தன்னுடைய 16-ஆம் வயதில் பிரபாகரன் தனது வீட்டை விட்டு வெளியேறினார். அதற்கு எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய 24-ஆம் வயதில் அவரை நான் முதன் முதலாகச் சந்தித்தேன். கடந்த 36 ஆண்டு காலமாக அவருடன் நெருங்கிப் பழகி வருகிறேன்.
இளம் வயதிலேயே அவருடைய ஆளுமையை அறிந்தவன் என்கிற முறையில் ஒன்று கூற விரும்புகிறேன்.
எத்தனைகோடி இடையூறுகள் நேர்ந்தாலும், தடைகள் போடப்பட்டாலும் அவற்றை தகர்த்தெறிவது அவருடைய இயல்பான குணம். எடுத்த காரியத்தை முடிக்காமல் அவர் விடமாட்டார்.
எல்லாவற்றுக்கும் மேலாக தனது மக்களுக்கு கொடுமை இழைத்தவர்கள் யாரானாலும் அவர்களைத் தண்டிக்காமலும் விடமாட்டார். ஒரு அடி விழுந்தால் பதிலாக ஒன்பது அடி கொடுக்காமல் ஓயமாட்டார்.
தனது மக்களை அவர் நேசித்ததைப்போல மக்களும் அவரை நேசித்தார்கள். வீட்டுக்கொரு பிள்ளையைக் கொடுங்கள் என்று அவர் கேட்டபோது, தமிழீழத் தாய்மார்கள் மனமுவந்து தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைத்தார்கள். தாயக விடுதலைப் போரில் பிள்ளைகளை இழந்த தாய்மார்கள் மனம் கலங்கினாலும், மற்ற பிள்ளைகளையும் அனுப்பி வைக்கத் தயங்கியதில்லை.
தமிழீழத் தாய்மார்கள் செய்ததைப் போலவே பிரபாகரனின் துணைவியார் மதிவதனி தன்னுடைய மகன் சார்லசையும் களத்திற்கு அனுப்பிவைத்தார்.
மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்த பிரபாகரன் தன்னுடைய புதல்வனையும், களப் பலியாகக் கொடுக்கத் தயங்கவில்லை. உலகில் எந்தத் தலைவனும் இத்தகைய தியாகம் செய்ததில்லை.
நாட்டுமக்களைப் பலி கொடுத்தாகிலும், தன்னையும், தன்னுடைய பிள்ளைகளையும் பாதுகாத்துக் கொள்ளும் தலைவர்களைத் தான் நாம் பார்த்திருக்கிறோம். பால் மணம் மாறாத பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனை சிங்களவர்கள் கொடூரமான முறையில் கொன்று சிதைத்த போது உலகமே கலங்கியது. கண்ணீர் வடித்தது.
இத்தகைய தியாகத் தலைவனைப் பெற்ற தமிழ் இனம் பெருமிதம் கொள்ளவேண்டும். இந்தத் தலைவனுக்குத் தோள் கொடுத்துத் துணை நிற்க உறுதி பூண வேண்டும்.
தியாக மாமணி பிரபாகரன் தலைமையில் அடுத்த கட்ட ஈழப் போர் மூளும் போது சகல விதத்திலும் அதற்கு துணை நிற்போம் என்ற சூளூரையை அவரின் 60-ஆவது பிறந்த நாளில் உலகத் தமிழர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவே அவருக்கு நாம் கூறும் "பல்லாண்டு! பல்லாண்டு!' ஆகும். |