"ஈகம் இல்லையேல் அழிவு'' கோவை ஞானி எச்சரிக்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 17 ஜூலை 2014 16:12

மதிப்பிற்குரிய பழ.நெடுமாறன் அவர்களுக்கு.

வணக்கம். தாங்கள் கூட்ட இருக்கும் மாநாட்டிற்கு நேரில் வர இயலாமை காரணமாக என் கருத்துக்களைத் தங்களுக்குச் சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன். பிறர் கருத்தை மதிக்கும் பெருந்தகையாளர் என்று நம்புவதால் வெளிப்படையாக சில கருத்துக்களைத் தங்களுக்கு எழுதுகிறேன்.

ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்த அத்தனை அழிவுகளுக்கும் சிங்கள அரசு மட்டுமே காரணமல்ல. இந்திய அரசும் முழுமையான காரணம். காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள், பஞ்சாப் ஆகியவற்றில் நடைபெறும் தேசிய இனப் போராட்டங்களை ஒடுக்குவதிலேயே கவனம் கொண்ட இந்திய அரசு ஈழத் தமிழ் மக்களின் விடுதலையை மட்டுமல்லாமல், பிறமாநிலங்களில் எழுச்சி பெறும் விடுதலை இயக்கங்களுக்கும் வழிவிட்டாக வேண்டும். பிரிட்டிஷ் காலனி வழிவந்த இந்திய அரசு இதற்கு இம்மியளவும் ஒப்புக்கொள்ளாது.

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் பேரில் இந்தியாவை ஒற்றையாட்சியின் கீழ் பிரகடனப்படுத்தி மாநிலங்களை அதன் உறுப்புகளாக வைத்துள்ளது. இப்போக்குக்கு எதிர்ப்புகள் அவ்வப்போது எழுந்தாலும் இப்போக்கு ஒன்று திரளவில்லை. இத்தகைய போக்கை முன்னிறுத்துவதில் தமிழகத்திற்கு முதன்மையான பங்கு உண்டு. இதை நாம் செய்யத் தவறிவிட்டோம். தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக மாறியிருக்கிறோம். மீண்டும் இதுபற்றிச் சிந்தனை உண்டா?

தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் வந்தேறிகளால் சுரண்டப்படுகின்றன. இந்நிலை தொடருமேயானால் நம் அடிமைத்தனம் மேலும் மிகும் என்பதில் ஐயமில்லை. வந்தேறிகள் எப்போது யார் ஆதரவுடன் இந்தியாவுக்கு வந்து இந்தியாவைக் கைப்பற்றினார்கள் என்ற பழங்கதை நமக்குத் தெரியும். பிரிட்டிஷ் அரசுக்கு முழு அளவில் ஒத்துழைத்த மன்னர்கள், ஜமீன்தார்கள், பாளையக்காரர்கள், வணிகர்கள் முதலியவர்களின் வாரிசாகத்தானே இன்றைக்கும் கலைஞர் முதல் ஆயிரக்கணக்கானவர்கள் வந்தேறிகளுக்கு வால்பிடித்து அதனாலும் ஆதாயம் பெற்று மானங்கெட்ட வாழ்வு நடத்துகின்றனர். வந்தேறிகளின் வருகையின் விளைவாக நம் வேளாண்மை நிலங்கள் கொள்ளை போகின்றன. நிலத்தடிநீர் தேவையான அளவு உறிஞ்சப்படுகிறது. தொழிலாளர்கள் உரிமைகள் மதிக்கப்படுவதில்லை. வந்தேறிகளின் நிறுவனங்கள் அவர்கள் அளவில் அந்நிய நாடுகள்தான். எல்லா சலுகைகளும் அவர்களுக்குக் கொடுத்துவிட்டு நம் அரசியல்வாதிகள் கைகட்டி நிற்கிறார்கள். அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் அவர்களுக்கு பின்னால் இருப்பது ஒரு முக்கியக் காரணம். இவர்களையெல்லாம் எதிர்ப்பது பற்றிய விவசாயிகள் முதலியவர்களின் விடுதலை பற்றி நமக்கு அக்கறை உண்டா?

