அண்ணாமலைப் பல்கலைக் கழக நிறுவனரான ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் பிரிட்டனுக்குச் சென்றிருந்தபோது அங்குள்ள கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகங்களைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பினைப் பெற்றார். அப்போதே அவர் மனதில் இப்பல்கலைக் கழகங்களைப் போன்ற தரமான பல்கலைக் கழகம் ஒன்றை, தமிழ்நாட்டில் நிறுவிக் கல்வித் தொண்டு புரிய வேண்டும் என்ற எண்ணம் உருவாயிற்று.
அதற்கிணங்க அவர் 24-06-1920 அன்று சிதம்பரத்தில் மீனாட்சி கல்லூரியைத் தொடங்கினார். 1927ஆம் ஆண்டில் தமிழ்க்கல்லூரி, வடமொழிக் கல்லூரி ஆகியவற்றைத் தொடங்கினார். 1929ஆம் ஆண்டில் இசைக் கல்லூரியைத் தொடங்கினார். சங்க இலக்கியங்களைத் தேடித் தேடி கண்டுபிடித்துப் பதிப்பித்த திரு. உ.வே. சாமிநாதய்யரை தமிழ்க் கல்லூரியின் தலைவராக நியமித்தார். இதைப் போன்று அவர் அமைத்த ஒவ்வொரு கல்லூரிக்கும் புகழ்ப் பெற்றவர்களை தலைமைப் பொறுப்புக்கு நியமித்தார். அனைத்துக் கல்லூரிகளையும் இணைத்து ஒரு பல்கலைக் கழகத்தைத் தோற்றுவிக்க முன்வந்தார். அதற்காக 1000 ஏக்கர் நிலமும், ரூபாய் 20 இலட்சமும் வழங்கினார். அவருடைய நோக்கம் நிறைவேறுவதற்கு பி.டி. இராசன், பெரியார் ஈ.வே.இராமசாமி போன்ற பலரும் துணை நின்று அன்றைய ஆங்கிலேய ஆளுநரைச் சந்தித்து 1928ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகச் சட்டம் கொண்டுவர வழி வகுத்தார்கள். அந்தப் பல்கலைக் கழகத்தின் ஒவ்வொரு துறைக்கும் பேராசிரியர்களைத் தேடித்தேடித் தேர்ந்தெடுத்துக் கொண்டுவந்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை வளர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்பது அவருடைய வாழ்க்கையின் முக்கியக் குறிக்கோளாக அமைந்தது. குறிப்பாக தமிழ்வளர்ச்சிக்கும், தமிழிசையைப் பரப்புவதிலும் அப்பல்கலைக் கழகம் முதன்மை வகித்தது. இன்றைய கடலூர், விழுப்புரம், தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற மாவட்டங்களைச் சார்ந்த ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அண்ணாலைப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பயின்றார்கள். அந்த நாளில் மேற்கண்ட மாவட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு கல்லூரிகளுக்கு மேல் கிடையாது. எனவே மேற்படிப்புக்கான வழியின்றி மாணவர்கள் பள்ளிகல்வியோடு தங்கள் படிப்பை நிறுத்த வேண்டிய நிலை இருந்தது. பட்ட மேற்படிப்பு படிக்க வேண்டுமானால் அந்த நாளில் சென்னையில் உள்ள சில கல்லூரிகளில் மட்டுமே சேர வேண்டும். தமிழ்நாட்டின் வேறு எந்தப்பகுதியிலும் பட்டமேற்படிப்பு வசதி கிடையாது. எனவே தமிழ்நாடெங்கி லிருமிருந்த மாணவர்கள் பட்டமேற்படிப்புக்காக அங்குவந்து சேர்ந்தார்கள்.அப் பல்கலைக் கழகம் நாளுக்கு நாள் விரைவாக வளர்ந்தது. 50 துறைகளில் 390 படிப்புகள் அங்கு கற்பிக்கப்பட்டன. மேலும் அப்பல்கலைக்கழக மாணவர்கள் அங்கேயே தங்கிப் படிக்க வேண்டிய ஒரே பல்கலைக் கழகமாக அந்த நாளில் திகழ்ந்தது. புகழ் பெற்ற அறிஞர்கள் பலர் அப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்களாகவும் பேராசிரியர்களாகவும் அங்கு பணியாற்றி சிறந்த மாணவர்களை உருவாக்கினார்கள். தமிழகத்தில் சிறந்து விளங்கும் பல தலைவர்கள், துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் போன்ற பலரும் அங்கு