பழைய பூதம் போய் புதிய பூதம் வரக்கூடாது - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 09 செப்டம்பர் 2014 12:00

சுதந்திர நாள் அன்று தில்லி செங்கோட்டையில் கொடியேற்றி வைத்து பிரதமர் மோடி பேசும்போது, திட்டக்குழுவை கலைத்துவிட்டு புதிய அமைப்பை உருவாக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். மாற்றாக அமைக்கப்படும் புதிய அமைப்புக் குறித்து மக்களின் யோசனைகளை பிரதமர் மோடி கேட்டிருக்கிறார்.


1938-ஆம் ஆண்டு ஹரிபுராவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைமையேற்றுப் பேசிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தனது உரையில் “சுதந்திர இந்தியாவின் முதலாவது பணியாக தேசியத் திட்டக்குழு ஒன்றினை அமைக்கவேண்டும் என்ற யோசனையை முதன்முதலாகத் தெரிவித்தார். தெரிவித்ததோடு அவர் நிற்கவில்லை. அக்குழுவின் முதலாவது தலைவராக ஜவஹர்லால் நேருவை நியமித்தார். இக்குழுவில் பொருளாதாரம், வேளாண்மை, தொழில், கல்வி, பொறியியல், கட்டுமானம் போன்ற பல துறைகளில் தலைசிறந்த நிபுணர்கள் அங்கம் வகித்தனர்.

நாடு விடுதலை பெறுவதற்கு முன்பாக அமைக்கப்பட்ட இக்குழு வகுத்த திட்டங்கள் பிற்காலத்தில் சுதந்திர இந்தியாவில் 1951-ஆம் ஆண்டில் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையில் அமைக்கப்பட்ட திட்டக் குழுவினால் ஏற்கப்பட்டு, அடுத்தடுத்து செயல்படுத்தப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலம் நிறைவேற்றப்பட்டன.

திட்டக் குழுவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் நேருவே அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அவர் காலத்தில் வி.டி. கிருஷ்ணமாச்சாரி, அசோக் மேத்தா போன்றவர்கள் துணைத் தலைவர்களாகவும், ஜே.சி. குமரப்பா, பேராசிரியர் மகாலனோபிஸ், பீதாம்பர்பந்த் போன்ற சிறந்த நிபுணர்களும் இடம்பெற்றிருந்தனர். திட்டமிடுதல், கொள்கை வகுத்தல், நிறைவேற்றல் போன்றவற்றில் சிறந்த வழிகாட்டும் நெறிமுறைகளை இவர்கள் உருவாக்கினார்கள். அரசின் துணை அமைப்பாக திட்டக்குழு செயல்படாமல் தன்னிச்சையான ஆலோசனை வழங்கும் ஒரு அமைப்பாக செயல்பட்டது.

ஆனால், 1970-க்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின்போது திட்டக்குழு மத்திய அரசின் ஒரு உறுப்பாக ஆக்கப்பட்டது. மத்திய அமைச்சரவையில் திட்டத்துறை அமைச்சர்களாக இருந்தவர்கள் திட்டக் குழுவுக்குத் துணைத் தலைவர்களாக ஆக்கப்பட்டார்கள். இதன் விளைவாக திட்டக்குழுவின் சுயாட்சித் தன்மை படிப்படியாக மறைந்தது. அதனுடைய நம்பகத்தன்மையும், திட்டங்களைச் சுதந்திரமாக வகுக்கும் முறையும் கேள்விகளுக்கு உரியனவாயின.

குறிப்பாக, காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும், ஜனதாதள ஆட்சிக் காலத்திலும் திட்ட அமைச்சர்களாக இருந்த டி.ஆர். காட்கில், மது தண்டவதே ஆகியோர் திட்டக்குழுவின் துணைத் தலைவர்களாக இருந்தாலும், திட்டங்களைப் பொறுத்தவரையில் துணைப் பிரதமர்களாகவே செயல்பட்டார்கள். அவர்களைப் போலவே திட்டக்குழுவும் நாளுக்குநாள் எல்லையற்ற அதிகாரம் படைத்த குழுவாக மாறியது.

