கடந்த 46 ஆண்டுக்காலமாகக் காவிரிப் பிரச்சனையில் ஒவ்வொரு முறையும் தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு இயற்கை நீதியை நிலைநிறுத்தப் போராட வேண்டியிருந்தது. நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளைக் கர்நாடகம் அலட்சியம் செய்தபோது அதைக் கண்டிக்கவோ நடவடிக்கை எடுக்கவோ மத்திய அரசு முன்வரவில்லை.
நடுவர் மன்றம் அமைப்பதிலிருந்து அதனுடைய இறுதித் தீர்ப்பை கெசட்டில் வெளியிடுவது வரை ஏழு முறைகளுக்கு மேல் உச்சநீதிமன்றத்தின் படிகளில் தமிழகம் ஏறி ஏறி இறங்கிக் களைத்தது.
2007ஆம் ஆண்டு சனவரியில் நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை அளித்தது. சட்டப்படி அதை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் அதை மத்திய அரசு வெளியிடவில்லை. மீண்டும் 2012ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தலையிட்டு ஆணை பிறப்பித்த பிறகே அரசிதழில் அத்தீர்ப்பு வெளியிடப்பட்டது. பன்மாநில நதிநீர்ப் பிரச்சினைச் சட்டத்தின் 6வது பிரிவின்படி அரசிதழில் நடுவர்மன்றத்தின் தீர்ப்பு வெளியிடப்பட்டவுடன், அது சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும். உடனடியாக அத்தீர்ப்பை நிறைவேற்றவேண்டிய கடமை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அனைத்திற்கும் உண்டு எனத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இத்தீர்ப்பைச் செயல்படுத்துவதற்காக 1956-ஆம் ஆண்டு நதிநீர் வாரியச் சட்டத்தின்படிக் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
காவிரிப் பிரச்சனை உருவான 46 ஆண்டுக் காலத்தில் பதவியிலிருந்த 9 பிரதமர்கள் காவிரிப் பிரச்சனையைத் தீர்ப்பதில் செயலற்று இருந்தார்கள். உச்சநீதி மன்றம் 7 முறை தலையிட்டுத் தீர்ப்புகளை வழங்கிய பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் இன்னமும் அமைக்கப்படவில்லை.
நடுவர் மன்றம், உச்சநீதி மன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளை கர்நாடகம் கொஞ்சமும் மதிக்கவில்லை. இன்னமும் மதிக்கத் தயாராக இல்லை என்பதை அம்மாநிலத்தைச் சேர்ந்த பல தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன. முன்னாள் முதலமைச்சரான எடியூரப்பா, மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு ஒருபோதும் கர்நாடகத்திற்கு எதிராகச் செயல்படாது. ஏனென்றால் தென்னிந்தியாவில் பா.ஜ.க.வை முதன்முறையாக முதல்வர் அரியணையில் அமரவைத்து அழகு பார்த்தவர்கள் கர்நாடக மக்கள். இம்முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்கு 17 இடங்களை அம்மக்கள் அளித்துள்ளனர். பா.ஜ.க.வை நம்பி வாக்களித்த கர்நாடக மக்களுக்கு அநீதி இழைக்க விடமாட்டோம்.'' என்று கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமரான தேவகவுடா, "அரசியல் சுயலாபத்திற்காகக் காவிரி மேலாண்மை வாரியத்தை மோடி அமைத்தால் கர்நாடகத்தில் பெரும் எதிர்ப்பு உருவாகும்'' என எச்சரித்தார்.
கர்நாடக முதல்வரான சித்தராமையா, "காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்போம். அப்படி அமைக்கப்படுவது கர்நாடகத்திற்கு இழைக்கப்படுகிற மிகப்பெரிய அநீதியாகும்.'' என்று கூறியுள்ளார்.
மத்திய இரசாயனத் துறை அமைச்சர் அனந்தகுமார் "கர்நாடகத்தின் நிலம், நீர், மொழி விவகாரத்தில் பிரதமர் நரேந்திரமோடி கர்நாடகத்திற்கு அநீதி இழைக்க மாட்டார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை'' எனத் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்.
