ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் சார்பில் இலங்கையில் நிகழ்ந்த இனப் படுகொலைகள், போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவை குறித்து சர்வதேசப் பொது விசாரணை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் கூடுவதற்கு முன்னாலும், கூடிய போதும் அதில் கலந்துகொண்ட பல நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடுமைகளை ஆதாரப்பூர்வமாக விளக்கிச் சொல்லியும், மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வைப்பதற்குப் பெரும்பாடுபட்ட புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புகளை ஒடுக்கவேண்டுமென இலங்கை அரசு முடிவு செய்தது. இதன்மூலம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான குரல் உலக நாடுகளில் ஒலிப்பதை அறவே தடுப்பதற்குத் திட்டமிட்டது. அதற்கிணங்க, சுவிட்சர்லாந்து, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, பிரான்சு, நார்வே, சுவீடன், நெதர்லாந்து, பெல்ஜியம், டென்மார்க், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புகளையும், இந்த அமைப்புகளின் பல்வேறு பொறுப்புகளை வகிக்கும் 424 தமிழர்களையும், தனது நாட்டிற்கு வரவிடாமல் இலங்கை தடை செய்துள்ளது. இந்த அமைப்புகளுக்கும், அதன் பொறுப்பாளர் களுக்கும் தடை விதிக்கும்படி உலக நாடுகளுக்கு இலங்கை அரசு வேண்டு கோள் விடுத்தது. உலக நாடுகளில் வாழும் தமிழர்களை நாடற்றவர்களாக்கி, துன்பக் கேணியில் வீழ்த்துவதே இலங்கை அரசின் நோக்கமாகும்.
இந்தியாவைத் தவிர உலகில் எந்த நாடும் இந்த வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கவில்லை. இந்தியாவைத் தவிர உலக நாடுகள் அனைத்தும் இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டன. இனப் படுகொலை குற்றச்சாட்டுக்கு ஆளாகி, சர்வதேச விசாரணையை எதிர்நோக்கி இருக்கும் இலங்கைக்கு இத்தகைய தகுதி இல்லை என்று அமெரிக்கா உட்படப் பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.
ஆனால், இந்திய அரசு இந்தக் கோரிக்கையை உடனே ஏற்று இந்த அமைப்புகளுக்கும், அதன் பொறுப்பாளர்களுக்கும் தடை விதித்துள்ளது.
கடந்த 65 ஆண்டுக் காலமாக சிங்கள அரசு நடத்திவரும் இனப்படுகொலை வன்கொடுமைக்கும், பாலியல் கொடுமைக்கும், சித்ரவதைகளுக்கும் ஆளாகி, தங்கள் குடும்பத்தில் ஒருவரையோ, இருவரையோ இழந்து சொந்த மண்ணில் வாழ முடியாமல் அகதிகளாக வெளியேறி, உலக நாடுகளில் தஞ்சம் புகுந்து அந்தந்த நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு வாழவேண்டிய அவல நிலைமைக்கு ஈழத் தமிழர்கள் ஆளாகி உள்ளார்கள்.
மனித உரிமையை மதித்துப் போற்றுகிற பல நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு தங்கள் நாட்டின் குடியுரிமையை வழங்கி உள்ளன. பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு ஒருபோதும் குடியுரிமை கிடைக்காது என்பது மட்டுமல்ல, அந்நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பார்கள்.
உலக நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் எந்த வேலை ஆனாலும் அதை செய்து, தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள். அதேவேளையில் தங்களுடைய மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றைப் பேணிப் பாதுகாக்கத் தமிழ் அமைப்புகளை நிறுவி, அதன்மூலம் தங்களுடைய குழந்தைகளுக்கு அவற்றைக் கற்றுக்கொடுத்து சிறந்த தமிழர்களாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்தந்த நாடுகளில் உள்ள அரசுகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரின் ஆதரவைத் திரட்டும் பணியினைச் செய்வதற்காக இந்த அமைப்புகளை ஏற்படுத்தியிருக்கிறார்களே தவிர, பயங்கரவாதச் செயல்களைச் செய்வதற்கு அல்ல அல்லவே அல்ல.
