ஒரு போராளியின் மறைவு! - கவிஞர் காசி ஆனந்தன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2013 15:09

தழல் நிகர் மறவன் அழகிரி சாமியின்
தமிழ்ப்பற்றுக் கீடும் உண்டோ?
முழவெனும் அழகிரி சாமியின் போர்க்குரல்
முழக்கமும் மறைவதுண்டோ?
சுழல்புயல் அழகிரி சாமியின் கனல் எழும்
சுடர்விழி மறப்பார் உண்டோ?

alagiri-kasi
அழகிரி சாமியின் ஈழமண் பற்றினை
அளக்கஓர் தமிழும் உண்டோ?
உறுமியே தமிழ்மொழி காத்திடக் களமிசை
உலாவிய தமிழின் நெஞ்சம்
சிறுமலைக் காணியைப் புலிகளின் பாசறை
செயல்படத் தந்த நெஞ்சம்
பொறுமை கடந்து பொய் அரசியலாளரைப்
பொடி செய்து போட்ட நெஞ்சம்
இறுதியில் தன்பணி முடித்ததோ? ஓர்தமிழ்
எழில் நெஞ்சம் இழந்தோம் அம்மா!
தீயவர் கொடியவர் தீண்டினும் அசைந்திடாத்
திடங்கொண்டான் திண்டுக் கல்லான்!
தாயகம் உயிரெனும் கொள்கையான் தமிழகம்
தாங்கினான் காவல் வல்லான்!
சாயலாம் உயிரெனும் நிலையிலும் எதிரிமுன்
சற்றேனும் பணிதல் இல்லான்!
தூயன் தமிழ்ப்புலி நல்லான் மறைந்தானே...
துடிக்கின்றோம்! என்ன செய்வோம்?
நெடுமாறன் என்னும் அடலேறு பக்கம்
நெருக்கம்கொண் டிருந்த தோழன்
விடுதலை நெஞ்சன் அடிமையர் கையின்
விலங்கினை உடைத்த வேங்கை
எடுபிடி யாளர் இரண்டகர் முகத்தில்
எச்சிலை உமிழ்ந்த ஏந்தல்
நடுவழிப் பயணம் தொடர்கையில் வீழ்ந்தான்!
நாம் வீழ்ந்தோம்! வீழ்ந்தோம்! கண்டீர்!
அண்ணாமலைப்பல் கலைக் கழகத்தில்
ஆன்றோன் பேரறிவு பெற்றான்!
மண்ணாள ஈழம் தொடுத்தமண் போரில்
மானத்தன் வீரம் பெற்றான்!
கண்ணாய் இருந்துதன் இனம்காத்த வாழ்வில்
காவலன் நிமிர்வு பெற்றான்!
புண்ணான நெஞ்சம் சுமந்துயாம் புரண்டழப்
புகழாளன் விடை பெற்றானே!

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.