மொழி-இனம்-மண் காக்கத் தமிழராய் இணைந்தோம் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 17 ஜூலை 2014 16:31

தமிழ் நாட்டிற்குத் தன்னுரிமை, தமிழே ஆட்சி மொழி, பயிற்று மொழி, நீதிமன்ற மொழி, வழிபாட்டு மொழி ஆகியவற்றிலும், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு போன்ற உலகத் தமிழர் பிரச்சினைகளிலும் ஒன்றுபட்டுப் போராடிய தமிழ்த்தேசிய அமைப்புகள் ஒன்றாக இணைந்து தமிழ்த் தேசியப் பேரியக்கமாக உருவாக வேண்டும் என்ற வேண்டுகோளை மதுரையில் 1998ஆம் ஆண்டு கூடிய தமிழர் தேசிய இயக்க 5-வது மாநில மாநாடு விடுத்தது. தமிழ்த் தேசிய உணர்வாளர்களும், அமைப்புகளும் இவ்வேண்டுகோளை வரவேற்றனர். இதைப்பற்றிய விவாதம் தமிழ்த்தேசிய அமைப்புகள் மற்றும் உணர்வாளர்களுக்கிடையே நடைபெறத் தொடங்கியது.

கன்னட நடிகர் இராசகுமாரை சந்தன வீரப்பன் சிறையெடுத்துச் சென்றபோது அவரை விடுவிக்க வீரப்பன் முன்வைத்த பிரச்சினைகளில் பல தமிழ்த் தேசிய பிரச்சினைகளாகயிருந்தன.

பிரச்சினைகளை முன்வைத்திருப்பவர் வீரப்பன் என்று பார்க்காமல் அந்தப் பிரச்சினைகளின் அடிப்படையில் ஆராய்ந்து அவற்றிற்குத் தீர்வு காண வேண்டும் எனத் தமிழர் தேசிய இயக்கம் வேண்டுகோள் விடுத்தது.

வீரப்பனின் அழைப்பு மற்றும் தமிழக-கர்நாடக முதல்வர்களின் வேண்டுகோள் ஆகியவற்றின் விளைவாக திரு. பழ. நெடுமாறன் தலைமையில் ஒரு குழுவினர் சென்று வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி 14-11-2000 அன்று நடிகர் இராசகுமாரை வெற்றிகரமாக மீட்டு வந்தனர். இதன் விளைவாக கர்நாடகத்தில் தமிழருக்கு எதிராக மூளவிருந்த இனக்கலவரங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

இதையொட்டித் தமிழகமெங்கும் நூற்றுக்கணக்கான கூட்டங்கள் நடத்தப்பட்டு வீரப்பன் எழுப்பிய தமிழ்த்தேசிய பிரச்சினைகள், அதிரடிப்படை நடத்திய கொடுமைகள் மக்களிடம் விளக்கப்பட்டன. தமிழ்த் தேசிய உணர்வு இதன் மூலம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த்தேசிய அமைப்புகள் பொதுப்பிரச்சினைகளில் ஒன்றுபட்டுக் கூட்டாக இயங்குவது அல்லது கூட்டமைப்பு ஏற்படுத்திக் கொண்டு இயங்குவது போன்றவை தமிழ்த் தேசிய உணர்வாளர் நடுவிலும் மக்கள் நடுவிலும் போதுமான வரவேற்பைப் பெறமுடியாது. எனவே ஒரே கொடி, ஒரே அமைப்பு என இணைந்தால்தான் நமது முயற்சிகளுக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும் என்பதை உணர்ந்து பல தமிழ்த் தேசிய அமைப்புகள் தமிழர் தேசிய இயக்கத்தில் 3-11-2001இல் ஒருங்கிணைந்தன.

இதைத் தொடர்ந்து 10-02-2002இல், திருச்சியில் தமிழ்த்தேசிய அமைப்புகளின் இணைப்பு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பல்லாயிரக்கணக்கில் தமிழ்த் தேசிய உணர்வாளர்களும், பொது மக்களும் திரண்டனர். இம்மாநாட்டின் மாபெரும் வெற்றி தமிழ்த் தேசிய உணர்வாளர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்தது.

"அதே வேளையில் இந்திய தேசியக் கட்சிகள் கலக்கமடைந்தன. "பேருருக் கொண்டு எழுந்த தமிழ்த்தேசியம்'' என்ற தலைப்பில் தினமணி நாளிதழ் சிறப்புக் கட்டுரை தீட்டி வியப்பும் பாராட்டும் தெரிவித்தது.

