இலங்கையில் நடந்த போரில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 5–ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக பழ.நெடுமாறன் நிருபர்களிடம் கூறுகையில், 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் 1 இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவும் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த படுகொலைச் சம்பவத்தை உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் ஒருபோதும் மறக்கப்போவதில்லை. இது அனைத்து தமிழர்களின் உள்ளத்திலும் சினத்தீயாகப் பற்றி எரிகிறது. இந்த படுகொலைக்கு காரணமானவர்களை சுட்டெரிக்கும் வரை இந்த சினத்தீ ஓயாது.
பொதுவாக்கெடுப்பு
5 ஆண்டு கழித்தும் படுகொலை சம்பவத்தை நினைத்து பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது. இந்த படுகொலைக்கு காரணமானவர்கள் மீது பொது விசாரணை நடத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். மேலும் இலங்கையில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட தமிழர்கள்மீண்டும் அங்கு குடியமர்த்த வேண்டும். அவர்களுக்கு புதுவாழ்வை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மேலும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்’’என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் அயனாவரம் முருகேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலத் துணை செயலாளர் மகேந்திரன், மாவட்ட செயலாளர் திருஞானம், பொன்.வைத்தியநாதன், தாளாண்மை உழவர் இயக்கம் திருநாவுக்கரசு, நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை, திரைப்பட இயக்குனர் கவுதமன், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் இலட்சுமணன், நிர்வாகிகள் துரை.மதிவாணன், சேவையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தீர்மானங்கள்
பின்னர் நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
இலங்கையில் இருந்து அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழ் இளைஞர்களை போராளிகள் என்ற பொய்யான குற்றம் சாட்டி சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் கொடுமையான சிறைகளில் அடைத்துக் கொடுமைப்படுத்துவதை கண்டிப்பதுடன், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஈழத்தமிழ் அகதிகளை ஐ.நா.அகதிகள் ஆணையத்தில் ஒப்படைக்க இந்திய அரசு பிடிவாதமாக மறுத்துவருகிறது. இதனை வன்மையாக கண்டிப்பது.
மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். ஈழத்தமிழ் மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் படிப்புகளில் 50 இடங்களை ஒதுக்கி ஆணைப்பிறப்பித்தார். அவரை பின்பற்றி முதல்–அமைச்சர் ஜெயலலிதாவும் அத்தகையக ஆணையை பிறப்பிக்க வலியுறுத்துவது. கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்ததன் மூலம் தமிழக மீனவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். எனவே கச்சத்தீவை மீட்பதன் மூலமே தமிழக மீனவர்களின் உரிமைகளையும், உயிர்களையும் காக்க முடியும். எனவே புதிய பா.ஜ.க. அரசு இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. |