தமிழராகிய நாம் நம்மைப் பற்றிய கசப்பான ஓர் உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். அந்த உண்மை எது? நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள முடியாத ஓர் இனமாக இருக்கின்றோம் என்பதே அது. அண்மையில் நிகழ்ந்த ஈழப் பேரழிவும் அன்றாடம் நடக்கும் தமிழ் மீனவர்களின் அல்லலுமே நம் நெஞ்சில் குத்தி இதை உணர்த்துகின்றன. எட்டுக் கோடி மக்களைக் கொண்ட ஓரினம் மிக அருகிலேயே உள்ள மற்றறொரு நாட்டில் தன் இனம் திட்டமிட்டு அழிக்கப் படுகையில் அதைக் காப்பாற்ற முடியாமல் இருந்துவிட்டது என்பது உலக வரலாற்றில் முன் எடுத்துக்காட்டு எதுவும் இல்லாத மிகப் பேரவல நிகழ்ச்சியாகும்.
நம்மை அழிக்க இன்னும் எத்தனையோ தீங்குகள் சூழ்ந்துள்ளன. நமக்கு எத்தனையோ முறைகேடுகள் இழைக்கப்படுகின்றன. ஒன்றிலிருந்து கூட நாம் நம்மை விடுவித்துக்கொள்ளவில்லை. தமிழ் நாட்டில் தமிழை ஆட்சி மொழியாகவும் பயிற்று மொழியாகவும் நிலைப்படுத்திக் கொள்ளக்கூட நம்மால் இயலவில்லையே.
இந்த நிலைமையை என்னென்று சொல்வது!
"யாதும் ஊரே, யாவரும் கேளீர்'' என்ற உணர்வு அன்று முதல் இன்றுவரை தலை முறை தலைமுறையாகத் தமிழன் குருதியில் ஊதி உள்ளடங்கியிருக்கும் ஓர் உணர்வு.
அடிப்படையில் இதுவே நம் இனத்தியல்பு. எவ்வளவோ, அடிபட்டும் உதைபட்டும் மிதிபட்டும் கூடத் தமிழ் மக்களின் உள்ளுணர்வில் இனவுணர்வு அல்லது தமிழ்த் தேசிய உணர்வு கிளர்ந்தெழுதிருப்பதற்கு இந்த இனத்தியல்பே காரணம் என்பேன்.
தீமைகளை அடையாளம் கண்டு கொண்டாலும் அவற்றை எதிர்த்து வெல்லும் அளவுக்கு நாம் போராட்டக் குணம் இல்லாதவராக இருப்பதற்கு இந்த நம் இனத்தியல்பே காரணம் என்பேன்.
ஒவ்வோர் இனத்துக்கும் ஓர் இனப் பண்பு, அல்லது தேசியத் தன்மை உண்டு. நம் தமிழ் இனத்துக்கே உரிய இனப் பண்பு அல்லது தேசியத் தன்மை, தேசியத் தன்மை இல்லாதிருப்பதுதான்.
தமிழராகிய நாம் உலகுக்கு நாகரிகம் வழங்கினோம். உணர்வின் உலகத் தன்மை உடையவராய் வாழ்ந்தோம். இன்னும் உள்ளுணர்வில் அவ்வாறுதான் வாழ்ந்து வருகின்றோம். இந்த உலகில் இன்றும்கூட வேறெந்த இனத்தையும் வெறுக்காத இனம் தமிழினம். உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று வாழும் இனம் தமிழினம்.
தாங்கள் சென்று வாழும் நாடுகளில் சுற்றியுள்ள வேறு வேறினங்களோடு தமிழர் முரண்பட்டு நின்றார்கள். பகைத்துக் கொண்டார்கள் என்று ஒரு செய்தியையாவது கூற முடியுமா?
இத்தகைய நல்லவன் தமிழன். ஆனால் இந்த நல்ல தன்மைதான் இன்று அவனைப் பேரிடரில் தள்ளியுள்ளது. பேரழிவை நோக்கி இழுத்துச் செல்கின்றது.
இன்றைய உலகில் இருவேறுபட்ட தேசிய உணர்வுகளைக் காண்கின்றோம். ஒன்று ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் உரிமைக்குரல், பேரின வெறியரால் ஒடுக்கப்பட்ட சிறிய தேசிய இனங்கள் எழுச்சியுற்றுத் தங்களை நிலை நாட்டிக் கொண்டு வருவது இது. இயல்பான தேவையான தேசியம் என்று இதனைக் கூறலாம். மற்றொன்று இனவெறித் தேசியம். "என் இனமே ஆள வேண்டும். என் இனமே வலிமையில் ஓங்கி நின்றாக வேண்டும். பிற இனங்களை அடக்கியாள வேண்டும்'' என்ற வெறியோடு செயல்படும் வல்லாண்மைத் தேசியம் இது.
