உலகத் தமிழர் பேரமைப்பு கர்நாடக கிளையின் சார்பாக 22-5-14 அன்று ராபர்ட் கால்டுவெல்லின் 200ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேராசிரியர் சி. இராமமூர்த்தி தலைமை தாங்கினார். அருட்தந்தை ஜே. ஆரோக்கியநாதன், மு. மீனாட்சிசுந்தரம் உட்பட பலர் உரையாற்றினார்கள். கால்டுவெல்லின் சிறப்புக் குறித்து பழ.நெடுமாறன் ஆற்றிய உரை கீழே தரப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டப் பிறகு கல்கத்தாவில் ராயல் ஆசியக் கழகம் என்ற பெயரில் ஒரு அமைப்பினை ஆங்கிலேயர் நிறுவி இந்திய மொழிகள் பண்பாடு ஆகியவற்றைக் குறித்து ஆராய்ந்தனர். அவர்களில் சர். வில்லியம் ஜோன்ஸ் என்பவர் முக்கியமானவர்.
சமஸ்கிருத மொழி குறித்து இவரும் மற்றும் சில ஆங்கிலேயர்களும் ஆராய்ந்தனர். ஒருபோதும் பேச்சு மொழியாக இல்லாமல் புரோகித மொழியாக மட்டுமே இருந்த சமஸ்கிருதத்தை உலகளவில் முக்கியத்துவம் பெறச் செய்ததில் இவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு.
வில்லியம் ஜோன்சும் ஐரோப்பிய புதுமை உணர்வூட்டுகிற சிந்தனையாளர்களும் அக்கறைக் காட்டியது பழங்கால சமஸ்கிருதப் பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றின்மீதே அன்றி சமகால இந்தியா, இந்திய சமுதாயம் ஆகியவற்றின் மீதல்ல. பகவத் கீதை, சாகுந்தலம், மனுஸ்மிருதி, கீதகோவிந்தம் போன்ற சில சமஸ்கிருத நூல்களை மட்டுமே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தனர். அவற்றைத்தான் அவர் சமஸ்கிருதப் பண்பாடு, இந்தியப் பண்பாடு என வரையறுத்தார். அவர் காலத்திற்குப் பிறகு மாக்ஸ்முல்லர் போன்றவர்களின் ஆய்வுகளுக்கு முன்னோடியாக இவை அமைந்தன.
மாக்ஸ்முல்லர் வேதங்களை இந்திய ஆவணங்கள் என்று கூறுவதை இந்தோ - ஐரோப்பிய ஆவணங்கள் என்று கூறுவதுதான் சரியானது என்று கருதினார். வேதங்கள் ஆரிய இலக்கியங்கள் என்றும் அவ்வேதத்திற்குரியோர் ஆரிய இனத்தவர் என்றும் கூறப்பட்டது.
அதுமட்டுமல்ல இந்தியாவிலுள்ள சகல மொழிகளுக்கும் சமஸ்கிருதமே தாய் என்ற கருத்தோட்டமும் மேற்கண்டவர்களால் பரப்பப்பட்டது.
இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டிற்கு கிறித்துவ மதத்தைப் பரப்புவதற்காக வந்த இத்தாலியில் இருந்து வந்த பெஸ்கி என்ற வீரமாமுனிவர், இங்கிலாந்தில் இருந்து வந்திருந்த ஜி.யு.போப், அயர்லாந்திலிருந்து வந்திருந்த இராபர்ட் கால்டுவெல் ஆகிய துறவிகள், சமயப் பரப்புரைக்காக தமிழைக் கற்றபோது அதனுடைய சிறப்பை உணர்ந்தனர். சமஸ்கிருத மொழியின் துணையில்லாமலே தமிழ் தனித்து இயங்க வல்லது என்பதை அறிந்து வியந்தனர்.
