இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தித் தமிழக அரசு கடந்த 12ஆம் தேதி ஒரு தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றியது. ஈழத் தமிழர் பிரச்சினையில் அரசுக்கு உள்ள கரிசனமே கண்டனத் தீர்மானத்துக்குக் காரணம் என்று விளக்கப்பட்டது. தீர்மானத்தை நிறைவேற்றிய கையோடு மறுநாள் அதே அரசு ஈழத் தமிழர் மீதான தனது "அனுதாப'த்தை இன்னொரு வடிவில் காட்டியது.
ஈழத்தில் நடந்த இறுதிக் கட்டப் போரின் நினைவை நிலைநிறுத்துவதற்காக உருவாக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவரை இடித்துத் தள்ளியது. சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டிருந்த இடம் நெடுஞ்சாலைக்குச் சொந்தமானது என்பதால் இடிக்கப்பட்டதாகத் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தஞ்சாவூர் விளார் சாலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை அமைக்கும் பணி மூன்று ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. ஓவியக்கூடம், அரங்கம் ஆகிய இரண்டு கட்டடங்களும் சிற்பத் தொகுப்புகளும் உள்ளடங்கியது நினைவு முற்றம். ஓவியக் கூடத்தில் முதலாவது இந்திய விடுதலைப் போர் முதல் ஈழத்தில் நடந்த இறுதிப் போர் வரையிலான சுதந்திரப் போரில் ஈடுபட்டவர்களின் ஓவியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரங்கில் தமிழ் மொழிக்கும் பண்பாட்டுக்கும் தொண்டாற்றியவர்களின் படங்கள். இவை தவிர திறந்த வெளியில் இரண்டு சிற்பத் தொகுதிகள்; ஒன்று முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த மானுடப் பேரவலத்தின் காட்சிகள்; மற்றது ஈழப் போரில் தம்மைப் பலி கொடுத்த ஈழத் தமிழர்களின் உருவங்களும் தமிழகத்தில் ஈழப் போரின் எரியும் உதாரணமான முத்துக்குமார் முதலான இருபது பேரின் உருவங்களும்; 55 அடி நீளமும் 10 அடி உயரமும் உள்ள இந்த இரண்டு சிற்பத் தொகுதிகளே நினைவு முற்றத்தின் முன் பக்கத்தில் இருப்பவை. முற்றத்தின் பாதுகாப்புக் கருதி சுற்றுச் சுவர் எழுப்பவும் முடிவு செய்யப்பட்டது. முற்றத்தை ஒட்டியுள்ள இடம் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானது என்பதால் தமிழக அரசை அணுகி, அவ்விடத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி பெறப்பட்டது. சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் பூங்கா அமைப்பது என்றும் அதை உலகத் தமிழர் பேரமைப்பே பராமரிப்பது என்றும் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதியை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக் கொள்வது என்றும் தமிழக அரசுடன் உடன்பாடு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டுகளில் அனுமதி புதுப்பிக்கப்பட்டும் வந்துள்ளது. நினைவு முற்றத்தின் திறப்பு விழா நவம்பர் 8, 9, 10 தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அரசு அதைத் தடை செய்தது.
ஜெயலலிதா அரசின் "ஈழ அனுதாபம்' குறித்து நன்கு அறிந்திருந்த அமைப்பாளர்கள் அரசின் தடையை முறியடிக்கும் விதமாக 6ஆம் தேதியே திறப்பு விழாவை நடத்தினர். நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடியே நடந்து முடிந்தன.
