தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முள்ளி வாய்க்கால் இலக்கிய முற்றத் தொடக்க விழா திருவள்ளுவராண்டு 2045 தைத் திங்கள் 20ஆம் நாள் (02-02-2014) ஞாயிறு மாலை 4 மணிக்கு நடைபெற்றது.
தொடக்க விழாவை முன்னிட்டு அன்று காலை 9 மணி முதல் 1.30 மணி வரை பூந்தளிர் (பிரி.கே.ஜி) முதல் 5ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கு மாறுவேடப் போட்டி நடைபெற்றது. முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பள்ளிப் பிள்ளைகளும், தஞ்சை நகரப் பள்ளிகளைச் சேர்ந்த பிள்ளைகளும் போட்டியில் கலந்து கொண்டனர். தமிழ்த்தாய், புநானூற்றுத்தாய், தலைவர் பிரபாகரன், கரும்புலி, ஒளவையார், கம்பர், பாரதி, பாரதிதாசன், அண்ணா, கட்டபொம்மன், வேலுநாச்சியார், குயிலி, வள்ளுவர், சேக்கிழார், ஆண்டாள், இளங் கோவடிகள், வள்ளலார், மொழிப் போர் ஈகி சாரங்கபாணி, தழல் ஈகி செங்கொடி, இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார் போன்ற வேடங்களில் மாணவச் செல்வங்கள் கலந்து கொண்டு பேசி பார்வையாளர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினர்.
நூற்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் கலந்து கொண்ட இவ்விழாவில் ஏராளமான பெற்றோர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். அனைத்துக் குழந்தைகளுக்கும் பழக்கூழ் தடவிய ரொட்டிகளும், வாழைப்பழங்களும் தரப்பட்டன. மதிய உணவும் வழங்கப்பட்டது. உணவுக்குப் பின் ஈழப்போர் பற்றிய பழ. நெடுமாறன், ம. நடராசன் ஆகியோரின் தயாரிப்பிலான குறும்படம் திரையிடப்பட்டது.
மாலை 4 மணிக்கு இலக்கிய முற்றத் தொடக்க விழாவும், மாறுவேடப் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்குப் பரிசளிப்பு விழாவும் நடந்தன. சிறீ அபிராமி நாட்டியாலயா மாணவர்கள் வரவேற்பு நடனம் ஆடினர். விழாவுக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவரும் முள்ளி வாய்க்கால் இலக்கிய முற்றத்தின் நிறுவனருமான தமிழ்த் தேசியத் தந்தை ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் தலைமை ஏற்றார். உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் திரு. பொன்னிறைவன், தமிழ்த் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் ஐயனாபுரம் திரு. முருகேசன், பொறியாளர் திரு. ஜோ. ஜான்கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மொழிப் போர் மறவர் தஞ்சை ம. நடராசன் (ஆசிரியர், புதிய பார்வை) அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார். சொல்லாய்வறிஞர் ப. அருளியார் (மேனாள் துறைத் தலைவர், தூய தமிழ் அகரமுதலிகள் துறை, தமிழ்ப் பல்கலைக் கழகம்) இலக்கிய முற்றத்தைத் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள். மாறுவேடப் போட்டியில் கலந்து கொண்ட மழலைச் செல்வங்கள் அனைவருக்கும் பங்கேற்பாளர் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன. முதல் பரிசான 1 கிராம் தங்கக் காசினை கரும்புலி வேடமிட்டுப் பேசிய தமிழினி பெற்றார். இரண்டாம் பரிசான 25 கிராம் வெள்ளிக் காசினை புறநானூற்று வீரத்தாய் வேடமிட்டுப் பேசிய இன்னமுது பெற்றார். மூன்றாம் பரிசான 20 கிராம் வெள்ளிக்காசினை ஒளவையார் வேடமிட்டுப் பேசிய ஹர்சினி பெற்றார். 24 பேருக்கு ஆறுதல் பரிசாக 5 கிராம் வெள்ளிச்காசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கான பரிசுகளை முனைவர் ம. நடராசன் அவர்கள் வழங்கினார்கள். விழாவில் பரிசுப் பொருள்களுக்காக நன்கொடை வழங்கிய திரு.வே. பாலசுப்பிர மணியன், (இராசராசேசுவரி கட்டுமானப் பொருள்கள் விற்பனையக உரிமையாளர்) அவர்களுக்கும் பொறியாளர் இரா. சிறீ கணேசு-பூமா இணையர்களுக்கும் நடன ஆசிரியை திருமதி அபிராமி அவர்களுக்கும், விழாவில் நடுவர்களாக இருந்து சிறப்பாகச் செயலாற்றிய புலவர் செல்ல. கலைவாணன், திரு. தமிழ்த் தென்றல், முனைவர் வெற்றிச் செல்வி ஆகியோர்களுக்கும் ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் நினைவுப் பரிசுகளை வழங்கினார்கள்.
தொடக்கத்தில் முள்ளி வாய்க்கால் இலக்கிய முற்றப் பொருளாளர் திரு. தியாக. சுந்தரமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் பெ. இராமலிங்கம் அறிமுக உரை நிகழ்த்தி, இலக்கிய முற்றத்தின் நோக்கங்கள் பற்றியும் அதன் செயல்பாடுகள் எவ்வாறு அமையும் என்பது பற்றியும் விளக்கிப் பேசினார். நிறைவாக இலக்கிய முற்றத்தின் செயலாளர் முனைவர் இரா. தமிழ்க்குயில் நன்றியுரை நிகழ்த்தினார்.
காலை முதல் மாலை வரை பொறியாளர் ஜோ. ஜான் கென்னடி, மேலாளர் திரு. முகுந்தன் மற்றும் முற்றத் தோழர்கள், இலக்கிய முற்றத்தின் துணைத் தலைவர்கள் திரு. சதா. முத்துக்கிருட்டிணன், அழகு. அம்பிகாபதி, திரு. வே. பாலசுப்பிரமணியன், ஊடகப் பொறுப்பாளர் திரு. இராவணன், துணைச் செயலாளர்கள் திரு. காமராசு, திரு. விசயக்குமார், திரு. பிறைசூடன் ஆகியோர் தலைமையில் நிகழ்ச்சிக்கான சிறப்பான ஏற்பாடுகளை முற்ற உறுப்பினர்கள் செய்திருந்தனர். |