மாநிலங்களின் கரம் ஓங்குகிறது! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 15 பெப்ரவரி 2014 14:49

இந்திய அரசியலில் மிகப் பெரும் மாற்றம் உருவாகியுள்ளது, அகில இந்தியக் கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க. போன்ற கட்சிகளின் அகில இந்தியத் தலைவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டு, இந்திரா குடும்ப வாரிசு முன்னணிக்கு நிறுத்தப்பட்டுள்ளது. அதைப் போல பா.ஜ.க.வில் மாநில முதல்வர் முன்னணியில் நிறுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்தியா விடுதலை பெற்ற காலக் கட்டத்தில் பிரதமராக நேருவும் துணைப் பிரதமராக வல்லபாய் படேலும் மற்றும் அமைச்சர்களாக இராஜேந்திரபிரசாத், அபுல்கலாம் ஆசாத், இராஜாஜி போன்ற அகில இந்திய தலைவர்கள் மத்திய அரசில் அங்கம் வகித்தனர். காலப்போக்கில் மூத்த தலைவர்கள் ஒருவர்பின் ஒருவராக மறைய மாநில முதல்வர்களாக இருந்த கோவிந்த வல்லப பந்த், மொரார்ஜிதேசாய், அனுமந்தையா, டி. சஞ்சீவய்யா போன்றவர்களை மத்திய அரசுக்கு நேரு கொண்டுவந்தார்.

1964ஆம் ஆண்டில் நேரு மறைந்த பிறகு மாநிலங்களில் செல்வாக்குப் பெற்றிருந்த காமராசர், சஞ்சீவரெட்டி, நிஜலிங்கப்பா, அதுல்யா கோஷ், எஸ்.கே. பட்டீல் போன்றவர்கள் ஒன்றுகூடி, லால்பகதூர் சாஸ்திரியை பிரதமர் பதவிக்குத் தேர்ந்தெடுத்தனர்.

லால்பகதூருக்குப் பின் மாநில காங்கிரஸ் முதல்வர்கள் ஒன்றுகூடி இந்திராவை பிரதமராக்குவதற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.

பிரதமர் பதவிக்கான போட்டியில் ஒரு வேட்பாளராக நின்ற மொரார்ஜிதேசாய் கடும் கோபம் அடைந்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி தேர்ந்தெடுக்கவேண்டிய பதவியான பிரதமர் தேர்தலில் மாநில முதல்வர்கள் தலையிடுவது தேவையற்றது. தவறானது என குற்றம் சாட்டினார்.
அப்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராசர் குறுக்கிட்டு "மாநிலங்கள் இல்லையெனில் இந்தியா ஏது?'' என்ற பொருள் பொதிந்த கேள்வியொன்றை எழுப்பினார். அதாவது மாநிலங்களைக் கொண்ட ஒன்றியமே இந்தியா என்பதையும்... இந்திய அரசின் செயல்பாட்டில் மாநிலங்களுக்கு உரிய பங்களிப்பை மறுப்பது சனநாயக ரீதியில் தவறாகும் என்பதையும் தனது கேள்வியின் மூலம் காமராசர் சுட்டிக்காட்டினார். நாட்டின் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் போன்ற பதவிகளுக்குரிய வேட்பாளர்கள் தேர்வில் மாநிலங்களுக்கு உரிய பங்களிப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதை அவர் நிலை நிறுத்தினார். காமராசரின் கேள்வி இந்திய அரசியலில் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திற்று. அதிலிருந்து இந்திய அரசியலின் போக்கை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநிலத் தலைவர்களின் கைகளுக்கு வந்தது. இத்தகைய சூழ்நிலை படிப்படியாக வளர்ந்து இன்று மாநில முதல்வர் ஒருவர் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார். எதிர்காலத்தில் இந்திய அரசியலில் மாநிலங்களின் கரமே ஓங்கும் என்பது அப்பட்டமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

மாநிலங்களின் கரம் ஓங்குவது அவைகளுக்கு முழு உரிமை பெற்றுத் தருவதில் போய் முடிந்தால் நாட்டிற்கு நன்மை பயக்கும்.

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியின் காலத்திற்குப் பிறகு பெரும் மாற்றம் உருவாயிற்று. இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்ட அனுதாப அலையினால் மிகப்பெரிய வெற்றிபெற்ற ராஜீவ்காந்தியால் 1989ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தனித்த பெரும்பான்மையை காங்கிரஸ் கட்சிக்கு பெற்றுத்தர முடியவில்லை. எதிர்க்கட்சிகள் கூட்டாகச் சேர்ந்து வி.பி.சிங் தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றின. மண்டல் கமிசன் பரிந்துரைகளை நிறைவேற்ற வி.பி.சிங் முன்வந்தபோது பா.ஜ.க. அவரது ஆட்சிக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெற்றது. எனவே புதிய ஆட்சியை அமைக்க சந்திரசேகருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. அந்த ஆட்சியும் நிலையாக நீடிக்கவில்லை.