படித்தவர்களே. ஆனால், 80 ஆண்டுகள் கடந்த இப் பல்கலைக் கழகம் அண்மைக் காலமாகச் சீரழிவிற்கு ஆளாயிற்று. மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோர் நடத்தியப் போராட்டங்களையும் அவற்றின் விளைவாக தமிழக அரசு தலையிட்டு அப்பல்கலைக் கழகத்தை அரசே ஏற்கும் சட்டத்திருத்தத்தை 2013ஆம் ஆண்டு ஏப்ரலில் சட்டமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றியது. முறைகேடுகளுக்கு காரணமாக இருந்ததாக பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் நீக்கப்பட்டார். பதிவாளர் தாமாகவே பதவி விலகினார். பல்கலைக் கழகத்தின் சிறப்பு அதிகாரியாக சிவ்தாஸ் மீனா என்பவரை அரசு நியமித்தது.அவருக்கு உதவியாக மேலும் சில அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். அரசு இப்பல்கலைக் கழகத்தை ஏற்று ஓராண்டு காலம் ஆனபோதிலும் நிலைமை சீர்திருந்தவில்லை. மீண்டும் போராட்டங்கள் வெடித்தன. அரசு இதை ஏற்றப்போது "அண்ணாமலை நகரைச் சுற்றியுள்ள கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வியை அளிக்க வேண்டும் என்பதை உறுதிசெய்யும் வகையில் தற்போதைய அண்ணாமலைப் பல்கலைக் கழகச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.'' என கல்வியமைச்சர் அறிவித்தார். ஆனால் இந்த நோக்கம் எந்த அளவிற்கு நிறைவேறியிருக்கிறது என்றுப் பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. அரசு இப்பல்கலைக் கழக நிர்வாகத்தை ஏற்றுக்கொண்ட பிறகும் மாணவர்களின் கல்விக் கட்டணங்கள் பிற அரசுக் கல்லூரிகளில் உள்ளவாறு குறைக்கப்படவில்லை. எடுத்துக்காட்டாக பொறியியல் படிப்பிற்கு அரசுக் கல்லூரியில் ஆண்டிற்கு ரூ.12 ஆயிரம் முதல் 16ஆயிரம் வரை உள்ளது. ஆனால், இங்கு ரூ.75 ஆயிரம் முதல் 85ஆயிரம் வரை உள்ளது. மருத்துவப் படிப்பிற்கு அரசுக் கல்லூரிகளில் ரூ.15 ஆயிரம் கட்டணமாக உள்ளது. ஆனால் இங்கு ரூ.5.5 இலட்சம் வசூலிக்கப்படுகிறது. கலை-அறிவியல் படிப்புகளுக்கும் கட்டணம் தாறுமாறக உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர் விடுதிகளின் அறைக்கு 10 முதல் 12 பேர் வரை அடைக்கப்பட்டுள்ளனர். உணவு வழங்குவது தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அறைக்கும் உணவுக்கும் மாணவர்கள் ரூ.5 ஆயிரம் வரை மாதந்தோறும் கொடுக்கவேண்டியுள்ளது. அரசாணை (நிலை) எண். 6, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள் : 9-1-2012 தேதியிட்ட அரசாணையின்படி சிறுபான்மையினர் நிறுவனங்கள் உட்பட சுயநிதிக் கல்லூரி நிறுவனங்களில் அனைத்துவிதமான படிப்புகளிலும் ஒடுக்கப்பட்ட/பழங்குடியினர் இன மாணவ - மாணவியர்கள் கல்வி நிறுவனங்களுக்குச் செலுத்தவேண்டிய கட்டணங்களை அரசே தருகிறது. அரசு நியமித்த சுயநிதிக் கல்லூரிகளுக்கான கட்டணக் குழு நிர்ணயித்த கல்விக் கட்டணங்களை மாணவர்களுக்கு வழங்க அரசு ஆணையிட்டது. ரூ. 2 இலட்சத்திற்கு மேற்படாத வருமானம் உள்ளவர்களின் பிள்ளைகளுக்கு மட்டுமே இது வழங்கப்படும். கல்லூரிக் கல்வி இயக்கத்திலிருந்து ஆதிதிராவிடர் நல ஆணையர் கல்விஆண்டின் தொடக்கத்திலேயே இத்தொகையைப் பெற்று தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து சுயநிதிக் கல்லூரிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதிதிராவிட மாணவ - மாணவியரிடமிருந்து எந்தவிதமான கல்விக் கட்டணங்களையும் தொடர்புடைய சுயநிதி கல்வி நிறுவனங்கள் வசூலிக்கக்கூடாது. அரசின் உத்தரவு இவ்வளவு தெளிவாக இருந்தும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இது பின்பற்றப்படுவது இல்லை. கல்வி உதவித் தொகையை அந்தந்த ஆண்டு தராமல் கல்வி ஆண்டு முடிந்தபிறகு காலம் தாழ்த்திக் கொடுக்கப்படுகிறது. அதுவரை மேற்படி மாணவர்கள் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
