எமது சிறு பிராயத்தில் படித்த கதைகளில் இன்றும் ஞாபகத்தில் உள்ள கதை, "நரியும் திராட்சை பழமும்''. இக்கதையை மிக சுருக்கமாக "எட்டாப்பழம் புளிக்கும்'' என்பார்கள். சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் இத்தத்துவத்தையே கடைப்பிடித்து வருகிறார்கள்.
இன்றைய சிறிலங்கா அரசிற்கும், அண்மையில் இங்கு வருகை புரிந்த ஐ. நா. மனித உரிமையாளர் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் இடையில் உருவான பல சர்ச்சைகள், திராட்சைப்பழத்தை உண்ண எண்ணிய நரி, அது கிடைக்காத காரணத்தினால், அப்பழம் புளிக்குமென கூறியது போலானது.
இன்று நேற்று அல்ல, என்று தமிழ் மக்களது அரசியல் விடுதலைப் போராட்டத்தை சிறிலங்கா அரசுகள் ஆயுத முனையில் அடக்க முனைந்தார்களோ, அன்றிலிருந்து சர்வதேச மட்டத்தில் குரல் எழுப்பிய ஐ. நா. வின் செயலாளர் - நாயகம் முதல் சகலரும் சிறிலங்கா அரசினால் இழிவுபடுத்தப்பட்டு அவர்களைப் பற்றிய தவறான கருத்துக்களை பறைசாற்ற ஆரம்பித்துள்ளனர்.
சிறிலங்கா அரசு உண்மையில் என்ன செய்கின்றது என்பதை நாம் மிகவும் விழிப்புடன் கவனிக்க வேண்டும். சர்வதேச மட்டத்தில் உள்ள ஒரு முக்கியப் புள்ளி சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள், தமிழ் மக்களது அரசியல் உரிமை பற்றிய நியாயமான முறையில் குரல் கொடுத்தால், முதல் கட்டமாக இந்நபரை சிறிலங்காவிற்கு அழைப்பது வழக்கம்.
இவர்களது அழைப்பிற்கு இணங்குபவர்களுக்கு தமது செலவிலேயே விமானச் சீட்டு, ஐந்து நட்சத்திர விடுதியில் தங்குமிட, உணவு வசதிகள் கொடுக்கப்படுவதுடன், வடக்கு-கிழக்கு தவிர்த்த மற்றைய பகுதிகளுக்கு, சிறப்பாக மலைநாடு, தெற்கின் கடற்கரைகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் சென்று பார்வையிடுவதற்கு வசதி செய்து கொடுக்கப்படுகிறது.
இந்தச் சுற்றுலாவேளையில், விருந்தினர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு, சிறிலங்கா அரசிற்குக் கடமைப்பட்டவராக ஆக்கப்படுவார்கள். அவ்வேளையில் இவ் விருந்தினரை, ஜனாதிபதி முதல் பிரதமர், பாதுகாப்பு செயலாளர் போன்று பல முக்கியப் புள்ளிகள் சந்திக்க ஒழுங்கு செய்யப்படுகிறது.
இறுதியாக இவ்விருந்தினருக்கு மிகவும் பெறுமதி வாய்ந்த இரத்தினக் கற்கள் உட்பட பல பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் இந்நபர் வாய் திறந்து பேசிய சிறிலங்காவின் மோசமான மனித உரிமை மீறல்கள், தமிழர்களது அரசியல் உரிமை பற்றிய அக்கறைகள் அவருக்கு தெரியாமலே அமைதியாகிவிடும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஊழல் நிறைந்த விருந்தோம்பலை சிறிலங்கா அரசிடம் அனு பவித்த சில சர்வதேச முக்கியப் புள்ளிகளே எமக்கு இதைக் கூறியுள்ளார்கள்.
