடுத்து நெறிப்படுத்திவிட்டது. மாணவர் போராட்டத்தின் இந்த அடிப்படை உயர்வை ஊடகங்களில் விமர்சனம் செய்பவர்களால் ஏன் புரிந்து கொள்ள இயலவில்லை?
ஆனாலும் சில குழப்பங்களும் உருவாகிக் கொண்டேதான் இருந்தன. லயோலாக் கல்லூரி மாணவர்களின் காலவரையற்றப் உண்ணாவிரதம் வீரியத்துடன் தொடங்கியது. இது சென்னை நகரில் எழுச்சியை உருவாக்கியது. அப்பொழுது புகழ் மிக்க நாளிதழ் ஒன்றில் வெளிவந்த கட்டுரை, "கலைக் கல்லூரி மாணவர்கள் போராடுகிறார்கள். சுயநிதி கல்லூரிகளும், மருத்துவக் கல்லூரிகளும் ஏன் போராட்டத்தில் பங்குப் பெறவில்லை' என்ற கேள்வியை எழுப்பியது? இதன் நோக்கம் மாணவர் போராட்டம் வெற்றி பெறாது என்பதை பிரச்சாரம் செய்வதுதான். அதன் பின்னர் அந்த மாணவர்கள் மட்டுமல்லாது, அனைவருமே போராட்டத்தில் இறங்கிவிட்டார்கள். அந்த கட்டுரையாளர் தனது கருத்தை மாற்றிக் கொண்டாரா என்பது நமக்குத் தெரியவில்லை. போராட்டம் வெற்றி பெறாது என்ற பிரச்சாரங்களையும் மீறிக் கிடைத்த வெற்றிதான் போராட்டத்தின் வெற்றியாகும்.
இதைப்போலவே, இன்றைய மாணவர் எழுச்சி பிறரால் தூண்டப்படுவதாகவும் சிலர் எழுதியும் பேசியும் வருகிறார்கள். தூண்டப்பட்டது என்ற சொல் பழைய காலத்தின் மண்ணெண்ணெய் விளக்கை ஞாபகப்படுத்துகிறது. விளக்கின் திரியை தூண்டுவதனாலேயே அதி­ருந்து ஒளி கிடைத்து விடுவதில்லை. எண்ணெய் இருந்தால் மட்டுமே விளக்கு எரியும். மாணவர்களிடம் தார்மீக கோபம் இல்லை என்றால், எல்லாப் பக்கங்களிலும் போராட்டம் பரவி தீவிரம் பெற்றிருக்க முடியுமா என்பதை யோசித்துப் பார்த்திருக்க வேண்டும். இந்த அரசியல் தூண்டுத­ல் தோழர். ஆர். நல்லகண்ணு பெயரும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தோழர் நல்லகண்ணு, 88 வயது நிரம்பிய, அரசியல் முதிர்ச்சி பெற்றவர்.
9 இண்டுகள் சிறை வாழ்க்கையிலும், 68 ஆண்டு அரசியல் வாழ்க்கையிலும் அவர் கொண்ட அனுபவ வழியிலான தத்துவம், "விழிப்புணர்வு கொண்ட மக்கள் போராட்டங்களினால் சமுக மாற்றங்கள் நிகழ்கிறது என்பது தான். இதைத்தான் மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்­ வருகிறார். முள்ளிவாய்க்கால் படுகொலையால் அவரது ஆழ்மனம் எவ்வாறு காயப்பட்டுள்ளது என்பதை நான் நன்கறிவேன். மாணவர்கள் போராட்டங்களுக்கு அவரே நேரில் சென்று இளைய தலைமுறை உணர்வுகளுடன் தனது உணர்வையும் பகிர்ந்து கொண்டார். அவருக்கு என்ன அரசியல் உள்நோக்கம் இருக்க முடியும்? அய்யா பழ.நெடுமாறன், அய்யா இரா. நல்லகண்ணு இருவரையும், "எங்களை நெறிப்படுத்தி வழிகாட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்' என்று மாணவர்களே அழைப்பு விடுத்த பின்னர், இதில் தூண்டுவதற்கு என்ன இருக்க முடியும்?
