வாழ முடியாமல் சாகும் கோலார் தமிழர்கள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 01 ஆகஸ்ட் 2002 15:59

ஆசியாவிலேயே மிகப் பெரியதும் மிக ஆழமானதுமான தங்கச் சுரங்கம் கோலார் தங்கச் சுரங்கமே ஆகும். இந்தத் தங்கச் சுரங்கத்தில் வேலை பார்க்கத் துணிவோடு முன்வந்தவர்கள் தமிழர்களே ஆவார்கள். ஏறத்தாழ நான்கு தலைமுறைகளுக்கு முன்னால் இவர்கள் சுரங்கத் தொழிலில் ஈடுபட இங்கு வந்தார்கள். இவர்களில் மிகப்பெரும்பாலோர் ஒடுக்கப்பட்ட மற்றும் மலைச்சாதி மக்கள் ஆவார்கள்.

தலைமுறை தலைமுறையாகச் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுத் தங்களின் உழைப்பினால் கர்நாடக அரசுக்கும் இந்திய அரசுக்கும் பெரும் வருவாய் ஈட்டித் தந்த இந்தத் தொழிலாளர்களின் வாழ்வு இப்போது இரங்கத்தக்க நிலைக்கு உள்ளாகியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பாரதத் தங்கச் சுரங்கம் மூடப்பட்டு விட்டது. சுமார் 4000 தொழிலாளர்கள் தங்கள் வாழ்வை அடியோடு இழந்துள்ள னர். நான்கு தலைமுறைக்கு முன்னால் இங்குக் குடியேறி வாழையடி வாழையாக இங்கு வாழ்ந்து இந்தக் கோலாரையேத் தங்களுடைய சொந்த ஊராகக் கொண்டு வாழ்ந்து வந்த இந்தத் தமிழர்கள் இப்போது வாழவேத் தவிக்கிறார்கள். தினந்தோறும் பெங்களூர் செல்லும் இரயிலில் இவர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று அங்குக் கட்டிடத் தொழி லாளராக, -சுமை தூக்குபவர்களாக இன்னும் என்னென்ன எடுபிடி வேலைகள் உண்டோ அவற்றை யெல்லாம் செய்து வயிற்றைக் கழுவ வேண்டிய நிலைக்கு ஆளாகி யிருக்கிறார்கள். வேலை இழப்பின் காரணமாக இவர்களின் குடும்பங் கள் சொல்லொணாத் துயருக்கும் ஆட்பட்டுள்ளன. தங்களை நம்பி யுள்ள குடும்பத்தினரைக் காப்பாற்ற வழியறியாத சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தங்கச் சுரங்கம் மூடப்பட்ட பிறகு இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர்.

கோலார் பகுதியில் இந்தத் தொழிலாளர்கள் வாழ்ந்து வந்த பகுதிகளுக்கு மின்சாரம், குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதிகளை நிர்வாகம் திடீரென்று நிறுத்தி விட்டது. இந்த வீடுகளிலிருந்த இவர்கள் வெளியேற வேண்டு மென்று நிர்வாகம் ஆணையிட் டுள்ளது. இதன் விளைவாகவும் இவர்களின் வாழ்க்கை மிக மோசமாகியுள்ளது. சுகாதாரக் கேடு பெருகி தொற்று நோய்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. தங்கச் சுரங்க நிர்வாகம் பல பள்ளிகளை நடத்தி வந்தது. ஆனால் இப்போது இந்தப் பள்ளிகளில் படிக்கும் தொழிலாளர் களின் குழந்தைகள் நிலை இரங்கத் தக்கதாக மாறியுள்ளது. பள்ளிக் கட்டணம் கட்டுவதற்கு வழியில்லா மல் பல குழந்தைகள் படிப்பை நிறுத்தி விட்டனர்.


ஏன் இந்த நிலை?

