எளிய, இனிய, அரிய, ஆற்றல்மிக்க, நல்ல பல, ஈடு இணையற்ற, ஏற்றமிகு ஒப்பற்ற, ஓராயிரமாயிரம் தமிழ்ச் சொற்கள் இருக்க, மொழி மரபு மீறி, பிற மொழிச்சொற்கள், தேவையில்லாமல்சேர்ந்து, மொழிக் கலப்படம் செய்து, மொழியை அழிக்காதீர்கள், சொற்களை அழிப்பது, அந்த மொழியின் வரலாற்றையே அழிப்பதற்கு ஒப்பாகும். சொற்களே மொழியின் வரலாற்றுப் பெட்டகமாகும், குமுதம் இதழ் மரபுமீறி, இதுபோன்று ஆங்கிலச் சொற்களை ஏராளமாகப் பயன்படுத்துத் தொடங்கியிருக்கிறது.
குமுதம் மிக அதிகமாக விற்பனையாகும் இதழ் என்பதால், மக்களிடம் கலப்பட நோய் பரவி, திரைப்படம், தொலைக்காட்சி போன்ற அனைத்து சாதனங்களிலும், துறைகளிலும் நல்ல தமிழ் மொழிச் சொற்கள் மறைந்து வருகின்றன. இந்த நோய் விரைவாக மேலும் பரவி, மொழியை அழிக்கும் முன், அதனை தடுத்து நிறுத்தும் கடமை உங்களுக்கு இருக்கிறது. ஏனெனில் இதழ்களின் எதிர்காலம் தமிழ்மொழியின் எதிர்காலத்தோடு பின்னிப் பிணைந்துள்ளன. அருள்கூர்ந்து ஆவன செய்யுங்கள் என அடிபணிந்து வேண்டிக் கொள்கிறேன்.
எடுத்துக்காட்டாக, குமுதம் 14-01-2002 இதழில் வந்துள்ள கட்டுரையை நகல் எடுத்து அனுப்பியுள்ளேன். அதில் ஜீன்ஸ், ரெட், லவ்மேரேஜ், 12பி, 97 எல்.எஸ்.எஸ் எனப் பல தமிழ் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களுக்கும் தொற்றியிருக்கும் வியாதி, நந்தா குழுவினருக்கும் தொற்றிவிட்டன என்று தொடங்கி, தமிழ் மக்களுக்கு தமிழ் மொழியில் படத்தை தருபவர்களுக்கு எதற்கு இந்த ஆங்கில அலட்டல் என்று கேட்டு, ஒரு வேளை அமெரிக்காவில் ஒட்ட வேண்டிய சுவரொட்டிகளை இங்கே ஒட்டிவிட்டார்களோ என கிண்டல் செய்து கூறியிருக்கும் குமுதம், குழந்தையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவது போல அதே இதழிலேயே 230க்கும் மேற்பட்ட தமிழ் ஆங்கிலச் சொற்களை மரபு மீறி, அப்படியே எழுதி, நோயை வளர்த்து வருகிறது. அதோடு ஜங்ஷன் என்ற புதிய இதழை தொடங்க இருக்கிறது. ஏற்கனவே ரிப்போர்ட்டர் வந்து கொண்டிருக்கிறது.
குமுதம் மட்டுமல்ல, தமிழிசை இயக்கத்திற்காகப் போராடிய ரா. கிருஷ்ணமூர்த்தி நடத்திய கல்கி ஆங்கிலக் கலப்பிற்கு ஆதரவு தருகிறது. எஸ். எஸ். வாசனின் ஆனந்தவிகடனும் குமுதத்துடன் போட்டி போடுகிறது. திட்டமிட்டு தமிழோடு ஆங்கிலத்தைக் கலந்து தமிங்கிலம் என்ற புதுமொழியை உருவாக்க அரும்பாடு படுகிறார்கள்.
பிற மொழிச் சொற்களை இதுபோன்று கலப்பதால், இச்சொற்களுக்கு ஈடான அரிய, இனிய, எளிய, ஆற்றல் மிக்க தூய நல்ல பல தமிழ்ச் சொற்கள் மறைந்து வருகின்றன.மொழியும் கடினமுறுகிறது. தமிழின் அளவுக்கு மீறி வடமொழிச் சொற்களைக் கலந்து எழுதிய மணிப்பிரவாளம் என்ற நடை தோன்றி, மொழியைக் காப்பாற்றினார், ஆனால் இந்த அளவுக்கு அதிகமாக ஆங்கிலச் சொற்கள் கலந்த தமிங்கலத்தில், மொழி அழியும் நிலையிலிருந்து காப்பாற்றஎவரும் தோன்றவில்லை. தமிழ் வளர்ச்சியே தமிழ் இதழ்களின் வளர்ச்சி என்ற நோக்கில் தமிழ் இதழ் ஆசிரியர்கள்தான் மொழியைக் காப்பாற்ற வேண்டும்.