நீதியை உலக அளவில் நிலை நிறுத்துவதற்கு நடைபெறும் இன்றைய போராட்டத்தை தமிழ்நாட்டின் வாக்கு வங்கி அரசியலோடு இணைத்துப் பார்க்க கூடாது. இதை ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான போராட்டமாக மட்டுமே பார்க்க வேண்டும். ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலையை மையப்படுத்தாமல் தமிழக அரசியலை மையப்படுத்தியதில் பல்வேறு மோசமான விளைவுகளை கடந்த காலத்தில் நாம் சந்தித்திருக்கிறோம். அவ்வாறான மோசமான விளைவுகளை தவிர்க்கும் முயற்சி இன்று நமக்கு தேவைப்படுகிறது. அரசியல் கட்சிகளின் எல்லைக் கடந்த மாணவர் போராட்டத்தை தனித்தன்மையோடு வளர்த்தெடுப்பதில் அனைவரிடமும் ஒன்றுபட்ட கூட்டு முயற்சி தேவைப்படுகிறது. இதில் அரசியல் கட்சிகளோடு மாணவர்களை மோதவிடும் தந்திரம் தேவையற்றது.
ஐக்கிய நாடுகள் அவை முதல் அனைத்து நாடுகளிலும் அமைந்த நாடாளுமன்றங்கள் வரை, அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக மறைவிடத் திட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இதனை அறிந்துகொள்வதற்கு கடந்த காலத்தில் அரங்கேறிய எத்தனையோ வகையான கபட நாடகங்களை நாம் அறிந்துதான் வைத்திருக்கிறோம். வியாபாரத்தை மையப்படுத்திய புவிசார் அரசிய­ல், நடைபெறும் மறைமுக சதிச்செயல்களும் நமக்கு நன்கு தெரிந்தவை தான்.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தையும் இந்தப் பின்னணியில்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். "நான் அடிப்பதைப் போல அடிக்கிறேன். நீ அழுவதைப் போல் அழு' என்ற கொல்லைப்புறத் தந்திரத்துடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. இதிலும் உண்மை இல்லாமல் இல்லை. இந்த சதிகள் அனைத்தையும், முத­ல் தமிழ் மக்களின் ஒற்றுமையின் மூலமும், பின்னர் மனித நேயம் கொண்ட மக்கள் சக்தியை ஒருங்கிணைப்பதன் மூலமும் தான் தீர்க்க முடியும். சில ஊடகங்கள் ஈழப்பிரச்சனையில் தமிழக மக்களின் ஒற்றுமையில் வேறுபாடுகளை உருவாக்கப் பார்க்கிறார்கள். இதில் மறைந்துள்ள பின் விளைவுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எல்லாக் காலங்களிலும் வழக்கம் போல் கேட்கும் குரல் ஒன்று இப்பொழுதும் கேட்கத் தொடங்கியுள்ளது. போராட்டங்களினால் கல்வி பாழ்பட்டுப் போகும் என்ற பெற்றோர்களின் பெரும் கவலை என்பதுதான் அந்தக்குரல். வெள்ளையர்களை எதிர்த்த விடுதலைப்போராட்டக் காலத்தில் மாணவர்கள் போராட்டம் வெடித்தபோது இதே குரல் கேட்கத்தான் செய்தது. இந்தி திணிப்பை எதிர்த்து மாணவர்கள் போராடியபோதும் இதே குரல் கேட்டது. இப்பொழுதும் கேட்கிறது. வெகு காலத்திற்கு பின், அதுவும் நெஞ்சு பொறுக்காமல் மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். ஏன் இந்த குரலை திட்டமிட்டு எழுப்ப வேண்டும்?