இந்தியாவில் மத்திய அரசும் சரி பிறமாநிலங்களும் சரி தமிழர்களை மதிப்பதில்லை. தமிழர்களின் நெடுங்கால வரலாற்றையும் அவர்கள் மொழியின் முதன்மையையும் அவர்களின் நாகரீக செழுமையையும் கண்டு எரிச்சல் கொள்கின்றனர்.

பணத்திற்கே முற்றும் அதிகாரம் என்று ஆனவுடன் சுயநிதிக் கல்லூரி, மெட்ரிக் பள்ளி ஆகியவை பெருகி, ஆங்கிலம் படித்தால்தான் வானம் வசப்படும் என்று பொய்யுரைத்து மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரையும் முட்டாளாக்கி தமிழக அரசே முன்னின்று இன்றுவரை நடத்துகிறது. யார் இவர்களைத் தட்டிக் கேட்க முடியும். யார் இவர்களைக் கட்டுப்படுத்த முடியும்? அரசும் முதலாளிகளும் ஒரே சாதிதானே? வாழ்வதற்குத் தமிழ் - வளர்ச்சிக்கு ஆங்கிலம் என்று கலைஞர்தானே தத்துவம் பேசினார். இந்தி எதிர்ப்பு என்பது இவர் போட்ட நாடகம் தானே? இவர் ஒன்றும் அசலான தமிழர் அல்லவே! பாசத்திற்கு இரையானவன் எப்படி அசல் தமிழனாக இருக்க முடியுமா?

ஆரியம் வருகைக்கு முன் தமிழ் நாகரிகம்தானே கொடிகட்டிப் பறந்தது. சில அறிஞர் கூறியது போன்று இந்திய நாகரிகத்தின் மேலடுக்கு ஆரியம் என்றாலும் அடிப்படை முழுவதும் தமிழ் நாகரிகம் தானே? வேளாண்மை, தொழில் துறை, அறிவியல், கணிதவியல், தர்க்கம், மருத்துவம், இசை, சிற்பம், கட்டிடக் கலை அனைத்தும் தமிழர் பங்களிப்பேயன்றி ஆரியர்க்கு அதில் அணு அளவேணும் பங்கு உண்டா? வருணாசிரமம் நமக்கு உடன்பாடில்லை. வேதம் நமக்கு ஏற்புடையதல்ல. சாதி, சடங்கு, சாஸ்திரம் முதலியவை நமக்குத் தேவையில்லை. தனி நாடு. தனி நாகரீகம். வாணிபம், கப்பல் தொழில் முதலியவற்றில் அன்றே தேர்ச்சி பெற்றிருந்தோம். உலகிற்கு நாம் நாகரிகம் வழங்கினோம். இதற்கான தகுதியை இன்றைய தமிழறிஞர் பெறுவார்களா? தமிழை மேன்மைப்படுத்துவார்களா?

சிங்கள அரசுக்கு இந்தியா மட்டுமா ஆதரவு தந்தது? திபெத்தை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கும் சீனா எப்படி ஈழத் தமிழர் விடுதலையை ஏற்கும்? சச்சனியா மீது பலமுறை போர் தொடுத்து அவர்களுக்கு விடுதலை வழங்காமல் அவர்களை ஆயிரக்கணக்கில் கொன்றொழித்த ரஷ்யர்கள் தமிழர்களுக்கு எப்படி விடுதலை வழங்குவார்.

எல்லாவற்றுக்கும் பின்னால் அமெரிக்கா தந்திரமாக இருந்து காய்களை நகர்த்துகிறது. அமெரிக்காவோடு இந்தியா கூட்டு இராணுவ ஒப்பந்தம் முதலியவற்றை செய்திருப்பது எதனால்?

மலேசியா முதலிய நாடுகளில் வாழும் தமிழர்கள் எதிர்காலத்தில் ஈழத் தமிழர்களைப் போலத்தான் அடக்கி ஒடுக்கப்படுவார்கள்? வெளியேற்றப்படுவார்கள் என்பதெல்லாம் உண்மைதான். இந்திய அரசோடு கடுமையாகப் போராடி நீங்கள் இறுதியாக கூறுவதுபோல் பெருந்தியாகத்துக்கு நாம் தயாராக இருந்தாலொழிய வரலாற்றில் தமிழ் இனத்துக்கு அழிவு நேருவது உறுதி.

