ஊழல் ஒழிப்பு இயக்கம்: அனைத்து சனநாயக கட்சிகளுக்கும் தமிழர் தேசிய முன்னணி வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 05 நவம்பர் 2014 15:23

தமிழ்நாட்டில் இலஞ்ச ஊழலை ஒழிக்கவும், சர்வதிகாரத்தைச் சாய்க்கவும், சனநாயகத்தைக் காக்கவும் போராட அனைத்து சனநாயக கட்சிகளும் முன்வரவேண்டும் என தமிழர் தேசிய முன்னணியின் செயற்குழு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

தமிழர் தேசிய முன்னணியின் மாநிலத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் 26-10-13 ஞாயிறு காலை 10 மணிக்கு தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் துணைத் தலைவர்கள் மு. பாலசுப்ரமணியன், கி.த. பச்சையப்பன், அருகோ. துரை. மதிவாணன், சி.சி. சாமி, எம்.ஆர். மாணிக்கம், பொ. முத்துச் செல்வம், தி.ம. பழனியாண்டி, ம. பொன்னிறைவன், பா. இறையெழிலன் ஆகியோரும், பொதுச்செயலாளர்கள் கா. பரந்தாமன், சி. முருகேசன், செ.ப. முத்தமிழ்மணி, பா. குப்பன், இனியன்சம்பத், ஆ.இ. ஜோசப் கென்னடி, ந.மு. தமிழ்மணி, சதா. முத்துக்கிருட்டிணன், பொருளாளர் மு. சாத்தப்பன், இளைஞர் அணி அமைப்பாளர்கள் கா. தமிழ்வேங்கை, தியாக. சுந்தரமூர்த்தி, மாணவரணி அமைப்பாளர் செ. செயப்பிரகாசு மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர்களான மயில்சாமி, ச. பிச்சைக் கணபதி, கோட்டை மு.க. கருணாநிதி, புலவர் ப. சண்முக வடிவேலு, எஸ்.பி. சோழராஜன், கோ. இளவழகன், குரு. சுப்பராயன், கோ.மீனாட்சிசுந்தரம், நா. விஜயபாலன், அ. சந்திரன், கான்சாபுரம் சோமு, ஈ.ப. ஈஸ்வர வடிவு லிங்கா லிங்கம், சங்கவள்ளி மணாளன், க.நாகேசுவரன், மற்றும் மாவட்டத் தலைவர்களான அ. முல்லைத் தமிழன், ச. இலாரன்ஸ், எழில் இளங்கோ, கி.செ. பழமலை, இரா. பாரதிச்செல்வன், பொன். வைத்தியநாதன், நே. புவனேசுவரன், சி. செந்தில் நாதன், வீறாண்டான், இரா. முருகேசன், சி. முத்துச்சாமி, பி. தட்சிணாமூர்த்தி, மயிலை ஆர். ரவி, பொன். வைரசிங்கம், வெ.ந. கணேசன், பொ. இளஞ்செழியன், இரா. வினோத் மற்றும் மாவட்ட நிர்வாகிகளும், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்களான அ. அகிலன், ஏ. வினோத்குமார், இரா. இராசசேகரன், வ. பாண்டியன், கு. பாபு, பழ. திருமாவளவன், மகளிர் அணி அமைப்பாளர்களான சா. இந்திராணி, சு. சுமித்திரா மற்றும் மாணவர் அணி அமைப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்களாக வழக்குரைஞர்கள் தீனதயாளன், வடிவேலு உட்பட 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் தமிழர் தேசிய முன்னணியின் சட்டத்திட்டம் பொதுச் செயலாளர் கா. பரந்தாமன் அவர்களால் முன்மொழியப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் துணைத் தலைவர்

கி.த. பச்சையப்பன் அவர்களால் முன் மொழியப்பட்டு ஏகமனதாக ஏற்கப்பட்டன.

தீர்மானம்: 1 "தமிழகத் திருநாள்'

நவம்பர் முதல் நாள் தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான நாளாகும். சங்க காலத்திலிருந்து 1956-ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாள் மொழி வழியாகத் தமிழ்நாடு பிரிக்கப்படும் காலம் வரை தமிழகம் ஒரே நாடாக இருந்ததில்லை.

