லெனின் வீட்டில் பணியாற்றிய ஒரு பிரெஞ்சுப் பெண்மணி தமது பணி நேரங்களின்போது ஆல்சேஸ் பற்றிய ஒரு சிறப்பு வாய்ந்த பாடலைப் பாடிக் கொண்டே இருப்பாள். தம்முடைய தாய்நாடு செர்மானிய அடக்குமுறை யாளர்களிடம் அடிமைப்பட்டுக் கிடப்பதை அவரது உள் உணர்வு சொல்லிக் கொண்டே இருக்கும். தமக்குள் புதைந்து கிடந்த விடுதலை உணர்வை வெளிப்படுத்த அவரின் உதடுகள் உச்சரிக்கும் வார்த்தைகள் ஒடுக்கப்பட்ட தேசிய உணர்வாளர்களின் அடையாளமாக இருந்தது.
அந்தப் பாடல் வரிகள் எந்தக் கவிஞனாலும் எழுதப்பட்டது அல்ல, அவரது மனதுக்குள் புதைந்து கிடக்கும் விடுதலை வேட்கையே வார்த்தைகளாக வலம் வந்தது. தமது தாய் நாட்டின் மீது கொண்ட அளப்பரிய பற்று அந்த வார்த்தைகளில் புதைந்து கிடந்தது. ஆழமிக்க அந்த வார்த்தைகளில் அலங்காரம் இல்லை, பகட்டு இல்லை, அதனால்தான் என்னவோ மார்க்சிய ஆசான் லெனின் அந்தப் பாடலின் ரசிகனாக இருந்தார். பலமுறை அந்தப் பாடலை பாடச்சொல்லி மனனம் செய்தார். அது மட்டும் அல்ல அந்தப் பாடலை அவரும் அடிக்கடி பாடினார். அந்தப் பாடலின் வரிகள் கீழ்க்கண்டவாறு நிறைவடைகிறது. "நீங்கள் ஆள்சேயையும், லாரானையும் பிடித்துக்கொண்டு விட்டீர்கள் உங்களையும் மீறி நாங்கள் பிரெஞ்சுக்காரர்களாகவே இருப்போம். எங்கள் வயல்களை செர்மனி வயப்படுத்தி விட்டீர்கள் ஆனால் எங்களின் இதயம் உங்களுக்கு ஒருபோதும் கிடைக்காது.'' இந்தப் பாடல் வரிகள் லெனினை பலமுறை சங்கடப்படுத்தி இருக்கிறது. எந்த ஒரு இன விடுதலைப் போராட்டத்தையும் அடக்குமுறைகொண்டு ஒடுக்க முடியாது. போராட்டங்களின் வடிவம் மாறலாம். ஆனால் அதில் புதைந்து கிடக்கும் தேவை எரிந்து கொண்டேதான் இருக்கும். தேவைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். போராட்டத்தின் தன்மைகள் பெரும்மூச்சாய், கவிதையாய், களமாய் தொடர் வண்டி பரப்புரையாய் உருமாறிக் கொண்டே இருக்கும். இது உலகெங்கும் நடைபெறும் தேசிய இனப் போராட்டங்களின் உயிர் மூச்சானது. ஒரு தேசிய இனம் தற்சார்போடு இருக்கும் போதுதான் அதன் மொழி, பண்பாடு, கலை, இலக்கியம் கலாச்சாரம், கல்வி உயர்நிலை அடைய முடியும். தேசிய இனங்களைக் கட்டி வைத்து காவல் புரியும் வேலையை ஒரு அரசு தொடர்ந்து செய்து கொண்டு இருக்க முடியாது. 1947இல் இந்த நாடு விடுதலை அடைந்த பிறகும் இந்த நாட்டில் உள்ள பல்வேறு தேசிய இனங்கள் மொழி உரிமை இன்றி அடிமைப்பட்டுக் கிடக்கின்றன. ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள் சாசர் காலம் என்று வர்ணிக்கக்கூடிய 1340 முதல் 1400 வரை உள்ள காலத்தை பெருமையும் போற்றுதலுக்கும் உரிய காலமாக வர்ணிக்கிறார்கள். காரணம் தமது தாய் மொழியான ஆங்கிலத்தை லத்தீனும், பிரெஞ்சும் அடக்கி ஆண்டன. மக்கள் லத்தீன் மொழி பேச கட்டாயப்படுத்தப் பட்டார்கள் கல்விக் கூடங்களில் கற்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் லத்தீன் தவிர வேறு மொழி பேச தடை விதித்தார்கள். அப்படியும் பேசுபவர்களை சாட்டையால் அடித்துத் தண்டனை கொடுத்தார்கள். இன்று தமிழ் எப்படி சேரி மொழியாக ஒடுக்கப்பட்டதோ அன்று ஆங்கிலம் வீட்டு மொழியாக முடக்கப்பட்டது. 