காந்தியடிகள் பிறந்த மண்ணில் நடந்த கொடுமை PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 15 மே 2014 15:22

இந்தியாவின் செல்வ வளம் மிக்க மாநிலங்களில் ஒன்றாகத் திகழும் குசராத் மாநிலத்தின் முதலமைச்சர் மோடி அங்கு ஏற்பட்ட மதக்கலவரங்களை சமயச் சார்பற்ற வன்முறை என்று வர்ணித்தார். மேலும் 72 மணி நேரத்தில் அந்தக் கலவரங்களை ஒடுக்கியதாகவும் மார்தட்டிக் கொண்டார். ஆனால் அந்த 72 மணி நேரத்தில் 700க்கு மேற்பட்ட மக்கள் உயிர்களை இழந்தார்கள். இவர் கதையே இது என்று சொன்னால் இவரது கட்சியைச் சேர்ந்த மற்றவர்களின் நிலை எப்படி? மாநில அரசே முன்நின்று நடத்திய அட்டூழியங்களைக் கண்ட பிறகு கூட மத்திய உள்துறை அமைச்சரான அத்வானி குசராத்தில் உள்ள தனது தோழர்களைக் கண்டிக்கவில்லை.

குசராத்தில் எண்ணற்ற மசூதிகளும், தர்காக்களும், சமாதிகளும் ஆகியவை திட்டமிட்டு அழிக்கப்பட்டன. குறிப்பாக அகமதாபாத் நகர் போலீஸ் ஆணையாளர் அலுவலகத்திற்கு எதிரில் இருந்த உருதுக் கவிஞர் வாலி குசராத்தியின் சமாதி அடியோடு இடித்து தகர்க்கப்பட்டது. அது மட்டுமல்ல - அரசு பொதுத்துறையினர் உடனடியாக அங்கு வந்து இடிபாடுகளை எல்லாம் அகற்றி அந்த இடத்தில் தார்ச் சாலை அமைத்து விட்டனர். 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உருதுக் கவிஞரின் சமாதி இவ்வாறு போலீஸ் ஆணையாளரின் அலுவலகத்திற்கு முன்னாலேயே நாசப்படுத்தப்பட்ட போது அதைத் தடுக்கக் காவல்துறையைச் சேர்ந்த யாரும் முன்வரவில்லை.

முசுலிம்களின் கடைகளைப் புறக்கணிக்க வேண்டும் என வேண்டிக்கொள்ளும் துண்டு அறிக்கைகள் குசராத் மாநிலத்தின் பல பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளன. முசுலீம்களுக்கு எதிராகப் பொருளாதார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறும் முயற்சிகளும் புதிதல்ல. ஆனாலும் கோத்ரா இரயில் எரிப்பு நிகழ்ச்சிக்குப் பல காலத்திற்கு முன்னாலேயே இத்தகைய வெறுப்பூட்டும் முயற்சிகள் நடந்து வந்திருக்கின்றன. முசுலீம்களின் கடைகள் அல்லது முசுலீம்கள் பங்குதாரராக உள்ள கடைகள் திட்டமிட்டு சூறையாடப்பட்டிருக்கின்றன. இது எவ்வாறு நடந்தது? குசராத்தின் முக்கிய குசராத்தி செய்தி ஏடு ஒன்றில் பல மாதங்களுக்கு முன்னால் ஒரு பட்டியல் வெளியிடப்பட்டது. அகமதாபாத் நகரில் முசுலீம்களுக்குச் சொந்தமான உணவு விடுதிகள் அந்தப் பட்டியலில் குறிக்கப்பட்டிருந்தன. இப்போது அந்தப் பட்டியலில் உள்ள அனைத்து உணவு விடுதிகளுமே எரிக்கப்பட்டு விட்டன.

மத ரீதியான படுகொலைகள் நடைபெறும் போது சம்பந்தப்பட்ட அரசுகள் கண்டும் காணாமல் இருப்பது என்பது இந்தியாவில் புதிதல்ல.

1984ஆம் ஆண்டு டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிரான படுகொலைகள் நடைபெற்ற பொழுதும் 1992ஆம் ஆண்டு மும்பையில் முசுலீம்களுக்கு எதிரான படுகொலைகள் நடைபெற்ற போதும் அரசுகள் வாளாவிருந்தன. டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிரான படுகொலையைக் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் நடத்தினார்கள் எனக் குற்றம்சாட்டி மும்பாயில் முசுலீம்களுக்கு எதிராகத் தாங்கள் நடத்திய படுகொலைக்குச் சங்கப்பரிவாரங்கள் நியாயம் கற்பிக்க முயலுகின்றன.

