தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர், கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம் வட்டங்களிலும் திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி வட்டங்களிலும் மீத்தேன் எடுப்பதற்காக "தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன்' என்னும் நிறுவனம் இந்திய அரசின் அனுமதியுடன் மீத்தேன் வாயு எடுக்க திட்டமிட்டுள்ளது.
இதற்கு எதிராக மறைந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேரழிப்பிற்கு எதிரான மக்கள் இயக்கத்தை முன்னின்று நடத்தினார். அவர் மறைவிற்குப் பிறகும் அந்த இயக்கம் தொடர்ந்து போராடி வருகிறது.
மீத்தேன் வாயு - விளைவுகள்
பூமிக்குள் 1500 அடி அல்லது நிலக்கரிப் படிவத்தை அடையும் வரை செங்குத்தாக துளையிட்டு, பிறகு அந்த ஒரு துளையிலிருந்து பக்கவாட்டில் எல்லா திசைகளிலும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பல துளைகள் போடப்பட்டு அதற்குள் குழாய்கள் செருகப்படும். பின்பு கோடிக்கணக்கான லிட்டர் நீருடன், மணல் மற்றும் 600க்கு மேற்பட்ட ஈயம், யுரேனியம், ரேடியம், மெத்தனால், ஹைட்ரோகுளோரிக் அமிலம், பார்மால்டிகைட், பென்சீன், டொலுவீன், ஈதைல் பென்சீன், சைலீன் போன்ற வேதிப் பொருட்களைக் கலந்து நிலக்கரிப் படிவத்தில் உடைப்புகளை உருவாக்கும் திறன் கொண்ட கரைசல் தயாரிக்கப்படும்.
போடப்படும் குழாயின் வழியாக இக்கரைசல் மிகுந்த அழுத்தத்தில் செலுத்தப்படும். இக்கரைசல் பக்கவாட்டுக் குழாய்களின் துளைகள் வழியாக வெளியேறி, நிலக்கரிப் பாறைகளில் நுழைந்து உடைப்புகளை உருவாக்கும். நிலக்கரியோடு பிணைந்திருந்த மீத்தேன் இவ்வெடிப்புகள் வழியாக வெளியேறி, நீருடன் கலந்து குழாய்களை அடையும். அங்கிருந்து கரைசல் நீர், மீத்தேன் கலவை குழாய்களின் வழியாக உறிஞ்சப்பட்டு, நிலப்பரப்பிற்கு கொண்டுவரப்படும். மீத்தேன் பிரிக்கப்பட்டு, மீதி கழிவு நீர் அருகில் அமைக்கப்படும் குட்டைகளிலும் வாய்க்கால்கள், ஆறுகளிலும் விடப்படும். இத்திட்டத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்
1. பல கோடிக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு, நிலத்தடி நீர் சார்ந்த விவசாயம் அழியும், குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும்.
2. வெளியேற்றப்படும் கழிவு நீர் கடல் நீரைப்போல் 5 மடங்கு உப்புத்தன்மை கொண்டது. இந்நீராலும், நிலத்தடி நீர் பெருமளவில் வெளியேற்றப்படுவதால் நிலத்தடியில் உட்புகும் கடல்நீராலும் விளைநிலம் உப்பாகி தரிசாகும்.
3. எரிவாயுவை பிற பகுதிகளுக்கு எடுத்துச்செல்லும் குழாய்கள் பதிக்கவும் கையகப்படுத்தப்படும் பல ஏக்கர் நிலத்தில் விவசாயம் அழியும்.
4. விவசாயமும், விவசாய வருவாயைச் சார்ந்து இப்பகுதியில் செயல்படும் அனைத்து தொழில்களும் அழிந்து இம்மண்ணின் மக்கள் தமது நாட்டிலேயே அகதிகளாக அல்லல்பட நேரும்.
5. விவசாயம் சார்ந்த இலட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் பறிக்கப்பட்டு சில ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும். அதுவும் இம்மண்ணின் மக்களுக்கு கிடைக்காது. இத்துறையின் சிறப்பு பயிற்சி பெற்ற வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கே கிடைக்கும்.
6. கழிவு நீரில் கலந்துள்ள பென்சீன், டொலுவீன், ஈதைல் பென்சீன், சைலீன் போன்ற வேதிப்பொருட்கள் குழாய்களின் கழிவுகள் வழியாகவும், குழாயைச் சுற்றியுள்ள இடைவெளி வழியாகவும் வெளியேறி குடிநீருடன் கலந்து புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களை உருவாக்கும்.
7. இதே முறையில் மீத்தேனும் வெளியேறி குடிநீரிலும் காற்றிலும் கலக்கக்கூடும். குறைந்த வெப்பநிலையிலேயே தீப்பற்றக்கூடிய மீத்தேனால் தீ விபத்துக்கள் ஏற்படும்.
8. பெருமழை, வெள்ளத்தின்போது கழிவு நீர், குட்டைகளிலிருந்து வெளியேறி மண்ணை மாசாக்கும்.
9. நிலத்தின் அடியே குறுக்கும், நெடுக்குமாக தோண்டி வெடி வைப்பதனால் நமது பகுதியில் நிலநடுக்கம், பூகம்ப ஆபத்து உருவாகும். நமது கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள், தஞ்சை பெரிய கோயில் போன்ற வரலாற்றுச் சின்னங்கள் பெரும் ஆபத்துக்குள்ளாகும். |