இதில் முக்கிய விடயம் என்னவெனில், சிறிலங்காவின் இவ் ஊழல் நிறைந்த செயற்திட்டங்களுக்கு அகப்படாது கடமை உணர்வு, நேர்மை, நீதி கொண்ட சர்வதேசத்தின் முக்கியப் புள்ளிகள், சிறிலங்கா அரசின் மோசமான வசைபாடுதலுக்கும், இழிவுபடுத்தலுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.
இக் கபடமான அணுகுமுறையின் அடிப்படையிலேயே, தற்பொழுது ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை மீது தாக்குதல் இடம்பெறுகிறது.
இந்தியாவும் இழிவு செய்யப்பட்டது
சிறிலங்கா அரசின் மோசமான வசைபாடுதலுக்கும், இழிவுபடுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டவர்கள் பலர். முன்னைய இந்தியாவின் அரசியல் தலைவர்களும், இராஜதந்திரிகளும்அன்று ஈழத் தமிழர்களது அரசியல் விடுதலைப் போராட்டத்தை வெளிப்படையாக ஆதரித்த காரணத்தினால், 1987ம் ஆண்டு வரை மிகவும் கேவலமான முறையில் சிறிலங்காவினால் இழிவுசெய்யப்பட்டதுடன், அவர்களைத் தீர்த்துக் கட்டவும் சிறிலங்கா முயற்சித்தது.
இதேபோல், மிக அண்மையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர், செல்வி ஜெயலலிதாவை பண்பற்ற கேலிச் சித்திரம் மூலம் வர்ணித்ததையும் யாரும் மறந்திருக்க முடியாது.
ஐ. நா. மனித உரிமை ஆணையாளரும், அவரது செயலக அதிகாரிகளும், நாடுகளுக்கான தமது அதிகாரப்பூர்வமான பயணத்தின் பொழுது, ஒரு நாட்டின் அரசிடம் தமக்கு வேண்டிய உதவிகளை அவர்கள் நாடுவது இல்லை. இங்குதான் சிறிலங்கா அரசிற்கும் மனித உரிமை ஆணையாளருக்கும் இடையிலான சர்ச்சை உருவாகிறது. காரணம், இத்தகைய கடமை உணர்வு கொண்டவர்களிடம் இவர்களது ஊழல் நிறைந்த விருந்தோம்பல் நிறைவேறுவது இல்லை.
ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தனது பதவிக்கு 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டவுடன், சரியாக ஒரு வாரத்திற்குள் சிறிலங்காவின் முக்கிய பிரதிநிதிகளே இவரை முதல் முதலாக அவரது அலுவலகத்தில் சந்தித்தார்கள். அத்துடன் தமரா குணநாயகம் உட்பட சிறிலங்காவின் ஜெனிவா பிரதிநிதிகள் சகலரும், இவரைப் பல முறை சந்தித்தார்கள்.
அப்படியானால், கடந்த 5 வருடங்களாக மனித உரிமை ஆணையாளருடனும், அவரது அலுவலகத்துடனும் திருப்தியாக இணைந்து வேலை செய்தவர்கள், இப்பொழுது எதற்காக ஊளையிடுகிறார்கள்?
சிங்கள இனவெறியர்கள்
திடீரென சிறிலங்காவின் சிங்கள இனவெறியாளர்கள், எதற்காக மனித உரிமை ஆணையாளருடைய தேசிய இன அடையாளங்களை சர்ச்சையாக பார்க்கிறார்கள்? சிங்கள இனவெறியாளர்களினால் இவர் மீது முன் வைக்கப்படும் குற்றச்சாட்டு சரியானதாகவிருந்தால், எந்தவொரு தமிழரையும், சிங்கள நீதிபதிகள் முன்னிலையில் நிறுத்த முடியாதே!.