பிற மாநிலங்களில் அம்மாநிலங்கள் உருவான நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தமிழர்களுக்கு உரியதான தமிழ்நாடு உருவான நாளை நாம் மிகச் சிறப்பாகக் கொண்டாடவேண்டும்.

"தமிழகத் திருநாள்' என்ற பெயரில் நவம்பர் முதல் நாள் காரிக் கிழமை (சனி) அன்று தொடங்கி அந்தத் திங்கள் முடிய மிகச்சிறப்பாகத் தமிழகம் முழுவதும் தமிழர்கள் கொண்டாட வேண்டும். கொடியேற்றியும், இனிப்பு வழங்கியும், மாலையில் பொதுக்கூட்டம் நடத்தியும், இசை நிகழ்ச்சிகள் நடத்தியும் கொண்டாடுமாறு தமிழர்கள் அனைவரையும் இச்செயற்குழு வேண்டிக்கொள்கிறது.

தீர்மானம் : 2 - ஊழல் ஒழிப்பு இயக்கம்

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காகத் "தூய்மை இந்தியா' திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்து அதற்கிணங்க அவரும் மத்திய அமைச்சர்கள் பலரும், மாநில அமைச்சர்களும், அரசு அலுவலகங்களில் தூய்மைப் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டது மகிழ்ச்சிக்குரியது. ஆனால், உண்மையான தூய்மை இதுவல்ல.

மத்திய அரசு, மாநில அரசு அலுவலகங்களில் மேலிருந்து கீழ்வரை பரவியிருக்கும் இலஞ்சம், ஊழல் ஆகியவற்றை முற்றிலுமாக அகற்றுவதே உண்மையான தூய்மைப் பணியாகும்.

குறிப்பாக, தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இலஞ்சமும், ஊழலும் நிறுவனப்படுத்தப்பட்டு மேலிருந்து கீழ்வரை கொடிய புற்றுநோய் போல பரவிவிட்டன. காசு கொடுக்காமல் அரசின் எந்த வேலையும் நடைபெறுவது இல்லை. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டிருப்பதும், முன்னாள் அமைச்சர்கள் பலர் மீதும் ஊழல் வழக்குகள் நீதிமன்றங்களில் நடைபெற்று வருவதும் ஊழல் பெருங்கடலில் சிறு துளிகளாகும்.

ஊழலின் விளைவாக ஜனநாயகத்தின் வேர்கள் அரிக்கப்பட்டுப் பணநாயகத்தின் கரங்கள் மேலோங்கி தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகிவிட்டது. ஊழல் பணத்தை வாரி இறைத்து ஏழை, எளிய மக்களையும், ஊழல் கறைப்படுத்தும் முயற்சி திராவிடக் கட்சிகளால் தொடர்ந்து நடத்தப்படுகிறது. பணநாயகத்தை நம்பியே இக்கட்சிகள் செயல்படுகின்றன.

இந்த ஊழல் போக்குத் தொடர்ந்து நடைபெற அனுமதிப்போமானால், ஜனநாயகம் சிதைக்கப்பட்டு சர்வாதிகாரம் தலைதூக்கும். இந்தப் பேரபாயத்தைத் தடுத்து நிறுத்துவதோடு அடியோடு ஒழித்துக்கட்டி ஜனநாயகத்தை நிலைநாட்டவேண்டிய அவசரமும், அவசியமும் ஏற்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழலை ஒழிப்போம்! ஜனநாயகத்தைக் காப்போம்!

மேற்கண்ட இரு கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் திரள் போராட்டங்களையும் நடத்த முன்வருமாறு தமிழ்நாட்டில் உள்ள சகல ஜனநாயகக் கட்சிகளைத் தமிழர் தேசிய முன்னணி வேண்டிக்கொள்கிறது.

