நீதிதேவதை சிரிக்கிறாள் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2014 13:51

"காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கட்சியின் நிர்ப்பந்தம் காரணமாக பதவி நீடிப்பு வழங்கப்பட்டது'' என உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால், தி.மு.க. தலைவர் கருணாநிதி அவசரம் அவசரமாக அவருக்குப் பதில் அறிக்கை வெளியிட்டார். "முரண்பாடுகளின் மொத்த உருவம் மார்க்கண்டேய கட்ஜு. காங்கிரஸ் ஆட்சியில் பதவிகளைப் பெற்றுக்கொண்டு தற்போது அந்த ஆட்சி முடிந்தவுடன் அதன்மீதே குறைசொல்லுபவர் எப்படிப் பட்டவர் என்பதை நாடறியும். கட்ஜுவின் கடந்த கால நடவடிக்கைகளை ஆராய்ந்து பார்க்கும்போது முன்னுக்குப்பின் முரணாகப் பேசக்கூடியவர். நீதிபதிக்கே உரிய நடுநிலை தவறி பொறுமை இழந்து கருத்துச் சொல்லக்கூடியவர். கோபக்காரர். காலையில் கூறியதையே மாலையில் மறுப்பவர்'' என்றெல்லாம் மிகக் கடுமையாகச் சாடி கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"கட்ஜுவின் குற்றச்சாட்டு கண்டு கோபமும் ஆத்திரமும் கருணாநிதிக்கு வருவது ஏன்?' என்ற கேள்விக்கு உரிய விடையை காங்கிரஸ் அரசின் சட்டத்துறை அமைச்சராக இருந்த பரத்வாஜ் செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலின் மூலம் நாம் புரிந்துகொள்ள முடியும்.

சூலை 23ஆம் தேதி பரத்வாஜ் பின்வருமாறு கூறினார். "சர்ச்சைக்குள்ளான கூடுதல் நீதிபதிக்கு எதிராக மத்திய உளவுத்துறை விசாரணை நிலுவையில் இருந்த காலத்தில்தான் பணிநீடிப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முக்கியக் கட்சியாக அப்போது தி.மு.க. இருந்தது. மத்திய அமைச்சரும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் என்னைச் சந்தித்தனர். கூடுதல் நீதிபதிக்குப் பணி நீடிப்பு வழங்குவதை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு விரும்பவில்லை. மேலும் அக்கூடுதல் நீதிபதி தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை தனிமைப்படுத்த கட்ஜு முயல்கிறார்'' என அவர்கள் குற்றம் சாட்டினர்.

"எனவே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லஹோதி அவர்களுக்கு அலுவல் பூர்வமாக நான் எழுதிய கடிதத்தில் சம்பந்தப்பட்ட கூடுதல் நீதிபதிக்குப் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்'' என கேட்டுக்கொண்டேன்.

அதாவது, இதன்மூலம் கீழ்க்கண்ட மூன்று உண்மைகள் சம்பந்தப்பட்டவர்களால் ஒப்புக்கொள்ளப் பட்டிருக்கின்றன.

முதலாவதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான, கூடுதல் நீதிபதியான அசோக்குமாருக்கு பணிநீடிப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கட்ஜு விரும்பவில்லை.

2. தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சரும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும், மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜை சந்தித்து நீதிபதி அசோக் குமாருக்கு பதவி நீடிப்பு வழங்கவேண்டும் என வற்புறுத்தினர்.

3. அதன்படி பரத்வாஜும் நீதிபதி அசோக்குமாருக்கு பதவி நீட்டிப்பு வழங்குமாறு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி லகோதிக்கு அலுவல்பூர்வமாகக் கடிதம் எழுதியிருந்தார்.

மேற்கண்ட உண்மைகளின் மூலம் நீதிபதி அசோக்குமாருக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என கூட்டணிக் கட்சியான தி.மு.க. தரப்பில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு, அதற்கு மத்திய அரசும் பணிந்து நீதிபதி அசோக்குமாருக்குப் பணி நிரந்தரம் அளித்துள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அப்போதைய பிரதமரான மன்மோகன்சிங் "இந்தப் விவகாரத்தில் நிகழ்ந்த உண்மைகளை பரத்வாஜ் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். அதைத்தவிர கூடுதலாகத் தெரிவிக்க எதுவும் இல்லை'' என்று கூறி பரத்வாஜ் கூறியதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

தற்போதைய பா.ஜ.க. அரசின் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நாடாளுமன்றத்தில் கீழ்க்கண்டவாறு கூறியிருக்கிறார்.