கோலார் தங்கச் சுரங்கம் மூடப்பட்டதன் பின்னணி என்ன என்பதை அறிவோமானால் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவரும். 1972-ஆம் ஆண்டில் மைசூர் அரசாங்கம் இந்தத் தங்கச் சுரங்கத்தை இந்திய அரசிடம் ஓப்படைத்தது. அதற்குப் பிறகு இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றாக இது விளங்கி வந்தது. 1992-ஆம் ஆண்டு வரை இந்த நிறுவனத்திற்கு 502 கோடி ரூபாய்கள் நட்டம் ஏற்பட்டி ருப்பதாக அறிவிக்கப்பட்டிருக் கிறது. தங்கத்தை உற்பத்தி செய்வதில் அதிகச் செலவு ஏற்படுவ தாகவும் அதன் விளைவாகவே இத்தகைய நட்டம் ஏற்பட்டதாகவும் நிர்வாகம் கூறியது. ஆனால் தொழிலாளர்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்திய அரசாங்கத்தின் தவறான கொள்கை யும் இந்த நட்டத்திற்குக் காரணம் என்று தொழிலாளர்கள் கூறுகிறார் கள். கோலார் தங்கச் சுரங்கத்தில் உற்பத்தி செய்யப்படும் தங்கம் அத்தனையும் இந்திய அரசே வாங்கிக் கொள்கிறது. இலண்ட னில் உள்ள தங்க விலைக்கு ஏற்ப இதற்கு விலை கொடுக்கிறது. இந்தியாவில் தங்கம் என்ன விலையில் விற்கப்படுகிறதோ அதில் 10 சதவீதம் மட்டுமே இலண்டனில் தங்கத்தின் விலையாகும். இந்த விலை வேறுபாடு சுரங்க நிர்வாகத் திற்கு கடன் சுமையாக ஆகிவிட்டது. இதன் விளைவாகவே மிகப் பெரிய நட்டத்திற்கு இந்த நிறுவனம் ஆளாகியுள்ளது. இந்த நிறுவனத்தை நட்டமில்லாமல் நடத்துவதற்கு பல ஆலோசனைகள் கூறப்பட்டன. எதையுமே இந்திய அரசு ஏற்க வில்லை. தொழிலாளர்களின் சங்கம் கீழ்கண்ட யோசனைகளைக் கூறியது. தங்கத்தை வெட்டி யெடுக்கச் சுரங்கத்திலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட மண் மலை போல் குவிந்து கிடக்கிறது. 34 மில்லியன் டன் மண் இவ்வாறு குவிந்துள்ளது. ஒரு டன்னில் 0.75 கிராம் தங்கம் இருப்பதாகக் கூறப் படுகிறது. மலை போல் குவிந்து கிடக்கும் இந்த மண்ணிலிருந்து ஏராளமான தங்கத்தை எடுக்க முடியும். சுமார் 12000 கோடி உரூபாய் பெருமான தங்கம் இந்த மண்ணில் புதைந்து கிடப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்த 18 ஆண்டு களுக்கு இந்த வேலையைச் செய்ய முடியும்.

தங்கச் சுரங்கம் செயல்பட்டு வந்தபோது ஒரு டன்னுக்கு 2 கிராம் தங்கம் எடுக்கப்பட்டது. இதனைத் தங்கள் கடும் உழைப்பின் காரண மாக ஐந்து கிராமாக தொழிலாளர் கள் உயர்த்தினார்கள். மேலும் 60 கோடி ரூபா முதலீடு செய்தால் 90 கோடி ரூபாய் அதிக இலாபம் கிடைக்கும். என்று தொழிலாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் இவ்வாறு முதலீடு செய்ய அரசாங்கம் முன்வர வில்லை. மாறாக விருப்ப ஓய்வுத் திட்டத்தில் செல்லும்படி தொழி லாளர்களை வற்புறுத்தினார்கள். இந்தத் திட்டததை நிறைவேற்றி னால் தொழிலாளர்களுக்கு 80 கோடி ரூபாய் கொடுக்க வேண்டி யிருக்கும். தொழிலாளர்களை வேலையிலிருந்து அனுப்ப 80 கோடி ரூபாய் செலவழிக்கத் தயாராக இருக்கும்அரசு 60 கோடி ரூபாய் முதலீடு செய்தால் இந்தச் சுரங்கம் நல்ல முறையில் நடக்குமே என்பதை எண்ணிப்பார்க்க வில்லை. 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கர்நாடக உயர்நீதி மன்றம் சுரங்கம் மூடப்படுவதற்கு தடை விதித்தது மீண்டும் சுரங்கம் நடத்துவதற்குரிய வழிவகைகளை ஆராயவும் கூறியது. ஆனால் அரசாங்கமும் நிர்வாகமும் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தன. தற்போது நிறுவனத்தின் இயந்திரங்கள் மற்றும் சொத்துக் களை நிர்வாகம் விற்கத் தொடங்கி விட்டது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து வழங்கபட்டு வந்த ஊதியத்தையும் நிறுத்தி விட்டது. இந்த நிலைமை நீடிக்குமானால் எதிர்காலத்தில் இந்தச் சுரங்கத்தை இயக்க இயலாத நிலைமை ஏற்பட்டு விடும்.

கோலார் தங்கச் சுரங்கத்தில் மிகப் பெரும்பாலான தொழிலாளர் கள் தமிழர்களாக இருந்ததும் கோலார் நகரில் தொழிலாளர்களே பெரும்பாலாக வாழ்ந்து வருவதும் கன்னட வெறியர்களின் கண்ணை உறுத்தி வந்தன. மகன் மாண்டாலும் பரவாயில்லை மருமகள் தாலி அறுக்க வேண்டும் என்ற பழமொழிக் கேற்ப தங்கச் சுரங்கம் மூடப்பட்டா லும் பரவாயில்லை. இங்குள்ள தமிழர்களை வெளியேற்றியேத் தீர வேண்டும் என்ற எண்ணத்துடன் கன்னட வெறியர்கள் செயல்பட்டு வருகிறார்கள். நான்கு தலைமுறை களாக உயிருக்கு அஞ்சாமல் ஆயிரமாயிரம் அடிகளுக்குக் கீழே துணிந்து சென்றுத் தங்கத்தை வெட்டி எடுத்து வெளியே கொண்டு வந்த தமிழர்களின் பரம்பரையினர் இன்று பரிதவிக்கத்தக்க நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அதிலும் இவர்களில் மிகப்பெரும்பாலோர் ஒடுக்கப்பட்ட தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.