தாயினும் சிறந்த தாயாக விளங்கி எங்களை வளர்த்து ஆளாக்கிய எங்கள் தமக்கை உமைய பார்வதி அம்மையார் கடந்த 8-10-2013 அன்று காலமானார்.
எங்கள் தாய் எங்களை விட்டுப் பிரிந்து சென்ற போது எனக்கு 16 வயது. எங்களின் கடைசி தம்பி கோமதி நாயகத்திற்கு 3 வயது. என்னைவிட இரண்டே வயது பெரியவளான எனது தமக்கைக்கு அப்போதுதான் திருமணமாகி இருந்தது. எங்களது அத்தையின் மகன் சங்கர நாராயணன் அவர்களை அவர் மணந்தார். அந்த இளம் வயதில் இருவரும் எங்களது குடும்பச் சுமையைத் தாங்கினர்.
தாயில்லாத கவலை தெரியாதவாறு என்னையும் என்னுடைய சகோதரர்கள் மூவரையும் தங்கையையும் வளர்த்து ஆளாக்கி அனைவருக்கும் திருமணங்கள் செய்து வைத்து மகிழ்ந்தவர். எங்களிடம் மட்டுமல்ல எங்களின் குழந்தைகளிடமும் பாசமழை பொழிந்தவர். எங்களிடம் இருந்த திறமைகளை ஊக்குவித்து வளர்த்தவர்.
இடைநிலை வகுப்பில் நான் படிக்கும் போது கவிஞர் கண்ணதாசன் அவர்களின் ‘தென்றல்’ இதழில் அறிவிக்கப்பட்ட நாவல் போட்டிக்கு என்னை எழுதும்படி தூண்டினார். ‘தென்பாண்டிவீரன்’ என்ற தலைப்பில் நான் எழுதிய நெடுங்கதையை எனது தமக்கையும் எனது தங்கை நாகம்மாளும் படி எடுத்துக் கொடுத்தனர். அது முதல் பரிசு பெற்றபோது என்னிலும் மகிழ்ந்தவர் எனது தமக்கையே.
எங்கள் தந்தையாரின் தமிழ்த் தொண்டுக்கு ஊறு நேரிடாத வகையிலும் அவருக்கு குடும்பக் கவலை தெரியாத வகையிலும் எனது தமக்கை பார்த்துக் கொண்டார். எனவேதான் எங்கள் தந்தை தொடர்ந்து தமிழ்த் தொண்டில் ஈடுபட முடிந்தது.
அவ்வாறே அரசியல் வாழ்வில் நான் அடியெடுத்து வைத்த போது எனது தமக்கையும் அத்தான் அவர்களும் என்னை ஊக்குவித்தனர்.
கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த எங்கள் குடும்பத்தின் அன்புத் தலைவியாக விளங்கி எல்லோருடைய வாழ்விலும் அக்கறை செலுத்தி நன்கு வாழ வைத்த பெருமைக்குரிய எங்கள் தமக்கையாரின் மறைவு ஈடு செலுத்த முடியாத பெரும் சோகமாக எங்கள் குடும்பத்தைச் சூழ்ந்துள்ளது. இறுதி மூச்சு உள்ளவரை தனக்கென வாழாமல் எங்களுக்காக வாழ்ந்து மறைந்த தமக்கையாரின் பிரிவை என் உள்ளத்தில் தேக்கிக் கொண்டு தமக்கையின் ஒரே மகள் முனைவர். கல்யாணி, அவளது கணவர் ஜெயராமன், இவர்களின் ஒரே மகன் ரமணன், அவருடைய துணைவி மகாலட்சுமி ஆகியோருக்கு எவ்வாறு ஆறுதல் கூறுவது என்பது தெரியாமல் திகைக்கிறேன். |