சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை உச்சநீதி மன்றம் குறைத்து ஆயுள் தண்டையாக மாற்றியுள்ளது. ஏற்கெனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் உட்பட 7 பேரும் 23 ஆண்டு காலத்திற்கு மேலாக சிறையில் இருந்த காரணத்தினால்
அவர்களை அரசமைப்புச் சட்டப் பிரிவு 161 அல்லது குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 432, 433 ஆகியவற்றில் ஏதாவது ஒரு பிரிவின் கீழ் விடுவிக்கலாம் என தமிழக அரசு முடிவு செய்து அது தொடர்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்நிலையில் கற்பனையான காரணங்களைக் கூறி மத்திய அரசு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அரசமைப்புச் சட்டப் பிரிவு 162, 73(1)ஏ ஆகிய பிரிவுகளின்படி செயல்படுத்தும் அதிகாரம் மாநில அரசுகளிடம்தான் உள்ளது. இவர்கள் அனைவரும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைகளில் தான் அடைக்கப்பட்டுள்ளனர். சட்டப்பிரிவு 432-ன் படி இவர்களை விடுவிக்க தமிழக அரசுக்கு உரிமை உண்டு.
இவர்கள் அனைவரும் தடாச் சட்டப்பிரிவு தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆயுதத் தடைச்சட்டம், மத்திய அரசின் சட்டங்களின் கீழ் பெற்ற தண்டனைகளை ஏற்கனவே சிறையில் கழித்துவிட்டனர். எனவே அவர்களை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவு சரியானதுதான் என சட்ட அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால், மத்திய அரசோ உச்சநீதி மன்றத்தில் இவர்களின் விடுதலைக்கு எதிராக மனுவுக்குமேல் மனுவை தாக்கல் செய்தவண்ணம் உள்ளது. உச்சநீதி மன்றத்தில் இவைகள் உறுதியாகத் தள்ளுபடி செய்யப்படும் என்பதில் ஐயமில்லை. ஆனாலும், இவர்களின் நோக்கம் என்பது தேர்தல் நடந்து முடியும் வரை இந்த ஏழு பேரையும் விடுவிக்கக் கூடாது என்பதுதான். ஏனென்றால் இவர்கள் வெளியே வந்து தங்கள் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என்பதையும், புலன் விசாரணையின் போது தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், சித்ரவதைகள் குறித்தும் சிறையில் தாங்கள் அனுபவித்த வேதனையான காலத்தைக் குறித்தும் வெளியே கூறுவார்களானால் அதன் விளைவாக தாங்கள் பாதிக்கப்படுவோம் என காங்கிரசு அஞ்சுகிறது. எனவேதான், அவர்களின் விடுதலைக்கு முட்டுக்கட்டைகள் போடுகிறது. எத்தகைய முட்டுக்கட்டைகள் போட்டாலும் அவர்கள் விடுதலையாவதை யாராலும் தடுக்க முடியாது.
நட்டயீடு
அமெரிக்காவில் செய்யாத கொலைக்கு 23 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்து விடுதலையானதற்கு 40 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க நியூயார்க் நகர நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.
கடந்த 1990-ஆம் ஆண்டில் நகைக் கடை ஒன்றில் நடந்த கொள்ளை முயற்சியின் போது யூத மத குரு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக டேவிட் ரண்டா என்ற அப்பாவி கைது செய்யப்பட்டு அவருக்கு 23 ஆண்டுகாலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தான் நிரபராதி என்று தொடக்கத்தில் இருந்தே அவர் கூறி வந்தார். அதை யாரும் நம்பவில்லை. ஆனால், அவர் வழக்கில் விடுதலையான பிறகு திடுக்கிடும் உண்மை வெளிவந்தது. புலன் விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரி மிரட்டி ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியும், சாட்சிகளை ஜோடித்தும் பொய் வழக்குப் போட்டது தெரியவந்தது. எனவே, இவருக்கு நட்டயீடு கொடுக்க நியூயார்க் நகர நிர்வாகம் ஒப்புக்கொண்டது. என்னதான் நட்டயீடு கொடுத்தாலும் அவருடைய வாழ்க்கையில் 23 ஆண்டு காலத்தை அவர் இழந்ததை யார் ஈடு செய்வது?
இந்த ஏழு தமிழர்களும் தங்கள் வாழ்வின் இளமைக் காலத்தை சிறையில் தொலைத்துவிட்டார்கள். அமெரிக்க நாடு டேவிட் ரண்டாவுக்கு நட்டயீடு அளித்ததின் மூலம் தனது தவறைத் திருத்துவதற்கு முன்வந்ததைப் போல இந்த ஏழு பேருக்கும் நட்டயீடு அளிக்க மத்திய அரசு முன் வருமா? |