மற்ற முக்கிய இதழ்களும் மாநாட்டுச் செய்திகளை மறைக்க முடியாமல் வெளியிட்டுத் தீரவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டன. ஆனாலும் தமிழ்நாட்டில் பிரிவினைவாதமும், தீவிரவாதமும் மீண்டும் தலைதூக்க முயலுவதாகக் குற்றம் சாட்ட இந்தப் பத்திரிகைகள் தயங்கவில்லை.

உலகத் தமிழர் பேரமைப்பு தொடக்க விழா மாநாடு

உலகத் தமிழர்களை ஒன்றிணைக்க ஒரு அமைப்பு, உலகத் தமிழர் பண், உலகத் தமிழர் கொடி, உலகத் தமிழருக்கு உடை, உலகத் தமிழர் வங்கி ஆகியவை உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இயக்கத் தலைவர் பல ஆண்டு காலமாக உலக நாடுகளிலிருந்த தமிழர் அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக உலகத் தமிழர் பேரமைப்பு உருவாயிற்று. அதன் தொடக்க விழா மாநாட்டினை 2002ஆம் ஆண்டு சூலை 20, 21 நாட்களில் சென்னையில் நடத்தத் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வந்தன.

அரசியல், கட்சி முதலிய எந்தவிதமான பாகுபாடும் பார்க்காமல் தமிழ்நாட்டில் இருந்த அனைத்துக் கட்சித் தலைவர்களும் தமிழறிஞர்களும் இம்மாநாட்டிற்கு அழைக்கப்பட்டனர். ஆனாலும் அகில இந்தியக் கட்சிகள், திராவிடக் கட்சிகள் ஆகியவற்றின் தலைவர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.

இந்தியா மற்றும் உலக நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்களும், தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். இலங்கையிலிருந்து தமிழ் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகிய பலர் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

ஆனால் இம்மாநாட்டிற்கு அ.தி.மு.க. அரசு திடீர் எனத் தடை விதித்தது. உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு அந்தத் தடையைத் தகர்த்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டினோம்.

தமிழக அரசின் ஆதரவுடனும், உதவியுடனும் உலகத் தமிழ் மாநாடுகள் இதற்கு முன் தமிழ்நாட்டில் நடைபெற்றிருக்கின்றன.

ஆனால் முதன்முறையாக தமிழக அரசின் எதிர்ப்பு, இந்திய, திராவிட கட்சிகளின் ஒத்துழையாமை ஆகியவற்றிற்கிடையே மக்களின் ஆதரவுடன் நடத்தப்பட்ட முதல் உலகத் தமிழர் மாநாடு இதுவேயாகும். இம்மாநாடு அடைந்த மகத்தான வெற்றி உலகமெங்கும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஊட்டியது.

இதுவரை யாரும் சாதித்துக் காட்டாத வகையில் உலகத் தமிழர்களுக்கென அமைப்பு, கொடி, பண், தேசிய உடை ஆகியவை இம்மாநாட்டில் அறிவிக்கப்பட்டு உலகத்தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இத்தகைய மகத்தான சாதனையை உலகத் தமிழர்களின் ஒத்துழைப்புடன் இயக்கம் செய்து காட்டியது.

தமிழீழப் பிரச்சனை

தமிழீழ விடுதலைப் போராட்டப் பிரச்சினையில் நாமும், நம்முடைய தோழமைக் கட்சிகளும் தொடக்கம் முதல் அதற்கு ஆதரவான நிலையைப் பின்பற்றி வந்துள்ளோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக மக்களைத் திரட்டுவதற்காக பல தமிழ்த் தேசிய அமைப்புகளை ஒன்று திரட்டி தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு என்ற பெயரில் விரிவான ஒரு அமைப்பை நமது இயக்கம் முன்னின்று உருவாக்கிற்று.

தமிழ்நாட்டில் பெரிய கட்சிகளின் ஒத்துழைப்பில்லாமல் இக்குழு செய்த சாதனைகள் அளப்பரியவையாகும். இக்குழு நடத்திய மாநாடுகளுக்கும், போராட்டங்களுக்கும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தொடர்ந்து தடைகள் விதிக்கப்பட்டன. நீதிமன்றங்களில் போராடித் தடைகளை உடைத்து நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்திக் காட்டினோம். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக மக்களைத் திரட்டுவதில் நாம் வெற்றி பெற்றோம்.