1539இல் தோன்றிய மக்கள் ஆட்சியில் பிரெஞ்சு இனம் விடுதலையை உணர்ந்து, அடக்குமுறையாகத் திணிக்கப்பட்ட லத்தீனை விரட்டியடித்தது. தனது தாய் மொழியான பிரெஞ்சு மொழிக்கு மகுடம் சூட்டியது. 14ஆம் நூற்றாண்டில் ஆங்கிலமும் 15ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சும் அடைந்த மொழி விடுதலையால் கலை இலக்கியப் பண்பாட்டுத் தளங்களில் பிரெஞ்சும், ஆங்கிலமும் பெரும் ஏற்றம் பெற்றன. அரசியல் அறிவியல் துறைகளில் எழுச்சி பெற்றன. மந்த நோய் தீர்க்கும் மருந்து முதல் விண்வெளி , ஆழ்கடல் ஆராய்ச்சிகளில் உலகமே வியக்கும் வண்ணம் உயர்ந்து நின்றது. இதற்கு அடிப்படைக் காரணம் அந்த தேசிய இனங்கள் பெற்ற தாய் மொழிக் கல்வி என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நாம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் வளமான வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்பார்த்து நம்மை முழுமையாக அர்ப்பணித்தோம். இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய இனத்தின் பங்களிப்பு என்பது அர்ப்பணிப்பும் ஆற்றலும் கொண்டது. அளவிட முடியாத ஈகங்களால் தமிழர்கள் போராட்டக் களங்களில் தம்மை ஒப்படைத்தார்கள். ஆனால் விடுதலை பெற்ற இந்திய தேசியம் தமிழ்த் தேசியத்தை ஒடுக்க நினைத்தபோது. தமிழ்த் தேசிய இனம் தம்மை அடையாளப் படுத்திக்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளாக்கப்பட்டது. இதை மார்க்சிய ஆசான் ஸ்டாலின் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார் : "மக்கள் நம் வளமான எதிர்காலத்தில் நம்பிக்கை கொண்டு இருந்தவரை அவர்கள் தேசிய வேறுபாடு இன்றி ஒன்றாக இருந்து போராடினார்கள். அப்போது பொதுவான பிரச்சினைகள் முதலாவதாகவும் முக்கியமானதாகவும் இருந்தன. ஆனால் மக்கள் மனதில் சந்தேகம் புகுந்த உடன் அவர்கள் தங்களின் சொந்த தேசிய அணிப்படி பிரியத் தொடங்கினார்கள். ஒவ்வொரு மனிதனும் தன்னை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டான். தேசிய இனப் பிரச்சினை முதலாவதாகவும் முக்கியமானதாகவும் உருவெடுத்தது.'' ஆக, தேசிய இன விடுதலை என்பது நம்மை ஒடுக்கும் போது வெடித்தெழும் ஆற்றல் படைத்தது. அது பொதுத் தேவைகளில் ஒன்றிணைய தயங்கியது கிடையாது. ஆனால் தமக்கான அடையாளத்தை இழக்க எந்த ஒரு தேசிய இனமும் விரும்பாது. அந்த அடிப்படையில் தான் தமிழ் தேசியமும், தமது இன அடையாளத்தைத் தக்க வைத்துக்கொள்ள எழுச்சி வடிவம் பெற்று இருப்பதை சமீப காலங்களில் காண முடிகிறது. தேசம் என்பது நிலையான மக்கள் சமூகம் என்று மார்க்சியம் கூறுகிறது. அதே