இத்துடன் அவர்கள் நிற்கவில்லை. 10-6-2014 அன்று பிரதமர் மோடியை, கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அம்மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரும் சந்தித்தனர். முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதலமைச்சர்கள் பி.எஸ்.எடியூரப்பா, ஜெகதீஷ்ஷெட்டர், ஹெச்.டி. குமாரசாமி, எம். வீரப்பமொய்லி ஆகியோரும் கர்நாடகமாநிலத்தைச் சேர்ந்த அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இக்குழுவில் அங்கம் வகித்தனர். ஆனால் இந்தக் குழுவில் மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, அனந்தகுமார், சதானந்த கவுடா, ஜி.என். சித்தேஸ்வர் ஆகியோரும் அங்கம் வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சர்கள் எந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் இந்தியா முழுமைக்கும் பொதுவானவர்களாகவும். மாநிலங்களுக்கிடையே வேறுபாடு காட்டாமல் நடுநிலையோடும் நேர்மையோடும் தங்களின் பதவிப்பொறுப்பை வகிக்க வேண்டும். இந்த உன்னதமான மரபைக் கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அப்பட்டமாக மீறிக் காவிரிப் பிரச்சினையில் ஒருதலைப்பட்சமாகவும் உச்சநீதிமன்றம், நடுவர்மன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளை மதிக்காமலும் அவற்றை பிரதமர் செயல்படுத்தக்கூடாது என்றும் வற்புறுத்தியுள்ளார்கள். இதன் மூலம் எந்த அரசியல் சட்டத்தின்மீது ஆணையிட்டுப் பதவியை ஏற்றிருக்கிறார்களோ அந்த அரசியல் சட்டத்தை அப்பட்டமாக மீறியிருக்கிறார்கள்.
தங்கள் மாநிலமான கர்நாடகத்திற்கு ஆதரவாக நடந்துகொள்ள இவர்கள் முடிவு செய்யுமுன் மத்திய அமைச்சர் பதவிகளை விட்டு விலகி அவ்வாறு செய்திருக்க வேண்டும். மத்திய அமைச்சர் பதவியிலிருந்துகொண்டே பிரதமரைச் சந்தித்து நெருக்குதல் கொடுப்பது என்பது நேர்மையற்றதாகும். கர்நாடகத்தைச் சேர்ந்த மற்றவர்கள் தம்மைச் சந்திப்பதற்குப் பிரதமர் அனுமதித்ததில் தவறு இல்லை. ஆனால் தம்முடைய அமைச்சரவையைச் சேர்ந்தவர்கள் காவிரிப் பிரச்சினை தொடர்பாகத் தமிழகத்திற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கெதிராகவும் செயல்படும்படித் தம்மைத் தூண்டுவதற்கு அனுமதித்திருக் கக்கூடாது. இந்நிகழ்ச்சி, பிரதமரின் நேர்மையில் தமிழக மக்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.
தமிழகத்திற்கு அநீதி இழைப்பதில் கர்நாடகத்தோடு கேரளமும் போட்டி போடுகிறது. முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் 34 ஆண்டுக் காலத்திற்கும் மேலாகத் தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் போராடித் திட்டவட்டமான தீர்ப்பினைப் பெற்றிருக்கிறது.
பெரியாறு அணை வலிமையாக இருக்கிறது. எனவே அணையின் நீர்மட்டத்தை 142 அடி உயர்த்தலாம் எனக் கடந்த 7-5-2014 அன்று உச்சநீதி மன்றத்தின் அரசியல் சாசனப் பிரிவு தீர்ப்பளித்தாகிவிட்டது. மேலும் அத்தீர்ப்பில் "பெரியாறு நீர், தங்கள் மாநிலத்திற்குள் ஓடும் நீர் என்ற கேரள அரசின் வாதம் தவறானது. முல்லைப் பெரியாறு நதி கேரளத்தில் ஓடினாலும் தமிழகத்தின் வழியே 114 ச.கி.மீட்டர் பரப்பளவுக்கு வந்து செல்வதால் இரு மாநிலங்களுக் கிடையே ஓடும் நதியாகும். இந்நதிமீது கேரளம் மட்டும் உரிமை கொண்டாட முடியாது. தமிழகத்திற்கும் சம உரிமை உள்ளது என்றும், புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரளத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்தும், பெரியாறு நீரின் மீது உரிமை கொண்டாடிய கேரளம் நிறைவேற்றிய சட்டம் செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஆனால் இன்னும் அணை பலவீனமாக இருக்கிறது எனவே நீர்மட்டத்தை உயர்த்தினால் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட கேரள மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற பொய்யையே திரும்பத் திரும்பக் கேரள அரசியல்வாதிகள் கூறிவருகிறார்கள். மத்திய அரசு அமைத்த 6க்கும் மேற்பட்ட நிபுணர் குழுக்கள் அணையைப் பரிசோதனை செய்து அணை பலமாக இருப்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றன. ஆனாலும் மத்திய அரசின் வேண்டுகோளுக் கிணங்க 10 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து அணையைத் தமிழக அரசு மேலும் பலப்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றம் அமைத்த நீதியரசர் கே.டி.தாமஸ் தலைமையிலான மூன்று நீதியரசர்களைக் கொண்ட குழு, நிபுணர் குழுவின் ஆலோசனையை ஆராய்ந்து பெற்றும் அணைக்கு நேரிடையாகச் சென்று பார்வையிட்டும் அணை வலிமையாக இருப்பதை உச்சநீதிமன்றத்திற்குத் தெரிவித்தது. அதற்குப்பின்னர் உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. மூன்று நீதியரசர்களைக் கொண்ட குழுவிற்குத் தலைமை தாங்கிய கே.டி.தாமஸ் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் அவர் கேரள மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டதாகக் கேரள அரசியல்வாதிகள் இழிவாகச் சாடினார்கள்.
