காவல்துறையின் அத்துமீறல்! முற்றத்தின் பூங்காவை இடித்தனர்! பழ. நெடுமாறன் கைது! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 நவம்பர் 2013 13:05

காவல்துறையின் அத்துமீறல்! முற்றத்தின் பூங்காவை இடித்தனர்! பழ. நெடுமாறன் கைது!
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன் பகுதியில் உரிய அனுமதி பெற்று சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்டிருந்த பூங்காவும் பெரும் பொருட்செலவில் கல்லினால் அழகோவியமாக அமைக்கப்பட்டிருந்த நீருற்றுகளும் 13-11-2013 அதிகாலை 5.00 மணியளவில் எவ்வித

முன்னறிவிப்புமின்றி நெடுஞ்சாலைத் துறையினருடன் அத்துமீறி நுழைந்த 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினரால் சட்டவிரோதமாக இடித்துத் தகர்க்கப்பட்டது. முன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அரை சுற்றுச் சுவரும், கல்லினால் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பெயர்ப்பலகையும் தரைமட்டமாகத் தகர்க்கப்பட்டது. இரண்டு நீரூற்றுகளும், சுற்றி அமைக்கப்பட்டிருந்த கல் பாதைகள் - செடி கொடிகள், புல்வெளி அனைத்தையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிட்ட காவல்துறையினர் முற்றத்திற்குள் செல்லும் பாதையை வேலி போட்டு அடைத்துள்ளனர்.

முற்றத்தின் உள்ளேயே தங்கியிருந்த பழ. நெடுமாறன் இடிக்கப்படும் செய்தியறிந்து அங்கு சென்று முன்னறிவிப்பின்றி ஏன் இடிக்கிறீர்கள் என்று கேட்டபோது அதற்கு எந்தவொரு பதிலையும் தராமல் தொடர்ந்து இடிப்பு வேலைகளில் காவல்துறையினர் ஈடுட்டனர்.
இதற்குள் செய்தியறிந்து பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தோழர்களும் பொது மக்களும் முற்றத்தின் முன் திரளாகக் கூடி காவல்துறையினரைத் தடுக்க முற்பட்டனர். தடியடி நடத்தி அவர்களைக் கலைத்த காவல் துறையினர் ஒரு சிலரை கைதும் செய்தனர். அதன் பின்பும் மக்கள் காவல் துறையினரையும் மீறிச் சென்று காவல் துறையினர் அமைத்த வேலியை பிய்த்து எறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து பழ. நெடுமாறன் அவர்களையும் செய்தியறிந்து கூடிவிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகளின் தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய பழ. நெடுமாறன், சட்டவிரோதமான முறையில் முற்றத்தில் எதுவும் அமைக்கப்படவில்லை. இதனை சட்ட ரீதியாகவே எதிர்கொள்வோம் என தெரிவித்தார்.

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.