நேரத்தில் தேசம் என்பதற்கு ஒரு பொதுப் பண்பு இருப்பதையும் அடையாளப்படுத்துகிறது. அது மொழி என்பதாக அமைகிறது. "ஒவ்வொரு நிலையான சமூகமும் தேசமாகிவிட முடியாது. ஆஸ்திரியாவும், ரசியாவும் நிலையான சமூகங்கள்தான். ஆனால் அவைகளை யாரும் தேசம் என்று அழைப்பது இல்லை. ஒரு தேசிய சமூகத்திற்கும் ஒரு அரசு சமூகத்திற்கும் அடிப்படையில் என்ன வித்தியாசம் இருக்கிறது? தேசிய சமூகம் என்பது ஒரு பொதுவான மொழி இல்லாமல் இருக்க முடியாது. ஆனால் அரசு சமூகத்திற்கு அவ்வாறு பொது மொழி என்ற அவசியம் இருந்தாகவேண்டியது இல்லை. "பொது மொழி' என்பது ஒரு தேசத்தின் முதன்மையான அம்சம் ஆகும்.'' (ஸ்டாலின்). அப்படியானால் இந்தியா என்பதை ஒரு தேசம் என்று எப்படி அழைக்க முடியும்? இங்கு பல்வேறு தேசிய இனங்கள் அரச பயங்கரவாதத்திற்கும் அச்சுறுத்தலுக்கும் இடையே தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கின்றன. அந்தப் போராட்டத்தின் பொதுத் தேவை இன அடையாளத்தைக் காப்பதுதான். இரும்புச்சங்கிலி கொண்டு கட்டி தேசிய இனங்களை ஒரே தேசிய இனமாக அறிவிக்க முயற்சிப்பது அறியாமையா? ஆணவமா? ஒரே நேரத்தில் பல்வேறு மொழிகளைப் பேசக்கூடிய ஒரே தேசம் என்பது இருக்க இயலாது என்பதை மார்க்சிய ஆசான் ஸ்டாலின் கூறுகிறார். மேலும் அவர் கூறும்போது "ஒரு தேசம்'' என்பது ஒரு பொதுவான மொழி, ஆட்சிப் பகுதி. பொருளாதார வாழ்வு மற்றும் மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று ரீதியாக உருவான மக்கள் சமூகம்'' என்று ஒரு தேசத்தை அடையாளப்படுத்துகிறார். மேலும் ஒரு தேசம் என்பதற்கு பொதுவான அடையாளம் தேவை என்று வலியுறுத்துகிறார். "ஒரு பொதுவான பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்வு ஆகியவற்றைக் கொண்டு இருக்கக் கூடிய மக்கள் ஒரு தனி தேசத்தை உருவாக்க முடியாது என்பது உணரக்கூடிய ஒன்றே. ஏனெனில் அவர்களுக்கு பொதுவான மொழியோ, பொதுவான தேசியத் தன்மையோ கிடையாது.'' ஸ்டாலின் கூற்றுப்படி தமிழர்களுக்குள் ஒரு பொதுப் பண்பு இருக்கிறது. பொது தேசிய அடையாளங்கள் இருக்கின்றன. தமிழர்களின் உடை, உணவு, பழக்க வழக்கங்கள், கலை, இலக்கியப் பண்பாட்டுத் தளங்கள் ஆகியவை இந்தியாவில் வாழும் மற்ற தேசிய இனங்களோடு எந்த விதத்திலும் ஒத்துப் போகாத போது இந்தியாவை ஒரு தேசம் என்று அழைப்பது எந்த விதத்தில் சரியானது என்று மார்க்சியம் தெரிந்தவர்கள் கூறினால் சிறப்பாக இருக்கும். ஒரு தேசம் என்பதற்கு மொழி அடையாளம் மட்டுமே அடிப்படையாக இருக்க முடியாது. மேலும் பல காரணங்கள் இருக்க வேண்டும். உயிரைப் பணயம் வைத்து கடலுக்குச் செல்லும் தமிழக மீனவர்கள் திரும்பி வருவது கேள்விக் குறியாக இருக்கிறது. மீன் பிடித்தல் என்பது அவர்களின் பொழுது போக்கு அல்ல, பொருளாதார வாழ்வு, மீனவர்களின் பொருளாதார வாழ்வைச் சிதைக்கும் ஒரு நாட்டிற்கு எதிராக ஒரு நாட்டின் குடிமகனின் உயிருக்கு