காவிரி - இந்திய அரசால் வஞ்சிக்கப்பட்ட தமிழகம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 16 மார்ச் 2014 13:40

1968-ஆம் ஆண்டு காவிரி நதியின் நீர்ப் பங்கீடு குறித்து தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. அப்போது மத்திய நீர்ப் பாசனத்துறை அமைச்சராக இருந்த கே.எல். ராவ் அவர்களின் முயற்சியாலும் அவரது தலைமையிலும் கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகியவற்றின் முதலமைச்சர்கள் கூடி பலமுறை பேச்சு வார்த்தைகளை நடத்தினார்கள். இந்தப் பேச்சுக்களில் எந்த முடிவும் ஏற்படவில்லை. 1970-ஆம் ஆண்டில் பேச்சுக்கள் பயன் அளிக்கும் என்ற நம்பிக்கையை மத்திய அமைச்சர் கே.எல். ராவ் இழந்துவிட்டார். எனவே நதிநீர் தாவா சட்டத்தைப் பயன்படுத்தி உடனடியாக நடுவர் குழுவை அமைக்க இந்திய அரசு முன்வரவில்லை. இது இந்திய அரசு செய்த முதலாவது தவறாகும்.

இதற்கிடையில் காவிரியின் துணை நதிகளான ஹேமாவதி, கபினி ஆகியவற்றில் அணைகள் கட்டும் பணியைக் கர்நாடகம் தொடங்கிவிட்டது. எனவே வேறு வழியில்லாத நிலைமையில் 1971-ஆம் ஆண்டில் இந்திய அரசையும். கர்நாடக அரசையும் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு தமிழக விவசாயிகள் சங்கமும், தமிழக அரசும் உச்சநீதி மன்றத்தில் வழக்குகள் தொடுத்தன. இந்திய அரசு நடுவர் மன்றத்தை அமைக்கவேண்டும் என்பதுதான் வழக்காகும்.

1972-ஆம் ஆண்டு இந்தியத் தலைமை அமைச்சராக இருந்த இந்திரா காந்தியிடம், அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த மு. கருணாநிதி இப்பிரச்சனை குறித்து பேசினார். வழக்கைத் திரும்பப் பெற்றால் பேச்சுக்களை நடத்தி தீர்வுகாண உதவுவதாக இந்திரா அளித்த வாக்குறுதியை நம்பித் தமிழக அரசு வழக்கை வாபஸ் பெற்றது. அதே ஆண்டில் மே மாதம் மூன்று மாநில முதலமைச்சர்கள் கூடி பேசியதன் விளைவாக காவிரி உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. 1973-ஆம் ஆண்டு இறுதியில் டில்லியில் மத்திய அமைச்சர் தலைமையில் மூன்று மாநில முதலமைச்சர்களும் உட்கார்ந்து காவிரி உண்மை அறியும் குழுவின் அறிக்கையை ஆராய்ந்தார்கள். இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் சரியானவை என்று மூன்று மாநில முதல்வர்களும் ஒப்புக்கொண்டார்கள்.

1974-ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் டில்லியில் கூடிய மூன்று மாநில முதல்வர்களும் காவிரிப் பள்ளத்தாக்கு அதிகார அமைப்பு ஏற்படுத்தும் யோசனையை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், இந்த அமைப்பை நிறுவவேண்டிய இந்திய அரசு அவ்வாறு செய்யவில்லை. இது இந்திய அரசு செய்த இரண்டாவது தவறாகும்.

1971-ஆம் ஆண்டில் நடுவர் மன்றம் அமைக்கவேண்டுமெனக் கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த தமிழக அரசு, 1990-ஆம் ஆண்டு வரையில் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தை நடைபெறும்போது உச்சநீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, பேச்சுவார்த்தையை நடத்தியது தமிழக அரசு செய்த மாபெரும் தவறாகும்.

பேச்சுவார்த்தை நடத்திய 19 ஆண்டுகளில் காவிரியின் துணை நதிகளில் கர்நாடகம் அணைகளைக் கட்டி முடித்துவிட்டது. எனவே, மீண்டும் 1990-ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் நடுவர் மன்றத்தை அமைக்கவேண்டும் என்று தமிழக அரசு முறையீடு செய்தது. அதன்பின் உச்சநீதிமன்றம் நடுவர் மன்றத்தை அமைக்க மத்திய அரசுக்கு ஆணை பிறப்பித்தது. 1990-ஆம் ஆண்டு ஜுன் 2-ஆம் தேதி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இதுவே உச்சநீதி மன்றம் கர்நாடகத்திற்கு எதிராக அளித்த முதல் தீர்ப்பாகும். நடுவர் மன்றத்திற்கு இடைக்கால ஆணை பிறப்பிக்க அதிகாரமில்லை என உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் தொடுத்த வழக்கில் அதற்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது உச்சநீதிமன்றம் கர்நாடகத்திற்கு எதிராக அளித்த இரண்டாவது தீர்ப்பாகும்.

1991-ஆம் ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி நடுவர் மன்றம் இடைக்கால ஆணையைப் பிறப்பித்தது. ஆனால், அதே ஆண்டு ஜூலை மாதம் 25-ஆம் தேதி காவிரிப் பாசனச் சட்டம் என்ற பெயரில் ஒரு அவசரச் சட்டத்தை கர்நாடக அரசு பிறப்பித்தது. நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையைச் செயலற்றதாக்குவதே இச்சட்டத்தின் நோக்கமாகும். இந்த அவசரச் சட்டம் சகல நியாயங்களுக்கும் எதிரானது என்பதை தமிழகம் இந்திய அரசுக்குச் சுட்டிக்காட்டி முறையிட்டது. இச்சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் அங்கீகாரத்திற்கு அனுப்பாமல் மத்திய அரசே நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, அவர் உச்சநீதி மன்றத்தின் பரிசீலனைக்கு அதை அனுப்பினார். இது இந்திய அரசு செய்த மூன்றாவது தவறாகும்.