தீர்மானம் : 3 - திருவள்ளுவர் படங்களையே வைக்கவேண்டும்

தமிழ்நாட்டில் உள்ள மத்திய-மாநில அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த இடங்கள், நீதிமன்றங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பொது இடங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் முதலமைச்சரின் படங்களை வைப்பதற்குப் பதிலாகத் தமிழுக்கு உலகளவில் வான்புகழ் பெருமையைத் தேடித்தந்த திருவள்ளுவரின் படங்களையே வைக்கவேண்டும் எனத் தமிழர் தேசிய முன்னணி வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 4 - தமிழர் சுதேசி இயக்கம்

தமிழ்நாட்டில் தமிழர்களால் உற்பத்தி செய்யப்படுபவையும், அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படுத்தப்படுபவையுமான பொருட்களைத் தமிழர் கடைகளிலேயே வாங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளத் தமிழ் மக்களை வேண்டிக்கொள்கிறோம்.

இந்த வேண்டுகோளை ஒரு இயக்கமாகத் தமிழ் மக்களிடம் கொண்டுசெல்ல 2015-ஆம் ஆண்டு சனவரி 1 முதல் 7-ஆம் நாள் வரை தமிழர் சுதேசி வாரம் கொண்டாடுவதெனத் தமிழர் தேசிய முன்னணி முடிவு செய்துள்ளது.

தீர்மானம் : 5 - விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்குக!

ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியிருப்பதை இச்செயற்குழு வரவேற்றுப் பாராட்டுகிறது. இத்தடை நீக்கப்பட்டதின் மூலம் சிங்கள இனவாத அரசு செய்த புகார்கள் அனைத்தும் பொய்யானவை என்பதை ஏற்று இந்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்.

எனவே, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகள் விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் மீது விதித்துள்ள தடையை நீக்க முன்வரவேண்டும் என இச்செயற்குழு வேண்டிக்கொள்கிறது.

காங்கிரஸ் ஆட்சியில் விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விதிக்கப்பட்ட தடையை பா.ஜ.க. அரசு தொடர்வதை இச்செயற்குழு கண்டிக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத் தீர்ப்பைப் பின்பற்றி இந்தியாவிலும் இத்தடையை நீக்க முன்வரவேண்டும் என இச்செயற்குழு வற்புறுத்துகிறது.

தீர்மானம் : 6 - காவிரி மேலாண்மை வாரியம்

காவிரி நடுவர்மன்ற இடைக்கால உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் வரையறைக்குழு ஆகியவற்றைச் சட்டப்பூர்வமாக அமைக்கவேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு.

நடுவர் மன்றத் தீர்ப்பைச் செயற்படுத்தவேண்டிய அவசியம் இல்லை என்ற வாதம் எழுந்தபோது, உச்சநீதிமன்றம் தலையிட்டு நடுவர் மன்றத் தீர்ப்புகளை மதிக்கவேண்டும் என ஆணை பிறப்பித்தது. இதற்கிணங்க நதிநீர் தாவாச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் 1980-ஆம் ஆண்டு செய்யப்பட்டன. அதன்பிறகு 2002-ஆம் ஆண்டில் நதிநீர் தாவாச் சட்டம் இரண்டாம் முறையாகத் திருத்தப்பட்டுத் தாவாவுக்குரிய இரண்டு மாநிலங்களையும் கட்டுப்படுத்தும் அமைப்பை உருவாக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டது. இந்தச் சட்டத்திருத்தங்களுக்குப் பின் நடுவர் மன்றத்தின் தீர்ப்பு முழு அதிகாரம் படைத்ததாகிவிடுகிறது. இதுகுறித்து, வினா எழுந்தபோது, நடுவர் மன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணையாகக் கருதவேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட காவிரி நடுவர் நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி நதிநீரைப் பங்கிடக் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் வரையறைக் குழு அமைக்கப்படவேண்டும் என்று தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த உத்தரவை உடனடியாக நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம் கடத்தி வருவதை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் வரையறைக் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்கும்படி மத்திய அரசை இச்செயற்குழு வற்புறுத்துகிறது.

தீர்மானம் : 7 - இயற்கைக் கனிம வளங்கள் கொள்ளை

தமிழ்நாட்டில் கிரானைட் கற்கள், தாது மணல், ஆற்று மணல் உட்படக் கனிம வளங்கள் தங்குத் தடையின்றிச் சூறையாடப்படுகின்றன. இதுகுறித்து, விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்ததோடு, விசாரணை அதிகாரியாகத் திரு. சகாயம் ஐ.ஏ.எஸ்., அவர்களை நியமித்து அக்டோபர் 28-ஆம் தேதிக்குள் இடைக்கால அறிக்கையை நீதிமன்றத்திற்கு அளிக்குமாறு கடந்த செப்டம்பர் முதல் வாரம் ஆணை பிறப்பித்தது.

