விவேகானந்தரையும், குறளையும் இல்லம்தோறும் கொண்டுசேர்த்தவர் பழநியப்பனார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் புகழாரம் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2013 14:10 |
"தமிழகம் முழுவதும் இல்லம் தோறும் விவேகானந்தரையும், திருக் குறளையும் கொண்டு சேர்த்தவர் அறநெறியண்ணல் பழநியப்பனார்'' என்று தினமணி ஆசிரியர் கே.வைத்திய நாதன் புகழாரம் சூட்டினார்.
மதுரை வர்த்தக சங்க அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடு மாறனின் தந்தை, அறநெறியண்ணல் கி.பழநியப்பனார் நூற்றாண்டு விழாவில், பழநியப்பனாரின் உருவப்படத்தைத் திறந்துவைத்து அவர் பேசியது: ""தந்தை மகற்காற்றும் நன்றி' மற்றும் "மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி' ஆகிய இரண்டு குறள்களுக்கும் எடுத்துக்காட்டாகக் கூறுவதாக இருந்தால் "அறநெறியண்ணல்' பழநியப்பனாரையும், பழ. நெடுமாறனையும் கூறலாம். இந்த நிகழ்ச்சியில் "தினமணி'க்கும் வாய்ப்பளித்து, அதன் ஆசிரியராக இருக்கும் என்னிடம் பழநியப்பனாரின் படத்தைத் திறந்துவைத்து உரையாற்ற வாய்ப்பளித்ததற்கு எங்கள் வாசகர்கள் சார்பில் நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆண்டுதோறும் விவேகானந்தர் படத்துடனான நாள்காட்டியை வெளி யிட்டுத் தமிழகம் முழுவதும் இல்லம் தோறும் விவேகானந்தரைக் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் பழநியப்பனார். விவேகானந்தரின் 150 ஆவது ஜெயந்தி விழா நடைபெறும் ஆண்டில், பழநியப்பனாருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவது மிகவும் பொருத்தமானது. மதுரையில் திருவள்ளுவர் கழ கத்தை நிறுவி திருக்குறளுக்கு அவர் ஆற்றிய தொண்டு அனைவராலும் போற் றப்படக்கூடியது. அறிஞர் பெருமக்கள் பலருக்கும் தமிழ் ஆர்வத்துக்கு அடிகோய இடம் திருவள்ளுவர் கழகம் என்றால் அது மிகையாகாது. விவேகானந்தரை இல்லம்தோறும் கொண்டு சேர்த்ததுபோல, வள்ளுவப் பேராசானையும் பரவலாக அறியச் செய்த பெருமையும் அவருக்கே உள்ளது. எல்லோரும் ஆங்கில வார்த்தையான "காலண்டர்' என்று வழங்கி வந்ததை "நாள்காட்டி' என்று நல்ல தமிழில் பெயர் சூட்டிப் புழக்கத்தில் கொண்டு வந்தவர் பழநியப்பனார். மதுரை மாநகரின் வரலாற்றைப் பதிவு செய்த பெருமையும் அவரையே சேரும். பிறந்த மண்ணின் பெருமையை இளம் தலைமுறைக்குக் கொண்டு சேர்த்ததில் அவருக்கு மிகப் பெரிய பங்களிப்பு உள்ளது. வீட்டில் நமக்குள் பேசுவது தமிழாகவே இருக்க வேண்டும். தமிழில் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டு, நமது குழந்தைகளுக்குத் திருக்குறள் கற்றுக் கொடுக்க வேண்டும். தமிழனின் தனி அடையாளமான திருக்குறள் தெரியாதவர்களாக நமது சந்ததியினர் இருக்கக் கூடாது. பழநியப்பனாரின் நூற்றாண்டு விழாவில் நாம் இதை சபதமாக ஏற்க வேண்டும்'' என்றார் "தினமணி' ஆசிரியர் வைத்தியநாதன்.
|