ஈழத் தமிழர் விடுத்துள்ள செய்தி - பூங்குழலி PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 16 அக்டோபர் 2013 15:39

போரையும் இனப்படுகொலையையுமே உலக நாடுகள் எளிதாக கடந்து இயல்புக்கு திரும்பி விடுகின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமே மீள முடியாத துயரத்தில் நிற்கின்றனர். ஈழத் தமிழர்கள் அதற்கு விதிவிலக்கல்ல. 2009-ஆம் ஆண்டு நடந்த முள்ளிவாய்க்காலின் கொலைக் களத்திலிருந்து இன்னமும் மீளாத ஈழத் தமிழ் மக்கள் மீண்டும் ஒரு தேர்தலை சந்தித்துள்ளனர்.

இலங்கை பிரிட்டிசாரிடமிருந்து விடுதலை பெற்ற பிறகு நடந்த அனைத்துத் தேர்தல்களையும் விட இந்தத் தேர்தல் அது நடைபெற்ற காலத்தாலும் சூழலாலும் முக்கியத்துவம் பெறுகிறது.

1948-ஆம் ஆண்டு முதல் சுயாட்சி உரிமை கேட்டு வரும் ஈழத் தமிழ் மக்கள், தமிழர்களின் பாரம்பரியத் தாயகமான இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இணைத்து ஒரு மாகாணமாக உருவாக்கி, அதற்கு சுயாட்சி உரிமை வழங்க வேண்டுமென்று கோரினர். தனித் தமிழீழ நாடு கோரிக்கை எழுவதற்கு முன் ஈழத் தமிழர்களின் கோரிக்கையாக இருந்தது இந்த மாகாண சுயாட்சி அதிகாரத்தின் ஊடான கூட்டாட்சியே ஆகும்.

இதன் அடிப்படையிலேயே 1987-ஆம் ஆண்டு போடப்பட்ட இந்திய-இலங்கை உடன்பாட்டில் இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு அதற்கு தனி நிர்வாக சபை அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற கூறு இணைக்கப்பட்டது. ஆனால் தமிழர்கள் தங்கள் உரிமைகளை காப்பதற்காக முன் வைத்த இந்தக் கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்யும் வண்ணம், அன்றைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே இலங்கையை 2 தமிழ் மாகாணங்கள், 7 சிங்கள மாகாணங்கள் என 9 மாகாணங்களாகப் பிரித்தார். அதில் தமிழர் தாயகமான வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டு இரண்டு தனித்தனி மாகாணங்கள் ஆக்கப்பட்டன. ஒன்றிணைந்த தாயகம் என்ற தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கையே நிராகரிக்கப்பட்டது.

மேலும், இந்த மாகாணங்களுக்கு மிகக் குறைவான அதிகாரங்களே வழங்கப்பட்டன. தமிழர்கள் தங்கள் உரிமைகளை காக்கத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பான நில அதிகாரமும் காவல் துறை அதிகாரமும் மத்திய அரசின் வசமே இருந்தது. சிங்கள மாகாணங்களுக்கு இந்த அதிகாரங்கள் தேவைப்படவில்லை. ஏனெனில், மத்திய அரசே அவர்களின் வசம் இருந்தது. ஆனால் உரிமைகளைப் பறிகொடுத்துக் கொண்டிருந்த தமிழர்கள் அதனைத் தடுக்கவும் இருப்பதைத் தக்க வைத்துக் கொள்ளவும் நில அதிகாரமும், காவல் துறை அதிகாரமும் அவர்கள் வசம் இருக்க வேண்டியது முக்கியத் தேவையாக இருந்தது. ஆனால் இந்த அடிப்படை அதிகாரங்களை கொடுக்காமல் வெறும் கண் துடைப்பாக உலகை ஏமாற்ற மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. 1987-ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படையின் முன்னிலையில் தமிழ் மாகாணங்களுக்கு முதன் முறையாக தேர்தல் நடத்தப்பட்டது. அத்தேர்தலில் இந்திய அரசின் கைப்பாவையாக இருந்த வரதராஜப் பெருமாள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்திய அமைதிப் படை இலங்கையை விட்டு வெளியேறியபோது அவர்களுடன் வரதராஜப் பெருமாளும் வெளியேறி இன்று வரை இந்திய அரசின் பாதுகாப்பில் இந்தியாவின் வடக்கு மாநிலம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளார். அந்தத் தேர்தலுக்குப் பிறகு 26 ஆண்டுகள் கழித்து தற்போது வடக்கு மாகாணத்துக்குத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறவிருப்பதை ஒட்டி எழுந்துள்ள பன்னாட்டுச் சமூகத்தின் அழுத்தங்களில் இருந்து தன்னை காத்துக் கொள்ள மகிந்த இராஜபக்சே இந்தத் தேர்தலை நடத்தியுள்ளார். அதிலும் வடக்கு மாகாணத்துக்கு மட்டும் தேர்தல் நடத்தினால் தனது குட்டு வெளிப்பட்டுவிடும் என்பதால், மேலும் இரு சிங்கள மாகாணங்களுக்கும் சேர்த்து ஒன்றாக தேர்தலை நடத்தி முடித்துள்ளார்.

இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சி 36 இடங்களில் 28 இடங்களைப் பிடித்து, அதன் மூலம் இரண்டு நியமன உறுப்பினர்களையும் பெற்று பெரும் வெற்றி பெற்றுள்ளது. அதிபர் மகிந்த இராஜபக்சேயின் ஆளும் கூட்டணியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 7 இடங்களையும், இலங்கை முஸ்லிம் காங்கிரசு ஓர் இடத்தையும் கைப்பற்றியுள்ளன.

இந்தத் தேர்தலின் மூலம் ஈழத் தமிழ் மக்களுக்கான உரிமைகள் கிடைத்துவிடுமா, மாகாண சபைக்கான அதிகாரங்கள் போதுமானவையாக உள்ளனவா, தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பவை பற்றி பெரும் விவாதங்கள் நடந்து வருகின்றன. ஆனால் இந்தக் கேள்விகளை எல்லாம் கடந்து நாம் முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டிய செய்தி ஒன்று இந்தத் தேர்தல் முடிவுகளில் பொதிந்துள்ளது.

பொதுவாக ஒரு தேர்தலில் வெற்றி-தோல்வி என்பது, மொத்தம் பதிவான வாக்குகளின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் இத்தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டணி 84.37% வாக்குகளையும், மகிந்த இராஜபக்சேவின் ஆளும் கூட்டணி 14.2% வாக்குகளையும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி வெறும் 0.34% வாக்குகளையும் பெற்றுள்ளன. கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகியவை இணைந்த வன்னியில் இதே கட்சிகள் முறையே 65.89%, 22.1%, 1.04% வாக்குகளைப் பெற்றுள்ளன.

இவ்வாறு பதிவான வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடுவது, தேர்தலின் வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கப் போதுமானதாக இருக்கலாம். ஆனால் மக்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள இன்னமும் ஆழமான பார்வை தேவைப்படுகிறது. ஏனெனில் பதிவான வாக்குகளின் அடிப்படையில் நோக்கினால், மகிந்த இராஜபக்சே மற்றும் ரணில் உள்ளிட்ட சிங்களக் கட்சிகளுக்கும் தமிழர் பகுதியில் ஐந்தில் ஒரு பகுதிக்கும் அதிகமான மக்கள் ஆதரவாக இருப்பது போன்ற தோற்றம் ஏற்படும். ஆனால் உண்மை அதுவன்று.

