இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சியில் அமர்ந்து இரண்டு மாதங்கள் முடிந்துவிட்டது. காங்கிரசின் ஆட்சி அகன்று பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஈழத் தமிழர்கள் குறைந்தபட்ச உரிமைகளையாவது பெற்றுவிட முடியும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சிவருகின்றது. ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண அமையப்போகும் பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தமிழகத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பா.ஜ.க. தலைவர்கள் நம்பிக்கையான உறுதிமொழிகளை வழங்கியிருந்தனர். ஆனால், கடந்த அறுபது நாள் பா.ஜ.க. ஆட்சி காங்கிரஸ் போன அதே பாதையில்தான் பா.ஜ.க.வும் பயணிக்கப் போகின்றதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றது.
தமிழர்களுக்கான தீர்வை இந்தியா தங்கத் தாம்பளத்தில் வைத்துத் தரும் என்று இலவு காத்த கிளிகளாகக் காத்திருக்கும் ஈழத் தமிழ்ப் புத்திஜீவிகளும், இந்தியாவின் காலடியில் அட்டாங்க நமஸ்காரமாக சரணாகதி அடைந்தகிடக்கும் அறிவுஜீவிகளும் கடந்த அறுபது நாள் ஆட்சியைப் பார்த்து "சாமி' ஓமென்றாலும் பூசாரி விடமாட்டார்' என்று ஒரு தெளிவிற்கு வந்திருப்பார்கள்.
பதவி ஏற்பு விழாவிற்கு மகிந்த ராஜபக்சவை அழைத்துக் கெளரவித்து அதிர்ச்சியை ஏற்படுத்திய மோடி அரசு, இப்போது ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு பா.ஜ.க. நியாயமான தீர்வொன்றைப் பெற்றுக் கொடுத்துவிடப் போவதில்லை என்பதை சுப்பிரமணியன் சுவாமி தலைமையில் நமது கொள்கை வகுப்பாளர்கள் குழுவை கொழும்புக்கு அனுப்பி வைத்ததன மூலம் உறுதிப்படுத்திவிட்டது.
சிங்களப் பேரினவாதத்துடன் தோளோடு தோள் நின்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அந்த விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலிகளையும் மிகமோசமாக கொச்சைப்படுத்தி விமர்சித்து வருபவர் சுப்பிரமணியன் சுவாமி. ஈழத் தமிழர்களுக்கு எதிரான ஒருவராகவும், சிங்களப் பேரினவாதிகளின் நண்பராகவும் இருக்கும் இவரை இந்திய ஆய்வாளர்கள் பலரும் குழப்பவாதி என்றே வர்ணிக்கின்றார்கள். அப்படிப்பட்ட ஒருவரை, இந்திய கொள்கை வகுப்பாளர்கள் குழுவிற்குத் தலைமை தாங்கி இலங்கைக்கு அனுப்பி வைத்ததில் இருந்து, தமிழர்கள் விடயத்தை இந்தியா எவ்வாறு கையாள முனைகின்றது என்பது வெள்ளிடை மலையாகியுள்ளது.
"மோடியின் கீழ் இந்தியா' என்னும் கருப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கில் இலங்கையில் உள்ள புத்திஜீவிகள் மற்றும் அரசியலாளர்கள் மற்றும் பிரதானிகள் மத்தியில் உரை நிகழ்த்திய இக் குழுவினர் "இந்தியா பொருளாதார ரீதியாகவே அனைத்துச் செயற்பாடுகளையும் மேற்கொள்ளும் என்னும் அயல் நாடுகளுடன் குறிப்பாக இலங்கையுடன் மிகுந்த நட்புடன் இணைந்து செயற்படும்' என்றும் கூறி ஐ.நா.வின் மனித உரிமைக் குற்றச்சாட்டில் சிக்கி மூச்சுத் திணறும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்ல. ஐ.நா. மனித உரிமை மீறல்கள் குறித்து மேற்கொண்டுள்ள விசாரணைகளுக்கு இந்தியா ஒரு போதும் ஆதரவு அளிக்காது என்பதையும் அங்கு உறுதிப்படுத்தியுள்ளனர். அத்துடன், இலங்கைக்கு எதிராக எந்தவொரு அரசியல் காய்நகர்த்தல்களையும் இந்தியா மேற்கொள்ளாது என்றும் அங்கு வாக்குறுதி அளித்திருக்கின்றனர்.
இதே வேளை, ஐ.நா. விசாரணையாளர்கள் இந்தியா செல்வதற்கு, நுழைவுவிசைவு (விசா) கேட்டு விண்ணப்பிப்பதற்கு முன்பாகவே அவசர அவசரமாக முந்திக்கொண்டு, ஐ.நா. விசாரணையாளர்களுக்கு நுழைவிசைவு வழங்க மறுத்துவிட்டதாக இந்திய மத்திய அரசு அறிவித்தது. சிங்கள தேசத்திற்கு முண்டுகொடுக்கும் தெற்காசிய நாடுகள் ஐ.நா. விசாரணைக்கு மறுத்துவிட்ட நிலையில், இந்தியாவும் தன்னை அவர்களுடன் இணைத்துக்கொண்டு சிங்கள தேசத்திற்குப் பாதுகாப்பு அரணாகியுள்ளது.
இந்திய மத்திய அரசின் இம்முடிவால் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கொதிப்படைந்துள்ளன. தமிழக முதல்வர் இதுகுறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.
இந்நிலையில் தமிழக அரசியல் தலைமைகளுக்கும் மக்களுக்கும் விளக்கமளிப்பதுபோல, "தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தை மனதில் வைத்து விட்டும் வெளியுறவு கொள்கைகளை வகுக்க முடியாது என்றும் நேரு காலத்தில் இருந்து இந்தியாவில் வெளியுறவு கொள்கைக்கான முக்கிய அம்சம் மாறவே இல்லை' என்றும் பா.ஜ.க.வின் வெளியுறவு கொள்கைக்கான தேசிய ஒருங்கிணைப்பாளர் சேஷாத்திரி சாரி விளக்கமளித்துள்ளார்.
சிங்கப்பூரில் தெற்காசிய கல்வி நிறுவனம் சார்பாக இந்திய வெளியுறவுக் கொள்கை தொடர்பாக "மோடி அரசின் செயற்பாடுகளும், சவால்களும்' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் தமிழகத்திற்கு இந்தப் பதிவை வழங்கியுள்ளார்.
எனவே, தமிழகம் எவ்வளவு தூரம் மோடி அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்தாலும் இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்படப்போவதில்லை என்பதை சேஷாத்ரி சாரி தனது உரையில் தெளிவுபடுத்தியிருக்ன்றார். ஆனால், இந்தியாவின் இந்த வெளிவிவகாரக் கொள்கை மாறாத வரைக்கும் ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கும் தீர்வும் கிடைக்கப்போவதில்லை என்பதுதான் உண்மை. - நன்றி : ஈழமுரசு |