இந்த அமைப்புகளில் அளப்பரிய தியாக உணர்வும், மானுட நேயமும் நிறைந்த சிறந்த கல்வியாளர்கள், கலைஞர்கள், இசைவாணர்கள் ஆகியோர் அங்கம் வகிக்கிறார்கள். இவர்கள் தங்கள் மக்களுக்கு நல்வழிகாட்டி வருகிறார்கள்.
இலங்கை அரசின் தீய நோக்கத்திற்கு துணை நிற்பதையே தனது கடமையாக இந்திய அரசு கொண்டிருக்கிறது. 2009-ஆம் ஆண்டில் இலங்கையில் ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழர்களை பதறபதறப் படுகொலை செய்யப்பட்டதில் இலங்கை அரசுக்கு மட்டுமல்ல, இந்திய அரசுக்கும் பெரும் பங்கு உண்டு.
ஈழத் தமிழர்களை மட்டுமல்ல, இந்திய வம்சாவழித் தமிழர்களைப் பலிகொடுத்து சிங்கள அரசைத் திருப்தி செய்ய இந்திய அரசு தொடர்ந்து முயல்கிறது. இலங்கையில் குடியேறி ஐந்து தலைமுறைகளுக்கு மேல் வாழ்ந்து, தங்களுடைய உழைப்பினால் இரப்பர், தேயிலைத் தோட்டங்களை உருவாக்கிய இந்திய வம்சாவழித் தமிழர்களில் ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்டோரை இலங்கை அரசு விரட்டியடித்த போது அதற்கு சம்மதம் தெரிவித்தது இந்திய அரசு.
கச்சத் தீவை இலங்கைக்குத் தாரைவார்த்து அதன்மூலம் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து வேட்டையாடவும், 800க்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகொலை செய்யப்படவும் காரணமாக இருப்பது இந்திய அரசே.
இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கிற ஈழத் தமிழ் அகதிகளை வாழ்வதற்கு தகுதியற்ற இடங்களில் குடியேற்றி, பட்டினியும், நோயும் அவர்களை வாட்டிவதைக்கக் காரணமாக இருப்பது இந்திய அரசே. உலக நாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ள அகதிகளுக்கு, ஐ.நா. அகதிகள் ஆணையம் எல்லாவிதமான உதவிகளையும் செய்து வருகிறது. பல இலட்சம் பாலஸ்தீன அகதிகள் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஐ.நா. அகதிகள் ஆணையத்தினால் பராமரிக்கப்படுகிறார்கள். இன்னும் பல நாடுகளின் அகதிகள் இவ்வாறே நன்கு கவனிக்கப்படுகிறார்கள். ஆனால், இந்திய அரசு ஈழத் தமிழ் அகதிகளுக்கு போதுமான உதவி செய்யாததோடு, அவர்களை ஐ.நா. அகதிகள் ஆணையப் பொறுப்பில் ஒப்படைக்க பிடிவாதமாக மறுக்கிறது.
இந்தியாவில் திபெத் அகதிகள், வங்க அகதிகள், பர்மா அகதிகள் போன்ற பல நாடுகளைச் சோந்த அகதிகள் வாழ்கிறார்கள். அவர்களையெல்லாம் நல்ல முறையில் கவனித்துக்கொள்கிற இந்திய அரசு, ஈழத் தமிழர்களை மட்டும் ஓரவஞ்சனையுடன் நடத்துகிறது.
இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள பல நாட்டு அகதிகளில் யாருக்கும் செய்யாத கொடுமையை ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய அரசு இழைக்கிறது. அவர்களில் சிலரை பொய்யான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்து, நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பாமல், பல ஆண்டுக் காலமாக தொடர்ந்து சிறப்பு முகாம்கள் என்ற கொடுஞ் சிறைகளில் அடைத்துத் துன்புறுத்துகிறது.
சிங்கள அரசு கேட்டாலும் கேட்காவிட்டாலும், அதனுடைய பலி பீடத்தில் தமிழர்களைக் காவு கொடுக்க இந்திய அரசு என்றும் தயாராக உள்ளது. - நன்றி : தினமணி |