கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை அரசு கைது செய்து சிறையில் அடைத்திருந்தது. ஆனால் அவர்களில் 5 பேர் மீது போதைப் பொருட்கள் கடத்தியதாக பொய்யானக் குற்றம் சுமத்தி அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
கடந்த காலத்தில் நமது மீனவர்களைச் சுட்டுக்கொல்வதை வழக்கமாக வைத்திருந்த சிங்கள அரசு இப்போது தன்னுடைய கொடுமையை மாற்றிக்கொண்டுள்ளது. அவர்கள் மீது பொய்யான வழக்குத் தொடுத்து மரண தண்டனை விதிக்க ஏற்பாடு செய்துள்ளது. ஆக தமிழக மீனவர்களின் உயிர்களைப் பறிப்பதையே தனது நோக்கமாகக் சிங்கள அரசு கொண்டிருக்கிறது. சிங்கள அரசின் இந்தப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்திய அரசு முன்வரவேண்டும்.
மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிற நமது மீனவர்களுக்கு தக்க வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து மேல் முறையீட்டு மனுக்களை தக்க நீதிமன்றங்களில் அளித்து அவர்கள் விடுதலை பெற வழிவகுக்க வேண்டும், அவர்கள் விடுதலை பெறும்வரை அவர்கள் குடும்பங்களுக்கு வாழ்வாதார நிதிஉதவி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். |