வீரமாமுனிவர் தமிழைக் கற்றதோடு அதில் புலமையும் பெற்றார். தேம்பாவணி என்னும் தீஞ்சுவை காவியத்தைப் படைத்தார். தமிழில் முதன் முதலாக அகராதி ஒன்றைப் படைத்து தமிழ் அகராதித் துறையின் தந்தை என போற்றப்பட்டார். அதுமட்டுமல்ல தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தையும் மேற்கொண்டார்.
ஜி.யு.போப் திருக்குறள், திருவாசகம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இதன் மூலம் திருக்குறளின் பெருமை உலகமெல்லாம் பரவியது. அத்துடன் தமிழின் சிறப்பையும் உலகம் உணர்ந்தது.
இராபர்ட் கால்டுவெல், வடமொழியின் துணையில்லாமல் தமிழ் தனித்து இயங்க வல்லமை படைத்தமொழி என நிறுவினார். திராவிட மொழிகளுக்கு இடையே உள்ள. உறவையும் தொடர்பையும் விளக்குவதற்காக திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற அரிய நூலைப் படைத்தளித்தார்.
1814ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி அயர்லாந்தில் பிறந்த இராபர்ட் கால்டுவெல் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படித்தபோது, மொழியியல் அறிஞரான பேராசிரியர் டேனியல் கெயிட்டி ஸ்டான்போர்டு என்பவரிடம் மொழியியலையும் ஒப்பிலக்கணத்தையும் கற்றுக்கொண்டார். அது அவருக்கு பிற்காலத்தில் உதவிற்று.
தமிழகத்தில் சமயப் பரப்புரையை மேற்கொள்வதற்காக கப்பலில் புறப்பட்டு வந்தபோது நடுவழியில் விபத்து ஏற்பட்டு அக்கப்பல் மூழ்கியது. அதிலிருந்து தப்பிய 6 பேரில் ஒருவராக கால்டுவெல் திகழ்ந்தார். தமிழுக்குத் தொண்டு செய்வதற்காகவே அவர் உயிர் தப்பினார் எனக் கருதவேண்டும்.
தமிழ்நாட்டு மண்ணையும் மக்களையும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சென்னையிலிருந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள இடையன்குடி வரை அவர் நடந்தே சென்றார். வழிநெடுக இருந்த மக்களின் நடை, உடை பாவனை மற்றும் உணர்வுகள், வாழ்க்கை முறை போன்ற எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு இப்பயணத்தில் கிடைத்தது.
நாகரீக வசதிகள் எதுவும் இல்லாத சிற்றூராக இடையன்குடி திகழ்ந்தது. சிறிதுசிறிதாக அவ்வூரையும் மக்களையும் சீர்திருத்தினார். தேவாலயம் ஒன்றை அந்த ஊரில் கட்டினார்.
தக்கத் தமிழ் புலவர்களிடம் மூன்றாண்டுகளில் தமிழையும் வடமொழியையும் கற்றுத் தேர்ந்தார். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை அவர் எழுதுவதற்கு துணையாக அறிஞர்கள் பலர் துணைநின்றனர். மலையாள மொழியை ஆராய்ந்த முனைவர் குந்தார்கர், கன்னடமொழியை ஆராய்ந்த முனைவர் கிட்டேல், தெலுங்கு மொழியை அறிஞர் பிரேவன் ஆகியோரின் ஆய்வுகள் அவருக்குப் பெரிதும் உதவின.
தனது நூலுக்கு திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற பெயரை அவர் ஏன் சூட்டினார் என்ற கேள்வி எழுகிறது. இந்நூலுக்குரிய முன்னுரையில் அவரே அதற்கான காரணத்தை விளக்கியிருக்கிறார். கி.பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரிலபட்டர் என்னும் சமஸ்கிருத அறிஞர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளைக் குறிப்பிடும் பொழுது ஆந்திர-திராவிட-பாசா என்று சொல்லியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது சமஸ்கிருத மொழி பேசுபவர்கள் தமிழையும் தெலுங்கையும் சுட்டிக்காட்ட பயன்படுத்திய "திராவிட பாசா' என்னும் சொல்லிலிருந்து திராவிடம் என்ற சொல்லை கால்டுவெல் பெற்றிருக்கிறார் என்பது இதன்மூலம் தெரிகிறது.