அதுமட்டுமல்ல, காங்கிரஸ், பா.ஜ.க., ஜனதா போன்ற கட்சிகள் தனித்து ஆட்சி அமைக்கும் நிலை 1990ஆம் ஆண்டோடு முடிவடைந்துவிட்டது. 1989-1990ஆம் ஆண்டில் வி.பி.சிங், 1990-1991 சந்திரசேகர், 1991-1996 பி.வி. நரசிம்மராவ், 1996 மே - ஏ.பி. வாஜ்பாய், 1996-1997 ஹெச்.டி. தேவகவுடா, 1997-1998 ஐ.கே. குஜ்ரால், 1998-2003 ஏ.பி. வாஜ்பாய் ஆகியோர் மாநிலக் கட்சிகளின் உதவியுடன் மட்டுமே பிரதமர்களாக ஆட்சி செய்தனர்.

மத்திய ஆட்சியை அமைக்க அகில இந்தியக் கட்சிகள் மாநிலக் கட்சிகளின் ஆதரவை நாடியபோது- அதிகாரத்தில் பங்களிக்க வேண்டுமென மாநிலக் கட்சிகள் நிபந்தனை விதித்தபோது அதை மறுக்க அகில இந்தியக் கட்சிகளால் முடியவில்லை. இதன் விளைவாக இந்திய அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. மத்திய ஆட்சியில் அங்கம் வகித்து அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்டபோது மாநிலக்கட்சிகள் தங்களது சுயாட்சிக் கோரிக்கைகளையும், மாநில உரிமைகளுக்காகப் போர்க்குரல் எழுப்புவதையும் படிப்படியாகக் கைவிட்டன.

மாநிலங்களில் மாநிலக் கட்சிகளின் ஆட்சிகள் புரிந்த தவறுகள் ஊழல்கள் போன்றவற்றை மத்தியில் ஆட்சியில் இருந்த அகில இந்தியக் கட்சிகள் சகித்துக்கொண்டு செல்லவேண்டிய நிலைமை உருவாயிற்று. அதைப்போல இந்திய அரசில் நடைபெற்ற ஊழல்களை மறைக்க மாநிலக் கட்சிகள் துணையாக இருந்தன.

மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சியில் அகில இந்தியக் கட்சிகள் தங்களின் மாநிலக் கிளைகளை மாநிலக் கட்சிகளின் பலிபீடங்களில் காவுகொடுத்தன.

மொத்தத்தில் நாட்டின் அரசியலில் கொள்கை, கோட்பாடு, நேர்மை, நாணயம் ஆகியவை குழிதோண்டிப் புதைக்கப்பட்டன. ஊழல், இலஞ்சம், நிர்வாகத் திறமையின்மை தலைவிரித்தாடின.

எல்லாவற்றிற்கும் மேலாக சனநாயகத்திற்கு பேராபத்து தோன்றியது. அகில இந்தியக் கட்சியான காங்கிரசில் இதன் விளைவாக சனநாயகம் அடியோடு புறந்தள்ளப்பட்டு வாரிசு அரசியல் முன்னுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்திரா குடும்பத்தில் பிறந்தவர்கள் என்பதினால் மட்டும் கட்சித் தலைமை, பிரதமர் பதவி ஆகியவை அவர்களுக்கு உரியது என்பது எழுத்திலில்லாத சட்டமாகிவிட்டது. அதை முன்மாதிரியாகக் கொண்டு பல காங்கிரஸ் தலைவர்களும் தங்களது வாரிசுகளை முன்னிறுத்துகிற நிலை உருவாகிவிட்டது.

மாநிலங்களிலும் இந்த நோய் பரவிவிட்டது. அநேகமாக எல்லா மாநிலக் கட்சிகளிலும் வாரிசு அரசியல் தலைதூக்கி நிற்கிறது.

கட்சிக்காக நீண்டகாலமாகத் தொண்டாற்றியவர்கள், பல துன்பங்களை ஏற்றவர்கள், தியாகம் செய்தவர்கள் புறந்தள்ளப்பட்டு, தலைவரின் மகன் என்ற ஒரே தகுதிக்காக பதவிகளில் வாரிசுகள் அமர்த்தப்படும் நிலை எழுதப்படாத சட்டமாகிவிட்டது. இதன் விளைவாக அந்தந்தக் கட்சிகளில் குடும்ப சர்வாதிகாரம் தலைதூக்கி நிற்கிறது. மொத்தத்தில் கட்சிகளிலும் நாட்டிலும் சனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்படுகிறது.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.