மாணவர்களின் கல்வி எதனால் பாழ்பட்டுப் போகிறது? பெரும் கொள்ளையால் இன்றைய கல்வி நிறுவனங்களே தத்தளிக்கின்றன. பெற்றோர்கள் கட்டணச் சுமையைத் தூக்க முடியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்கள். திட்டமிட்டு, வெறும் சுயநலக் கூட்டமாக மாணவர்கள் மாற்றப்பட்டு வருகிறார்கள். அவர்களிடம் இயல்பில் அமைந்த சமூகப்பொறுப்பு முற்றாகப் பறிக்கப்பட்டுவிட்டது. இன்றைய கல்வி அமைப்பு முறையில் வளர்ந்து பெருகிவிட்ட இந்த நச்சை அகற்ற, இந்தப் பொறுப்புள்ள மனிதர்கள் ஒரு சிறு துரும்பைக் கூட அசைத்தது கிடையாது. இதனால் கல்வி மட்டுமல்ல, இளைய தலைமுறையின் எதிர்கால தார்மீக வாழ்க்கையே நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது. அதைப் பற்றி யாரும் ஏன் பேசுவதில்லை.
கொடுங்கொலை செய்யப்பட்ட ஈழமக்களுக்கான நீதிசார் போராட்டத்தில் உலக மக்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்றால், இதற்கு பூமிப் பந்தில் வாழும் பத்துக் கோடி தமிழ் மக்களையும் எழுச்சி கொள்ள வைக்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் ஒருங்கிணைய வேண்டும். இதற்கான முதல் கட்ட அறிவிப்பு பணியை இன்றைய மாணவர் போராட்டம் சாதித்துவிட்டது என்றே தோன்றுகிறது. இதை விடுத்து, பெருமைப்படுத்தப்பட வேண்டிய இந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தல் கூடாது.
ராஜபக்சேவின் போர்க்குற்றம் மிக கொடியது. ஒரு இனத்தை அழிக்கும் நோக்கத்துடன் லட்சக் கணக்கில் தமிழ் மக்களை கொன்று முடித்த படுபாதக செயல். மனித உணர்வு கொண்ட யாராலும் இதனை ஏற்றுக் கொள்ள இயலாது. இந்தக் குற்றத்தை மறைக்கும் சதியும், அதனை கண்டுப்பிடித்து தண்டிக்கும் முயற்சியும்தான் இன்றைய போராட்டமாகும். "ஐக்கிய நாடுகளின் அவையின் மேற்பார்வையில் வெகுமக்கள் வாக்கெடுப்பு நடத்தி ஈழமக்களின் விருப்பத்திலான ஆட்சி ஒன்றை அமைக்க வேண்டும் என்ற தமிழக சட்டமன்ற தீர்மானத்தை நிறைவேற்றியதை நாட்டின் கொள்கையாக அறிவிக்க வேண்டும்; இன அழிப்பு போர் குற்றத்திற்கு சுதந்திரமான பன்னாட்டு விசாரணை வேண்டும்; முத­ய கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர் மாணவர்கள்.
இந்த கோரிக்கைகளை வ­யுறுத்தி திருச்சியில், தமிழகம் முழுவதுமுள்ள மாணவர் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் இரண்டு மூத்த அரசியல் தலைவர்கள் அய்யா பழ. நெடுமாறன் அவர்களும், தோழர். இரா. நல்லகண்ணு அவர்களும் பங்கேற்றார்கள். இன்று தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் 5 குழுக்களாகப் பிரிந்து சுடர் ஏந்திச் செல்லும் பேரியக்கத்திற்கு மாணவர்கள் திட்டமிட்டுள்ளார்கள். முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மே17 ஆம் தேதி எல்லாக் குழுவினரும் சங்கமிக்க இருக்கிறார்கள். தஞ்சை நகரம், மாணவர்களின் நகரமாக மாறப் போகிறது.
சுந்திரப் போராட்டத்திலும், மொழித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திலும் தமிழக மாணவர்கள் வரலாற்றில் மாற்றத்தை நிகழ்த்திக் காட்டியவர்கள். இப்பொழுதும் புதிய வரலாற்றைப் படைக்க, தங்கள் கரங்களை ஒன்றிணைத்து எழுந்து விட்டார்கள். அவர்கள் அடையப் போகும் வெற்றிக்கு ஜீவாவின் தாமரை தனது வாழ்த்துகளை கூறிக்கொள்கிறது.
நன்றி : "தாமரை' ஏப்ரல் 2013
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.