அரசியல் சட்டப்படி குடியரசுத் தலைவரால் அமைக்கப்படுகிற குழு நிதிக்குழுவே ஆகும். பல மொழிகளும், பண்பாடுகளும் கொண்ட 28 மாநிலங்களையும், ஏழு ஒன்றியப்பகுதிகளையும் உள்ளடக்கிய இந்திய நாட்டில் பொருளாதார சமநிலை ஏற்படுவதற்காக அமைக்கப்பட்டதே நிதிக்குழுவாகும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அமைச்சரவையின் பரிந்துரையின்பேரில் நிதிக்குழுவை குடியரசுத் தலைவர் அமைப்பார். நிதிக்குழுவை நியமிப்பதிலும், அது பரிசீலனை செய்யவேண்டிய விடயங்கள் எவை என்பதைத் தீர்மானிப்பதிலும் மாநில அரசுகளுக்கு எவ்விதப் பங்கும் இல்லை.

இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தை சிதறடித்த மற்றொரு முக்கிய அமைப்பு திட்டக்குழுவாகும். அரசியல் சட்ட ரீதியாகவோ, நாடாளுமன்ற ரீதியாகவோ திட்டக்குழு அமைக்கப்படவில்லை. பிரதமராக நேரு இருந்த காலத்தில் மத்திய அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின்படி திட்டக்குழு அமைக்கப்பட்டது. திட்டக்குழுவுக்கு வரம்பற்ற அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. திட்டங்களை வகுக்கவும், மாநிலங்களின் திட்டங்களுக்காக மானியங்களையும், கடன்களையும் அளிக்கவும் திட்டக்குழுவுக்கு அதிகாரம் உண்டு. மாநிலங்கள் வகுக்கும் திட்டங்களுக்கு மத்திய திட்டக்குழுவின் அங்கீகாரம் அவசியம். மாநில அரசுத்துறைகளில் நிறைவேற்றப்படும் திட்டங்களையும் மத்தியத் திட்டக்குழு மேற்பார்வை இடுகிறது. இத்தனை அதிகாரங்களும் அதற்கு உண்டு. ஆனால் இக்குழுவிற்கு அரசியல் சட்ட அங்கீகாரம் கிடையாது என்பது திடுக்கிடும் உண்மையாகும்.

மாநிலங்களின் அதிகாரத்திற்குட்பட்ட துறைகளான கல்வி, பாசனம், சாலை அமைத்தல், கால்நடை வளர்ப்பு, கூட்டுறவு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கான கடன்கள், மானியங்கள் போன்றவற்றிற் கான நிதியைத் திட்டக்குழு முடிவு செய்த பரிந்துரையின்படி மத்திய அரசு வழங்குகிறது. எனவே மாநிலங்களுக்குட்பட்ட துறைகளிலும் மறைமுகமாக மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துகிறது.

இது குறித்து நிர்வாக சீர்திருத்தக்குழு அமைத்த செதல்வாட் ஆய்வுக்குழு பின்வருமாறு கூறியுள்ளது. "திட்டக்குழுவின் இத்தகைய செயல்களின் விளைவாக அரசியல் சட்டம் வகுத்த மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல், இரண்டிற்கும் பொதுவான பட்டியல் ஆகியவை திட்டம், திட்டமில்லாதவை என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன. அரசியல் சட்டம் வழங்கிய மூன்று துறைகளின் அதிகாரங்கள் ஒரே அச்சில் வார்க்கப்பட்டு மத்திய அரசாங்கத்தின் பொறுப்பில்? விடப்பட்டுள்ளன. இதன் விளைவாக மாநிலங்கள் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட துறைகளிலும், பொதுத் துறைகளிலும் தங்களுக்குள்ள அதிகாரங்களை அறவே இழந்துவிட்டன.'

