வேல் வீச்சு : பெரிய பதவியில் சின்ன மனிதர்கள் - தென்பாண்டிவீரன் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2002 11:19 |
மதிப்பும் பெருமையும் மிக்க உயர்ந்த பதவியான இந்தியக் குடியரசுத் தலைவர் பதவியை சிலர் கேலிக் கூத்தாக்கிவிட்டனர்.
இப்படி செய்பவர்கள் தொலைநோக்கு பார்வையோ அல்லது உலகத்தவரின் ஏளனத்திற்கு ஆளாக நேரும் என்ற அச்சமோ இல்லாதவர்கள்.
சுருக்கமாக சொன்னால் பெரிய பதவிகளில் சந்தர்ப்பவசத்தால் அமர்ந்துவிட்ட மிகச் சின்ன மனிதர்கள்.
குடியரசுத் தலைவர் பதவி, கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட பதவியாகும். சகல கட்சிகளோடும், கட்சி சார்பற்ற சகல மக்களாலும் மதிக்கப்படும் பதவியாகும்.
இந்திய அரசின் வழிகாட்டியாக, அரசாங்கச் சின்னமாக, நேர்மை தவறாது நடுநிலையுடன் செயல்பட வேண்டிய பதவி அது.
இவற்றில் எதையும் மனதில் கொள்ளாமல் தங்களின் அரசியல் சூதாட்டத்தில் ஒரு பகடைக்காயாக இந்த பதவியை தில்லி அரசியல் தலைவர்கள் மாற்றிவிட்டார்கள்.
தற்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் அவர்களின் பதவிக்காலம் முடியவிருக்கும் கட்டத்தில் அவரை மனநிறைவுடன் ஓய்வு பெறவிடாமல் சஞ்சலத்திற்கும் சர்ச்சைகளுக்கும் ஆளாக்கிவிட்டார்கள். தங்களின் அரசியல் ஆசாபாசங்களுக்கு அவரை பலிகடா ஆக்கிவிட்டார்கள்.
மராட்டிய ஆளுனரான பி.சி. அலெக்சாண்டரை பாரதிய ஜனதாக் கட்சி தனது வேட்பாளராக முன்மொழிந்தது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க அக்கட்சி திட்டமிட்டது. முதலாவதாக ஒரு கிறித்துவரை குடியரசுத் தலைவர் ஆக்குவது மூலம் மேற்கு நாடுகளின் தன்மதிப்புக்கு ஆளாகலாம். இரண்டவதாக கிறித்துவர் ஒருவர் குடியரசுத் தலைவராக இருக்கும்போது மற்றொரு முக்கிய பதவியான பிரதமர் பதவியில் கிறித்துவரான சோனியாவை வரவிடாமல் தடுத்துவிடலாம் என திட்டமிட்டார்கள். இந்திராகாந்தி அவர்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் மிக நெருக்கமாக இருந்த அலெக்சாண்டர் மீது பா.ஜ.க. திடீர் பரிவுக்கு இவற்றைத் தவிர வேறு காரணம் இல்லை. குறுகிய அரசியல் ஆதாயக் கண்ணோட்டத்துடன் இந்தப் பிரச்சினையை பா.ஜ.க. அணுகியதே தவிர கொஞ்சமும் தொலைநோக்குப் பார்வையுடன் அணுகவில்லை.
இதைக் கண்டு காங்கிரஸ் கட்சி பதட்டம் அடைந்தது. தங்களின் தலைவி சோனியா பிரதமர் பதவியை அடையவிடாமல் தடுக்கும் சூழ்ச்சியாக இதைக் கருதினார்கள். எனவே அவர்களுக்கு கே.ஆர்.நாராயணன் மீது திடீர் பரிவுணர்ச்சி ஏற்பட்டது. எனவே அவர் பெயரை முன்மொழிந்தார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றுமுள்ள கட்சிகளும் அவரவர் பங்குக்கு குடியரசுத் தலைவரின் பதவிக்குள்ள மதிப்பை போட்டி போட்டுக் கொண்டு கெடுத்தார்கள்.
மகாபாரதக் கதையில் கெளரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே நடைபெற்ற சூதாட்டத்தில் பாஞ்சாலி பகடைக்காயாக்கப்பட்டாள்.
ஆனால் நவீன பாரதத்தில் குடியரசுத் தலைவர் பதவி அரசுக் கட்சிகளால் பகடைக்காய் ஆக்கப்பட்டுவிட்டது.
இருதரப்பினரின் சூழ்ச்சிகளும் நல்ல வேளையாக படுதோல்வி அடைந்தன.
உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியும் பச்சைத் தமிழருமான அப்துல்கலாம் குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கிறார். சூதாட்ட மனோபாவத்தில் உள்ள கட்சிகள் நல்ல வேளையாக அதிலிருந்து விடுப்பட்டு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளன. எஞ்சியுள்ள கட்சிகளும் ஆதாய அரசியல் நோக்கிலிருந்து விடுபட்டு அவரை ஏக மனதாக தேர்ந்தெடுக்க வழி வகுக்க வேண்டும். |