இந்த வல்லாண்மை இனவெறித் தேசியத்துக்கு நம் கண்முன் இன்று எடுத்துக்காட்டாய் நிற்பவை சீனத் தேசியம், இந்தியத் தேசியம், சிங்களத் தேசியம். பிற இனங்களை ஒடுக்கி அல்லது அழித்து மேலோங்கும் இந்து தேசியம் வெறுக்கத் தக்கது. உண்மையாளர்களால் ஒப்புக்கொள்ளப்படாதது.
இப்படி ஒருபுறம் விடுதலைத் தேசிய உணர்வும், மறுபுறம் பிற இனங்களை ஒடுக்கியாளும் இனவெறித் தேசிய உணர்வும் கிளர்ந்து நிற்கையில் தமிழராகிய நாம் தமிழ்த் தேசிய உணர்வு பெறாமல் போனோம் என்றால் அது காலத்தோடு ஒட்டி ஒழுகாமை ஆகிவிடும். எல்லாரும் நல்லவராக இருந்தால் நாம் நம் வீட்டுக் கதவையும் பல கணிகளையும் அடைத்து வைக்கத் தேவையில்லை. அவனவன் அகப்பட்டதைச் சுருட்டுகிறான். நம் வீட்டுக்குள்ளேயே நுழைந்து திருடுகிறான். நாம் சும்மா இருக்கலாமா? திருடனை அடித்து விரட்டத் தேவையில்லையா? மேலும் திருடன் நுழையாதபடி கதவுகளை அடைத்து வைக்க வேண்டியதில்லையா?
இன்று நாம் அடைந்துவரும் அல்லல்கள், அவலங்கள், இழப்புகள் எல்லாவற்றுக்கும் காரணம் நம் மக்கள் இன, மொழி உணர்வு, அல்லது தமிழ்த்தேசிய உணர்வில்லாதவர்களாக இருப்பதுதான்.
தமிழ்த் தேசிய உணர்வு நம்மிடம் இருந்திருந்தால் கச்சத்தீவைச் சிங்களனுக்கு விட்டுக்கொடுத்திருக்க மாட்டோம். காவிரி, பாலாற்று நீரில் நம் முறையான உரிமை இதற்குள் கிடைத்திருக்கும். முல்லைப் பெரியாற்றுச் செய்தியிலும் கேரளத்தான் நம்மை ஏய்க்கவிட்டிருக்கமாட்டோம். கூடங்குளம் அணுவுலை வராமல் தடுத்து நிறுத்தியிருப்போம். இன்று தமிழ்நாட்டிலும் தமிழ்ப் புதுவை மண்ணிலும் தமிழன் கையைவிட வேற்றுமொழிக்காரரின் கையே எல்லாத் துறைகளிலும் ஓங்கியிருக்கும்படி விட்டிருக்கமாட்டோம். இதற்குள் ஆங்கில வழிக்கல்வி ஒழிந்து மழலை வகுப்பு முதல் உயர்த் தொழில் நுட்பக் கல்லூரி வரை தமிழ் வழிக் கல்வியே மேலோங்கியிருந்திருக்கும். ஆட்சிமொழியும் நூற்றுக்கு நூறு தமிழாகவே இருந்திருக்கும்.
பிறரைக் குறைசொல்லிப் பயன் இல்லை. பிறர் நம் உரிமைகளைப் பறித்தனர் என்றால் பறிக்கும் போது பார்த்துக்கொண்டு சும்மா இருந்தது நம் குறைதானே.
அயலவன் ஊடுருவினான் என்றால் அப்படி ஊடுருவ விட்டது யார்? நாம் தாமே!
நம் உரிமைக்காக யாரோடும் சண்டைப் போட்டிருக்கத் தேவையில்லை. நம் தாய்மொழியாகிய தமிழ்வேலியை மட்டும் அழிய விடாமல் காப்பாற்றியிருந்தால் போதும், நம் உரிமைகள் நமக்குக் கிட்டியிருக்கும்.
வேலியில்லா நிலத்தில் எருமையும் பன்றியும் நுழையத்தானே நுழையும்.