1958-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தின் மதிப்பீட்டுக்குழு தனது அறிக்கையில் திட்டக்குழு இயங்கு முறைகள் குறித்து முற்றிலுமாக மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கூறியது. திட்டக்குழு ஓர் ஆலோசனைக் குழுவாக இயங்கவில்லை. மற்றொரு அதிகார அமைப்பாகவும், இந்திய அரசின் ஒரு பகுதியாகவும் அது உருவாகிவிட்டது.

திட்டக்குழுவின் நடவடிக்கைகளின் விளைவாக மாநிலங்கள் தங்களின் சுயாதிக்கத்தை இழக்க நேரிட்டுள்ளது. திட்டங்களை வகுப்பதிலும் மாநிலங்களுக்குப் போதிய பங்கில்லை. மாநில முதலமைச்சர்களைக் கொண்ட தேசிய வளர்ச்சிக்குழு திட்டங்களை வகுப்பதில் போதுமான அளவுக்கு அதிகாரமில்லாத அமைப்பாக இருக்கிறது. திட்டக்குழு தயாரித்த திட்டங்களை பரிசீலனை செய்து திருத்தியமைக்க தேசிய வளர்ச்சிக்குழுவுக்கு அதிகாரம் இல்லை. நாடாளுமன்றத்தில் திட்டங்கள் விவாதத்திற்கு வைக்கப்படுவது ஒரு சடங்காக நடத்தப்படுகிறது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு முரணானதாகும்.

நாடாளுமன்றத்திற்கோ, மாநில முதல்வர்களைக் கொண்ட தேசிய வளர்ச்சிக்குழுவிற்கோ திட்டங்களை வகுக்கும் பணியில் போதுமான பங்கு இல்லை என்பது ஜனநாயக முறைக்கு ஒவ்வாததாகும். தேசிய வளர்ச்சிக்குழுவிற்கும் மேலான ஒரு தனி அமைப்பாக திட்டக்குழு உருவாகிவிட்டது. திட்டக்குழுத் தயாரிக்கும் திட்டம் மாநிலங்களுக்கு முதலில் அனுப்பி வைக்கப்படுகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்கள் தங்கள் திட்டங்களை உருவாக்க வேண்டியுள்ளது. மாநிலங்கள் உருவாக்கும் திட்டங்களை திட்டக்குழு மீண்டும் பரிசீலனை செய்து சிலவற்றைச் சேர்க்கிறது. சிலவற்றை நீக்குகிறது. இதில் தலையிட மாநிலங்களுக்கு உரிமை இல்லை. இறுதியாகத் திட்டக்குழு என்ன முடிவு செய்திருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டிய பரிதாபகரமான நிலையில் மாநிலங்கள் உள்ளன.

1967-ஆம் ஆண்டு வரை ஒரே கட்சி மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சி நடத்திய காரணத்தினால் அந்தக் கட்சியின் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட திட்டங்களை மாநிலங்கள் முணுமுணுக்காமல் ஏற்றுக்கொண்டன.

1967-க்குப் பிறகு பல்வேறு கட்சிகள் பல்வேறு மாநிலங்களில் ஆட்சிக்கு வந்தன. அந்தந்த கட்சிகளுக்கென்று தனியான பொருளாதாரக் கொள்கைகள் உண்டு. அவற்றுக்கிணங்க அவை வகுக்கிற திட்டங்களை, மத்தியில் ஆட்சி நடத்துகிற கட்சியின் பொருளாதார கொள்கைகளுக்கேற்ப அமைக்கப்பட்ட திட்டக் குழு ஏற்க மறுக்கிறது. இது ஜனநாயக விரோதச் செயலாகும்.