அது மட்டுமல்ல, கடந்த 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளில் மகிந்த இராஜபக்சே யாழ்ப்பாணத்தில் 24.75%-உம் வன்னியில் 27.31%-உம் பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளில் மகிந்த இராஜபக்சேவின் கூட்டணி யாழ்ப்பாணத்தில் 32.07%-உம் வன்னியில் 35.07%-உம் பெற்றிருந்தனர். அதன்படி பார்த்தால் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு தமிழ் மக்கள் மகிந்த இராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்ததைப் போன்ற தோற்றம் ஏற்படுகிறது. ஆனால் அதிபர் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் பதிவான வாக்குகள் 25.66% தான் என்பதும், நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் பதிவான வாக்குகள் வெறும் 23.33% தான் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். அதே போன்று வன்னியில் அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு 40.33%-உம் நாடாளுமன்றத் தேர்தலில் 43.89%-உமாக இருந்தன.

எனவே, பதிவான வாக்குகளின் அடிப்படையில் கணிப்பதைக் காட்டிலும் ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுவது தேவையான ஒன்றாகிறது. எடுத்துக்காட்டாக, தேர்தலைப் புறக்கணிக்குமாறு விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்த 2005-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் மகிந்த இராஜபக்சே 28.31%-உம் ரணில் 68.72%-உம் வாக்குகள் பெற்றதாக தேர்தல் முடிவுகள் கூறுகின்றன. ஆனால் உண்மையில் யாழ்ப்பாணத்தில் பதிவான வாக்குகள் வெறும் 0.73% மட்டுமே.

எனவே, ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டு நோக்கினால் 2010 அதிபர் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒட்டுமொத்த வாக்காளர்களில் மகிந்த இராஜபக்சேவுக்கு ஆதரவளித்தவர்கள் வெறும் 6.12%-யேயாகும். வன்னியில் 10.77% ஆகும். அதே போன்று நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்த வாக்காளர்களில் மகிந்த இராஜபக்சேவின் கூட்டணிக்கு ஆதரவளித்தவர்கள் முறையே யாழ்ப்பாணத்தில் 6.6%-உம் வன்னியில் 14.05%-உம் ஆகும்.. அதே அடிப்படையில் இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்த வாக்காளர்களில் மகிந்த இராஜபக்சேவின் கூட்டணி பெற்ற ஆதரவு யாழ்ப்பாணத்தில் வெறும் 8.43%-உம் வன்னியில் 16.01%-உமே ஆகும்.

போரின் கொடூர முடிவுக்குப் பின் ஓராண்டுக்குள் நடந்த அதிபர் தேர்தலில், 25.66% வாக்குப் பதிவு நடந்திருந்த யாழ்ப்பாணத்தின் ஒட்டுமொத்த வாக்காளர்களில் 0.44%-யினரும், 40.33%- வாக்குப் பதிவு நடந்திருந்த வன்னியின் ஒட்டுமொத்த வாக்காளர்களில் 0.21%-யினருமே தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு ஆதரவளித்திருந்தனர். அதைத் தொடர்ந்த நாடாளுமன்றத் தேர்தலில் 23.33% வாக்குகள் பதிவாகி இருந்த யாழ்ப்பாணத்தின் ஒட்டுமொத்த வாக்காளர்களில் 9.03%-யினரும் 43.89% வாக்குப் பதிவு நடந்திருந்த வன்னியின் ஒட்டுமொத்த வாக்காளர்களில் 15.61%-யினரும் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு ஆதரவளித்திருந்தனர். தற்போது மாகாண சபைத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் 64.15% வாக்குப் பதிவு நடந்திருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டணி ஒட்டுமொத்த வாக்காளர்களில் 50.12%-யினரின் ஆதரவைப் பெற்றிருக்கிறது. 72.44% வாக்குப் பதிவு நடந்துள்ள வன்னயில் தமிழ்த் தேசியக் கூட்டணி ஒட்டுமொத்த வாக்காளர்களில் 47.73%-யினரின் ஆதரவினைப் பெற்றிருக்கிறது.