முன்னாள் பிரதமர் ராசீவ் காந்தி கொலை நிகழ்ச்சியைக் காரணமாகக் கொண்டு தமிழ்நாட்டில் தமிழின உணர்வாளர்களுக்கு எதிராக கடுமையான அடக்குமுறைகள் ஏவிவிடப்பட்டன. ஆனாலும் நாம் அஞ்சி ஒடுங்கிவிடவில்லை.

ராசீவ்காந்தியின் படுகொலை வழக்கில் 26 தமிழர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. வரலாறு கண்டறியாத வகையில் விதிக்கப்பட்ட இந்த தண்டனையைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த வழக்கில் உண்மையை நிலைநிறுத்தி அப்பாவித் தமிழர்களைத் தூக்கு மேடையிலிருந்து மீட்க வேண்டுமென நாம் உறுதி பூண்டோம். அனைத்துத் தமிழ்த் தேசிய அமைப்புகளையும் ஒன்று திரட்டி 26 தமிழர்களின் உயிர்காப்புக்குழு ஒன்றையும் அமைத்தோம். உச்சநீதிமன்றத்தில் சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு வழக்கை நடத்துவதற்கு மக்களிடம் நிதி திரட்டினோம். மக்களும் வாரிவாரி வழங்கினர். உச்சநீதிமன்றம் 19 தமிழர்களை விடுதலை செய்தது. 3 தமிழர்களுக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. எஞ்சியுள்ள 4 தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என வேண்டிக் கொள்ளும் கருணை மனுவில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் கையெழுத்துக்களைப் பெற்றுத் தமிழக முதலமைச்சர், இந்திய குடியரசுத் தலைவர் ஆகியோரிடம் அளித்தோம். ஒருவருக்கு தமிழக அரசு கருணை காட்டியது. மற்ற மூவரின் உயிர்களைக் காக்கத் தொடர்ந்து போராடி வெற்றிபெற்றோம்.

இராசீவ் காந்தியின் கொலையை ஒட்டித் தமிழ்நாட்டில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருந்த ஈழத்தமிழர்களுக்கு எதிரான உணர்வையும், அப்பிரச்சினை குறித்துப் பேசுவதற்கே அனைவரும் அஞ்சும் சூழ்நிலையையும் நமது நடவடிக்கைகளின் மூலம் வெற்றிகரமாக முறியடித்தோம்.

கடந்த காலத்தில் நாம் மேற்கொண்ட பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் அவற்றின் மூலம் தமிழ்த் தேசியத்தை மேலும் மேலும் முன்னெடுத்துச் சென்றோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தோள்கொடுத்து துணை நிற்கும் படையாக நாம் திகழ்ந்தோம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விளைவாக தமிழ்நாட்டிலும், மற்றும் தமிழர்கள் வாழும் உலக நாடுகளிலும் தமிழ்த் தேசியம் பரவியது. தமிழ்த் தேசியம் இப்போது உலகளாவிய தேசியமாகத் திகழ்கிறது.

கொடிய அடக்குமுறை

திட்டமிட்டுப் படிப்படியாகவும், முறையாகவும், சீராகவும் தமிழ்த் தேசிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது கண்டு இந்திய தேசிய சக்திகள் அதிர்ச்சியடைந்தன. மேலும், பல பத்திரிகைகள் நமக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு நஞ்சு கக்கின. இதன் விளைவாக அ.தி.மு.க. அரசு நம்மை ஒடுக்குவதற்கான முயற்சிகளில் இறங்கியது. 2002ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் நமது இயக்கத்தின் தலைவர், பொதுச்செயலாளர்கள் மற்றும் பிரமுகர்களை கொடிய பொடா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்கள் மீது அடுக்கடுக்கான பொய் வழக்குகளும் தொடுக்கப்பட்டன. எல்லாவற்றிற்கும் மேலாக நமது இயக்கத்திற்குத் தடை விதிக்கப்பட்டது. தமிழ்த் தேசியத்திற்காகப் போராடும் இயக்கத்திற்குத் தடை விதிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். ஆட்சியாளர்கள் எந்த அளவிற்குத் தமிழ் தேசியத்தைக் கண்டு அச்சமடைந்துள்ளனர் என்பதை இந்த தடை எடுத்துக்காட்டுகின்றது.