தற்போதுள்ள முறைப்படி திட்டக் குழு இயங்குவ தனால் கீழ்க்கண்ட குறைபாடுகள் ஏற்படுகின்றன :

1. திட்டக் குழு பொறுத்த வரையில் அது அரசியல் சட்டத்தில் இடம்பெறாத ஓர் அமைப்பாகும். எனவே, அரசியல் சட்டத்திற்குப் புறம்பாக அது செயல்படும் சமயங்களில் அதைத் தடுக்க முடியவில்லை.

2. இந்திய அரசியல் சட்டத்தின்படி பல்வேறு கட்சிகள் மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சிக்கு வரலாம் என்ற நிலைமையைத் திட்டக் குழு அலட்சியம் செய்கிறது. அரசியல் ரீதியான கூட்டாட்சியில் ஒரே மாதிரியான பொருளாதாரத் திட்டம் சாத்தியம் ஆகாது.
ஆனால், மேற்கண்ட உண்மைகளை மத்திய ஆட்சியில் இருந்த எந்தக் கட்சியும் உணரவில்லை என்பது வருந்தத்தக்கது மட்டுமல்ல, மத்திய மாநில மோதல்கள் அதிகரித்துவிட்டன. அரசியல் சட்டப்படி அமைக்கப்பட்ட நிதிக்குழுவின் மூலம் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட மத்திய அரசின் நிதியைக் காட்டிலும் அதிகமான நிதி அரசியல் சட்டத்தின் ஒப்புதலை பெறாத திட்டக்குழுவினால் ஒதுக்கப்படுகிறது. இப்படி செய்வதின் மூலம் மாநில அரசுகளை ஆட்டிப்படைக்க மத்திய அரசினால் முடிகிறது. தனக்கு வேண்டிய அல்லது தனது கட்சி ஆளும் மாநிலத்திற்கு அதிக நிதியைக் கொடுக்கத் திட்டக்குழுவை மத்திய அரசு பயன்படுத்துகிறது. இதன் விளைவாக திட்டக்குழு மத்திய அரசுக்கு அடுத்தபடி அதிகாரம் படைத்த குழுவாக விளங்குகிறது.

எனவே, திட்டக்குழுவை கலைப்பதென பிரதமர் மோடி செய்த முடிவு வரவேற்கத்தக்கது. ஆனால், இதற்கு மாற்றாக அவர் என்ன செய்யப்போகிறார் என்பது மிக முக்கியமானதாகும். திட்டங்களை வகுப்பதிலும் அவற்றை நிறைவேற்றுவதிலும் மாநில அரசுகளுக்கு முழுமையான உரிமை இருக்கவேண்டும். அத்திட்டங்களுக்குத் தேவைப்படும் நிதியை மத்திய அரசு அளிக்க முன்வர வேண்டும். பல்வேறு மாநில அரசுகளின் திட்டங்களுக் கிடையே மோதலும் முரண்பாடும் ஏற்பட்டுவிடாமல் கண்காணித்து உரிய ஆலோசனைகள் வழங்கும் உரிமை மட்டுமே மத்திய அரசிடம் இருக்கவேண்டும்.

மத்திய மாநில உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், மாநிலங்களின் உரிமைகளில் தலையிடாமலும், மாநிலங்களின் வளர்ச்சியே ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி என்ற கருத்தை மனதில் கொண்டும் செயல்படும் புதிய அமைப்பினை பிரதமர் மோடி உருவாக்குவாரானால் அவர் எதிர்பார்த்தது நிறைவேறும். மத்திய அரசின் கரங்களில் மேலும்மேலும் அதிகாரத்தைக் குவித்துக் கொள்ளும் வகையில் புதிய அமைப்பினை அவர் உருவாக்குவாரானால் நிலைமை மேலும் சீர்குலையும். பழைய பூதத்தை விரட்டப்போய் புதிய பூதம் கிளம்பக்கூடாது.
- நன்றி : தினமணி 24-08-2014

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.