ஆக, வாக்குப் பதிவு விழுக்காடு அதிகரிக்க அதிகரிக்க தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு கிடைக்கும் ஆதரவின் விகிதமும் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் வாக்குப் பதிவு விழுக்காடு எவ்வளவு அதிகரித்த போதும் மகிந்த இராஜபக்சேவின் கூட்டணிக்கான ஆதரவு யாழ்ப்பாணத்தில் 6-8%-உம் வன்னியில் 10-16%-மாக மட்டுமே தொடர்ச்சியாக இருந்து வருகிறது.

பொதுவாக எந்த ஒரு நாட்டிலும் தேர்தல்களில் கட்சிகள் செல்வாக்குப் பெறுவதும் - இழப்பதும் - மீண்டும் பெறுவதும் இயல்பானதே. அவ்வாறே 2010-இல் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த மகிந்த இராஜபக்சேவின் செல்வாக்கு சரிந்துள்ளதையே இந்தத் தேர்தல் காட்டுவதாக முன்வைக்கப்படும் வாதம் முற்றிலும் பிழையானது என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் மகிந்த இராஜபக்சே பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையில் பெரிய வேறுபாடு இல்லை. சொல்லப் போனால் 2010-இல் யாழ்ப்பாணத்தின் ஒட்டுமொத்த வாக்காளர்களில் 6.12%-யினரின் ஆதரவை மட்டுமே பெற்றிருந்த மகிந்த இராஜபக்சேவுக்கு இந்தத் தேர்தலில் 8.43% ஆதரவு கிடைத்துள்ளது. எனவே மகிந்த இராஜபக்சேவின் இந்தத் தேர்தல் தோல்வி என்பது வெறும் செல்வாக்குச் சரிவினால் ஏற்பட்டதல்ல.

மற்றொருபுறம், வாக்குப் பதிவு விழுக்காடு அதிகரித்திருப்பது என்பது ஈழத் தமிழ் மக்களுக்கு இலங்கையின் ஜனநாயகத்தில் நம்பிக்கை ஏற்பட்டு இருப்பதன் விளைவென சொல்லப்படுகிறது. அவ்வாறெனில், அத்தகைய ஜனநாயகத்தை தமிழர் பகுதியில் மீண்டும் கொண்டு வந்ததாக கருதப்படும் மகிந்த இராஜபக்சேவுக்கே தமிழ் மக்கள் வாக்களித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் மகிந்த இராஜபக்சேவின் கூட்டணியை படுதோல்வியடைய செய்துள்ளனர். உண்மையில், இந்தத் தேர்தலில் தெருவுக்குத் தெரு உள்ள இராணுவ மையங்கள், வாக்குச் சாவடிகளில் நிலவிய இராணுவ அச்சுறுத்தல் மற்றும் கெடுபிடிகள், வேட்பாளர்களின் மீதான நேரடித் தாக்குதல்கள் இவ்வாறான அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் கடந்தும், தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஈழத் தமிழ் மக்கள் வாக்களித்தது என்பது, இனப்படுகொலையை நேரடியாக சந்தித்த ஒரு மக்கள் சமூகம், அந்த அதிர்ச்சியிலிருந்து மெல்ல மீண்டு, மீண்டும் போராடத் தயாராகி விட்டதையே உணர்த்துகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் அவல நிலையை எவரிடமும் வெளிப்படுத்தும் உரிமை மறுக்கப்பட்டு, திறந்த வெளிச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த மக்கள், எந்த பன்னாட்டு ஊடகங்களும் அணுக முடியாத தொலைவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மக்கள், ஐ.நா. மனித உரிமைக் குழுவின் தலைவர் நவி பிள்ளையிடம் கதறி அழத் துடித்தபோது அடக்கி வைக்கப்பட்ட மக்கள், தங்கள் கருத்தைச் சொல்ல இந்தத் தேர்தலை ஒரு கருவியாகப் பயன்படுத்தியுள்ளனர்.

