விழுப்புரத்தில் நடைபெற்ற போராட்டம்!
பாரதீய சனதா கட்சி ஆட்சிப் பொறுப்பேற்கும் விழாவிற்கு இனஅழிப்புக் குற்றவாளி இராஜபட்சேவை அழைத்ததற்கு கண்டனம் தெரிவித்தும் அனைத்துலக இனப்படுகொலை குற்றவாளி ராஜபட்சேவை திருப்பி அனுப்ப வலியுறுத்தியும் விழுப்புரத்தில் கடந்த 26.05.2014 அன்று கருப்புக்கொடி ஏந்திய பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
விழுப்புரம் தமிழிளைஞர் கூட்டமைப்பு ஒருங்கிணைத்த இந்நிகழ்வில் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம், முஸ்லீம் மக்கள் சங்கம், திருவள்ளுவர் கல்வி இயக்கம், மனித உரிமைகள் இயக்கம், உலகத் தமிழர் பேரவை, நாம் தமிழர் கட்சி, தமிழினத்தொண்டியக்கம், விழுப்புரம் தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் கருப்புக்கொடிகளுடன் பங்கேற்று ஆர்ப்பரித்தனர்.
முன்னதாக விழுப்புரம் காந்தி சிலை அருகில் திரண்ட உணர்வாளர்கள் உலகத் தமிழர் பேரமைப்பு கோ.பாபு தலைமையில் கண்டன முழக்கமிட்டவாறுட பேரணியாக திரு.வி.க.சாலை வழியாக காமராசர் வீதியில் அமைந்துள்ள தலைமை அஞ்சலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழிளைஞர் கூட்டமைப்பின் எழில்.இளங்கோ தலைமையேற்றார். திருவள்ளுவர் கல்வி இயக்கம் த.பாலு தொடக்கவுரையாற்றினார். தொடர்ந்து தமிழினத் தொண்டியக்கம் விழுப்பரையனார், பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் பேரா.பிரபா.கல்விமணி, சிறுவாலை மு.நாகராசன், முஸ்லீம் மக்கள் கழகத்தின் ச.க.ஜைனுதீன், பா.அலாவுதீன், மனித உரிமைகள் கழகம் சு.பிச்சைமுகமது, ஆர்.பாஸ்கரன், தமிழர் கழகம் தே.ஏழுமலை, கு.பரிதிவாணன், மக்கள் கல்வி சுகாதாரப் பாதுகாப்பு இயக்கம் மு.சூரியசாமி, பி.இராமச்சந்திரன், உலகத் தமிழர் பேரமைப்பு மா.பிரபு, திராவிடர் விடுதலைக் கழகம் தமிழிளைஞர் கூட்டமைப்பு வழக்குரைஞர் வி.பிரபு, கொ.ப.சிவராமன், தினகர், பா.ஜோதிநரசிம்மன், ஈழவிடுதலை ஆதரவாளர் பாபு (எ) மகபூப் உசேன், செய.நடராசன், பில்லூர் அன்பு கணபதி, பழனி, நாம் தமிழர் கட்சி தெய்வசிகாமணி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
மதுரையில் நடைபெற்ற போராட்டம்!
ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இராசபக்சே திரும்பிப் போ என்ற கோஷத்துடன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை மக்கள் உரிமை கூட்டமைப்பு 26-5-2014 அன்று திங்கள் மாலை 6 மணி க்கு ஜான்சிராணி பார்க், நேதாஜி சிலை முன்பு நடைபெற்றது.
முன்னாள் மாமன்ற உறுப்பினர் எம்.ஆர். மாணிக்கம், தலைமை ஏற்றார். உலகத் தமிழர் பேரமைப்பைச் சேர்ந்த ச. பிச்சைகணபதி, வெ.ந. கணேசன் ஆகியோர் முன்னிலை வகிக்க. கா. பரந்தாமன், தோழர். ஜெயராமன், க. ஜான்மோசஸ், சுவாமி குரு. ராகவேந்திரர், மு. தமிழ்ப்பித்தன், தோழர் மாயாண்டி, தோழர் பரிதி, முனைவர் திரு. வேலன் அவர்கள், பு. திரவியம், பு.ரெ. துவாரகநாத், தி. முருகன், அன்சாரி, சூ.ப.தேசியமணி, மு. அழகர்ச்சாமி, ஞானபிரகாசம் ஆகியோரும் மற்றும் வீரர்குலம் அமரர் இயக்கம் ஆகிய இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் பங்குகொண்டனர். |