முன்னாள் குடியரசுத் தலைவர் வெளியிட்ட உண்மை

முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் மாணவர் சமஸ்கிருதி என்னும் இதழுக்கு அளித்த பேட்டியில் பின்வருமாறு குற்றம் சாட்டினார்.

"குசராத் வன்முறையைத் தடுக்க அப்போதைய பிரதமர் வாஜ்பாய் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. கோத்ரா இரயில் எரிப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு ஏற்பட்ட கலவரத்தைத் தடுக்கும்படி பிரதமர் வாஜ்பாய்க்குப் பல முறை கடிதம் எழுதினேன். நேரில் அழைத்தும் பேசினேன். கலவரத்தை ஒடுக்க உடனடியாக இராணுவத்தை அனுப்பும்படி கூறினேன். அதன்படி இராணுவத்தை அனுப்பினார்கள். கலவரத்தில் ஈடுபடுவர்களைக் கண்டதும் சுடுவதற்கு உத்தரவிடவில்லை. அந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தால் பல படுகொலைகள் தடுக்கப்பட்டிருக்கும். தொடர்ந்து வன்முறைகள் நடந்திருக்காது. குசராத் கலவரத்தின் பின்னணியில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சதி இருந்தது.'

குடியரசுத் தலைவர் பதவி வகித்த ஒருவர் மத்திய-மாநில அரசுகளின் மீது பகிரங்கமாக இத்தகைய குற்றச்சாட்டைக் கூறுவது இது தான் முதல் முறையாகும். அவரின் இந்தப் பேட்டி இந்தியாவெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிரதமர் வாஜ்பாயோ உள்துறை அமைச்சர் அத்வானியோ குசராத் முதலமைச்சர் மோடியோ அல்லது சங்கப் பரிவாரங்களைச் சேர்ந்த வேறு யாருமோ கே.ஆர்.நாராயணனின் குற்றச்சாட்டுக்கு எத்தகைய பதிலும் கூற முன்வரவில்லை.

ஆளுநர் குற்றச்சாட்டு

குசராத் மாநிலத்தில் கோத்ரா கலவரம் நடைபெற்ற போது ஆளுநர் பதவி வகித்த சுந்தர்சிங் பண்டாரி, ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தைச் சேர்ந்த பழம் பெரும் தலைவர் ஆவார். பதவியிலிருந்து விலகியிருக்கிற அவரும் மோடி அரசின் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்திருக்கிறார். 2000 பேருக்கு மேல் படுகொலை செய்யப்பட்ட குசராத் கலவரங்களைக் கையாளுவதில் மோடி அரசின் தோல்வி குறித்து நீதி விசாரணை தேவை என அவர் பகிரங்கமாகக் கூறினார். மேலும் அவர் கூறுகையில் கலவரம் மூண்டபோது அதை அடக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு 48 மணி நேரம் தாமதமாயிற்று. இதன் விளைவாகக் கலவரம் வேகமாகப் பரவியது. இது பற்றிய விசாரணைக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டுமென்றும் அவர் கூறினார்.

காவல்துறைத் தலைவர் குற்றச்சாட்டு

குசராத் மதக் கலவரம் குறித்து விசாரணை நடத்துவதற்கு மோடி அரசு நானாவதி ஆணையம் ஒன்றினை அமைத்துள்ளது. இந்த ஆணையத்தின் முன் குசராத் காவல் துறைத் தலைமை இயக்குநர் cகுமார் எப்படி சாட்சியம் அளிக்க வேண்டும் என்பது குறித்து அம்மாநில உள்துறை செயலாளரும் அரசு வழக்கறிஞரும் அவரை எப்படியெல்லாம் மிரட்டினார்கள் என்பதை இரகசியமாகப் பதிவு செய்து அதைத் தெகல்கா மூலம் அம்பலப்படுத்தியுள்ளார். அந்த அறிக்கையை மறுக்கும்படி அவரிடம் கூறப்பட்டது. ஆனால் அவர் ஆணையத்தின் முன்பாக தனக்குத் தெரிந்த உண்மைகள் யாவற்றையும் தெரிவித்ததனால் அவர் மீது குசராத் அரசு மிகுந்த கோபம் கொண்டது.

