வியாழக்கிழமை, 01 ஆகஸ்ட் 2013 14:00 |
15-7-2013 அன்று அமெரிக்காவில் மறைந்த ஈழத்துணைதிரு. அழகிரிசாமி அவர்களின் இறுதி நிகழ்வு திண்டுக்கல்லில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த 21-7-2013 அன்று நடைபெற்றது. அவரது உடலுக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் கொடி அணிவித்து பொது மக்களின் இறுதி வணக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்தது.
திரு. வை.கோ, திரு. பழ. நெடுமாறன், திரு. சீமான் போன்ற தமிழீழ, தமிழின உணர்வாளர்களும் திரு. சாலமன் பாப்பையா போன்ற தமிழ்மொழி ஆர்வலர்களும், அ.தி.மு.க., தி. மு. க., கம்யூனிஸ்டுக் கட்சி, காங்கிரசு, தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசியப் பொதுவுடைமைக் கட்சி போன்ற பல்வேறு அரசியல் கட்சியினரும் காலையில் இருந்து மதியம் வரை அன்னாரின் உடலுக்கு மலர்வளையம் வைத்தும் மாலை போட்டும் வணக்கம் செலுத்திவந்தனர். மதியம் 12:30 மணியளவில் அன்னாரின் உடல் அவரது தோட்டக் காணி உள்ள இடமான தவசிமேடை - வடுகம்பட்டி என்னும் கிராமத்திற்கு பெரும் திரளான மக்கள் புடை சூழ அவரது பேரன் நித்திலன் புலிக்கொடியை முன்னே ஏந்திச் செல்ல கொண்டுசெல்லப்பட்டது. மாலை 3:00 மணிக்கு அவரது தோட்டக்காணியில் தமிழர் தேசிய இயக்கத்தின் துணைத் தலைவரான திரு. வீரப்பன் தலைமையில் இறுதி வணக்க உரை தொடங்கியது. இதில் ம.தி.மு.க அழகுசுந்தரம், அ.தி.மு.க கண்ணன், பெரியார் தொண்டர் வரதராசன், கவிஞர் அறிவுமதி, த.பெ.தி.க. சம்பத் ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக, திரு. தி. அழகிரிசாமி அவர்களுக்கு "ஈழத்துணை' என மதிப்பளித்து விடுதலைப்புலிகள் வெளியிட்டிருந்த அறிக்கையை வாசித்து திரு.பழ நெடுமாறன் அவர்கள் இறுதி வணக்க உரையை நிகழ்த்தினார். அதன் பின்னர் "வீர வணக்கம்! வீர வணக்கம்!! தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பயிற்சிக் களம் அமைத்த அழகிரிசாமிக்கு வீர வணக்கம்'' - எனும் முழக்கத்துடன் அன்னாரின் வித்துடல் விதைகுழியில் விதைக்கப்பட்டது.
|