9-6-14 அன்று கேரள சட்டசபை கூடிப் பழைய பல்லவியையே பாடிப் புதிய அணை கட்டவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மேலும் கேரள மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்ச உணர்வு தொடர்பாக விதி 143-ன் கீழ் உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்க வேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தை அதிக நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற பிரிவு விசாரிக்க வேண்டும் என்றும் கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.
ஏற்கனவே உச்சநீதிமன்றம் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்று கூறிய போது அரசியல் சட்டப் பிரிவுதான் இதை விசாரிக்க வேண்டும் என்று கேரளம் முறையிட்டு அதன்படி அரசியல் சட்டப் பிரிவு அமைக்கப்பட்டு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று தீர்ப்பு வழங்கிய பிறகு மீண்டும் வேறொரு பிரிவு அமைக்கப்பட வேண்டும் எனக் கேரளம் கூறி இன்னும் பல ஆண்டுகளுக்கு இவ்வழக்கை இழுத்தடிக்க முயலுகிறது.
பெரியாற்று நீரில் கேரளத்தின் தேவை போக வீணாகக் கடலில் கலக்கும் நீரின் அளவு 2313 மி.க. மீட்டர் ஆகும். இதில் நாம் கேட்பது அதாவது அணையின் நீர் மட்டம் 142 அடி உயரமாக இருந்தால் 217.10 மி.க. மீட்டர் ஆகும்
கடலில் கலக்கும் நீரில் ஒரு சிறு பகுதியை மட்டுமே தமிழகம் பயன்படுத்துகிறது. அதைக் கூடத் தமிழகத்திற்கு அளிக்க மனமில்லாமல் கேரளம் நடந்துகொள்கிறது.
கர்நாடகத்திலும் கேரளத்திலும் உள்ள காங்கிரஸ் கட்சி தமிழகத்திற்கு எதிராக இழைத்துவரும் அநீதியின் விளைவாகத்தான் தமிழகத்தில் காங்கிரஸ் அடையாளம் தெரியாமல் துடைத்தெறியப்பட்டிருக்கிறது. இது தொடருமேயானால் மற்ற அகில இந்தியக் கட்சிகளுக்கும் தமிழகத்தில் காங்கிரசுக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும்.
49 ஆண்டுக் காலமாகக் காவிரிப் பாசன விவசாயிகளும், 30 ஆண்டுக் காலத்திற்கும் மேலாக முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகளும் தமிழக அரசும் நடுவர் மன்றம், உச்சநீதி மன்றம் ஆகியவற்றில் முறையிட்டுப் போராடி நீதியை நிலைநிறுத்திய பிறகும் அவர்களுக்கு இயற்கை நீதிப்படியும், சட்டப் படியும் உரிமையான தண்ணீரைத் தர மறுத்துக் கர்நாடகமும், கேரளமும் அழிச்சாட்டியம் செய்துவருவதைப் பார்த்துத் தமிழக விவசாயிகள் கண்ணீர் மல்கக் குமுறலோடு கேட்கும் கேள்வி "ஒரே பாரதம் - உன்னத பாரதம் என்பது இதுதானா?''
- நன்றி : தினமணி |