தமிழ் என்ற சொல்லுக்குச் சமமாக திராவிடம் என்ற சொல் பயன்பட்டு வந்திருப்பதையும் அவர் தனது முன்னுரையில் சுட்டிக்காட்டுகிறார்.
ஆனால் பேராசிரியர் ஜெயராமன் அவர்கள் "தென்னாட்டில் வாழ்ந்த பார்ப்பனர்களை திராவிடர் என வடமொழி பேசுவோர் அழைத்தார்கள்' என சான்றாதாரத்துடன் எடுத்துக்காட்டியுள்ளார். திருஞானசம்பந்தரை திராவிட சிசு என்றுதான் ஆதிசங்கரரும் பிறரும் அழைத்தார்கள் என்பதையும் அவர் எடுத்துக்காட்டியுள்ளார்.
இதுபோன்ற உண்மைகளை கால்டுவெல் அவர்கள் அறிந்துகொள்ளாத காரணத்தினால் திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். அதுபோல அவர் காலத்தில் தொல்காப்பியம் நூல்வடிவம் பெறவில்லை. ஆகவே அதை கால்டுவெல் அறிந்திருக்கவில்லை. அவர் அறிந்திருந்தால் திராவிடம் என்ற சொல்லுக்குப் பதில் தமிழி என்ற சொல்லையேப் பயன்படுத்தியிருப்பார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு மற்றும் உள்ள மொழிகளின் மூல மொழியை தமிழி என்று அழைப்பதுதான் பொருத்தமானதாக இருக்க முடியும்.
கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூல் இந்திய மொழிகளிலேயே முதன்மையானதாகும்.
திருநெல்வேலி மாவட்டத்தின் வரலாறு குறித்து கால்டுவெல் தீவிரமாக ஆராய்ந்துள்ளார். இம்முயற்சியில் அவருக்கு எட்வர்டு சார்ஜன்ட் என்பவர் துணையாக இருந்தார். கொற்கை காயல்பட்டினம் போன்றவற்றில் அகழ்வாராய்ச்சி நடத்தி பல உண்மைகளை வெளிக்கொணர்ந்தார். மீன் சின்னம் பொறிக்கப்பட்ட பாண்டியர் கால நாணயங்கள் மற்றும் மட்பாண்டங்கள் போன்றவை அவர் முயற்சியால் கண்டுபிடிக்கப்பட்டன.
திருநெல்வேலி சீமை சரித்திரம் என்ற பெயரில் வரலாற்று நூல் ஒன்றை எழுதினார். இதை முன்மாதிரியாகக் கொண்டுதான் ஆங்கிலேயர் ஆட்சி பல்வேறு மாவட்டங்களின் வரலாறுகளைத் தொகுத்து வெளியிடும் பணியினை செய்தது.
நற்கருணை தியானமாலை, கிறிஸ்தவமும் இந்துத்துவமும், நெல்லை சாணார்களின் வரலாறு போன்ற பல நூல்களை அவர் எழுதி வெளியிட்டார்.
50 ஆண்டு காலத்திற்கு மேலாக அவர் தமிழகத்தில் வாழ்ந்து தமிழ் மொழியைப் பற்றியும் தமிழகத்தின் வரலாறு குறித்தும் ஆய்வுகள் நடத்தி பல நூல்களை படைத்தார்.
தமிழுக்கு அணிசேர்த்தவர்களின் பட்டியலில் கால்டுவெல்லுக்கு சிறப்பு மிகுந்த ஒரு இடம் உண்டு. |