"தமிழ்த் தேசியக் கூட்டணி எவ்வாறு பணியாற்றும் என்பது இரண்டாம் பட்சம். நல்லதோ, கெட்டதோ, நாங்களே தீர்மானித்துக் கொள்கிறோம். சிங்களக் கட்சிகளுக்கும் அவர்களின் அடிவருடிகளுக்கும் ஒரு போதும் இங்கு இடமில்லை' என்பதே ஈழத் தமிழ் மக்கள் இத்தேர்தல் மூலம் வெளிப்படுத்திய கருத்தாகும். தங்களுடைய அரசியலை தாங்களே தீர்மானிப்பது என்பதே அரசியல் சொற்களால் "சுய நிர்ணய உரிமை' என்று அழைக்கப்படுகிறது. ஈழத் தமிழ் மக்கள், தங்களுக்குள்ள இந்த சுய நிர்ணய உரிமையையே இந்தத் தேர்தல் மூலம் மிக அழுத்தமாக உறுதி செய்துள்ளனர்.

இந்தத் தேர்தலில் மட்டுமல்ல, கடந்த 1977 தொடங்கி நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் ஈழத் தமிழ் மக்கள் இணைந்து நின்று விடுதலை மீதான தங்கள் அரசியல் உறுதியை வெளிப்படுத்தியே வந்துள்ளனர். 1977-இல் "சுதந்திர தமிழீழ நாடு ஒன்றே தீர்வு' என்ற ஒற்றைத் தீர்மானத்தை முன் வைத்து தேர்தலை எதிர்கொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 19 இடங்களில் 18 இடங்களை வென்றது. பின்னர் 1983-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் விடுதலையே தீர்வு என்ற அடிப்படையில் தேர்தலைப் புறக்கணிக்க விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்தனர். அக்காலக்கட்டத்தில் விடுதலைப் புலிகளோடு சேர்த்து 5 ஆயுதப் போராட்ட இயக்கங்கள் களத்தில் இருந்தன. அவற்றில் விடுதலைப் புலிகள் இயக்கம் எண்ணிக்கையில் சிறிய இயக்கமாகவே இருந்தது. என்றபோதும், விடுதலைப் புலிகளின் வேண்டுகோளில் உள்ள நியாயத்தை ஏற்று 95%-க்கும் அதிகமான மக்கள் தேர்தலைப் புறக்கணித்தனர். பின்னர் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டணியினர், தமிழீழ விடுதலைக்கானப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைமையை ஏற்றுக் கொள்வதாக அறிவித்து தேர்தலை சந்தித்தனர். அத்தேர்தலில் அவர்கள் 23 இடங்களில் 22 இடங்களை கைப்பற்றினர். 2005 அதிபர் தேர்தலில் விடுதலைப் புலிகள் தேர்தலைப் புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். அதனை ஏற்று ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தேர்தலைப் புறக்கணித்தனர். அக்காலக்கட்டத்தில் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணத்தில் வெறும் 1.21% வாக்குகளே பதிவாயின. ஆனால் "கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளுக்கு பயந்து மக்கள் வாக்களித்தனர் அல்லது தேர்தலைப் புறக்கணித்தனர்'' என்ற குற்றச்சாட்டு தற்போது பொய்யாகியுள்ளது. மக்கள் என்றும் விடுதலைக்கு ஆதரவாகவே நின்றுள்ளனர். இன்றும் நிற்கின்றனர்.

ஈழத் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு காண அவர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகெங்கும் வலுத்து வரும் நிலையில் இந்தத் தேர்தலையே அவ்வாறான ஒரு பொது வாக்கெடுப்பாகக் கருதி மக்கள் தங்கள் முடிவினை மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். இது தமிழ்த் தேசியக் கூட்டணி என்ற தனிப்பட்ட ஓர் அமைப்பிற்கு அளிக்கப்பட்ட வாக்கு அல்ல. மாறாக சிங்களக் கட்சிகள் தமிழர் தாயகத்திற்குள் காலூன்ற எடுக்கப்படும் முயற்சிகளுக்கு கொடுக்கப்பட்ட சம்மட்டி அடியாகும்.