கலவரங்களின் போது உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்தவர்கள் அல்லது அதற்குத் துணை போன காவல்துறை அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டன. தாங்கள் தாக்கப்பட்டதைப் பற்றி அளித்த புகார்களைத் திரும்பப் பெறும்படி முசுலீம்களை வி.எச்.பி., பஜ்ரங்தள் தொண்டர்கள் ஆகியோர் அச்சுறுத்தியதாகவும் cகுமார் தெரிவித்திருந்தார். இதற்காக cகுமாரைவிட பணி மூப்பு குறைந்த மூன்று அதிகாரிகளுக்குக் காவல் துறைத் தலைவர் பதவி உயர்வு அளித்து குசராத் அரசு ஆணையிட்டது.

சர்வதேச அமைப்புகள் கண்டனம்

குசராத் வன்முறை வெறியாட்டங்களுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை சர்வதேச மன்னிப்பு சபை (Amnesty International) கேட்டுக் கொண்டுள்ளது.

குசராத் இனப்படுகொலை தொடர்பாக ஆய்வை மேற்கொண்ட அந்த அமைப்பு ‘இந்தியா-நீதி பாதிக்கப்பட்டவர்கள் என்ற தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையில், குசராத் வன்முறை வெறியாட்டங்களுக்கு காரணமானவர்கள் மீது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குசராத்தில் மனித உரிமை மீறப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது... மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த வன்முறை வெறியாட்டங்களுக்குக் காரணமானவர்கள் இன்னும் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் அனைத்து குடிமக்களின் மனித உரிமைகள் காக்கப்படும் என்ற உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைக் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெண்களைக் கொன்று குவித்தவர்களும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர்களும் இதுவரை தண்டிக்கப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

குசராத் மாநில அரசு முசுலீம்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. பெண்கள் மத்தியில் இன்னும் பாதுகாப்பின்மை என்ற அச்சம் நிலவுகிறது. இதனைப் போக்க தற்போதைய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறை வெறியாட்டம் நடந்தபோது அதனைத் தடுக்க அப்போதைய மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு தவறி விட்டது. ஆட்சி, அதிகாரம் கையில் இருந்தும் இதனை அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நீதித் துறையில் நடந்த மோசடி, கேலிக் கூத்து

நரேந்திரமோடி தலைமையிலான குசராத் பா.ஜ.க. அரசுக்குக் கடுமையான கண்டனம் தெரிவிக்கும் வகையில், 14 பேர் உயிருடன் எரிக்கப்பட்ட பெஸ்ட் பேக்கரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 21 பேர்களை விடுவித்து உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பினை உச்சநீதி மன்றம் ரத்து செய்ததுடன், இந்த வழக்கு மகாராஷ்டிர மாநில நீதிமன்றத்தில் புதிதாக மறுபடியும் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காத வண்ணம் இந்த வழக்கு விசாரணையை மிகவும் மோசமாக நடத்திய மாநில அரசைக் கடுமையாகக் குறை கூறியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட 21 பேரும் விடுதலை செய்யப்பட்டது, உண்மையைக் கேலி செய்வதே தவிர வேறல்ல என்றும், நீதி நடைமுறையில் நடத்தப்பட்ட ஒரு மோசடி என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள் துரைசாமி ராஜு, அர்ஜித் பசயத் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்பில் தலையிட வேண்டிய அவசியத்தைப் பற்றி கூறும் போது "சட்டத்தின் பார்வையில் இது விடுதலை செய்யப்பட்டதாக ஆகாது, தீர்ப்பு என்று அழைக்கப்படும் இவைகளுக்கு எந்தவித புனிதத்தையும் அளிக்க இயலாது' என்று கூறியுள்ளது. 2003 சூன் 27 அன்று வதோதரா விரைவு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து அளித்த தீர்ப்பையும், உயர்நீதிமன்றம் 2003 டிசம்பர் 16 அன்று அதனை உறுதிப்படுத்தி வழங்கிய தீர்ப்பையும் எதிர்த்து, மாநில அரசாலும், ஜஹீரா ஷேக்காலும் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களின் மீது உச்சநீதிமன்ற பெஞ்ச் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.