இந்த ஆணைக்குத் தடைவாங்கத் தமிழக அரசு செய்த முயற்சிகளுக்கு உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை முற்றுப்புள்ளி வைத்தன.

எனவே, சகாயம் தற்போது வகித்துவரும் பதவியிலிருந்து தமிழக அரசு அவரை விடுவித்தால்தான் அவர் விசாரணை அதிகாரியாகச் செயல்பட முடியும். ஆனால், உயர் நீதிமன்றத்தின் ஆணையை மதிக்காமலும், கனிம வளங்களின் கொள்ளை குறித்து விசாரணை நடைபெறுவதைத் தடுப்பதற்காகவும், இத்தந்திரத்தைத் தமிழக அரசு கையாளுவது ஊழலை மூடிமறைக்க முயற்சி செய்வதாகும். இதை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

தீர்மானம் : 8 - மீத்தேன் எரிவாயுத் திட்டம்!

காவிரிப் படுகையில் உள்ள நிலக்கரிப் படிம இடுக்குகளில் உள்ள மீத்தேன் வாயுவை எடுக்கும் உரிமையைப் பன்னாட்டு நிறுவனமான பட்ங் ஏழ்ங்ஹற் ஊஹள்ற்ங்ழ்ய் ஊய்ங்ழ்ஞ்ஹ் ஈர்ழ்ல்ர்ழ்ஹற்ண்ர்ய் கண்ம்ண்ற்ங்க் என்பதற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த எரிவாயுவின் குறைந்தபட்ச மதிப்பு ரூபாய் ஆறு இலட்சம் கோடி ஆகும். ஆனால், இந்திய அரசு வெறும் ஐயாயிரம் கோடிக்கு அதை அளித்துள்ளது.

இதன் விளைவாகக் காவிரிப் படுகை முற்றிலுமாகச் சீரழிக்கப்படும். வளம் கொழிக்கும் நஞ்சை நிலப்பகுதி நச்சுகலந்த உப்பளமாக மாறிப்போகும். இப்பகுதிகளில் வாழும் மக்கள் அங்கு தொடர்ந்து வாழ இயலாத நிலை ஏற்படும். புற்று நோய் போன்ற கொடிய நோய்களுக்கு அவர்கள் ஆளாக வேண்டியிருக்கும்.

இப்பகுதியில் காலங்காலமாக வாழ்ந்துவரும் உழவர்கள், தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தியும்கூட மீத்தேன் எரிவாயுத் திட்டத்தைக் கைவிட மத்திய, மாநில அரசுகள் முன்வராததை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. உடனடியாக இத்திட்டத்தைக் கைவிடவேண்டும் என வற்புறுத்துகிறது.

தீர்மானம் : 9 - மதுவிலக்கு

திருவள்ளுவர் காலத்தில் தொடங்கி வள்ளலார், காந்தியடிகள் காலம் வரை மதுவை முழுமையாக நீக்கவேண்டும் என்ற கருத்தியல்களும், போராட்டங்களும் நடைபெற்று வந்துள்ளன. இந்தியா விடுதலை பெற்ற பிறகு தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு கொண்டுவரப்பட்டு பல காலம் தொடர்ந்து நடைமுறையில் இருந்தது. ஆனால், தி.மு.க.வின் ஆட்சியில் குறிப்பாகத் திரு. மு. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதன் விளைவாக நான்கு தலைமுறையைச் சேர்ந்தவர்கள் வாழ்க்கை சீரழிந்து போயிற்று.

எனவே, மீண்டும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையேல் மக்களைக் குறிப்பாக, மகளிரைத் திரட்டிப் பெரும் போராட்டங்கள் நடத்த வேண்டியிருக்கும் என இச்செயற்குழு தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறது.

தீர்மானம் : 10 - மின் கட்டண உயர்வைக் கைவிடுக!

