முள்ளிவாய்க்கால் முற்றம் - தமிழ்ப் பண்பாட்டின் எச்சம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 01 பெப்ரவரி 2014 14:40

நடுகல் வழிபாடு தமிழ்ப் பண்பாட்டில் மிக முக்கியமான வழிபாடாக விளங்கியது. தன்னலம் இன்றி பொதுநலம் பேணி உயிர் நீக்கும் மனிதனைத் தெய்வத் தன்மைக்கு உயர்த்தி அவனை நினைந்து தொழுது கொள்வதற்கான ஒரு வழி நடுகல் வழிபாடு. தமிழ்ப் பண்பாட்டின் ஒரு கூறு. அதன் தொடர்ச்சியான ஒரு நிலைப்பாடாகவே முள்ளிவாய்க்கால் முற்றத்தினை அவதானிக்க வேண்டும். தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் தமிழ்ப் பண்பாட்டின் நீட்சியாக நடுகல் பாவனையாகவே மாவீரர் துயிலகத்தினை அமைத்திருந்தனர்.

இன்று உலக ஏகாதிபத்தியத்தினாலும் "இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுடன் உதவியுடனே இப்போரை நடத்தினேன்'' என்று சொல்லும் இனப் படுகொலை செய்த இலங்கையின் தளபதி ஜெயசூரியா வாயிலாக இலங்கை மண்ணில் நினைவகங்கள் உடைக்கப்பட்டு தமிழ் மக்களின் நெஞ்சினில் ஆறாத காயத்தினை ஏற்படுத்தியது. அதனுடைய தொடர்ச்சியாக காமன்வெல்த் நடைபெற்ற சூழலில் முள்ளிவாய்க்கால் முற்றத்தினை இந்திய மத்திய-மாநில அரசுகள் கொடூரமாகத் தகர்த்துள்ளன.

முள்ளிவாய்க்கால் முற்றத்தினைச் சிதைப்பதற்கான காரணம் மத்திய அரசுக்கு இருப்பது நமக்கு நன்கு தெரிந்த விஷயம். "மத்திய அரசின், இந்திய அரசின் போரை நாங்கள் நடத்தினோம்'' என்று இனப்படுகொலை அரசான இலங்கையின் குடியரசுத் தலைவர் இராசபக்சேயின் தம்பி கோத்தபய கூறிய கூற்று முக்கியமானது. தான் முன்நின்று நடத்திய இன அழிப்பின் எச்சத்தை இந்திய மண்ணில் நிறுவுவதை இந்திய காங்கிரஸ் அரசு ஏற்காது என்பது நாம் அறிந்ததே. ஈழத் தாயாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் ஜெயலலிதா அரசு, காமன்வெல்த் மாநாடு இலங்கை மண்ணில் நடைபெறக்கூடாது என்று சிறப்பு சட்டசபைத் தீர்மானம் கொண்டு வந்த அரசு முள்ளிவாய்க்கால் முற்றத்தினை அழிக்க நினைக்கும் காரணம் என்ன? பொதுவாக அனைவரும் கூறும் காரணமாக முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்கும் குழுவில் ஜெயலலிதாவினால் எதிரியாகக் காட்டப்படுகிற புதிய பார்வை நடராஜன் முக்கியமான பொறுப்பெடுத்து நிறைவேற்றியது காரணமாக கருதப்படுகிறது. எனினும் இக்காரணம் மட்டுமே போதுமானதாகத் தெரியவில்லை.

ஈழப் போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் பொழுது போரில் மிகப் பெரிய இன அழிப்பு நடந்தேறப் போகிறது. அதனை ஒன்றுபட்டு தமிழகம் வெளியில் வந்து போராடாவிட்டால் தடுத்து நிறுத்த முடியாது என்று தெளிவாகப் புரிந்து கொண்ட ஈகி முத்துக்குமார் "நான் உயராயுதம் ஏந்துகிறேன் என்னுடலைக் கொண்டு பெரிய அளவில் மக்கள் எழுச்சிப் போராட்டத்தை உருவாக்குங்கள்'' என்று தமிழக மக்களுக்கு, மாணவர்களுக்கு மரண சாசனம் எழுதி தன் உயிரை ஈகம் செய்தார். அப்போராட்டத்தினை முளையிலே கிள்ளி, தலைவர்கள் ஆர்வலர்கள் துணைக் கொண்டே எழுச்சி உருவாகாமல் திட்டமிடப்பட்டு கலைஞர் அரசால் ஒடுக்கப்பட்டது தமிழினத்தின் சோக வரலாறு.