காந்தி பிறந்த மண்ணில் நடந்த கொடுமை

ஆழ்ந்த மனவேதனையையும், அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ள இரு நீதியரசர்களும் பின்வருமாறு கூறியுள்ளனர். "இத்தகயை மோசமான படுகொலைகள் காந்தியடிகள் பிறந்த மண்ணில் நடந்தேறியுள்ளதைக் காணும் போது, அவருக்கு மிகவும் பிரியமான கொள்கையில் இருந்து விலகிச் செல்லும் சிலர் எந்தவிதக் கோட்பாடும் அற்றவர்களாகவே ஆகி விட்டார்களோ என்ற தவிர்க்க இயலாத கேள்வியை எழுப்புகிறது. ஏதுமறியாத, உதவியற்ற குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பெரும் அளவு எண்ணிக்கை கொண்ட மக்கள் இவ்வாறு கொடுமையான முறையில கொல்லப்படும் போது, அது மொத்த சமூகத்துக்குமே களங்கத்தை ஏற்படுத்துகிறது. இப்படுகொலைகளைச் செய்த மத வெறியர்கள் தீவிரவாதிகளை விட மோசமானவர்கள். அயல்நாட்டுப் பகைவரை விட ஆபத்து நிறைந்தவர்கள்.'

"உதவியற்ற பெண்களும், ஏதுமறியாத குழந்தைகளும் உயிருடன் இவ்வாறு எரிக்கப்பட்டதைக் கேட்கும்போது, மனித இனம் போற்றி வளர்க்கும் மனிதத்தன்மை, மனித நேயம் ஆகியவற்றின் கடைசித் துளிகள் கூட வறண்டு போய்விட்டதாகவே தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தது எரிக்கப்பட்டவர்களின் குற்றமா?' என்று நீதிபதி பசாயத் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

குசராத் காவல்துறைத் தலைவர் மேற்பார்வையில் குசராத் காவல்துறை இந்த வழக்கினை மறுபடியும் புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர். "பாதிக்கப்பட்டவர்களும், சாட்சிகளுடன் கலந்தாலோசித்து குசராத் அரசு நியமிக்கும் ஒரு புதிய அரசு வழக்கறிஞர் இந்த வழக்கைப் புதிதாக அன்றாட அடிப்படையில் நடத்த வேண்டும்'' என்றும் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

"உயர்நீதி மன்றத்தின் அணுகுமுறை மிகவும் பலவீனமானது. ஒருதலைச் சார்பானது'' என்று குறிப்பிட்ட நீதியரசர்கள் "உயர்நீதிமன்றத் தீர்ப்பு நியாய உணர்வுடன் மேற்கொள்ளப்பட்டது அல்ல' என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

"நீதிமன்றத்திற்கு உண்மையைத் தெரிவிக்கும் கடமை கொண்ட அரசு வழக்குரைஞர், குற்றம் சாட்டப்பட்டவர்களின் பாதுகாப்பிற்காக வாதாடும் வழக்குரைஞர் போல் செயல்பட்டதற்கு பெஞ்ச் கடுமையான கண்டனம் தெரிவித்தது. நீதிமன்றமோ, இத்தகைய தவறான செயல்களை எல்லாம் அமைதியுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு, நீதிக்கு மாசு ஏற்படுத்தப்படுவதைப் பற்றி கவலைப்படாமல் இருந்துள்ளது' என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நவீன நீரோ மன்னர்கள்

இந்த வழக்கில் மோடி அரசின் செயல்பாடு குறித்து கருத்துத் தெரிவித்த நீதிபதிகள் "விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்க்க மாநில அரசு எந்தவிதத் தீவிர அணுகுமுறையையும் மேற்கொள்ளவில்லை' என்று குறிப்பிட்டுள்ளனர்.

"குற்றம் சாட்டப்பட்டவர்கள் உண்மையிலேயே குற்றவாளிகளா இல்லையா என்பதை நியாயமான பாரபட்சமற்ற விசாரணையின் மூலம் கண்டுபிடித்திருக்கலாம். பெஸ்ட் பேக்கரியும், ஏதுமறியாத குழந்தைகளும், உதவியற்ற பெண்களும் எரிந்து கொண்டிருக்கும் போது நவீன நீரோக்கள் தங்களது பார்வையை வேறுபக்கம் திருப்பிக் கொண்டது மட்டுமின்றி, குற்றமிழைத்தவர்களை எப்படிப் பாதுகாத்துக் காப்பாற்றுவது என்று பேசிக் கொண்டிருந்தார்கள் போலும்'' என்று கூறியுள்ளனர்.