மிக நீண்ட காலமாக சிறிலங்கா அரசு பல சர்வதேச முக்கியப் புள்ளிகளை இழிவுபடுத்தியதை யாரும் அறிவார்கள். இதை சுருக்கமாக பட்டியலிடுவதானால்,
சிறிலங்காவினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அங்கத்தவர்கள், சிறுவர் இராணுவம் பற்றி ஆராய்ந்த ஐ. நா.வின் பிரதிநிதி திரு.அலன் றோக், ஐ. நா. அவசர நிவாரணத்திற்கான சேர். ஜோன் கோல்ம்ஸ், உலக வங்கியின் பிரதிநிதி பீற்றர் கரோல்ட், நார்வேயின் பிரதிநிதி எரிக் சோல்கையும், சிறிலங்காவின் போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் தலைவர்கள், மேஜர் ஜெனரல் ரொன்ட் புர்கோவுட், மேஜர் ஜெனரல் ரிறிக் ரேல்பசேன், மேஜர் ஜெனரல் ஊல்ப் கேன்றிக்சன், மேஜர் ஜெனரல் லார் ஜோன் சோல்பேர்க், திரு காக்குறுப் கேகுலன்ட் ஆகியோருடன் இன்னும் பலரைக் குறிப்பிடலாம்.
இவற்றில் ஐ. நா. அவசர நிவாரணத்திற்கான சேர். ஜோன் கோல்ம்ஸின் சிறிலங்காவிற்கான பயணமும், அவரது அறிக்கையும், சிறிலங்கா அரசிற்கும் ஐ. நா.விற்குமிடையில் கடுமையான சிக்கல்களை உருவாக்கியது. இவ்விடயத்தில் சிறிலங்காவின் முன்னைய பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க பாராளுமன்றத்தில் கூறியதாவது,
ஐ. நா. அவசர நிவாரணத்திற்கான சேர்.ஜோன் கோல்ம்ஸின் அறிக்கையை சிறிலங்கா முற்றாக நிராகரிப்பதுடன், சர்வதேச மட்டத்தில் சிறிலங்காவிற்கு அவப்பெயரை உண்டுபண்ணுபவர்களுக்கு சர். ஜோன் கோல்ம்ஸ் உதவுகிறார் எனவும் குறிப்பிட்டார்.
பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்காவின் உரையைத் தொடர்ந்து, அதே தொனியில் சிறிலங்காவின் வெளிநாட்டு அமைச்சு மற்றும் சிறிலங்காவின் அரசியல் கோமாளியான முன்னாள் பாதுகாப்புப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல ஆகியோரும் சர் ஜோன் கோல்ம்ஸை திட்டித் தீர்த்தனர்.
ஐ. நா. செயலாளர் - நாயகம்
2005ம் ஆண்டு ஜனவரி மாதம் சிறிலங்காவில் சுனாமி ஏற்பட்ட வேளையில், அங்கு சென்று ஐ. நா. செயலாளர் / நாயகம் கோபி அனான் சிறிலங்காவில் சுனாமி ஏற்பட்ட சகல இடங்களைச் சுற்றிப் பார்வையிட்ட வேளையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பிரதேசங்களும் சுனாமியினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டதுடன், சிறுவர்-பெரியவர் உட்பட ஆயிரக் கணக்கானோர் சுனாமிக்கு பலியாகியும் இருந்தார்கள்.
இதனால் கோபி அனான் அப்பிரதேசங்களையும் சுற்றி பார்வையிட முனைந்த வேளையில், அதற்கான அனுமதியை மறுத்த சிறிலங்கா அரசு, கோபி அனானை இழிவுபடுத்தியிருந்தார்கள்.
நவநீதம்பிள்ளையின் பயணம் பற்றி ஆராய்வதற்கு முன்னர், இவரது பதவியை முன்பு வகித்த திருமதி லூயிஸ் ஆபரின் சிறிலங்காவிற்கான பயணம் பற்றி ஆராய்வது அவசியமாகும். சிறிலங்கா தமது பிரசாரத்தின் அடிப்படையில் திருமதி லூயிஸ் ஆபரை 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் சிறிலங்காவிற்கு அழைத்த வேளையில், இவரை சில குறிப்பிட்ட இடங்களை மட்டுமே பார்வையிட அனுமதித்திருந்தனர்.