முள்ளிவாய்க்கால் முற்றம் திறக்கப்பட்ட இந்த ஒரு வார காலத்தில் இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிட்டுச் சென்றதுடன் "இவ்வளவு கொடுமைகள் நிகழ்ந்தனவா? கோரமான முறையில் எம்மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனரா? இதனைக் குறித்து எந்தத் தகவலும் எங்களுக்கு தெரிய வரவில்லையே' என்ற எண்ணத்தை பார்வையாளர்களின் மனதில் ஏற்படுத்தி தீயை மூட்டிய உணர்வை முள்ளிவாய்க்கால் முற்றம் நிகழ்த்தியுள்ளது. இதனையடுத்தே முள்ளிவாய்க்கால் முற்றம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்றி வைக்கும் நெருப்பு ஏகாதிபத்திய இந்திய மத்திய, மாநில அரசுகளால் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம் அல்லவா? அதனைத் தொடர்ந்தே முள்ளிவாய்க்கால் முற்றத்தை முடக்கும் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டு தொடங்கியுள்ளன.

இன்றைய மாநில அரசின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஜெயலலிதாவைப் பொறுத்த வரையில் மத்திய அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஈழத் தாய் வேடம் புனைந்து கொண்டே எங்கே தமிழ் மக்கள் முழுமையாக உணர்வை அடைந்து ஒன்றாகத் திரண்டு விடுவார்களோ என்று தமிழ் உணர்வாளர்களை ஒடுக்கும் சர்வாதிகாரப் போக்கை கடைப்பிடித்து இரண்டு வேடமிட்டு களமாடுகிறார்.

காவல்துறையினர் "மக்கள் நண்பன்' என்று சொல்லிக்கொண்டே ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியினரின் எடுபிடியாக மனநோயாளிகளாகவே மாறி விட்டனர். இச்சூழலில் தமிழக மக்கள் ஆளும் கட்சியின் இரட்டை வேடத்தையும் நம்பிக்கைத் துரோகம் செய்த கருணாநிதியையும் ஒரே நிலையில் வைத்தே தங்களது அடுத்த கட்ட நகர்வினைத் தொடங்க வேண்டும். கருணாநிதி மக்களிடம் நம்பிக்கை எதுவும் கொடுக்காமல் தமிழக மக்களுக்கு துரோகத்தை மட்டும் செய்வார்.

ஜெயலலிதா தமிழ் மக்களிடம் நம்பிக்கை என்ற இனிப்பை கொடுத்து விட்டு அதனை மக்கள் சுவைப்பதற்குள் கடுமையான நஞ்சையளிக்கும் விசித்திரமான இரட்டைப் போக்குடையவர்.

இந்நூற்றாண்டின் மகத்தான இடிந்தகரை மக்கள் போராட்டத்தின்போது "உங்களில் ஒருத்தியாக இருப்பேன்'' என்ற கூறிக்கொண்டு இடைத்தேர்தலில் அவரது வெற்றி நிச்சயிக்கப்பட்டதும் 10000 போலீசாரை இடிந்தகரைக்கு அனுப்பி பெண்கள், குழந்தைகள் என்று பார்க்காமல் மூர்க்கத்தனமாகத் தாக்கியதுடன் 60 வயது பெண்மணி வரை அனைத்துத் தரப்பு மக்கள் மீதும் தேசத் துரோக வழக்கினைப் போட்டவரும் அவரே. இன்று "ஈழப் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இந்தியா காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும்'' என்று வெற்று சட்டசபைத் தீர்மானங்களை நிறைவேற்றி காதுகேளாத மத்திய மன்மோகன் அரசிற்கு அனுப்பி அவர் கடன் முடிப்பது, தமிழ் உணர்வாளர்களைச் சட்டத்தின் துணைக்கொண்டு ஒடுக்குவது என்று திறமையாக இரண்டு வேடம் இட்டு நடிக்கிறார்.

ஒரு தலைமுறை அரசியல் மயப்படுத்தப் படாததின் விளைவுகளை இன்று தமிழினம் அனுபவித்து வருகிறது. இனி மக்களை அரசியல் மயப்படுத்தி பெரும் மக்கள் திரள் போராட்டங்களை ஏறெடுப்பதே தமிழினத்தின் தேவை.

இதனை தமிழ் அறிவு ஜீவிகளும் இலக்கியவாதிகளும் படைப்பாளிகளும் அறிவு இலக்கியத் தளத்தில் மட்டுமின்றி பொது வெளியில் இறங்கிப் போராட வேண்டும். லத்தீன் அமெரிக்க நாடுகளில் இலக்கியவாதிகள் அறிவுத்தளத்தில் மட்டுமின்றி களமாடவும் அணிவகுக்கின்றனர். தமிழின மக்கள் அனைவரும் வேறுபாடு களைந்து அவரவர் தளத்தில் இயங்கிக் கொண்டே களமிறங்கிப் போராட வேண்டிய தருணமிது. சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முள்ளிவாய்க்கால் முற்றம் களமாட அனைவரையும் அழைக்கிறது.

- லெனாகுமார்

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.