குற்றவியல் வழக்கு விசாரணைகள் போலித் தனமானவையாகவோ அல்லது நிழல் யுத்தமாகவோ, அல்லது தீர்மானிக்கப்பட்ட விசாரணைகளாகவோ ஆக்கப்பட்டு விடக்கூடாது. எவ்வித அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கும் செயல் திட்டங்களுக்கும் இடம் அளிக்காமல், குற்றவியல் நீதி நிருவாக நடைமுறை தூய்மை நிறைந்ததாக வைத்துக் கொள்ளப்பட வேண்டும். அரசமைப்பு சட்டத்தில் எடுத்துக் காட்டியிருப்பது போன்ற வேறுபாடு கொண்ட அளவு கோல்கள், தரம் ஆகியவற்றுக்கு இடம் அளிக்காமல் இருக்க வேண்டும்' என்று நீதியரசர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மோடிக்கு முட்டுக் கொடுப்பது மன்னிக்க முடியாத குற்றம். குசராத் கலவரம் குறித்து உச்சநீதிமன்றம், தேசிய மனித உரிமைக்கழகம், ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் போன்ற அமைப்புகளும், முன்னாள் குடியரசுத் தலைவர், முன்னாள் ஆளுநர், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி போன்றவர்களும் கண்டனம் தெரிவித்த பிறகும் பதவி விலக மறுக்கும் முதலமைச்சர் மோடிக்கு விசா தர அமெரிக்கா மறுத்த பிறகும் அவருக்காக இந்தியப் பிரதமர் பரிந்து பேசிய போது "தென் செய்தி' இதழில் (1.4.05) வெளியான கட்டுரை வருமாறு.

குசராத் கலவரத்தின் ஒரு முக்கிய நிகழ்ச்சியான "பெஸ்ட் பேக்கரி'' எரிப்பு குறித்து விசாரித்த உச்சநீதிமன்றம் மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி மோடி அரசைச் சாடியது.

"பெஸ்ட் பேக்கரி குண்டர்களால் எரிக்கப்பட்டு ஒரு பாவமும் அறியாத அப்பாவிக் குழந்தைகளும், பெண்களும் கருகி மாண்ட போது நவீன நீரோக்கள் பாராமுகமாக இருந்தனர். குற்றம் புரிந்த கொடியவர்களைப் பாதுகாப்பது குறித்துச் சிந்தித்தனர்'' என்று கூறியது.

இத்துடன் நிற்கவில்லை. கீழ்நீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றால் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டவர்களை மீண்டும் கைது செய்து விசாரணை நடத்தும்படி ஆணையிட்டது. வழக்கையும் வேறு மாநிலத்திற்கு மாற்றியது.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வெளியான மறுகணமே மோடி பதவி விலகியிருக்க வேண்டும். ஆனால் மானமற்ற மோடி பதவி விலகவில்லை. பா.ஜ.க. தலைமையாவது அவரைப் பதவி நீக்கியிருக்க வேண்டும். ஆனால் எதுவும் நடைபெறவில்லை.

மீண்டும் விசாரணை

ஆகஸ்டு 17ஆம் தேதி உச்சநீதி மன்றம் அளித்த மற்றொரு தீர்ப்பும் முக்கியமானதாகும். குசராத் கலவரங்களையொட்டி பதிவு செய்யப்பட்ட 4256 வழக்குகளில் பாதிக்கு மேற்பட்ட வழக்குகளை தொடர்வதற்கு எவ்வித ஆதாரமும் இல்லையென்று - அந்த வழக்குகள் குற்றவியல் துறையும் கீழ் நீதிமன்றமும் தள்ளுபடி செய்ததை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. இவ்வாறு செய்யப்பட்டதற்கு குசராத் அரசாங்க நிர்வாக இயந்திரமே முழுப் பொறுப்பாகும் என்றும் மீண்டும் அத்தனை வழக்குகளையும் மறு புலன் விசாரணை செய்யப்பட வேண்டும் என்றும் அது தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பு அரசியல்வாதிகள் எல்லோரையும் அதிர வைப்பதாகும். பாரதிய ஜனதா கட்சி, விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தள் ஆகியவற்றைச் சேர்ந்த தலைவர்களும் தொண்டர்களும் இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்கள். கொலை, கற்பழிப்பு, தீவைத்தல் போன்ற மோசமான குற்றங்களைச் செய்தவர்களாக இவர்கள் இருந்த போதிலும் இவர்களை குசராத் அரசு பாதுகாத்தது. ஆனால் அந்த வழக்குகள் அனைத்தும் மீண்டும் புலனாய்வு செய்யப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அவர்களை நடுங்க வைத்துள்ளது. குசராத் மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை மீண்டும் நிலைநிறுத்தும் வேலையை உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்புகளின் மூலம் தொடங்கியுள்ளது.

(2006ஆம் ஆண்டு பழ. நெடுமாறன் எழுதிய "உருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்து பாசிசமும்' என்ற நூலிலிருந்து சில பகுதிகள்)

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.