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை 15 சதவீதத்திலிருந்து 30 சதம் வரை உயர்த்துவதற்கான ஆலோசனையை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முன் வைத்துள்ளது.
மின்சாரம் என்பது ஆடம்பரப் பொருளல்ல. மக்கள் அனைவருக்கும் செலுத்தும் திறன் அடிப்படையில் மின்சாரத்தை வழங்கவேண்டியது அரசின் கடமையாகும். தொழில், வேளாண்மை, குடும்பத்தின் தேவை ஆகியவற்றுக்கு மின்சாரம் அடிப்படையானதாகும்.

2012-ஆம் ஆண்டிலேயே முப்பது சதவீதம் முதல் நாற்பத்திரண்டு சதவீதம் வரை மின் கட்டணத்தைத் தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இது சாதாரண மக்கள் மீது திணிக்கப்பட்ட சுமையாகும். இரண்டு ஆண்டுகளில் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவது என்ற முடிவு மக்கள் நலனை மனதில் கொண்ட முடிவல்ல. எனவே, மின் கட்டண உயர்வை உடனடியாகக் கைவிடும்படி தமிழக அரசை இச்செயற்குழு வற்புறுத்துகிறது.

இரண்டு திங்கள்களுக்கு ஒருமுறை மின்னளவு கணக்கிடுவதற்குப் பதிலாக திங்கள்தோறும் மின்னளவை கணக்கிட வேண்டுமென வற்புறுத்துகிறது.

தீர்மானம் : 11 - பால் விலை உயர்வு

பால்விலையை உயர்த்திக் கொடுக்கவேண்டுமெனப் பால் உற்பத்தியாளர்கள் விடுத்த வேண்டுகோளினை ஏற்றுப் பால் கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுத்த அரசு, அந்த விலை உயர்வை மக்கள் மீது சுமத்துவது சரியல்ல. அதை அரசே ஏற்றுக்கொண்டு, மக்களுக்குப் பழைய விலையிலேயே பால் வழங்கவேண்டுமென இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

ஆங்கிலத் திணிப்பு

அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பிலேயே ஆங்கில வழிப்பிரிவைத் திணிப்பதன் வாயிலாகத் தமிழை அழிக்கும் உள்நோக்கம் கொண்ட செயலாகும் என்பதைக் கண்டிப்பதுடன் உடனடியாக அடுத்த கல்வியாண்டிலிருந்து ஆங்கிலத் திணிப்பை அறவே கைவிட்டுத் தமிழையே முதல் வகுப்பிலிருந்து தொடரவேண்டும் என இச்செயற்குழு வற்புறுத்துகிறது.

சமற்கிருதம், இந்தித் திணிப்பு

சமற்கிருதம் இந்திய மொழிகளின் தாய் என்றும், இந்தி இந்தியாவின் ஆட்சிமொழி என்பதால் அதை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இந்திய அரசு முனைப்போடு செயல்படுகிறது. இந்தி பேசாத மாநிலங்களின் மீதும் நடுவணரசு திணிக்கிறது. இந்தி, சமற்கிருதம் ஆகிய மொழிகளின் திணிப்பை தமிழர் தேசிய முன்னணி வன்மையாகக் கண்டிப்பதுடன் உடனடியாகக் கைவிட வேண்டுமென இச்செயற்குழு வற்புறுத்துகிறது.

சுப்ரமணிய சாமிக்குக் கண்டனம்

தமிழ் இனக் கொலைகாரன் "இராசபட்சேவுக்குப் பாரத ரத்னா' விருது வழங்கவேண்டுமென்று கூறிய தமிழினப் பகைவன் பா.ஜ.க. மூத்தத் தலைவர் சுப்ரமணிய சாமியை வன்மையாகக் கண்டிப்பதுடன் பா.ஜ.க. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் இல்லையேல் பா.ஜ.க. தலைமையின் ஒப்புதலுடன்தான் சுப்ரமணிய சாமி இவ்வாறு செயல்படுகிறார் என தமிழர்கள் கருத நேரிடும்.

சுப்ரமணிய சாமி தமிழர்களுக்கு எதிரான தனது போக்கைத் திருத்திக்கொள்ளாவிட்டால், தமிழ்நாட்டில் அவர் செல்லும் இடமெங்கும் கருப்புக் கொடி போராட்டங்கள் நடத்தப்படும் என இச்செயற்குழு கடுமையான எச்சரிக்கை விடுக்கிறது.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.