தமிழில்லாத தமிழகம் வேலியில்லாத நிலம். தமிழை வேலியாக வைப்பது நம் கையிலேயே இருந்தது. நாமே தாம் தமிழ் வேலியை அழித்தோம். அதனால்தான் தமிழன் அல்லாதவனெல்லாம் உள்ளே நுழையவும், நம் தூங்கு மூஞ்சித்தனத்தைக் கண்டுகொண்டு நம் மீதே குதிரை ஏறவும் வழி பிறந்தது.
பிறன் சுரண்டினான். இன்னும் சுரண்டுகின்றான். உண்மை. ஆனால் சுரண்ட விட்டது யார்? நாம் தானே.
இந்தியா பன்மொழி நாடுதான். இதன் ஒரு பகுதியிலிருந்து மறுபகுதிக்குள் நுழையவும், இடம் வாங்கவும், வாணிகம் செய்யவும் எல்லாருக்கும் சட்டப்படி உரிமை இருக்கிறது. ஆயினும் நாம் விழிப்பாயிருந்தால், இது அளவுக்கு மீறிப் போய்விடாமல் தடுத்து நிறுத்துவதற்கும் நாம் வழிவகை செய்ய முடியும். நாம் இவற்றையெல்லாம் எண்ணிப் பார்ப்பதில்லை. மற்றும் நேரிடையாக உள்ளே நுழைபவர்களை விடக் குறுக்கு வழியில் நுழைபவர்களே மிகுதி. இக்குறுக்கு வழிகள் நம் விழிப்பின்மையால் ஏற்பட்டவை. நாம் விழிப்பாக இருந்திருந்தால் அக்குறுக்கு வழிகளை அடைத்திருக்க முடிந்திருக்கும். நாம் அவ்வாறு செய்தோம் இல்லையே.
எல்லா இழப்புகளிலும் பேரிழப்பாக ஈழத் தமிழரை அழியவிட்டுவிட்டோமே. நமக்கு உணர்ச்சி இல்லாமல் இல்லை. ஆனால் தீங்கு செய்ய வருபவனைத் தடுத்து நிறுத்துமளவுக்கு வலிமையும் ஒற்றுமையும் இல்லாமற் போய்விட்டோமே!
தமிழ் வழிக் கல்வி எவ்வளவு உயிர் நிலையானது! அதைக்கூட நடைமுறைப்படுத்த நம்மால் முடியவில்லையே.
நாம் பேசிப் பேசி என்ன பயன்? கூச்சலிட்டுக் கூச்சலிட்டு என்ன விளைவை உண்டாக்கியிருக்கிறோம்? ஒரு நாள் இருநாள் உணவு மறுப்பு போராட்டங்கள் எதிராளி மேல் ஒரு சிறு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையே.
ஓரு குறிப்பிட்ட எல்லைக்குமேல் நம் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்று நம் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாதவர்களாகத்தானே இன்றைக்கும் நாம் இருக்கின்றோம்.
காவிரி நீரில் உரிமை வேண்டியதால் கன்னடன் நம் தமிழர்களை எரித்தான். நாமோ தீக்குளிப்பதன் வாயிலாக நம்மை நாமே எரித்துக்கொள்கின்றோம். இதுவும் நம் இனத்தியல்பு. இந்த இனத்தியல்பு பிறர்க்குத் தீங்கு செய்யாமல் நம்மை நாமே அழித்துக்கொள்வது. ஆயினும் இந்த இனத்தியல்பு நமக்கிருக்கும்வரை நாம் கையில் படைதூக்கும் ஒரு தேசிய இனமாக உருவாக முடியாது.
அடிமைத்தனம் நம்மில் ஊறிப்போய் இருக்கின்றது. நம்மை அடக்கி ஆள்பவனைக் கடவுளாக நினைக்கின்றோம். அவன் நம் எதிரி, பச்சையான தமிழ்ப் பகைவன் என்பதை நம்மால் உணர முடியவில்லை.
கடந்த ஐயாயிரம் ஆண்டுக்காலத் தமிழ்நாட்டு வரலாற்றைப் பார்ப்போமானால், நம் மீது திணிக்கப்படும் அயல்தன்மைகளையெல்லாம் எதிர்பபுணர்ச்சி இல்லாமல் ஏற்றுக் கொண்டவர்களாகவே தமிழர் நாம் இருந்து வந்துள்ளோம் என்பதை அறியலாம். இதையெல்லாம் பார்க்கும் பொழுது, தன்னை முன்னேற்றிக் கொள்ள முடியாதவனாக இருப்பதுதான் தமிழனின் ஊழ் என்றே எண்ணத் தோன்றுகிறது. இதனால்தான் ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி மேற் செல்ல முடியாதவர்களாக இருந்து வருகின்றோம்.
