அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவுகளைத் திணிக்கும் தமிழக அரசைக் கண்டித்து, தமிழகப் பள்ளிக் கல்வி அமைச்சர் வீடு முற்றுகையிடப்பட்டு, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தினர் 200க்கும் மேற்பட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
தமிழக அரசு 2013-2014 கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட பிரிவுகளைத் தொடங்குவதென்று திட்டமிட்டு முதற்கட்டமாக 1ஆம் வகுப்பிலும் 6ஆம் வகுப்பிலும் ஆங்கில வழிப்பிரிவுகளைத் தொடங்கியது. நடப்பு 2014-2015 கல்வியாண்டில் இரண்டாம் வகுப்பிலும், ஏழாம் வகுப்பிலும் ஆங்கிலவழிப் பிரிவுகளைத் தொடங்குகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிக்கல்வியில் தமிழைப் பயிற்று மொழி நிலையிலிருந்து முற்றிலுமாக நீக்கிவிடும் போக்கில் தமிழக அரசு தீவிரமாகச் செயல்படுகிறது. இதனைக் கண்டித்து, பல்வேறு அமைப்புகளைக் கொண்ட தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகின்றது.
இந்நிலையில், தமிழக அரசின் தொடர்ச்சியான ஆங்கிலவழித் திணிப்பைக் கண்டிக்கும் வகையில் தமிழகப் பள்ளிக் கல்வி அமைச்சரின் வீடு முற்றுகையிடப்படும் என கடந்த 02.05.2014 அன்று நடைபெற்ற தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கப் பொதுக்குழு முடிவெடுத்தது.
அதன்படி, இன்று(28.05.2014) காலை சென்னை ராசா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையிலிருந்து அமைச்சர் வீட்டை நோக்கிப் பேரணியாகப் புறப்பட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அழிக்காதே அழிக்காதே தமிழ்வழிக் கல்வியை அழிக்காதே!, திணிக்காதே திணிக்காதே ஆங்கிலவழியைத் திணிக்காதே!, தமிழக முதல்வர் செயலலிதாவே அரசியலுக்கு மட்டும் அம்மாவா? ஆட்சிக்கு மம்மியா? என்பன உள்ளிட்ட பல ஆவேச முழக்கங்களுடன் பேரணியாகச் சென்றனர்.
அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றபோது, காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டத் தோழர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போராட்டத்தை, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் கட்சியின் தலைவருமான திரு. பெ.மணியரசன் ஒருங்கிணைத்தார். உலகத் தமிழர்பேரமைப்புத் தலைவர் திரு பழ.நெடுமாறன், ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்தியா,தமிழ்த் தேச மக்கள் கட்சித் தலைவர் தோழர் தமிழ்நேயன், மனித நேய மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் திரு. தமிமுன் அன்சாரி, திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசிக்குமரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, தமிழ்நாடு மக்கள் கட்சித் தலைவர் தோழர் தங்கத்தமிழ்வேலன், சேவ் தமிழ்ஸ் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் சரவணன், உலகத் தமிழ்க் கழகத் தலைவர் முனைவர் ந.அரணமுறுவல், தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் சி.ஆறுமுகம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத் தலைவர் தோழர் பொழிலன், தொழிலாளர் சீரமைப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் சேகர், திரு. தேனி லிங்கா லிங்கம், ஓவியர் வீரசந்தனம், இயக்குநர் வ.கவுதமன், எழுகதிர் இதழாசிரியர் திரு. அருகோ முத்தமிழ்மணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் இதில் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையில், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் நா.வைகறை, அ.ஆனந்தன், பழ.இராசேந்திரன், க.முருகன், தஞ்சை மாவட்டச் செயலாளர் குழ.பால்ராசு, பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் திருச்சி த.கவித்துவன், மதுரை ரெ.இராசு, திருச்செந்தூர் மு.தமிழ்மணி, சிதம்பரம் கு.சிவப்பிரகாசம், புளியங்குடி க.பாண்டியன், ஈரோடு வெ.இளங்கோவன், ரெ.கருணாநிதி, மகளிர் ஆயம் மையக்குழு உறுப்பினர்கள் தோழர் மேரி, செரபினா, தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து, பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே.சுப்பிரமணிய சிவா, நடுவண் குழு உறுப்பினர் தோழர் பாபநாசம் பிரபாகரன் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் இதில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட தோழர்கள், மயிலை நாகேசுவரராவ் பூங்கா பின்புறமுள்ள சமூகநலக் கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். |