"2003 ஆம் ஆண்டு நீதிபதிகளை நியமிப்பதற்கான உச்சநீதிமன்ற ஆணையம் நீதிபதி அசோக்குமாருக்கு பதவி நிரந்தரம் வழங்குவது குறித்து பல தயக்கங்களைக் கொண்டிருந்தது. எனவே இது தொடர்பாக பல விசாரணைகளை அவர்கள் மேற்கொண்டார்கள். இறுதியாக சம்பந்தப்பட்ட நீதிபதியை நிரந்தரமாக்குவதில்லை என ஆணையம் முடிவு செய்தது. ஆனாலும், நீதிபதி அசோக்குமாரின் பதவியை நிரந்தரம் செய்வது குறித்த பிரச்சினை ஏன் மேலும் ஆராயப்படவில்லை என பிரதமர் மன்மோகன்சிங்கின் அலுவலகத்திலிருந்து விளக்கம் கேட்கப்பட்டது. எனவே மீண்டும் நீதிபதிகளை நியமிக்கும் ஆணையம் மறுபடியும் கூடி, அவரை பதவி நிரந்தரம் செய்வதில்லை என முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து சட்டத்துறை அமைச்சரின் சார்பில் நீதித்துறையிலிருந்து அனுப்பப்பட்ட குறிப்பிற்கிணங்க மீண்டும் ஆணையம் கூடி அவருக்கு பதவி நீட்டிப்புத் தர முடிவு செய்தது. தற்போது சம்பந்தப்பட்ட நீதிபதியும் அவரை நிரந்தரம் செய்த ஆணையத்தின் நீதிபதிகளும் தாங்கள் வகித்த பதவிகளிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டனர்'' என்று கூறினார்.

இதற்கிடையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளாக இருந்த லஹோதி, பாலகிருஷ்ணன் ஆகியோர், இப்பிரச்சினையை இவ்வளவு நாட்கள் கழித்து எழுப்பிய கட்ஜுவுக்கு உள்நோக்கம் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

இவர்களுக்குப் பதில் அளித்து கட்ஜு விடுத்துள்ள அறிக்கையில் பின்வரும் 6 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

1. சென்னை உயர்நீதி மன்றக் கூடுதல் நீதிபதியாக இருந்தவர் மீதான புகார்கள் தொடர்பாக நான் முதன் முதலில் சென்னையில் இருந்து லஹோதிக்கு கடிதம் எழுதியதுடன், அக்கடிதத்தில் அந்தக் கூடுதல் நீதிபதி தொடர்பாக ரகசிய உளவுத்துறை விசாரணை அறிக்கை பெறுமாறு வலியுறுத்தினேன். மேலும், தில்லியில் லஹோதியை சந்தித்து எனது கோரிக்கையை மீண்டும் வற்புறுத்தினேன். அது உண்மையா, இல்லையா?

2. எனது கோரிக்கையின்படி அந்தக் கூடுதல் நீதிபதி தொடர்பாக ரகசிய உளவுத் துறை விசாரணைக்கு லஹோதி உத்தரவிட்டது உண்மையா இல்லையா?

3. தில்லியில் லஹோதியை நேரில் சந்தித்த பிறகு சென்னை திரும்பிய என்னை, அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நான் தெரிவித்த புகார்கள் அனைத்தும் உண்மை என ரகசிய உளவு விசாரணையில் தெரிய வந்ததாகக் குறிப்பிட்டது உண்மையா, இல்லையா?

4. உளவு அறிக்கையில் கூடுதல் நீதிபதிக்கு எதிரான தகவல்கள் இடம் பெற்றிருந்ததால், நீதிபதிகள் தேர்வுக் குழுவுக்கு தலைமை தாங்கிய அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியான லஹோதி, அக் குழுவில் இடம் பெற்றிருந்த நீதிபதிகள் சபர்வால், ரூமா பால் ஆகியோர் மத்திய அரசுக்கு அனுப்பிய பரிந்துரையில், கூடுதல் நீதிபதிக்குப் பணி நீட்டிப்பு வழங்க வேண்டாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்ததே? அது உண்மையா, இல்லையா?