நடப்பாண்டிற்கு அனுமதியைப் புதுப்பிக்கக் கோரி பல மாதங்களுக்கு முன்பே மனு அளிக்கப்பட்டிருந்த நிலையில், அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த அனுமதி முடிவடைந்து விட்டது என்று காரணம் காட்டி, முற்றம் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருப்பதாகக் கூறிச் சுற்றுச் சுவரை இடித்திருக்கிறது. அரசுத் தரப்பில் சொல்லப்படும் நியாயம் சரியல்ல என்பதற்குச் சட்டப்பூர்வமான ஆதாரங்களைச் சொல்ல முடியும். அரசின் முறையற்ற நடவடிக்கைகளே அதற்கு அத்தாட்சி.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைந்துள்ள இடம் தனியாருக்குச் சொந்தமானது தனியார் இடத்தில் நினைவு மண்டபம் கட்ட அரசு அனுமதி தேவையில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கட்டுமானப் பணிகள் தொடங்கிவிட்டன. அந்தச் சமயங்களில் விளார் கிராமத்து மக்களோ மாவட்ட நிர்வாகமோ எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் திறப்பு விழா நெருங்கியதும் அரசு காவல் துறையின் மூலம் அமைப்பாளர்களுக்கு இடையூறு விளைவிக்கத் தொடங்கியது. அமைப்பாளர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்றனர். அந்த அனுமதியின் பேரிலேயே விழாவை நடத்தினர். அதை எதிர்த்துத் தஞ்சை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் சமர்ப்பித்த ரிட் மனு டிவிஷன் பெஞ்சால் தள்ளுபடி செய்யப்பட்டது. இருந்தும் நிகழ்ச்சிக்காகக் கட்டப்பட்ட பேனர்களையும் தோரணங்களையும் அகற்றச் செய்தது அரசு. இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு ஒலி பெருக்கிகள் வைக்க அனுமதி மறுக்கப்பட்டு அவை கழற்றிச் செல்லப்பட்டன. மூன்றாம் நாளும் ஒலிபெருக்கி இல்லாத காரணத்தால் பத்து மணிக்குத் தொடங்க வேண்டிய நிகழ்ச்சிகள் பன்னிரண்டரை மணிக்கே ஆரம்பித்தனர் அரசின் இந்த சில்மிஷங்களின் உச்சக் கட்டமே சுற்றுச்சுவர் இடிப்பு. இது முன்கூட்டித் திட்டமிடப்பட்ட செயல். இரண்டு ஆண்டுகளாக முறையாக அனுமதியைப் புதுப்பித்த அரசு இம்முறை வேண்டுமென்றே காலம் கடத்தி அத்துமீறல் என்ற குற்றச்சாட்டை அமைப்பாளர்கள் மீது சுமத்தியுள்ளது. அர்த்தராத்திரியில் சுவரை இடிக்கவிருப்பதாக நோட்டிஸ் கொடுத்தது. பகல் வெளிச்சத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையை விடிந்தும் விடியாத பொழுதில் நடத்தி முடித்தது. இவையெல்லாம் இது திட்டமிடப்பட்ட செயல் என்பதை அழுத்தமாகக் காட்டுகின்றன.
ஆக்கிரமிக்கப்பட்ட இடமாக இருப்பினும் அதைக் கையகப்படுத்தும்முன் ஆக்கிரமித்தவர் என்று சொல்லப்படுபவருக்கு உரிய முறையில் நோட்டிஸ் அளிக்க வேண்டும் என்பது சட்டம். அவரிடமிருந்து பதில் பெற வேண்டும். அதையொட்டியே மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இந்தச் சம்பவத்தில் தமிழக நெடுஞ்சாலைத்துறை சட்டத்தின் வழிகளைப் பின்பற்றவில்லை; தன்னிச்சையாகவும் அராஜகமாகவும் நடந்துகொண்டிருக்கிறது என்பது வெளிப்படை.
தமிழக நெடுஞ்சாலைகளில் அதிகார முள்ளவர்களாலும் அரசியல் கட்சிகளாலும் வழிபாட்டுத் தலங்கள் என்ற பெயரில் மதவாதிகளாலும் தனியாராலும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களின் அளவு கணிசமானது, அவர்களுக்கு அரசால் எந்த இடையூறும் இல்லை. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைத்தவர்கள் முறையாக அனுமதி பெற்றிருந்தும் இடையூறுக் குள்ளாக்கப்பட்டனர்.
இது ஒரு இனத்தின் அவலத்தை வரும் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் வரலாற்றை மறுப்பது, காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறும் தருணத்தில் சிங்கள இனவாத அரசின் கொடுமையைச் சுட்டிக்காட்டும் சிறு பங்கையாவது இந்த முற்றமும் செய்துவிடும் என்ற அச்சமே காரணம். "எங்கள் நாட்டில் நடைபெற்றது இன அழிப்பல்ல; உள்நாட்டுப் போர் மட்டுமே' என்று சொல்லும் ராஜபக்சேவின் கூற்றுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுகளை இருட்டுக்குள் புதைக்க விரும்பும் தமிழக அரசுக்கும் அதிக வேற்றுமையில்லை. அரசு அராஜகம் செய்தால் சட்டங்கள் வாயடைத்து நிற்குமோ? அப்படி நிற்பது ஜனநாயகத்துக்கு நேரும் தீராக் களங்கம்.
- நன்றி: காலச்சுவடு டிசம்பர் 2013 |