விடுதலையை நோக்கிய நெடும் பயணம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2013 12:46

மாபெரும் தலைவர் நெல்சன் மண்டேலா தன்னுடைய சுயசரிதையை எழுதியிருக்கிறார். "27 ஆண்டு காலம் சிறையில் இருந்த எனக்கு இன்னும் ஒரு வார காலம் இருப்பது பெரிதல்ல'' என தன்னை சிறைவைத்த அதிபரிடம் அவர் கூறிய செய்தி அனைவரையும் நெகிழ வைக்கும். மண்டேலா எழுதிய அந்தச் சுவையான பகுதி கீழேத் தரப்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தென்னாப்பிரிக்க நாடாளுமன்றக் கூட்டத்தை தொடக்கி வைத்துப் பேசிய அதன் குடியரசுத் தலைவர் எஃப். டபிள்யூ. டி கிளர்க் அதுவரை எந்தக் குடியரசுத் தலைவரும் செய்யாத ஒரு மாபெரும் செயலினை செய்தார்.

mandela

நிறவெறிக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்து சனநாயக தென்னாப்பிரிக்கா உருவாவதற்கான அடித்தளத்தை தனது பேச்சில் அவர் அமைத்தார். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சிகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகளை நீக்கினார். சிறைப்பட்டிருந்த அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்தார். தூக்குத் தண்டனைகளை நிறுத்தி வைத்தார். அவசர நிலையையொட்டிப் பிறப்பிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை இரத்து செய்தார். பேச்சு வார்த்தையின் மூலம் பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் கூறினார்.

தென்னாப்பிரிக்காவில் அமைதி நிலவச் செய்யும் நடவடிக்கைகளை ஒரே வீச்சில் அவர் செய்து முடித்தார். இதன் விளைவாக ஒரே இரவில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டது. 40 ஆண்டு கால அடக்குமுறைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் அப்பால் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் சட்டப்பூர்வமான அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டது. ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரசில் உறுப்பினர்களாக இருந்தோம் என்பதற்காகவும் பச்சை-மஞ்சள் கருப்பு நிறக் கொடிகளை ஏந்தினோம் என்பதற்காக நானும் எனது தோழர்களும் கைது செய்யப்பட்டோம். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்கப் பத்திரிகைகளில் தோழர்கள் மற்றும் எனது படமும் பேச்சும் வெளியிடப்பட்டன. சர்வதேச சமூதாயம் டி கிளார்க்கின் துணிகர நடவடிக்கைளைப் பாராட்டியது. ஆனால் அவசரகால நிலைமையை இரத்து செய்யாததையும் நகரங்களில் இருந்த படைவீரர்களை திரும்பப் பெறாததையும் ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸ் கண்டித்தது.

டி கிளார்க் நாடாளுமன்றத்தில் இந்த அறிவிப்புகளை வெளியிட்ட 7 நாட்கள் கழித்து அதாவது பிப்ரவரி 9ஆம் தேதியன்று குடியரசுத் தலைவர் சந்திக்க விரும்புவதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அன்று மாலை 6 மணிக்கு அவரது அலுவலகத்திற்கு நான் அழைத்துச் செல்லப்பட்டபோது டி கிளர்க் என்னை புன்முறுவலுடன் வரவேற்று கை குலுக்கினார். மறு நாளே என்னை சிறையிலிருந்து விடுதலை செய்யப் போவதாக கூறினார். தென்னாப்பிரிக்க பத்திரிகைகளும் உலகப் பத்திரிகைகளும் கடந்த சில வாரங்களாக என்னுடைய விடுதலை உடனடியாக இருக்கும் எனச் செய்திகளை வெளியிட்டப் போதிலும் கூட குடியரசுத் தலைவர் கூறியது எனக்கு வியப்பை அளித்தது. என்னை விடுதலை செய்யப்போகும் செய்தியைக் கூறுவதற்காகத்தான் அவர் என்னை அழைத்தார் என்று எனக்குத் தெரிவிக்கப்படாததுதான் இதற்குக் காரணமாகும்.

எனக்குள்ளே மனப்போராட்டம் நிகழ்ந்தது. எவ்வளவு விரைவாக சிறையிலிருந்து விரைவில் விடுதலையாகவேண்டும் என்று விரும்பினேன். ஆனால் இவ்வளவு குறுகிய காலத்தில் விடுதலை செய்யப்படுவேன் என்று நான் நினைக்கவில்லை. குடியரசுத் தலைவருக்கு நான் நன்றியைத் தெரிவித்ததோடு மேலும் என்னுடைய குடும்பத்தினருக்கும் எனது கட்சியினருக்கும் என் விடுதலையைக் குறித்து செய்தியைச் சொல்வதற்கு ஒரு வார காலமாக அவகாசமாவது தேவை என்று கூறினேன். நாளைக்கே நான் விடுதலை செய்யப்படுவதாக இருந்தால் அதன் விளைவாக குழப்பம் நேரிடும் என்றும் கூறினேன். எனவே ஒரு வார காலம் கழித்து என்னை விடுதலை செய்ய வேண்டும் என டி கிளார்க் அவர்களிடம் வேண்டிக் கொண்டேன். 27 ஆண்டு காலம் சிறையிலிருந்த பிறகு மேலும் ஒரு வார காலம் இருப்பது பெரிதல்ல என்றும் தெரிவித்தேன்.