அடக்குமுறைகளுக்கு நடுவே அரும்பணி

2008ஆம் ஆண்டில் இலங்கையில் போர் முற்றி தமிழர்கள் படுகொலைச் செய்யப்படுவது எல்லை கடந்து அதிகரித்தது. எனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளையும் தமிழ்த் தேசிய அமைப்புகளையும் ஒருங்கிணைத்து போர் நிறுத்தத்தை வலியுறுத்த மக்கள் இயக்கம் கட்டப்பட்டது.

28-01-2009ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அமைக்கப்பட்டது. அதன் ஒருங்கிணைப்பாளராக பழ. நெடுமாறன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இயக்கம் அமைக்கப்பட்ட அன்று இளைஞர் முத்துக்குமார் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து தன்னை ஈகம் செய்தார். இதைத் தொடர்ந்து 3 மாதக் காலத்தில் 20 பேர் தங்கள் இன்னுயிரை ஈந்தார்கள். இவர்களின் உயிர்த் துறப்பு தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திற்று. இவர்களின் இறுதி ஊர்வலங்கள் மிகப்பெரிய அளவில் அந்தந்த ஊர்களில் நடைபெற்றன.

04-02-2009 அன்று இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்துவதற்காக தமிழகமெங்கும் பொது வேலை நிறுத்தத்தைக் கடைப்பிடிக்குமாறு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகோள் விடுத்தது. இந்த வேலை நிறுத்தத்தை முறியடிப்பதற்காக தி.மு.க. அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை மக்கள் முறியடித்து பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கினர்.

இதைக் கோரிக்கையை முன்வைத்து சென்னையிலும் புதுவையிலும் இருந்த வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் விண்ணப்பங்களை அளித்தது.

7-02-2009 அன்று தமிழகமெங்கும் கருப்புக் கொடி ஊர்வலங்களும் 17-02-2009 அன்று மனித சங்கிலிப் போராட்டமும் நடத்தப்பட்டன. ஈழத் தமிழர்களுக்காகப் போராடிய உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மக்கள் திரள் பேரணிகள் நடத்தப்பட்டன. 20-08-2009 அன்று சென்னையில் மாபெரும் மக்கள் திரண் பொதுக்கூட்டத்தில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் பிரகடனம் வெளியிடப்பட்டது. 27-10-2009 முதல் மூன்று நாட்கள் தமிழகத்தின் பல்வேறு திசைகளிலிருந்து திருச்சி நோக்கி விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணத்தினை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் மேற்கொண்டது.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் மேற்கொண்ட மாபெரும் மக்கள் இயக்கம் தமிழக அரசியல் வரலாற்றில் அழிக்கமுடியாத தடத்தைப் பதித்தது. ஈழத் தமிழர் படுகொலைக்குக் காரணமான கட்சிகளை மக்கள் தண்டித்தனர்.

தமிழராய் இணைந்தோம்

தமிழீழத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் பதைக்கப்பதைக்கப் படுகொலை செய்யப்பட்ட நமது சகோதரத் தமிழர்களின் நினைவாகவும் அவர்களுக்காக தீக்குளித்து உயிரைத் தியாகம் செய்த முத்துக்குமார் உட்பட 20 ஈகிகளின் நினைவாகவும் சிற்ப நுணுக்கம் மிகுந்த நினைவுச் சின்னத்தை தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பு நிறுவியது. தமிழ்நாட்டுத் தமிழர்களும் உலகத் தமிழர்களும் அளித்த நன்கொடையின் துணைகொண்டு ஓவிய மண்டபம் முத்தமிழ் மண்டபம் போன்றவையும் அமைக்கப்பட்டன. உலகமெலாம் உள்ள தமிழர்கள் வந்து வழிபடும் புனித இடமாக இந்தக் கலைக்கோயில் உருவாக்கப்பட்டுள்ளது.

தஞ்சையில் நிறுவப்பட்டிருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தமிழ்த் தேசியத்தின் ஊற்றுக்கண்ணாகும். கடந்த சூன் 29ஆம் தேதியன்று தமிழகமெங்கிலுமிருந்து தமிழ்த் தேசிய அமைப்புகளும் உணர்வாளர்களும் அங்கு கூடினர். அக்கூட்டத்தில் மனம் திறந்த விவாதத்தின் மூலமும் சனநாயக ரீதியாகவும் தமிழர் தேசிய முன்னணி அமைக்கப்பட்டு அதன் கொள்கைப் பட்டயம் வகுக்கப்பட்டது. மேலே நீல நிறமும் கீழே மஞ்சள் நிறமும் கொண்ட கொடியும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தமிழர் தேசிய முன்னணியின் தலைவராக பழ.நெடுமாறன் ஒரே மனதுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதர நிர்வாகிகளை நியமிக்கும் அதிகாரம் அவருக்கு அளிக்கப்பட்டது.

