"இந்தியாவிலிருந்து சென்று குடியேறியவர்கள் என்பதை இலங்கைத் தமிழர்கள் மறந்துவிட்டு, இலங்கையராகத் தங்களைக் கருதி அந்த நாட்டின் சட்டங்களுக்கும் அரசியல் அமைப்பிற்கும் உட்பட்டு நடக்க வேண்டும். வடக்கு மாநிலத்திற்கு போலீசு அதிகாரங்கள் வேண்டுமென்று அவர்கள் கேட்கக்கூடாது.
ஈழத் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முற்படும்போது இலங்கையின் இறைமையை இந்தியா மதிக்க வேண்டும்'' என அவ்தாஷ் கவுசல் என்பவர் கூறியிருக்கிறார்.
இலங்கையில் காணாமல் போனவர்கள் மற்றும் போர்க் குற்றங்கள் ஆகியவற்றை விசாரிக்க இலங்கை குடியரசுத் தலைவர் இராசபக்சே நியமித்துள்ள ஆணையத்தின் ஆலோசகராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். என்ன காரணத்தினால் இந்தியாவைச் சேர்ந்த இவரை தனது நாட்டு ஆணையத்தின் ஆலோசகராக இராசபக்சே நியமித்தார் என்பது இப்போது எல்லோருக்கும் புரிகிறது. அவர் மேலும் கூறியிருப்பதாவது, "இலங்கை அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தலாம்; அவர்களுக்கு அறிவுரை கூறலாம். ஆனால், இப்படித்தான் செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது. இந்தியாவும் இலங்கையும் தத்தமது நாட்டின் இறைமையை மதிக்க வேண்டும்.
இந்தியாவில் உள்ள பிரிவினைவாதிகள் குறித்து இலங்கை நமக்கு அறிவுரை வழங்கினால் நாம் என்ன நினைப்போம்? எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றக்கூடாது. தமிழர் பிரச்சினையைத் தீர்க்க இலங்கைக்கு நாம் உதவ வேண்டும். மூத்த அண்ணாவாக நாம் நடந்துகொண்டு இலங்கைக்கு அழுத்தம் அளிக்கக்கூடாது. நமது நிலையை அவர்களுக்கு விளக்கிக் கூறி ஏற்கும்படி செய்ய வேண்டும். 13வது சட்டத் திருத்தத்தை ஏற்று மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும்படி இலங்கையை வேண்டிக்கொள்ள வேண்டும்.''
இலங்கையில் மலைத் தோட்டங்களில் வாழ்பவர்கள் இந்தியாவிலிருந்து சென்ற இந்தியத் தமிழர்கள் என்பதும் இலங்கையில் வடக்கு-கிழக்கு மாநிலங்களில் வாழ்பவர்கள் அந்த நாட்டின் பூர்வீக குடிகள் என்பதை தெரிந்துகொள்ளாதவராக இவர் இருக்கிறார் என்பது அம்பலமாகி இருக்கிறது. இவரைப் போன்றவர்கள் இராசபக்சேவிற்கு எத்தகைய ஆலோசனைகள் வழங்குவார்கள் என்பதும் இதன்மூலம் தெரிகிறது.
ஐ.நா. மனித உரிமை ஆணையம் அமைத்த விசாரணைக் குழுவிலிருந்து தப்புவதற்காக தானே ஒரு விசாரணைக் குழுவை இராசபக்சே அமைத்து உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவச் செய்யும் முயற்சிகளுக்கு அவ்தாஷ் கவுசல் துணை போகிறார்.
அந்நிய நாட்டின் அரசு அமைக்கும் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமானால் இந்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது? ஈழத் தமிழர் பிரச்சினையைக் குறித்து எதுவும் தெரியாத ஒருவரை இந்தக் குழுவில் நியமிக்க உதவிய இந்திய அரசை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஏற்கெனவே சுப்பிரமணிய சுவாமி, சேஷாத்திரி சாரி ஆகியோர்கள் இலங்கைக்குச் சென்று இராசபக்சேவுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டதையும், இப்போது அவ்தாஷ் கவுசல் பேசியிருப்பதையும் பார்க்கும்போது இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிராகவே செயல்படுகிறது என்பதை தமிழர்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். |