இதைக் கண்டு டி கிளார்க் ஆச்சரியம் அடைந்தார். ஆனால், எனக்குப் பதில் கூறுவதற்குப் பதில் என்னுடைய விடுதலைக்கான திட்டங்களை விவரித்தார். விமானம் மூலம் என்னை ஜோகன் ஸ்பர்க் அழைத்துச் சென்று அங்கே விடுதலை செய்ய திட்டமிட்டிருப்பதாகக் கூறினார். அவர் மேலும் பேசுவதற்குள் நான் குறுக்கிட்டு என்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்தேன்.

இதைக் கண்டு அவர் வியப்படைந்தார். உடனே, வெளியில் சென்று மற்றவர்களிடம் கலந்தாலோசித்துவிட்டுத் திரும்பினார். "ஏற்கனவே வகுக்கப்பட்டத் திட்டத்தை இந்தக் கடைசி நேரத்தில் மாற்றுவது இயலாது'' என்று என்னிடம் தெரிவித்தார். இதைக் கண்டு நான் சற்றுக் கோபமடைந்தேன். "உங்கள் திட்டத்தை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. ஒரு வாரம் கழித்துத்தான் நான் விடுதலையாக விரும்புகிறேன்'' என்று கூறினேன். மறுபடியும் அவர் வெளியே சென்றுவிட்டு ஒரு சமசரத் திட்டத்துடன் வந்தார். "இப்போது சிறை இருக்கும் இடத்திலேயே உங்களை விடுதலை செய்வோம். ஆனால் அதை ஒருபோதும் தள்ளிவைக்க முடியாது. ஏனென்றால் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களுக்கு இச் செய்தி தெரிவிக்கப்பட்டுவிட்டது. எனவே நாளையே உங்களை விடுதலைசெய்ய வேண்டியுள்ளது'' என அவர் தெரிவித்தார். எனவே வேறுவழியில்லை.

அன்றிரவு சிறிது நேரம் மட்டுமே நான் தூங்கினேன். விடியற்காலை 4.30 மணிக்கு விழித்துக்கொண்டேன். அன்று பிப்ரவரி 11ஆம் தேதியாகும். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தோழர்களுக்கும் மற்றவர்களுக்கும் தொலைபேசி முலம் எனது விடுதலைபற்றிய செய்தியை கூறினேன். பிறகு நான் ஆற்ற வேண்டிய உரையைத் தயார் செய்தேன். சிறை மருத்துவர் அங்கு வந்து என்னை சோதித்தார். ஆனால் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக இருந்தன. வாழ்க்கையில் மகத்தான ஒரு நேரத்தை நெருங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

விடுதலையானதும் முதன்முதலாக சிறை அமைந்திருந்த பார்ல் மக்களிடம் பேசுவது எனத் திட்டமிட்டிருந்தேன். ஏனென்றால் என்மீது அவர்கள் மிகுந்த அன்பு காட்டியவர்களாவார்கள். வரவேற்புக்குழுவோ வேறுவிதமாக முடிவுசெய்திருந்தது. கேப் நகர மக்களிடம் முதல்முதலில் பேச வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.

நான் விடுதலையான பிறகு முதலாவது இரவு எங்கே தங்குவது என்ற கேள்வி எழுந்தது. அந்நகரத்து வீடுகளில் ஒன்றில் தங்க நான் விரும்பினேன். ஆனால் எனது மனைவியும் தோழர்களும் ஆயர் டெஸ்மாண்டு டுடு இல்லத்திலேயே நான் தங்க வேண்டுமென்று விரும்பினார்கள். அவர் இல்லமோ வெள்ளையர்கள் குடியிருந்த பகுதியில் அமைந்திருந்தது. அங்குப் போய்த் தங்கினால் அது தவறான கருத்தோட்டத்தை உருவாக்கி விடும் என நான் அஞ்சினேன்.

சிறையிலிருந்த ஊழியர்கள் எனது பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையான அட்டைப் பெட்டிகளையும் மரப்பெட்டிகளையும் கொண்டுவந்து கொடுத்தார்கள். சிறையிலிருந்து 27 ஆண்டு காலத்தில் ஏராளமான புத்தகஙகள் மற்றும் பத்திரிகைகள் ஆகியவற்றைச் சேர்த்து வைத்திருந்தேன். அவற்றையெல்லாம் 12க்கும் மேற்பட்ட பெட்டிகளில் அடைத்தேன்.