கடந்த 1998ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இணைப்பு முயற்சி 16 ஆண்டுகளுக்குப் பின் 2014ஆம் ஆண்டு சிறப்பாக நிறைவேறியுள்ளது. இந்த 16 ஆண்டுகள் தமிழ்த் தேசியர்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டம், தடாச் சட்டம், பொடாச் சட்டம் போன்ற கொடிய அடக்குமுறைச் சட்டங்களுக்கு இரையானோம். சிறைகளில் அடைக்கப்பட்டோம். ஆனாலும், மனம் துவளாமல் தொடர்ந்துச் செயல்பட்டு இப்போது வலிமை வாய்ந்த "தமிழர் தேசிய முன்னணி' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம்.

தொல்காப்பியர் காலத்திலிருந்து பல ஆயிரம் ஆண்டுகாலமாக நடத்தப்பட்டு வரும் வடமொழி பண்பாட்டுப் படையெடுப்பில் இருந்து தமிழையும் தமிழினத்தையும் காப்பதற்கு தொடர்ந்து நடைபெற்றுவரும் போராட்டத்தின் நீட்சியே தமிழர் தேசிய முன்னணியின் தோற்றமாகும்.

தேர்தலுக்காக இம்முன்னணி தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது என்று கூறுவோர். யானையைக் கண்ட ஐந்து குருடர்களைப் போன்றவர்கள் ஆவார்கள்.

தமிழ்மொழி, தமிழினம் காக்கும் படையாகவும் அம்முயற்சியில் தன்னைத்தானே ஈகம் செய்யவும் துணிந்து களம் புகுந்திருக்கிற மானமறவரின் படைதான் தமிழ்த் தேசிய முன்னணியாகும்.

சிறுதுளிகள் இணைந்தால் பெருவெள்ளமாகும். தமிழ்த் தேசிய சிறுதுளிகள் இணைந்து தமிழ்த் தேசியப் பெருவெள்ளமாக பொங்கிப் பெருக வழிவகுப்போம்.

ஒன்றன்பின் ஒன்றாக எழும் அலைகள், அடுத்தடுத்து விரைவாகப் பரவுவதைப்போல தமிழகமெங்கும் தமிழ்த் தேசியம் பரவுமாக.

தமிழ்த் தேசியம் என்பது அனைவரையும் அரவணைத்துச் செல்வதாகும்.

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதை உணர்ந்து பெருந்தன்மையுடனும், பெருநோக்குடனும் அனைத்துத் தமிழர்களையும் இணைப்போம். முன்னேறுவோம்.

இன்னும் விலகி நிற்கிற தமிழ்த் தேசியத் தோழர்களே தயக்கம் ஏன்? நம்பிக்கையுடனும் தோழமையுடனும் உங்களை இருகரம் நீட்டி அழைக்கிறேன். வாருங்கள் தமிழ்த் தேசியத்தை மக்களிடம் கொண்டுசெல்லும் பணியில் ஒன்றிணைவோம்.

அழைத்தபோதெல்லாம் ஓடோடிவந்து தோள்கொடுத்த தோழர்களே! மொழி, இன மீட்புக்காக பல்வேறு களங்களில் கரங்கோர்த்து நின்ற நண்பர்களே! உங்களை நன்கறிந்தவன் நான். என்னை நன்கறிந்தவர்கள் நீங்கள். உங்களைவிட உண்மையான தோழர்கள் வேறு யாரும் இல்லை. இன்னும் என்ன தயக்கம்? இவ்வளவு பேர் இணைந்த பின்னும் ஒன்றிணைவதற்கு எது தடை? தயக்கத்தையும் தடையையும் புறந்தள்ளிவிட்டு தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்துச் செல்ல வாருங்கள்.

இளைஞர்களே! இளம் பெண்களே! மாணவர்களே! இது உங்களுக்கான அமைப்பு. தமிழ்த் தேசியத்தைக் கட்டி எழுப்பவும், காக்கவும் தோள் கொடுங்கள்; துணை நில்லுங்கள்.

நமது மொழி காக்க

நமது இனம் காக்க

நமது மண் காக்க

அணி திரளுவீர்!

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.