உறுதி அளிக்க முடியாத ஒரு சமூகத்தை எப்படி தேசிய சமூகமாக ஏற்றுக்கொள்ள முடியும்? மொழி, தேசியத் தன்மை, பொருளாதாரச் சூழல் என எந்தத் தன்மையும் பொருந்தாமலேயே இங்கே தேசிய இனங்கள் வாழும் நிலையில் இந்திய தேசிய சங்கிலி இறுக்கிக் கொண்டு இருக்கிறது. இதை உடைத்து எறிய என்ன செய்ய வேண்டும்? எந்த அளவிற்கு பாட்டாளிகளும் விவசாயிகளும் தேசிய இயக்கத்தில் பங்கு கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே தேசிய இயக்கத்தின் வலிமை தீர்மானிக்கப்படும் என மார்க்சிய ஆசான் ஸ்டாலினே அதற்குப் பதில் தருகிறார். நமக்கு இதுதான் தருணம். நாம் நமது தேசிய அடையாளத்தைக் காக்க ஈகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும். "எல்லா மனிதரும் இறந்தே ஆக வேண்டும். ஆனால் மரணம் என்பது அதன் முக்கியத்துவத்தால் மாறுபடலாம். பண்டைக் காலத்து சீன எழுத்தாளனாகிய சூ மா-சி-யேன் கூறினார் : எல்லா மனிதருக்கும் மரணம் ஏற்பட்டே தீரும். அது மலையை விட கனமுள்ளதாக இருக்கலாம் அல்லது ஒரு பறவையின் சிறகைவிட லேசானதாய் இருக்கலாம்.'' மக்களுக்காக இறப்பது என்பது மலையை விட கணம் கூடியது ஆகும். பாசிஸ்டுகளுக்காக -மக்களை சுரண்டி ஒடுக்குபவர்களுக்காக இறப்பது என்பதோ ஒரு பறவையின் சிறகைவிட லேசானதாகும். "என்று மாவோ தமது தோழர்களுக்கு - மக்களுக்கு தம்மை அர்ப்பணிக்கும் தன்மையை வலியுறுத்துகிறார். நாமும் மக்களுக்கான போராட்டக் களத்தின் முன் வரிசைக்கு வர வேண்டும். அது முள்ளிவாய்க்கால் முற்றத்தில் விதைக்கப்பட்டது. முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டபோது பெரும் மரமாய் ஓங்கி நிற்கிறது. அந்த சிறுபொறி பெருநெருப்பாய் களத்திற்கு அழைக்கிறது. நான்கு நாட்கள் தமிழகத்தின் குறுக்கும் நெடுக்குமாய் தொடர்வண்டி பரப்புரையின் போது தமிழர்களின் முகங்களில் அந்த ஏக்கம் தெரிந்தது. தமிழ்த் தேசியத்தை வென்று எடுக்கும் தருணம் இது. இதற்கு மேலும் ஹிட்லரைப் போல பாசிச சிந்தனையும் அகண்ட பாரதக் கனவும் கொண்டவர்களை தமிழர்கள் புறந்தள்ளுவார்கள். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை பிரிவினை என்று கூறுபவர்களுக்கு லெனின் வார்த்தைகளைப் பதிலாக்குவோம். "தன் நிர்ணய உரிமை என்பது ஒருதேசிய இனம் தாம் விரும்பக்கூடிய வகையில் தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்பதாகும். தன்னாட்சி அடிப்படையில் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள அதற்கு உரிமை உண்டு. ஏனைய தேசிய இனங்களுடன் கூட்டரசுக் கோட்பாடு அடிப்படையில் உறவு வைத்துக் கொள்வதற்கு அதற்கு உரிமை உண்டு. பின் அக்கூட்டரசு அமைப்பில் இருந்து முழுமையாகப் பிரிந்து செல்வதற்கும் அதற்கு உரிமை உண்டு. தேசங்கள் இறைத்தன்மை கொண்டவை. தேசங்கள் அனைத்தும் சமமானவை'' (மார்கசியமும் தேசிய இன பிரச்சினையும்).
|