அன்று பிற்பகல் 3 மணிக்கு என்னை விடுதலை செய்யத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் 2 மணி வரையிலும் என் மனைவி வின்னி மற்றும் வால்டர் உட்பட பல தோழர்கள் வந்து சேரவில்லை. சிறை அதிகாரியான சுவார்ட் எல்லோருக்கும் இறுதி விருந்தளித்தார். அவர் அளித்த விருந்திற்கு மட்டுமல்ல. சிறையிலிருந்த காலத்தில் அவர் என்னுடன் கொண்டிருந்த தோழமைக்கு நான் நன்றி கூறினேன். மற்றொரு சிறை அதிகாரியான ஜேம்ஸ் கிரிகோரியை அன்புடன் தழுவிக்கொண்டு நன்றி கூறினேன். பிரியாவிடை பெறுவதற்கு சிறிது நேரமே இருந்தது. சிறை வெளிவாயில் வரை நானும் வின்னியும் காரில் செல்வது என திட்டமிடப்பட்டிருந்தது.

சிறைக் காவலர்களுக்கும் அலுவலர்களுக்கும் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் முன் வாயிலில் நன்றிகூற விரும்பினேன். ஆனால் மணி 3 ஆவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பத்திரிகையாளர் ஒருவர் என்னுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு முன்வாயிலை நெருங்குவதற்கு முன்னால் காரிலிருந்து இறங்கி நடந்து வந்தால் அதைப் படம்பிடிக்க வசதியாக இருக்கும் என்று தெரிவித்தார் அது நியாயமாகப்பட்டதால் நான் ஒப்புக்கொண்டேன்.

மணி 3.30 மணி ஆகிவிட்டது. ஏற்கனவே திட்டமிட்ட நேரம் கடந்துவிட்டபடியால் நான் பதட்டமடைந்தேன். 27 ஆண்டுகாலமாக எனது மக்கள் எனக்காகக் காத்திருக்கிறார்கள். இனியும் அவர்களை காக்கவைக்க நான் விரும்பவில்லை என வரவேற்புக்குழு உறுப்பினர்களிடம் தெரிவித்தேன். மாலை 4 மணிக்கு சற்று முன்பாக கார் மூலம் பயணமானோம். முன் வாயிலை அடைய சிறிது தூரம் இருக்கும்போது நானும் வின்னியும் இறங்கி நடக்கத் தொடங்கினோம். என்ன நடக்கப்போகிறது என்று எனக்குத் தெரிவியவில்லை. சுமார் 150 அடி தூரத்தை நாங்கள் நெருங்கியபோது என்னை வரவேற்க பிரமாண்டமான ஒரு கூட்டம் கூடியிருப்பதைப் பார்த்தேன். நூற்றுக்கணக்கான புகைப்படக்காரர்களும் தொலைக்காட்சி செய்தியாளர்களும் மற்றும் பல்லாயிரம் மக்களும் கூடியிருந்தார்கள். இதைப் பார்த்தபோது நான் திடுக்கிட்டேன். இத்தகைய ஒரு காட்சியை நான் எதிர்பார்க்கவில்லை. டஜன் கணக்கான மக்கள் மட்டுமே கூடியிருப்பார்கள் என்று கருதினேன். வாயிலுக்கு 20 அடி தூரம் இருக்கும்போது புகைப்படக் கருவிகள் மாறி மாறி ஒளியைச் சிந்தின. செய்தியாளர்கள் கேள்விகளைத் தொடுத்தார்கள். ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸ் ஆதரவாளர்கள் முண்டியடித்துக்கொண்டும் கைதட்டியும் முழக்கமிட்டவாறும் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள். கூட்டத்தினருக்கு நடுவே எனது வலது கை முட்டியை உயர்த்திக் காட்டினேன். உடனடியாக பெரும் ஆரவாரம் எழுந்தது. 27 ஆண்டு காலமாக இவ்வாறு செய்ய இயலாத நிலையில் நான் இருந்தேன். இப்போது மகிழ்ச்சியுடன் அதைச் செய்தபோது எனது வலிமை கூடியது. சில நிமிட நேரத்திற்குப் பிறகு காரில் தாவி ஏறி கேப் நகரை நோக்கி சென்றோம். 71 வயதாகும் எனக்கு புதிய வாழ்க்கை தொடங்குவதை உணர்ந்தேன். 10000 ஆயிரம் நாட்கள் சிறையில் அடைப்பட்டுக் கிடந்து விடுதலையை நோக்கிய எனது நெடும்பயணம் முடிவடைந்தது.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.