இன்னும் பலவற்றை நான் கூறலாம். இது போதும் என நிறுத்திக் கொள்கிறேன். தமிழகத்தில் தமிழ்த் தேசியம் என்ற பெயரில் இயக்கம், அமைப்பு நடத்துபவர்களை ஒரு கொடிகீழ் திரட்டும் பணியில் இறங்கியிருக்கிறீர்கள். உங்களை விட்டால் இப்பணியை நிறைவேற்ற நினைப்பவர் வேறு யாரும் இல்லை. உங்களுக்குத் தலை வணங்கி இம்மடலை நிறைவு செய்கிறேன்.
மேலும் சில :

1. தமிழ்நாட்டில் சிறப்பாக தோன்றி வளர்ச்சி பெற்று பின்னர் தயார் நிலையில் உள்ள தாய்த் தமிழ் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் நெஞ்சில் தமிழ் உணர்வும், தமிழ் வாழ்வும் என்றும் அழியாமல் பதிந்திருக்கும். இத்தகைய தாய்த் தமிழ்ப் பள்ளிகள் ஒரு மாவட்டத்திற்கு 50/100 என வளர்ச்சி பெறுவதற்கு தமிழ்த் தேசிய இயக்கங்கள் ஆதரவாக இருந்திருக்க வேண்டும். இப்பொறுப்பை ஏனோ நாம் தட்டிக் கழித்தோம்.

2. தமிழ் ஆசிரியர்களும், பேராசிரியர்களும் உண்மையிலேயே தமிழ்ப் பற்றாளர்களாக இருந்து மாணவர்கள் / ஆய்வாளர்கள் நெஞ்சில் தமிழ் உணர்வை விதைத்திருக்க முடியுமானால் அவர்கள் மூலமும் தமிழ் காக்கப்பட்டிருக்கும். ஆனால் கடந்த இரண்டு தலைமுறை அளவில் நாம் பார்க்கிறோம். தமிழ் ஆசிரியர்கள் / பேராசிரியர்களுக்குத் தமிழ் அறிவு பெரும்பாலும் இல்லை. ஆய்வுணர்வு மிக அரிதாகவே இருக்கிறது. தமிழைக் காப்பதில் அரசுக்கு அக்கறை இல்லை என்றாலும் தமிழ் ஆசிரியர்கள் மனம் வைத்திருந்தால் தமிழுக்கு அழிவு நேர்ந்திருக்காது. தமிழ்த் தேசிய இயக்கங்களுக்கும் இவ்வாறு ஆசிரியர்களுக்கு மத்தியில் இடம் பெற்று தமிழைக் காப்பது என்பதன் உணர்வை பெருமளவில் ஏற்படுத்தியிருக்க முடியும்.

3. தற்போது பா.ஜ.க ஆட்சியில் பெரும் செல்வாக்கோடு அமர்ந்திருக்கிறது. காங்கிரசுக்காரர்களின் பொருளியல் முதலிய திட்டங்களைத் தவறாது கடைப்பிடிக்கின்றனர். இந்தி திணிப்பை அவர்கள் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். அயல்நாட்டுக் கொள்கையாலும் அவர்கள் மாறுதல் செய்யமாட்டார்கள். இப்படி இருக்க இலங்கை சிக்கலிலும் தமிழர்க்கு அணுசரணையாக அவர்களால் இருக்க முடியாது.

4. இயற்கை வேளாண்மையில் தமிழ்த் தேசியர்களுக்கு மிகக்குறைந்த அளவில்தான் அக்கறையிருக்கிறது. அதைப் போலவே ஆற்றுமணல் கொள்ளை, மலையாளிகள் நம் காடுகளை அழித்தல் இவைபோன்ற சிக்கல் பலவற்றில் நமக்குப் பெரும் ஈடுபாடு தேவை. இயற்கை பாதுகாப்பு என்பது இல்லாமல் முடியாது. இவ்வகையில் எல்லாம் தமிழ்த் தேசியர்கள் ஒன்றுபட்டு நிற்கத்தான் வேண்டும். தங்கள் முயற்சி வெற்றிபெற அனைவரின் வாழ்த்துக்களும் தங்களுக்கு உண்டு.
தங்கள்
- ஞானி

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.