எந்த நேர்மையான கோரிக்கையையும் நம்மால் நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை. நம் போராட்டங்கள் எல்லாம் அரைகுறைப் போராட்டங்களாக நின்று போகின்றன. உணவு மறுப்புப் போராட்டமும் அடையாளப் போராட்டமாக அமைகின்றது. ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் ஒரு நாள், இருநாள் அதோடு சரி. தமிழன் என்பவன் இவ்வளவுதான் என்று சோர்வடையும் நிலைக்கு வந்துவிட்டோம்.
ஆனால் இப்படி நாம் சோர்வடைந்து விடலாமா? "நாம் ஊழ்வினை இதுதான் "ஊழ்வினைக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாது'' என்று விட்டுவிடலாமா?
விட்டுவிடத் தேவையில்லை. நாம் நினைத்தால், நாம் அனைவரும் ஒன்று திரண்டால், ஊழையும் வென்று மேலோங்க நம்மால் முடியும். ஊழ் அன்று, ஊழையும் வென்று மேலோங்குவதுதான் இன்று நம் எதிரில் நிற்கும் குறிக்கோள்.
"ஊழையும் உப்பக்கம் காண்பர், உலைவின்றித் தாழாது ஊஞற்றுபவர்''
என்று வள்ளுவர் கூறுகின்றாரே. நாம் ஏன் நம் ஊழை - தமிழ்ப்பொது மக்களின் இன, மொழி உணர்வற்ற தன்மையை - மாற்றி அவர்களைத் தமிழ்த் தேசிய உணர்வுடையவராகச் செய்ய முடியாது?
ஏன் இவ்வாறு வற்புறுத்திக் கூறுகின்றேன் என்றால், இதுவரை நாம் நடத்திவந்த போராட்டங்கள் எவையும் வெற்றிபெறவில்லை. முறைகேடுகள் ஒன்றன்பின் ஒன்றாய் வந்து குவிந்தவண்ணம் உள்ளன. மக்களிடையே கடுகளவு எழுச்சியும் ஏற்படவில்லை என்பதால்தான். இந்த மன நிலைதான் நம் ஊழ். இந்த மனநிலையை மாற்றுவதுதான் ஊழையும் உப்பக்கம் காணுதல்.
எனவே, இதுவரை நாம் மேற்கொண்டு வந்திருக்கும் வழக்கமான மன நிலைகள், மனவியற் போக்குகள், அவற்றை ஒட்டி அமைந்த போராட்ட முறைகள் எல்லாம் செல்லுபடியாகாதவை என்று தள்ளிவிட்டுப் புதிய வலிவுடன், புதிய ஒற்றுமையுடன் அனைவரும் ஒருங்கு திரண்டு புதிய முறையில் நம் வினைப்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
இடையறாக் கூட்டங்கள், இடையறாத கருத்து விளக்க நிகழ்ச்சிகள், இடையறாப் பரப்புரைகள் - இவற்றின் வாயிலாக உறங்கிக் கிடக்கும் தமிழர்க்கு விழிப்பு உண்டாக்கியே தீரல் வேண்டும். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகருமே
தமிழன் இழந்து போன தமிழ்த் தன்மையை, இனப் பண்பை, மொழி உணர்வை பொருளியல், வாணிக மேம்பாட்டை மீண்டும் அவன்பால் உருவாக்குவதற்கான பல்வேறு வினைப்பாடுகளில் போராட்ட உணர்வுடன் இறங்குவதே நாம் மேற்கொள்ளும் முதற்பணியாக இருத்தல் வேண்டும்.
சுற்றியிருக்கும் பிற இனங்களிடையே ஏற்பட்டிருப்பது போன்று உள்ளிருந் தெழும் இயற்கையான இன எழுச்சியைத் தமிழன்பால் உண்டாக்க முடியாவிட்டாலும், உண்மையாகவும் ஊக்கத்தோடும் பாடுபடுவோமானால் பாடுபட்ட வரைக்கும், பட்ட பாட்டுக்குக் கூலி கிடைக்காமற் போகாது. தமிழ் மக்கள் தங்கள் ஊழினை வென்று மேலோங்குதல் உறுதி.
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய் வருத்தக் கூலி தரும். |