மொழிமரபு மீறி, தேவையில்லாமல், அளவுக்கு மீறி பிற மொழிச் சொற்களை கலப்பதால்,மொழி அழிந்துபோகும் என்பதை, மொழி வரலாற்றுச் சான்றுகளுடன் மொழி ஆய்வாளர் அனைவரும் உறுதியாக கண்டுபிடித்து உரைக்கிறார்கள். ஆங்கில மொழியில்கூட அதிகமாக மொழிக் கலப்பை தடுத்து நிறுத்த தூய ஆங்கிலக் கழகம் என்ற இயக்கம் 1918லேயே தொடங்கப்பட்டு செயலாற்றி வருகிறது. இதுபோன்று அமைப்பு நம்மிடம் இல்லை.
ஆங்கிலம் பிற மொழிச் சொற்களை ஏற்றுக் கொண்டுதான் வளர்ந்தது என்று உரைப்பது உண்மையான வரலாறு அல்ல. ஐரோப்பாவில் முதலில் கிரேக்கம், இலத்தீனம், பிரெஞ்சு , செருமன் என்ற மொழிகளில் அறிவியல் வளர்ந்த நேரத்தில் ஆங்கில நாட்டில் பிரெஞ்சு மொழி ஆட்சி மொழியாக இருந்தது. ஆங்கிலம், அறிவியல் ஆட்சி மொழியாக முடியாது என எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் 1600 ஆண்டில், ஆங்கில அறிஞர்கள் அயராது உழைத்து கலைச் சொற்களை உருவாக்கி, ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக்கி, அறிவியல் வளர்ந்து, மற்ற நாடுகளை மிஞ்சி வளர்ந்து உலகத்தை ஆளும் நிலை பெற்று, இன்று உலக மொழியாக மாற்றி இருக்கிறார்கள். ஆனால் ஆங்கிலம் ஒருசொல்லைக்கூட தேவையில்லாமல் மரபுமீறி உருவாக்கவே இல்லை. கலைச் சொற்கள் மட்டுமே கடன் பெற்றது. இதனை எவரும் மறுக்கவே முடியாது . அதே நேரத்தில் ஆங்கிலோ சாக்ஷன் என்ற மொழியின் அடிப்படை சொற்களை மற்ற இலக்கியம், வாழ்க்கையியல் போன்றவற்றிற்கு பயன்படுத்தியது. அது போன்ற மொழி இலக்கியம்தான் உலகப் புகழ் பெற்றன. தமிழில் திருக்குறளில் உள்ளது போன்று தன் மொழிக்கே உரிய சொற்களால், உருவான இலக்கியமே நின்று நிலைத்து புகழ்பெறும். ஆங்கிலத்தைப் போல் தமிழ்மொழியை வளர்க்க தமிழ் அறிஞர்கள் அறிவியலார் ஆர்வமுடன் முன் வந்து ஆட்சி மொழிநிலையை பெற்றுவிட்டால்தான் தமிழ்மொழி தழைத்து வளரும். அதுவரை தமிழ்மொழிக்கு தமிழ் இதழ்கள் பாதுகாப்புத் தரவேண்டும். ஏனெனில் இதழ்களின் எழுத்து மொழி கலப்படமோ மிகவும் ஆபத்தானது. அது நின்று நிலை பெற்றுவிடுவதால் வருங்காலத்தவர் ஆங்கிலம் இல்லாமல் தமிழ் வாழ முடியாது என்று கூறுவார்கள். இன்று வடமொழி இல்லாமல் தமிழ் வாழ முடியாது என்பது போல இது இருந்துவிடும்.
அளவுக்கு மீறிய வளர்ச்சி பெற்ற ஆங்கிலத்தில் வெளிவரும் உலகத்திலேயே அதிகமாக விற்பனையாகும் ரீடர்ஸ் - டைஜஸ்ட் என்ற இதழ் பல இலக்கம் பணம் கொட்டும் விளம்பரத்தையும் விட்டுவிட்டு, இரண்டு முழுப்பக்கம் உங்கள் சொற்களை அறியுங்கள் என்ற ஆங்கிலச் சொற்களுக்கு விளக்கம் தருகிறது. ஏனெனில் ஆங்கிலம் வளர்ந்தால்தான் இதழும் வளரும் என்று அவர்கள் அறிந்து இருக்கிறார்கள். தமிழ் இதழ்கள் ஒரு பக்கம்கூடமொழிக்கு ஒதுக்காவிட்டாலும் போகட்டும் தமிழை மரபுமீறி எழுதாமல் இருந்தாலே தமிழுக்கு பெரும் தொண்டு செய்தவர்கள் ஆவார்கள்.
ஆயிரமாயிரம் ஆண்டுகாலமாக அழியாமல் இருக்கும் உலகில் மூத்த மொழிகளில் முதன்மையானது தமிழ். அழியாமல் இருந்து வருவதற்குரிய காரணத்தை ஆராய்ந்தால் பல உண்மைகள் விளங்கும். |