சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான ஐ.நாவின் சிறப்பு விசாரணைக் குழுவின் இணைப்பாளராக மூத்த மனிதஉரிமை அதிகாரியாகப் பணியாற்றிய சன்ட்ரா பெய்டாஸ் என்ற மனித உரிமை நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இந்த நியமனம் குறித்து நேற்றிரவு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளார்.
ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவுக்கு இவரை ஐ.நா விரைவில் அறிமுகம் செய்து வைக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
விசாரணைக் குழுவைத் தெரிவு செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும் விரைவில் அது இறுதிப்படுத்தப்படும் என்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்ததாகவும், தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விசாரணைகள், இம்மாத நடுப்பகுதியில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசாரணைகள் பத்து மாதங்களில் நிறைவடையும் என்றும் ஐ.நா தகவல்கள் கூறுகின்றன.
வரும் ஜூலைக்கும், நவம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில், சிறிலங்காவில் இந்த விசாரணைக்குழு களப் பயணங்களை மேற்கொள்வதற்கு ஐ.நா திட்டமிட்டுள்ள போதிலும், சிறிலங்கா இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இந்த விசாரணைக் குழுவை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சன்ட்ரா பெய்டாஸ் பற்றிய சில தகவல் :
சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான ஐ.நாவின் சிறப்பு விசாரணைக் குழுவின் இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சன்ட்ரா பெய்டாஸ் அம்மையார், ஐ.நா வட்டாரங்களில் மிகவும் பிரபலமான மனித உரிமை நிபுணராவார்.
பிரித்தானியப் பெண்மணியான இவர், தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். இவர் ஆரம்பத்தில், நியூயார்க்கைத் தளமாக கொண்டு செயற்படும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தில் பணியாற்றியிருந்தார். பின்னர், ஐ.நாவில் இணைந்த இவர், மூத்த மனிதஉரிமை அதிகாரியாகப் பணியாற்றினார்.
சோமாலியா, தென்சூடான் ஆகிய நாடுகளின் மனிதஉரிமைகள் நிலை குறித்து விசாரிப்பதற்காக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால், அனுப்பப்பட்டவர். தென்சூடானில் பாதுகாப்புப் படையினரின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா வெளியிட்ட அறிக்கையின் தொடர்ச்சியாக, சன்ட்ரா பெய்டாஸ் அம்மையாரை கடந்த 2012ம் அண்டு நவம்பர் மாதம் தென் சூடான் அரசாங்கம் 48 மணிநேர காலக்கெடு கொடுத்து அங்கிருந்து வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது. |