அப்படிச் செலுத்தாதவர்களுக்கு மிக அதிகமான அபராதம் விதிக்கப்படுகிறது. கட்டணம் ரூ.5 ஆயிரம் என்றிருந்தால் அபாராதமும் ரூ.5 ஆயிரமாக விதிக்கப்படுகிறது. இதைக் கட்டாதவர்கள் நீக்கப்படுகிறார்கள். இரண்டாண்டுகளாக பட்டமளிப்பு விழாவும் மாணவர்களின் வேலைக்கான வளாக நேர்காணலும் நடைபெறவில்லை. மேலேகண்ட குறைகளை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மிகக்கடுமையான முறையில் ஒடுக்கப்பட்டார்கள். ஆசிரியர்கள், அலுவலர்கள் பிரச்சினையும் தீர்க்கப்படமுடியாமல் உள்ளது. 12 ஆயிரத்து 500 பேர் வேலை பார்க்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான பேர் வரைமுறையில்லாமல் வேலைகளுக்குச் சேர்க்கப்பட்டார்கள். அண்மையில் இவ்வாறு சேர்க்கப்பட்ட பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களில் 6 பேர் போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருக்கிறார்கள் என்ற திடுக்கிடும் உண்மை வெளிவந்து அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுபோல இன்னும் எத்தனைப்பேர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பது ஆராயப்பட வேண்டும். இதற்குப் பொறுப்பானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுஅவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உண்மையில் படித்து உரிய பட்டத் தகுதிகளைப் பெற்று வேலையில் சேர்ந்திருக்கிற பேராசிரியர்கள் ஊழியர்கள் ஆகியவர்கள் குறித்துக் கவனமாக செயல்படவேண்டும். பல ஆண்டுகாலம் வேலைப் பார்த்தவர்களுக்கு பணிப் பாதுகாப்பு இருக்க வேண்டும். தேவைக்கு அதிகமானவர்கள் இருந்தால் அரசு கல்லூரிகளில் காலியாகும் இடங்களில் அவர்களை நியமிக்க வேண்டும். பல்கலைக் கழகத்தில் பல ஆண்டுகாலமாக தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருபவர்கள் நிரந்தரம் செய்யப்படவேண்டும். புதிதாக ஆட்களை நியமிக்கக்கூடாது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தை அரசே முழுமையாக ஏற்றுக்கொண்டதைப்போல அண்ணாமலைப் பல்கழகத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். பல்கலைக் கழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகியவற்றையும் அரசு எடுத்துக்கொண்டு நடத்தவேண்டுமே தவிர அதற்கும் பல்கலைக் கழகத்திற்கும் தொடர்பில்லை என்று கூறுவது சரியல்ல. சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏழை மாணவர்கள் படிப்பதற்கும், ஏழை நோயாளிகள் உரிய மருத்துவம் பெறுவதற்கும் உதவும் வகையில் இதைச் செய்ய வேண்டும். அரசு அதிகாரிகள் பொறுப்பில் இப்பல்கலைக் கழகம் ஒப்படைக்கப்பட்டிருப்பதற்கு காலவரை நிர்ணயிக்கப் படவேண்டும். சிறந்த கல்வியாளர்கள் பொறுப்பில் இப்பல்கலைக் கழகம் கொண்டுவரப்பட வேண்டும். நெடிய வரலாறு கொண்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் பொலிவும் பெருமையும் குன்றாமல் பாதுகாக்க வேண்டும். அந்த அறிவு விளக்கு அணையாமல் காக்க வேண்டிய கடமை அரசுக்கும் மக்களுக்கும் உண்டு. நன்றி : தினமணி 24-12-14 |