ஆஸ்திரேலிய அரசின் பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்பு 46 ஈழத் தமிழ் அகதிகளை கடந்த 5 ஆண்டு காலத்திற்கு மேலாக சிறையில் வைத்திருக்கும் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது.
5 ஆண்டு கால சிறைக்கொடுமைகளின் விளைவாக ஈழத் தமிழர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். குழந்தைகளும் பெண்களும்கூட சிறையில் அடைக்கப்பட்டிருப்பது மனிதநேயத்தை மீறிய செயலாகும்.
மேற்கு நாடுகளில் பல இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் அகதிகளாக அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். அங்கெல்லாம் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. அந்நாட்டு மக்களைப் போலவே அவர்களும் சகல உரிமையுடன் கூடிய மக்களாக நடத்தப்படுகிறார்கள். ஆனால், ஆஸ்திரேலிய அரசு அகதிகளாக அடைக்கலம் புகுந்த மக்களை கொடுஞ்சிறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துகிறது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இவர்கள் எத்தகைய விசாரணையும் இல்லாமல் 5 ஆண்டுகாலத்திற்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உலக சமுதாயமும் அதைக் கண்டிக்க முன்வரவேண்டும்.
சர்வதேச சட்டங்களின்படியும் மரபுகளின்படியும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு பாதுகாப்பும் தஞ்சமும் கொடுக்கவேண்டிய அரசு அவற்றுக்கெதிராக செயல்படுவது மனித உரிமைகளை அப்பட்டமாக மீறுவதாகும்.
கடந்த 2 ஆண்டுகளில் அடைக்கலம் கோரி ஆஸ்திரேலியாவுக்கு வந்த ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் வேண்டுகோளை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் ஆஸ்திரேலியா அரசு அவர்களை திரும்ப அனுப்பியுள்ளது. மனித உரிமை கண்காணிப்பகம் இதற்காக ஆஸ்திரேலிய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. உயிருக்கு அஞ்சி ஓடிவந்த ஈழத்தமிழர்களை மறுபடியும் இலங்கைக்கு திருப்பி அனுப்புவது அவர்களை கொலைக் களத்துக்கு அனுப்புவதற்கு சமமானது. எனவே, அவர்களை உடனடியாக விடுவித்து ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் கொடுக்க வேண்டும் அல்லது அவர்களை எந்த நாடு ஏற்றுக்கொள்கிறதோ அந்த நாட்டிற்கு அனுப்பிவைக்க வேண்டும். மாறாக இலங்கைக்கே திருப்பி அனுப்புவது இராசபக்சேயின் இனப்படுகொலைக்கு துணைநிற்பதாகும். |