தமிழகத் திருநாள் விழாச் செய்திகள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 19 நவம்பர் 2014 12:01

திருவாரூர் :

திருவாரூர் மாவட்ட தமிழர் தேசிய முன்னணியின் சார்பில் மன்னார்குடி பந்தலடியில், 01-11-2014 மாலை 6 மணிக்கு, தமிழகத் திருநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மொழி வழி மாநிலமாக 1956ம் ஆண்டு நவம்பர் முதல் நாள் அமைந்ததை முன்னிட்டு, அப்போது தமிழகத்தின் வடக்கு, தெற்கு, மேற்கு எல்லைகளில் அண்டை மாநிலங்களிடம் பல தமிழ்ப் பகுதிகளை இழந்ததை நினைவு கூரவும், இழந்த பகுதிகளை மீட்கவும், இருக்கும் பகுதிகளைக் காக்கவும் போராட வலியுறுத்தியும், தமிழர் தேசிய முன்னணியின் திருவாரூர் மாவட்ட அமைப்பின் சார்பில் மன்னார்குடியில் இக்கூட்டம் நடத்தப்பட்டது.

துவக்கத்தில் சமர்ப்பா கலைக்குழுவின் தமிழ்த்தேசிய இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்ட துணைத்தலைவர் தேவேந்திரன் தலைமை தாங்க, மாவட்ட செயலர் மு.செ.பாண்டியன்,மன்னை நகரத்தலைவர் மகேந்திரன், மாவட்ட துணைத்தலைவர் அரிகரன், மாவட்ட மகளிரணிச் செயலர் திருமதி ஜெ.கலையரசி ஆகியோர் முன்னிலை வகிக்க, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மலையரசன் வரவேற்க, தெற்கு வடக்கு எல்லைப்போராட்ட போராளிகளுக்கு வீரவணக்கமும் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. மாவட்ட செயலர் கலைச்செல்வம், மாவட்டத் தலைவர் மருத்துவர் பாரதிச்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் பொறியாளர் கென்னடி ஆகியோர் விளக்க உரையாற்ற மாவட்ட இளைஞரணி செயலர் இராசசேகரன் நன்றி நவின்றார். கீழ்கண்ட எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்:

1. ஐந்து அப்பாவி தமிழக மீனவர்களுக்கு, பொய்க்குற்றச்சாட்டின் அடிப்படையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டதற்குக் காரணமான சிங்கள இனவெறி அரசையும், தனது அலட்சியப்போக்கால் இதைத் தடுக்கத் தவறிய இந்திய அரசையும் இப்பொதுக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

2 மாநில அரசு , மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது. பால்விலை உயர்வை திரும்பப் பெறவேண்டும்.மின்கட்டண பயன்பாட்டை மாதந்தோறும் கணக்கிட்டு செலுத்தினால் கட்டணம் குறையுமாதலால், மாதந்தோறும் மின்பயன்பாட்டைக் கணக்கிட்டு வசூலிக்கவேண்டும்.

3. தமிழ்நாட்டில் குடியேறும் வெளி மாநிலத்தவருக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை வழங்கக்கூடாது.

4. வெளி மாநிலத்தவர் தமிழ் நாட்டில் சொத்து வாங்க தடை விதிக்கவேண்டும்.

5. தமிழ் நாட்டில் உள்ள மத்திய,மாநில அரசு நிறுவனங்களிலும், தனியார் தொழில் நிறுவனங்களிலும் 80 விழுக்காடு தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வேலைவழங்கவேண்டும்.

6. தமிழ்நாட்டில் உள்ள அரசு, மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் 85 விழுக்காடு இடங்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கே வழங்கவேண்டும்.

7. மீத்தேன் எடுப்புத் திட்டத்தால் எமது மண் பறிபோகாமல் தடுக்க, தஞ்சை சமவெளிப்பகுதியை பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவித்து, எண்ணெய், எரிவாயு துரப்பணப் பணிகளை மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் என்று இப்பொதுக்கூட்டம் மத்திய மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறது.

8. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறை ஆணையம் உடனே அமைக்கவேண்டும்.

தமிழக எல்லை மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளுக்கும், தியாகிகளுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம்.

தெற்கு எல்லைப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள்:

1948ம் ஆண்டு பிப் 8ல்: 1. தேவசகாயம் நாடார். 2. செல்லையா நாடார். 3. சங்கரன் நாடார். 4. மடிச்சல் சங்கு நாடார்.
1954ம் ஆண்டு ஆகஸ்டு 11 துப்பாக்கிச் சூட்டில் பலியானோர்:

1. புதுக்கடை ஏ.அருளப்பன் நாடார், 2. கிள்ளியூர் எம்.முத்துச்சாமி நாடார், 3. தோட்டவரம் எம்.குமரன் நாடார், 4. புதுக்கடை எம்.செல்லப்பா பிள்ளை, 5. தேங்காய்ப்பட்டினம் ஏ.பீர்முகம்மது, 6. தொடுவெட்டி சி.பப்பு பணிக்கர், 7.நட்டாலம் எஸ்.ராமையன் நாடார், 8. தோட்டவிளை ஏ.பொன்னப்பன் நாடார், 9. தோட்டவிளை மணலி. எம். பாலையன் நாடார்.

சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டி விருதுநகரில் 77 நாட்கள் உண்ணாநோன்பு இருந்து 1956 அக் 13 அன்று உயிர் துறந்த சங்கரலிங்கனார்.

தீவிரமாகப் போராடிய போராளிகள் : 1.மார்ஷல் நேசமணி. 2.பி.எஸ்.மணி. 3.மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை.4.தேசிகவினாயகம் பிள்ளை. 5.சிவராஜா. 6.சிதம்பரம் பிள்ளை.

வடக்கு எல்லைப் போராளிகள்: 1. ம.பொ.சி. 2. மங்கலங்கிழார். 3. விநாயகம். 4. தியாகராஜன். 5. சித்தூர் சீனிவாசன்.

அனைத்து எல்லைப்போராட்ட போராளிகளுக்கும் வீரவணக்கம். வீரவணக்கம்.

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் நவம்பர் 1 சனிக்கிழமை மாலை நடைபெற்ற தமிழகத் திருநாள் மாவட்ட த.தே.மு.யின் தலைவர் பொன். வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் த.தே.மு.வின் பொதுச் செயலாளர்களான திரு. இனியன் சம்பத், அயனாபுரம் சி. முருகேசன், பேராசிரியர் பெ. இராமலிங்கம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
மொழிவழி மாநிலம் என்ற உணர்வை ஒருங்கிணைத்து போராடத் தமிழர் தேசிய முன்னணி செயல்படும். இதை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

கர்நாடகத்தில் மொழிவழி மாநிலமாக பிரிந்த பிறகு அந்த நாள் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவார காலத்துக்கு விழா கொண்டாடுகின்றனர். இதேபோல் கேரளம், ஆந்திர மாநிலங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஆனால், தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் மாநிலம் பிறந்த நாளை உதாசீனப்படுத்துகின்றனர். எனவே, மொழிவழி தமிழகம் பிறந்த நாளான நவம்பர் 1-ஆம் தேதியை தமிழக அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். இதற்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றார் இனியன் சம்பத்.

த.தே.மு.யின் பொதுச் செயலாளர் சதா. முத்துகிருட்டிணன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் மு. முருகையன் மாவட்டப் பொருளாளர் அ. இருதயராசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வை.மு. கும்பலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைச் செயலாளர் உ. இரமேஷ் கண்ணன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்களான சே. இராமச்சந்திரன், சந்துரு (எ) இராமச்சந்திரன், திருவையாறு ஒன்றியத் தலைவர் ஆ. பாஸ்கர் மற்றும் திரளான இளைஞர்களும், மாணவர்களும் கலந்துகொண்டனர். நிறைவாக மாவட்டத் துணைத் தலைவர் சி.மு. இராசா நன்றி கூற விழா சிறப்பாக முடிந்தது.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.