1991-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதியன்று உச்சநீதி மன்றம் கர்நாடக அரசு பிறப்பித்த அவசரச் சட்டம் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்ற முக்கியத் தீர்ப்பை அளித்தது. இது உச்சநீதிமன்றம் கர்நாடகத்திற்கு எதிராக அளித்த மூன்றாவது தீர்ப்பாகும்.

இந்தத் தீர்ப்பை மட்டும் அல்ல நடுவர் மன்றம் அளித்த இடைக்கால தீர்ப்பையும் இந்திய அரசு தனது கெசட்டில் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இது உச்சநீதிமன்றம் கர்நாடகத்திற்கு எதிராக அளித்த நான்காவது தீர்ப்பாகும்.

இந்திய அரசின் கெசட்டில் இவற்றைப் பதிப்பித்தால்தான் இந்தத் தாவாவில் தொடர்புடைய மாநிலங்கள் அதை ஏற்று நிறைவேற்றவேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால் இந்திய அரசு அவ்வாறு செய்யாததன் விளைவாக இந்தத் தீர்ப்புகள் யாரையும் கட்டுப்படுத்தும் வலிமையற்றுக் கிடக்கின்றன. இது இந்திய அரசு செய்த நான்காவது தவறாகும்.

1993-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதியன்று தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இந்திய அரசின் போக்கைக் கண்டித்து உண்ணா நோன்பு மேற்கொண்டார். இதன் விளைவாக அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவ், காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவைக் கண்காணிக்க ஒரு குழுவையும், அதை நடைமுறைப்படுத்த மற்றொரு குழுவையும் நியமிக்கப்போவதாக அறிவித்தார். காவிரிப் பள்ளத்தாக்கு அதிகார அமைப்பை ஏற்படுத்த முன்வராமல் அதிகாரமற்ற இந்தக் குழுக்களை இந்தியப் பிரதமர் அமைத்தது ஐந்தாவது தவறாகும்.

2007-ஆம் ஆண்டு ஜனவரியில் நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. ஆனால், இந்தத் தீர்ப்பையும் ஏற்றுக்கொள்ள கர்நாடகம் மறுத்துவிட்டது. இந்திய அரசும் இந்தத் தீர்ப்பை கெசட்டில் பதிப்பிக்கவில்லை. எனவே, அது செயல்படாத தீர்ப்பாக இருந்துவிட்டது. இது இந்திய அரசு செய்த ஆறாவது தவறாகும்.

பிரதமராக வாஜ்பாய் பதவியேற்ற போது பிரதமரும், நான்கு மாநில முதல்வர்கள் அடங்கிய குழுவை உருவாக்கினார். இந்தக் குழுவிற்கு உதவியாகச் சம்பந்தப்பட்ட மாநில தலைமைச் செயலாளர்களையும், மத்திய நீர்ப் பாசனத்துறை செயலாளரையும் கொண்ட குழுவை அமைத்தார். இந்தக் குழுக்கள் அதிகாரமற்ற குழுக்களாகும். 1956-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நதிநீர் வாரியச் சட்டத்தைப் பயன்படுத்தி காவிரிப் பள்ளத்தாக்கு அதிகார அமைப்பு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இது இந்திய அரசு செய்த ஏழாவது தவறாகும்.

இந்திய அரசின் இந்தப் போக்குக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் 2013-ஆம் ஆண்டில் தமிழக அரசு வழக்குத் தாக்கல் செய்தது. அதற்கிணங்க உச்சநீதி மன்றம் காவிரிப் பள்ளத்தாக்கு அதிகார அமைப்பை நிறுவும்படியும், மத்திய கெசட்டில் வெளியிடும்படியும் ஆணையிட்டது. இது உச்சநீதி மன்றம் கர்நாடகத்திற்கு எதிராக அளித்த ஐந்தாவது தீர்ப்பாகும். ஆனால், இந்தத் தீர்ப்பையும் மத்திய அரசு செயல்படுத்தவில்லை. இது மத்திய அரசு செய்த எட்டாவது தவறாகும்.

1968-ஆம் ஆண்டிலிருந்து 2014-ஆம் ஆண்டுவரை இந்தியாவின் பிரதமர்களாக இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, வி.பி.சிங், சந்திரசேகர், பி.வி. நரசிம்மராவ், தேவகெளடே, ஐ.கே. குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகிய ஒன்பது பேர் பிரதமர்களாகப் பதவி வகித்தார்கள். இவர்களில் யாரும் இயற்கை நீதியின் படியும், சட்டப்படியும், உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்புகளின்படியும் தமிழகத்திற்கு நியாயம் வழங்கத் தவறிவிட்டார்கள்.
உச்சநீதி மன்றம் ஐந்து முறை தமிழகத்திற்கு நீதி வழங்கும் தீர்ப்பை அளித்த பிறகும், அதை நிறைவேற்ற இந்திய அரசு தவறிவிட்டது. தமிழர்கள் ஒன்றுபட்டு நின்று போராடினாலொழிய காவிரி நீர் மீது நமக்கு இருக்கக் கூடிய உரிமைகளை நிலைநிறுத்த முடியாது.
(காவிரி உரிமை மீட்புக் குழு தஞ்சையில் 1-3-2014 அன்று நடத்திய காவிரி எழுச்சி மாநாட்டில் பழ. நெடுமாறன் ஆற்றிய உரை)

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.