அத்துடன் இவரது பயணத்தின் இறுதி நாளில் இவரினால் நடாத்தப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில், மனித உரிமை அமைச்சரான மகிந்த சமரசிங்கவும் அதில் பங்குகொள்ள வேண்டுமென்ற நிபந்தனையை முன் வைத்து, இதில் வெற்றியும் கண்டனர். இதனால் திருமதி லூயிஸ் ஆபர் பத்திரிகையாளர் மாநாட்டில் சுதந்திரமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவிடாது தடுத்தனர்.
இதில் ஓர் முக்கிய விடயத்தை குறிப்பிட வேண்டியுள்ளது. திருமதி லூயிஸ் ஆபர் சிறிலங்காவிற்கு வருகை செய்வதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டதும், பிரான்ஸ் தமிழர் மனிதர் உரிமை மையத்தினால் ஓர் பத்திரிகைச் செய்தி வெளியிடப்பட்டது.
இதில் முன் எச்சரிக்கையாக குறிப்பிடப்பட்டதாவது
சிறிலங்காவிற்குப் பயணம் செய்து உண்மை நிலைகளை எழுதியவர்களுக்கு கடந்த காலங்களில் நேர்ந்த கதியை, திருமதி லூயிஸ் ஆபர் மனதில் கொள்ள வேண்டும். இவர் சிறிலங்காவிற்கு பாதகமான அறிக்கை ஒன்றை எழுத முனையும் கட்டத்தில், பயங்கரவாதிகளுக்கு உதவுபவர் என்று இம்சிக்கப்படுவார். (தமிழர் மனித உரிமைகள் மையம் - 21 ஆகஸ்ட் 2007). தமிழர் மனித உரிமைகள் மையம் கூறியது போன்று, திருமதி லூயிஸ் ஆபரும் இழிவுபடுத்தபட்டார்.
தடுமாறும் அரசு
திருமதி நவநீதம்பிள்ளை பதவி ஏற்றவுடன் இவரைச் சந்தித்த சிறிலங்காவின் பிரதிநிதிகள், இவருக்கு மூளைச்சலவை செய்ய முனைந்தார்கள். இவை சரிவராத கட்டத்தில் இப்பொழுது அவரை இழிவுபடுத்தி வருகிறார்கள்.
உண்மையில் சிறிலங்கா அரசிற்கு திருமதி நவநீதம்பிள்ளையின் தேசிய இன அடையாளங்கள் ஓர் சர்ச்சையாக இருந்திருந்தால், எதற்காக இந்த சிறிலங்காவின் ஏமாளிகள் இவரைத் தொடர்ந்து சந்தித்தார்கள்? ஏன் சிறிலங்காவிற்கு அழைத்தார்கள்?
இதில் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸின் கூத்து பெரும் கூத்து. பேராசிரியர் வாய் திறந்தால் முழுப் பொய்யும் புரட்டும். பணத்திற்காகவும், பதவிக்காகவும் மற்றைய கேம்பிரிட்ஜ் கல்விமான்களின் கெளரவத்தை காற்றில் பறக்க விடுகிறார். எழுத்தில் உள்ளவற்றை மறுப்பது, விதண்டாவாதம் செய்வது ஓர் கேம்பிரிட்ஜ் கல்விமானுக்கு அழகா?
சுனாமியினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட தமிழ் பிரதேசங்களில் ஒன்றான வன்னி மாவட்டத்தின் கரையோரங்களை பார்வையிட முனைந்த திரு கோபி அனான், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு பிரபாகரனைச் சந்திப்பதற்கு முனைந்தாரென குற்றம் சாட்டப்பட்டார்.
இதேபோல், மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மலர் வளையம் வைப்பதற்கு முனைந்தாரென கூறும் சிறிலங்கா அரசு, திருமதி நவநீதம்பிள்ளை அவரது வன்னிக்கான பயணத்தின் பொழுது, தலைவர் பிரபாகரனைச் சந்திக்கவும் முனைந்தாரென காலப்போக்கில் கூறுவார்களா?
- ச. வி. கிருபாகரன் |