இந்தத் தேர்தல் எவ்விதத்திலும் போர்க் குற்ற விசாரணையை தவிர்ப்பதற்கான முகமூடி ஆக முடியாது. மாறாக, தேர்தலை ஒட்டி அரசின் எந்திரங்களாலும் இராணுவத்தாலும் நடத்தப்பட்ட நேரடியான வன்முறைகளுக்கும் சேர்த்து இலங்கை அரசு பதில் சொல்ல வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது.

மேலும் இத்தேர்தல் சிங்களக் குடியேற்றங்களின் விளைவை உணர்த்துவதாகவும் இருக்கிறது. ஏற்கெனவே கிழக்கில் பெருமளவிலான சிங்களக் குடியேற்றங்களினால் தமிழர் தாயகத்தில் தமிழரை சிறுபான்மையினராக மாற்றிவிட்ட சிங்கள அரசு, தற்போது வடக்கில் பெற்ற தோல்வியின் விளைவாக வடக்கிலும் பெருமளவு சிங்களக் குடியேற்றங்களை நடத்துவதன் மூலமே தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முடியும் என்பதை உணர்ந்து, சிங்கள இனவெறிக் கட்சிகள் சிங்களக் குடியேற்றங்களை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளன. அந்த அடிப்படையில் வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள் முழுமையாக முடுக்கிவிடப்படும் ஆபத்து சூழ்ந்துள்ளது. நில அதிகாரமற்ற மாகாண அரசு இதனை எவ்விதத்திலும் தடுக்க முடியாது. போர் முடிந்த இந்த 4 ஆண்டுகளுக்குள் வன்னியின் வளமான நிலங்களையும், முல்லைத்தீவு, மன்னார் பகுதிகளின் கடற்கரையோரங்களையும் சிங்கள குடியேற்றங்கள் மூலம் சிங்கள அரசு கைப்பற்றியுள்ளது. இது மேலும் விரைவாக விரிவடையும்.

இந்த நிலையில் மாகாண அரசுப் பொறுப்பேற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பொறுப்புகள் அதிகமாகியுள்ளன. தேர்தல் முடிந்த பிறகு தங்கள் மீதான அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் இராணுவ கெடுபிடிகளும் அதிகமாகும் என்பதை நன்கு உணர்ந்திருந்த நிலையிலும் ஈழத் தமிழ் மக்கள் துணிந்து தங்கள் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். சிங்களத்தையும் தென்னிலங்கையையும் முற்றிலுமாக புறக்கணித்து விடுதலை வேட்கையை வெளிப்படுத்தியுள்ளனர். 1977ல் இதே மாதிரியான ஒரு சூழலில் ஈழத் தமிழ் மக்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குத் தங்கள் வாக்குகளை அளித்து அவர்கள் முன் வைத்த "சுதந்திர தமிழீழத் தேச'த்திற்கு தங்கள் ஆதரவினை அளித்தனர். ஆனால் தந்தை செல்வாவின் திடீர் மறைவிற்கு பின், தமிழர் விடுதலைக் கூட்டணி 'சுதந்திர தமிழீழத் தேச"த்தைக் கைவிட்டு வெறும் மாவட்ட சபைகளுக்கு ஒப்புக் கொண்ட போது, ஈழத் தமிழ் இளைஞர்கள் நாடாளுமன்ற வழிமுறைகளில் முற்றிலும் நம்பிக்கை இழந்தனர். அதுவே ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆயுதப் போராட்டமாக உருப்பெறச் செய்தது. தங்கள் மண்ணையும் தங்கள் மக்களின் உரிமைகளையும் காக்க ஈழத் தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தினர். தமிழ்த் தேசியக் கூட்டணி இந்த வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தங்களுடைய முன்னோடிகளிடமிருந்து தாங்கள் எதை செய்யக் கூடாது என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே தமிழர் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

- நன்றி : தமிழக அரசியல்

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.