எங்கும் தமிழே முழங்குமடா - - இரா. செம்பியன் |
|
|
|
புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014 14:53 |
எங்கும் தமிழே முழங்குமடா - நம் எல்லோரும் ஒன்றாய்க் குரல்கொடுத்தால் நம்தமிழ் இனமும் நாடும் நிலைபெற நமக்குள் ஒற்றுமை வேண்டு மடா - எங்கும் தமிழே முழங்குமடா தங்களுக் குள்ளே முரண்படும் போக்கைத் தமிழினத் தலைவர்கள் தவிர்த் திடணும் இங்கோர் இயக்கம் அங்கோர் இயக்கம் என்பதை இனிமேல் கைவிடணும் - எங்கும் தமிழே முழங்குமடா
பகுத்தறி வாளர் போர்வையிலே தமிழ்ப் பகைவர்கள் நாட்டில் உலவுகின்றார் தகுதியை அடகு வைத்திடும் இவர்கள் தமிழர்கள் என்பது வெட்கமடா - எங்கும் தமிழே முழங்குமடா தாய்த்தமிழ் மரபைப் பழிப்பவர் முன்னே தலைகுனிந் திருப்பவன் கோழையடா காய்களி றென்றே கனன்றே எழுபவன் கன்னித் தமிழ்மகன் ஆகுமடா - எங்கும் தமிழே முழங்குமடா இனத்த வரெல்லாம் சிறையினில் வாடும் இழிநிலை தன்னைப் போக்கிடுவோம் நினைத்தவ ரெல்லாம் அரியணை ஏறும் நிலையினை இனிமேல் மாற்றிடுவோம் - எங்கும் தமிழே முழங்குமடா குடிவதைத் தாளும் கொடுங்கோ லாட்சியைக் குவலயம் ஏற்றிட மறுக்குமடா அடிதடி யாலே இயங்கும் அரசுகள் அன்பின் வேர்களை அறுக்குமடா - எங்கும் தமிழே முழங்குமடா அறம்பொரு ளின்பத் திறந்தெரிந் தோரின் அறிவுரை ஏற்பதே நாடாகும் வரும்பொரு ளுரைக்கும் வகையறியாதார் வழியினில் சென்றால் காடாகும்
|