உலக ஊடக சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஊடக சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதத்தில் இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உலக ஊடக சுதந்திர அட்டவணை ஒன்றை பிரான்சைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
179 நாடுகளை உள்ளடக்கிய இந்தப் பட்டியலில் இலங்கை 162வது இடத்தைப் பிடித்துள்ளதுடன், ஊடக சுதந்திரத்திற்கு மிகவும் மோசமான கறுப்பு நாடுகளின் பட்டியலிலும் இலங்கை இணைக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளின் ஊடக சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு ஊடக சுதந்திர நாடுகள் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஊடக சுதந்திரம் மதிக்கும் நாடுகள் (வெள்ளை), திருப்திகரமான நிலைமை (மஞ்சள்), குறிப்பிடும்படியான சிக்கல் நிலைமை (ஆரஞ்சு), மோசமான நிலைமை (சிகப்பு), மிகமிக மோசமான நிலைமை (கறுப்பு) என இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் கறுப்பு நாடுகளின் பட்டியலில் இலங்கையுடன் சீனா, வியட்நாம், லாவோஸ், சோமாலியா, சிரியா, சவுதி அரேபியா, சூடான், யேமன், எரித்திரியா, எதியோப்பியா, ஈரான், துர்க்மெனிஸ்தான், அஜர்பைஜான் ஆகிய நாடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதே வேளை, ஊடக சுதந்திரம் மதிக்கும் நாடுகளின் இந்தப் பட்டியலில் பின்லாந்து முதல் இடத்தை பெற்றுள்ளது. நெதர்லாந்து 2வது இடத்தையும், நோர்வே 3வது இடத்தையும் பெற்றுள்ளது. அத்துடன், ஜெர்மனி 17வது இடத்திலும், பிரித்தானியா 29வது இடத்திலும், அமெரிக்கா 32வது இடத்திலும், பிரான்ஸ் 37வது இடத்திலும் இருக்கின்றன. இந்தியாவுக்கு 140வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவில் கடந்த 2012ஆம் ஆண்டு மட்டும் பத்திரிகையாளர்கள் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலில், ரஷ்யா 148ஆவது இடத்தைப் பிடித்துள்ளது, பாகிஸ்தான் 159வது இடத்திலும் சீனா 173வது இடத்திலும் உள்ளன. வடகொரியா 178வது இடத்தையும், எரித்திரியா 179வது கடைசி இடத்தையும் பிடித்துள்ளன. இதேவேளை, இந்த ஆண்டில் மட்டும் 19 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. அதிகமாக பாகிஸ்தானில் 6 பேரும், சிரியாவில் 5 பேரும், பிரேசிலில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 174 ஊடகவியலாளர்கள் இந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 162 பேர் இணைய ஊடகவியலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது இவ்வாறிருக்க, ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை பிரயோகிப்போர் தண்டிக்கப்படாத நாடுகளின் பட்டியலில் சிறீலங்கா மீண்டும் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலே இலங்கையில் ஊடகவியலாளர்களின் நிலையை இவ்வாறு எடுத்துக்காட்டியுள்ளது. பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் இந்த வரிசையில் உள்ளடங்குகின்றன. கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை உரிய முறையில் நடாத்தி குற்றவாளிகளை தண்டிக்க இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 2012ஆம் ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் இடையில் இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை தொடர்பில் மாற்றங்களும் கிடையாது என தெரிவித்துள்ளது. கடந்த தசாப்த காலத்தில் ஒன்பது ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் நியாயமான விசாரணைகள் நடத்தப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிடுவோர் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளது. இதேவேளை, அண்மைக் காலமாக இலங்கையில் ஊடக நிறுவனங்கள் மீது நடாத்தப்பட்டு வரும் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் வெளியிட்டுள்ளது. ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யுமாறு அமெரிக்கா இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் கடுமையான மனித உரிமை மீறல்களின் நீதி மற்றும் பொறுப்புகள் விடயங்களுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவி செய்யும் என அமெரிக்க அரச திணைக்களப் பேச்சாளர் பேட்ரிக் வென்ரெல் தெரிவித்துள்ளார். கருத்து வெளியிடும் சுதந்திரத்தைப் பாதுகாக்குமாறு இலங்கை அதிகாரிகளை வலியறுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கருத்து வெளியிடும் சுதந்திரம் பற்றி ஜெனீவா மனித உரிமை ஆணையத்தில் மாத்திரமல்ல இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரையிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதென அமெரிக்கா கூறியுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்ட அறிக்கையை ஆராய்ந்து கவலையடைந்ததாக அமெரிக்க அரச திணைக்களப் பேச்சாளர் பேட்ரிக் வென்ரெல் தெரிவித்துள்ளார். உதயன் பத்திரிகை மீதான தாக்குதலையும் அமெரிக்கா கண்டித்துள்ளது. உதயன் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை, பத்திரிகை விநியோகத்தர்கள் தாக்கப்பட்டுப் பத்திரிகைகள் எரிக்கப்பட்டமை கண்டிக்கத்தக்கது என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. இது இவ்வாறிருக்க, அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவோர் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள், எச்சரிக்கைகள், தடுத்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மாற்றுக் கருத்துக்களையும் விமர்சனங்களையும் வெளியிடுவோர் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. "மாற்றுக் கருத்துக்கள் மீதான தாக்குதல்' என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், சட்டத்தரணிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் போன்றோர் இவ்வாறு அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுக் கருத்துக்களை வெளியிடுவோர் மீது வன்மையான அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய வலய பிரதிப் பணிப்பாளர் பொலி ட்ரஸ்கொட் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக விமர்சனப் பாங்கான கருத்துக்களின் வீழ்ச்சியை அவதானித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட அதிகமானவர்கள் அஞ்சுவதாகத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதனைத் தொடர்ந்து அரசாங்கம் அதிகாரத்தை விஸ்தரித்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடைபெறுவதற்கு முன்னதாக நாட்டின் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துமாறு உலக நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரையில் காத்திரமான விசாரணைகள் நடத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சட்டங்களுக்கு அமைய நம்பகமானதும், நியாயமானதுமான வகையில் விசாரணைகள் நடாத்த அரசாங்கம் தவறியுள்ளது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். நன்றி : ஈழமுரசு 07-13 மே 2013 |