5. மேற்கண்ட பரிந்துரையை செய்த பிறகு, தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த மற்ற இரு நீதிபதிகளைக் கலந்தாலோசிக்காமல் லஹோதி தன்னிச்சையாக மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், கூடுதல் நீதிபதிக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு அளிக்கலாம் என்று பரிந்துரை செய்தது உண்மையா, இல்லையா?

6. மத்திய உளவு அறிக்கையில் முரண்பட்ட தகவல் இடம் பெற்ற பிறகும், ஊழல் புகாருக்கு ஆளான நீதிபதிக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்க லஹோதி பரிந்துரை செய்தது ஏன்? என்று கட்ஜு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அவரின் கேள்விகளுக்கு நீதிபதிகள் லஹோதி, பாலகிருஷ்ணன் ஆகியோர் என்ன பதில்கள் அளிக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால், இந்தக் கேள்விகள் மக்களிடம் பல உண்மைகளைக் கொண்டு போய் சேர்த்திருக்கின்றன. நமது நீதிபதிகள் நியமனத்திலும், அவர்களின் பணியினை நிரந்தரப்படுத்துவதிலும் அரசியல்வாதிகளின் தலையீடு இருந்திருக்கிறது என்பது உறுதியாகியிருக்கிறது. அரசியல்வாதிகளின் பரிந்துரையினால் நீதிபதி பொறுப்பை ஏற்றவர்கள் அளித்த தீர்ப்புகளின்மீதே மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது.

இத்தீர்ப்புகளுக்குப் பின்னணியிலும் அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கத்தான் செய்திருக்கும் என மக்கள் நினைக்கிறார்கள். பல அரசியல்வாதிகள் தங்களுடைய பதவிக் காலத்தில் புரிந்த ஊழல்களுக்காக அவர்கள்மீது தொடரப்பட்ட வழக்குகளில் தண்டிக்கப்படாமல் தப்புவதன் மர்மமும் அனைவருக்கும் புரிந்திருக்கிறது. நீதிதேவதை இதைக் கண்டு சிரிக்கிறாள். தவறு இழைக்கும் நீதிபதிகளைப் பார்த்தா? அவர்களுக்குத் துணைநிற்கும் அரசியல்வாதிகளைப் பார்த்தா? யாரைப் பார்த்து நீதி தேவதை சிரிக்கிறாள்?

நீதிதேவதையின் இந்தச் சிரிப்பு வேறு சில கேள்விகளை எழுப்பியுள்ளன. அவற்றுக்குப் பதில் அளிக்க வேண்டிய கடமை தி.மு.க.விற்கு உண்டு.

1. தனிநபரைக் காப்பாற்றவும் அவரது பதவியை நிரந்தரம் செய்யவும் மத்திய அரசுக்கு நெருக்குதல் தந்து அதை நிறைவேற்றிக்கொண்ட தி.மு.க. 2009ஆம் ஆண்டில் இலங்கையில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்படும் அபாயகரமான காலக்கட்டத்தில் இதைப் போல மத்திய அரசுக்கு நெருக்குதல் தந்து போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி அந்த மக்களைக் காப்பாற்றியிருந்திருக்க முடியுமே? அதை ஏன் செய்யவில்லை.

2. நீதிபதி அசோக் குமார் ஆந்திரத்திற்கு மாற்றப்பட்டது ஏன்? ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன் கொலை வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரி குற்றம் சாட்டப்பட்டு இருந்தார். இந்த வழக்கிலிருந்து அழகிரியைக் காப்பாற்றும் நோக்கத்துடன் நீதிபதி அசோக்குமார் ஆந்திரத்திற்கு மாற்றப்பட்டாரா?

3. ரூ.1,70,000 கோடி பணம் சூறையாடப்பட்ட 2ஜி ஊழல் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில்தான் இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்களை சிங்கள இராணுவம் சுற்றிவளைத்துக் கொண்டது. அவர்களின் ஓலக்குரலுக்கு செவிசாய்த்து 1,40,000 தமிழர்களை காப்பாற்றுவதைவிட 2ஜி பண பேரம் முக்கியமானதாக சம்பந்தப்பட்டவர்களால் கருதப்பட்டதா?

"என் கேள்விக்கு என்ன பதில்?'' என நீதி தேவதை கேட்கிறாள்?

நன்றி : தினமணி

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.